Sunday, 13 September 2026

சௌதாச சரிதம் | சர்க்கம் – 065 (39)

The story of Saudasa | Sarga-065 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மதுவனம் செல்லும் வழியில் வால்மீகி ஆசிரமத்தை அடைந்த சத்ருக்னன்; இரவில் அங்கு தங்க விரும்பியது; கல்மாஷபாதன் கதையைக் கேட்டது...

வால்மீகியும் சத்ருக்னனும்

சர்வ பலத்தையும் {படை முழுவதையும் தான் புறப்படுவதற்கு} முன்னதாக அனுப்பிவிட்டு, மாஸ மாத்திரம் {ஒரு மாத காலம் மட்டும் அயோத்தியில்} தங்கியிருந்த சத்ருக்னன், பிறகு ஏகனாகவே {தனியாகவே} தாமதிக்காமல் துரிதமாக {புறப்பட்டுச்} சென்றான்.(1) சூரனான ராகவநந்தனன் {ரகுவின் வழித்தோன்றலான சத்ருக்னன்}, இடையில் {வழியில்} இரு ராத்திரிகள் தங்கிய பிறகு, புண்ணியமான, உத்தமமான வசிப்பிடமான வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்தான்[1].(2) 

[1] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 864ம் பாடல் பின்வருமாறு:

ஆனக துந்துபி முழங்க அணிமுரச 
  முகில் அனைய அமலை பொங்க
வானகமும் மண்ணகமும் வளர்பெருந் 
 தூளியின் மறை மலர் பூஞ்சோலை
தேன்நகு பங்கயப் பழனத் திருநாடு 
 கடந்துபோய்த் தெய்வக் கங்கைக்
கானதியில் களித்து ஆடிக் கலைமுனி 
  வான்மீகி தவக்கானம் கண்டான்

பொருள்: போர்ப்பறை முழங்கவும், அழகிய முரசத்தினது மேகநாதம் போன்ற ஒலிமிகவும், வான் உலகும் மண்ணுலகும் சேனை செல்வதால் உண்டாகி வளர்கின்ற பெரிய தூளியில் மறையவும், மலர்களுடைய பூஞ்சோலைகளையும், தேன்பொங்குகின்ற தாமரைகள் நிறைந்த வயல்களையும் உடைய கோசலம் ஆகிய திருநாட்டைக் கடந்து சென்று தெய்வத்தன்மை வாய்ந்த கங்கையாகிய காட்டு வழியில் ஓடுகின்ற நதியில் உளம் களித்து நீராடிவிட்டுக் கலையெலாமுணர்ந்த வான்மீகி முனி தவம் செய்கின்ற காட்டினைக் கண்டான்.

அவன் முனிசத்தமரும், மஹாத்மாவுமான வால்மீகியை வணங்கி, கைகளைக் கூப்பியவனாக இருந்து, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(3) "பகவானே, குருவிற்கான கடமையால் {பெரியவரான ராமருக்குச் செய்ய வேண்டிய பணியின் நிமித்தம்} வந்துள்ள நான், இங்கு தங்க விரும்புகிறேன். நாளை பிரபாதத்தில் {விடியற்காலையில்} வாருணீ திசையான {வருணனுக்குரிய திசையான} மேற்கை நோக்கிச் செல்வேன்" {என்றான் சத்ருக்னன்}.(4)

முனிபுங்கவரான வால்மீகி, சத்ருக்னனின் சொற்களைக் கேட்டுப் புன்னகைத்து, மஹாத்மாவான அவனிடம் {சத்ருக்னனிடம் பின்வருமாறு} பதில் சொன்னார், "பெரும்புகழுடையவனே, உனக்கு ஸ்வாகதம் {நல்வரவு}.(5) சௌம்யா {மென்மையானவனே}, என்னுடைய இந்த ஆசிரமம் ராகவர்களின் குலத்திற்கே உரியது. ஆசனம், பாத்யம், அர்க்யம் {இருக்கை, பாதம் கழுவுவதற்கான நீர், மதிப்புடன் கொடுக்கப்படும் வரவேற்பு நீர் ஆகியவற்றை} என்னிடமிருந்து தயக்கமின்றி ஏற்றுக் கொள்வாயாக" {என்றார் வால்மீகி}.(6)

அப்போது அந்தக் காகுத்ஸ்தன் {சத்ருக்னன், வால்மீகி முனிவரின்} பூஜையையும் {உபசரிப்பையும்}, பழங்கள், கிழங்குகள் உள்ளிட்ட போஜனத்தையும் ஏற்றுக் கொண்டு பக்ஷித்தான்; பரம திருப்தியையும் அடைந்தான்.(7) அவன் {சத்ருக்னன்}, பழங்களையும் கிழங்குகளையும் உண்ட பிறகு, அந்த மஹரிஷியிடம் {வால்மீகியிடம்}, "உம் ஆசிரமத்தின் சமீபத்தில் உள்ள இந்த யஜ்ஞவிபூதி {வேள்விச்சிறப்புடைய இத்தலம்} யாருடையது?" {என்று} வினவினான்[2].(8) 

[2] உத்தர ராமாயணம் 50ம் சர்க்கம் முதல் சுலோகத்தில் சீதை ரிஷிபத்தினிகளுடன் வால்மீகியின் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த மற்றொரு ஆசிரமத்திற்குள் நுழைவதை லக்ஷ்மணன் காண்கிறான். 52ம் சர்க்கம் 7 முதல் 10ம் சுலோகங்களில், சீதையை வால்மீகி ஆசிரமத்தின் அருகில் விட்டு வந்த செய்தியை லக்ஷ்மணன் ராமனிடம் தெரிவிக்கிறான். சத்ருக்னன் வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தபோது, சீதை அந்த ஆசிரமத்தின் அருகில் உள்ள ரிஷிபத்தினிகளின் குடிலில் வசித்து வந்திருக்க வேண்டும். இருப்பினும், அவளது வனவாசம் எவருக்கும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இலக்ஷ்மணன் ராமனின் ஆணைப்படி சீதையை வனத்தில் விட்டுவந்த நிகழ்வும் ரகசியமாகவே நடைபெற்றது. ஆகவே, வால்மீகி முனிவரின் ஆசிரமப் பகுதியில் சீதை இருப்பதை சத்ருக்னன் அறியாதவனாக இருந்திருக்கலாம். வால்மீகி முனிவரும், அவரது சீடர்களும், ரிஷிபத்தினிகளும் அந்த ரகசியத்தை எவரும் அறியாதவாறு காத்து வந்திருக்க வேண்டும். எனவே, சத்ருக்னன் சீதையைக் குறித்து விசாரிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்த சர்க்கத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வின் காரணமாக சத்ருக்னன் அதை அறிகிறான்.

அவனுடைய அந்தப் பேச்சைக் கேட்ட வால்மீகி {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினார், "சத்ருக்னா, இது முன்பு யாருடைய இருப்பிடமாக இருந்தது என்பதைக் கேட்பாயாக.(9) இராஜா ஸௌதாஸன்[3] உங்களுடைய பூர்வகன் {மூதாதை} ஆவான். அந்த பூபதியின் புத்திரன் வீரஸஹன் என்ற பெயருடையவன்; வீரியவானாகவும், அதிதார்மிகனாகவும் {தர்மநெறிமிகுந்தவனாகவும்} இருந்தான்.(10) அந்த ஸௌதாஸன் பாலனாகவே {இளமையிலேயே} வேட்டையைத் தொடங்கினான்[4]

[3] விக்கி மூலத்தில் "ராஜா ஸௌதாஸஸ்தஸ்ய" என்று இருந்தாலும், தமிழில் தர்மாலயம், ஸ்ரீநிவாசராகவாசாரியர், கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்புகளிலும், ஆங்கிலத்தில் விவேக் தேவ்ராய் பதிப்பிலும் இவன் "சுதாஸன்" என்றே குறிப்பிடப்படுகிறான். ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்புகளில் "ஸௌதாஸன்" என்று குறிப்பிடப்படுகிறான். மஹாபாரதத்திலும் இவ்வரசன் தன்னை "நான் சுதாஸனின் மகன்" என்றே அறிமுகப்படுத்துகிறான் (ஆதிபர்வம் 179, 30); 178ம் பகுதியின் அடிக்குறிப்பில், கும்பகோணம் பதிப்பின்படி இவனுக்கு ஸௌதாசன், மித்ரஸஹன் என்ற பெயர்களும் உண்டு எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது, 65ம் சர்க்கத்தில் "ஸௌதாஸன்" என்பதைத் தந்தைவழிப் பெயராகக் கொள்ளும் வாசிப்பை வலுப்படுத்துகிறது.

[4] தர்மாலயப் பதிப்பில், "உங்களின் முன்னோர்களில் ஒருவராய் சுதாஸரென்று ஒரு சக்கிரவர்த்தியிருந்தார். வீரியவானும், மஹாதர்மிஷ்டனுமான வீரஸஹரென்பவர் அந்த சக்கிரவர்த்தியினது புதல்வர். அந்த ஸுதாஸரின் புதல்வர் (வீரஸஹர்) சௌவனப் பிராயம் முதற்கொண்டே வேட்டையாடத் தலைப்பட்டார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "உங்கள் முன்னோர்களில் சுதாஸரென்னும் சக்கரவர்த்தி யொருவரிருந்தனர். அவருடைய புத்திரர் வீரஸஹர் என்பவர்; அவர் மறத்திலும் அறத்திலு மொப்பற்றவரெனப் பெயர் பெற்றவர். சிறுபிள்ளையாயிருக்கையிலேயே அந்த சுதாஸருடைய புத்திரர் வேட்டையாட விருப்புற்று வெளியே சென்று திரியலாயினார்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "உங்களுடைய முன்னோர்களில் சுதாஸன் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவருடைய புதல்வனின் பெயர் வீரஸஹன். அவன் வீரம் மிக்கவனாகவும், மிகவும் அறச்செயல்புரிபவனாகவும் இருந்தான். சுதாஸனின் மைந்தன், சிறு பருவத்தில் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்றான்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில் வீரஸஹன் என்று குறிப்பிடப்படுபவன், ஹரிபிரசாத் சாஸ்திரி, விவேக் தேவ்ராய் பதிப்புகளில், "மித்ரஸஹன்" என்று குறிப்பிடப்படுகிறான்.

அந்த சூரன், அலைந்து திரிந்து கொண்டிருந்த ராக்ஷசர்கள் இருவரைக் கண்டான்.(11) சார்தூல ரூபங்கொண்ட {புலியின் உருவங்கொண்ட} கோரர்களான அவ்விருவரும், பல்லாயிரம் மிருகங்களை {விலங்குகளை} பக்ஷித்துக் கொண்டிருந்தாலும் {தின்று கொண்டிருந்தாலும்} ஒருபோதும் நிறைவை அடையவில்லை.(12) அந்த ராக்ஷசர்கள் இருவரையும், மிருகங்களற்றதாக்கப்பட்ட வனத்தையும் கண்ட அவன் {சௌதாஸன்}, மஹத்தான குரோதத்தால் ஆட்கொள்ளப்பட்டு, பெரும் அம்பினால் {அவர்களில்} ஒருவனைக் கொன்றான்.(13) புருஷரிஷபனான ஸௌதாஸனோ, அந்த ஒருவனை வீழ்த்திய பிறகு, ஜுவரம் {கவலை என்ற பிணி} நீங்கியவனாக, கோபம் நீங்கியவனாக, கொல்லப்பட்ட அந்த ராக்ஷசனைப் பார்த்தான்.(14) {கொல்லப்பட்டவனை அவன்} பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த ராக்ஷசனின் சகாயன் {துணைவன்}, ஸௌதாஸனுக்கு கோர சந்தாபத்தை உண்டாக்கும் வகையில் மேலும் இவ்வாறு கூறினான்,(15) "அபராதம் {குற்றம்} செய்யாத என் சகாயனை நீ கொன்றது எதனாலோ, அதனால் பாபிஷ்டா {பாபம் மிக்கவனே}, உனக்கும் எதிர்வினையை நான் அளிப்பேன் {பழிக்குப் பழி வாங்குவேன்}" {என்றான்}.(16)

அந்த ராக்ஷசன் இவ்வாறு கூறிவிட்டு, அங்கேயே மறைந்து போனான். காலப்போக்கில் அந்த ராஜா {சௌதாசன்} மித்ரஸஹன் {என்ற பெயருடையவன்} ஆனான்.(17) அந்த ராஜா இந்த ஆசிரமத்தின் சமீபத்தில் மஹாயஜ்ஞமான அஷ்வமேதம் என்ற யஜ்ஞத்தை {குதிரை வேள்வியைச்} செய்தான்; அதை வசிஷ்டர் பாதுகாத்தார் {அந்த வேள்வியை நடத்தி வைத்தார்}.(18) அங்கே மிக உயர்ந்த வளத்தால் செழிப்புற்று பல வருஷக்கணக்கில் நீடித்த மஹா யஜ்ஞம் {பெரும் வேள்வி} தேவர்களின் யஜ்ஞத்திற்கு சமமானதாக இருந்தது.(19) பிறகு, யஜ்ஞத்தின் நிறைவில், பூர்வ வைரத்தை {முந்தைய பகையை} நினைவுகூர்ந்த வசிஷ்டரின் ரூபம் கொண்ட ராக்ஷசன், ராஜாவிடம் இவ்வாறு சொன்னான்:(20) "இந்த யஜ்ஞத்தின் முடிவு வந்துவிட்டது. எனக்கு மாமிசத்துடன் கூடிய போஜனம் {உணவு} இங்கே சீக்கிரம் வழங்கப்படட்டும். இது விசாரணைக்குரிய {யோசிக்க வேண்டிய} காரியமல்ல" {என்றான் வசிஷ்டரின் வடிவில் இருந்த ராக்ஷசன்}.(21)

பிருத்வீபதி {மன்னன் ஸௌதாஸன்}, பிராமண ரூபம் கொண்ட ராக்ஷசனால் கூறப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, உணவு தயாரிப்பதில் திறமைமிக்கவனை நோக்கி {பின்வருமாறு} சொன்னான்:(22) "ஹவிஸ் போன்ற போஜனமானது {வேள்வி ஆகுதி போன்ற உணவானது}, மாமிசத்துடன் கூடியதாகவும், சுவையானதாகவும் எப்படி இருக்குமோ, அப்படியே சீக்கிரம் செய்வாயாக. குரு {வசிஷ்டர்} எப்படி திருப்தியடைவாரோ, அப்படிச் செய்வாயாக" {என்றான் ஸௌதாஸன்}.(23)

பார்த்திபேந்திரனின் சாசனத்தால் {மன்னன் சௌதாசனின் கட்டளையால்} சூதன் {சமையற்காரன்} கலங்கிய மனமுடையவனாக {நிற்க}[5], அந்த ராக்ஷசன் மீண்டும் அங்கே சூதவேஷத்தை {சமையற்காரன் வேடத்தை} ஏற்றுக் கொண்டான்.(24) பிறகு, அந்த ராக்ஷசன், மானுஷ மாமிசத்தை பார்த்திபனுக்கு அளித்தான். "இது சுவையானதும், ஹவிஸ்ஸைப் போன்றதும், மாமிசத்துடன் கூடியதுமான அன்னம் {உணவு}; இதோ கொண்டு வரப்பட்டது" {என்று கூறினான்}.(25)

[5] 23ம் சுலோகத்தில் ஸௌதாஸன் கேட்பது ஹவிஷ்யம் ஸாமிஷம் ஸ்வாது - "ஹவிஸ்ஸைப் போன்றதும், ஆமிஷத்துடன் {மாமிசத்துடன்} கூடியதும், சுவையானதுமான உணவு". ஹவிஷ்யம் என்பது வேள்விச் சடங்குகளுக்கு உரிய, விதிமுறைகளால் வரையறுக்கப்பட்ட தூய உணவு; ஸாமிஷம் என்பது மாமிசம் கலந்தது. அஷ்வமேத யஜ்ஞத்தின் நிறைவில், குருவான வசிஷ்டருக்கென இவ்விரு தன்மைகளும் ஒருங்கே அமைந்த உணவைத் தயாரிக்கும்படி வந்த ஆணை, சூதனுக்கு {சமையற்காரனுக்கு} மனக்கலக்கத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். 21ம் சுலோகத்தில் வசிஷ்டர் வடிவில் வந்த ராக்ஷசன், "இது விசாரணைக்குரிய காரியமல்ல" என முன்கூட்டியே கூறியதன் மூலம் அரசன் ஆராயாதபடி செய்துவிடுகிறான்; ஆனால் அந்த முன்தடை சூதனுக்குப் பொருந்தாததால், அவன் திகைத்து நிற்கிறான். அந்தத் தருணத்தையே ராக்ஷசன் பயன்படுத்தி, அவனது {சமையற்காரனின்} வேடம் பூண்டு 25ம் சுலோகத்தில் நரமாமிசத்தைக் கொண்டுவருகிறான்.

நரவியாகரா {மனிதர்களில் புலியே, சத்ருக்னா}, அவன் ராக்ஷசனால் கொண்டுவரப்பட்ட மாமிசத்துடன் கூடிய போஜனத்தை, தன் பத்தினி மதயந்தியுடன் சேர்ந்து வசிஷ்டருக்கு அளித்தான்.(26) அந்த விப்ரர் {வேதியர் வசிஷ்டர்}, அது மானுஷ மாமிசம் பாத்திரத்தை அடைந்ததை {அது மனித மாமிசம் என்பதை} அறிந்து, மஹத்தான குரோதத்தால் ஆட்கொள்ளப்பட்டு {பின்வரும் சாபத்தைக்} கூறத் தொடங்கினார்:(27) "இராஜனே, எதனால் நீ இந்த போஜனத்தை எனக்கு அளிக்க விரும்புகிறாயோ, அதனால் இதுவே உன் போஜனம் ஆகும்; இதில் சந்தேகமில்லை" {என்றார் வசிஷ்டர்}.(28)

அப்போது குரோதமடைந்த ஸௌதாஸன், கையில் நீரை எடுத்தான். வசிஷ்டரை சபிக்க ஆரம்பித்தான்; பாரியையோ {சௌதாசனின் மனைவியான மதயந்தியோ[6] பின்வருமாறு சொல்லி} அவனைத் தடுத்தாள்:(29) "ஏனெனில், ராஜரே, நம் பகவானான வசிஷ்ட ரிஷி பிரபு {வல்லமைமிக்கவர்} ஆவார். தேவதைக்கு ஒப்பான புரோதஸரை {நம் புரோஹிதரை} எதிர்த்துச் சபிக்கும் சக்தி உமக்கு இல்லை" {என்றாள்}.(30)

[6] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த மதயந்தியையே சீதாபிராட்டிக்குக் கற்பில் உவமையாகச் சுந்தகாண்டத்தில் எடுத்துக்கூறியிருக்கின்றனர்" என்றிருக்கிறது. சுந்தர காண்டம், 24ம் சர்க்கம், 12ம் சுலோகத்தில், இந்த மதயந்தியை சீதை குறிப்பிடுகிறாள். 

பிறகு அந்த தர்மாத்மா {சௌதாசன்}, குரோதமயமானதும், தேஜஸ்ஸும், பலமும் நிறைந்ததுமான அந்த நீரை வெளியே விட்டான். பிறகு, தன்னிரு பாதங்களிலும் அதைத் தெளித்துக் கொண்டான்.(31) அதனால் {அந்த நீரினால்} அப்போது அந்த ராஜனின் பாதங்கள் இரண்டும் கல்மாஷத்தை {கறைபடிந்த நிலையை} அடைந்தன. அன்றுமுதல் மிகப்பெரும் புகழுடைய ராஜாவான அந்த ஸௌதாஸன், கல்மாஷபாதன் ஆனான். அவ்வாறே அந்தப் பெயரால் அந்த நிருபதி {அரசன்} புகழ்பெற்றான்.(32) 

பத்தினி {மனைவி மதயந்தி} சகிதனாக அந்த ராஜா {சௌதாசன்}, மீண்டும் மீண்டும் {வசிஷ்டரை} வணங்கி, பிராமண ரூபம் கொண்டவனால் {அந்த ராக்ஷசனால்} கூறப்பட்டதை வசிஷ்டரிடம் மீண்டும் கூறினான்.(33) பார்த்திபேந்திரனுடையது {அரசனால் நடந்த அந்த நிகழ்வு} ராக்ஷசனால் மாற்றப்பட்டதைக் கேட்டதும், புருஷரிஷபனான ராஜனிடம் {சௌதாசனிடம்} வசிஷ்டர் மீண்டும் {பின்வருமாறு} கூறினார்:(34) "கோபத்தால் ஆட்கொள்ளப்பட்ட என்னால் இந்தச் சொற்கள் கூறப்பட்டன. இதை பயனற்றதாக்க இயலாது; என்றாலும் உனக்கு ஒரு வரத்தையும் அளிப்பேன்.(35) இராஜேந்திரா, பன்னிரண்டு வருஷங்கள் கழித்து, அந்த சாபத்தின் கால அந்தம் {முடிவு} ஏற்படும். என் அருளால், கடந்ததை நீ நினைவில் கொள்ளமாட்டாய்" {என்றார் வசிஷ்டர்}.(36)

அரிசூதனனான அந்த ராஜா {பகைவரை அழிக்கும் அரசனான அந்த சௌதாசன்}, இவ்வாறு அந்தச் சாபத்தை அனுபவித்த பிறகு, மீண்டும் ராஜ்ஜியத்தை அடைந்து, பிரஜைகளையும் {தன் குடிமக்களையும்} தொடர்ந்து காத்து வந்தான்.(37) இராகவா {ரகு குலத்தைச் சேர்ந்த சத்ருக்னா}, எதை என்னிடம் நீ கேட்கிறாயோ, அஃது இந்த ஆசிரமத்தின் சமீபத்தில் உள்ள அந்த கல்மாஷபாதனுடைய யஜ்ஞத்தின் சுபமான ஆயதனம் {தலம்} ஆகும்" {என்றார் வால்மீகி}[7].(38) 

[7] கல்மாஷபாதன் கதை – வால்மீகி இராமாயணமும் மஹாபாரதமும்

சுதாஸனின் மகனான இந்த இக்ஷ்வாகு குல அரசன், ஸௌதாஸன், வீரஸஹன், மித்ரஸஹன், கல்மாஷபாதன் என்ற பெயர்களால் இரு இதிகாசங்களிலும் வருகிறான். சாபத்தின் காலம் இரண்டிலும் பன்னிரண்டு ஆண்டுகளே; ஆனால் சாபத்திற்கான காரணம், சாபமிட்டவர், சாபத்தின் தன்மை ஆகியவை வேறுபடுகின்றன.

1. சாபத்திற்கான காரணம் 
இராமாயணம் (65ம் சர்க்கம்): வேட்டையின்போது புலி உருவம் கொண்ட இரு ராக்ஷசர்களில் ஒருவனைக் கொல்கிறான்; உயிர் தப்பியவன் பழிவாங்கக் காத்திருக்கிறான்.
மஹாபாரதம்: குறுகிய வனப்பாதையில் "விலகி நில்" என்ற தகராறில், வசிஷ்டரின் மூத்த மகன் சக்திரியைக் கசையால் அடிக்கிறான் (ஆதிபர்வம் 178, 7–11).

2. சாபமிட்டவர், சாபத்தின் தன்மை
இராமாயணம்: வசிஷ்டரின் வடிவில் வந்த ராக்ஷசனின் சூழ்ச்சியால் நரமாமிசம் பரிமாறப்பட, அதை அறிந்த வசிஷ்டர் "இதுவே உன் உணவாகும்" எனச் சபிக்கிறார்; பாதங்கள் கறைபடுகின்றன.
மஹாபாரதம்: சக்திரி, "நரமாமிசம் உண்ணும் ராக்ஷசனாக மாறுவாய்" எனச் சபிக்கிறார் (178, 13–14). பிறகு இறைச்சி கேட்ட பிராமணருக்கு நரமாமிசம் பரிமாறப்பட, அவரது இரண்டாம் சாபத்தால் அது மேலும் வலுப்படுகிறது (178, 34–37).

3. விஸ்வாமித்திரரின் பங்கு
இராமாயணம்: இக்கதையில் இல்லை.
மஹாபாரதம்: வசிஷ்டருடனான பகையால், கிங்கரன் என்ற ராக்ஷசனை மன்னனின் உடலில் புகச்செய்கிறார் (178, 20–22); பின் சக்திரியையும் வசிஷ்டரின் பிற மகன்களையும் அழிக்க அதே ராக்ஷசனை ஏவுகிறார் (178, 41–42).

4. "கல்மாஷபாதன்" என்ற பெயர்
இராமாயணம்: கோபநீரால் பாதங்கள் கறைபட்டதே காரணம் என விளக்கப்படுகிறது (சுலோகம் 32).
மஹாபாரதம்: அப்பெயர் தொடக்கத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது; அதற்கான காரணம் கூறப்படவில்லை.

5. சாப விமோசனம்
இராமாயணம்: வசிஷ்டரே சாபமிட்டு, வரமும் அளித்து, பன்னிரண்டு ஆண்டுகளில் முடிவுறச் செய்கிறார் (35–37).
மஹாபாரதம்: வசிஷ்டர் மந்திரநீர் தெளித்து விடுவிக்கிறார்; "இனி பிராமணர்களை அவமதிக்காதே" என்று மட்டுமே கூறி அயோத்திக்கே அழைத்துச் செல்கிறார் (ஆதிபர்வம் 179, 25–31).

6. மதயந்தியின் பங்கு
இராமாயணம்: வசிஷ்டரைச் சபிக்கப் புகுந்த கணவனைத் தடுக்கிறாள் (29–30).
மஹாபாரதம்: பிராமணப் பெண்ணின் சாபத்தால் அவளை அணுக இயலாத நிலையில், மன்னன் வாரிசுக்காக வசிஷ்டரையே நியமிக்கிறான் (184, 19–26); பன்னிரண்டு ஆண்டுக் கருவாக இருந்து அஸ்மகன் பிறக்கிறான் (179, 43–46). இது இராமாயணத்தில் இல்லை.

அந்தப் பார்த்திபேந்திரனுடைய {சௌதாசனுடைய} மிகக் கொடுமையான அந்தக் கதையைக் கேட்டு, அந்த {வால்மீகி} மஹரிஷியை வணங்கிவிட்டு, பர்ணசாலைக்குள் {குடிலுக்குள்} நுழைந்தான் {சத்ருக்னன்}.(39)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 065ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி