The birth of Kusa and Lava | Sarga-066 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதைக்குப் பிறந்த குசனும், லவனும்; அவர்களுக்கு ரக்ஷை செய்து பெயரிட்ட வால்மீகி; செய்தி அறிந்து மகிழ்ந்து மதுவனம் புறப்பட்ட சத்ருக்னன்..
எந்த ராத்திரியில் சத்ருக்னன் பர்ணசாலையை {குடிலை} அடைந்து தங்கினானோ, அதே ராத்திரியில் சீதையும் ஆண் குழந்தைகள் இருவரைப் பெற்றெடுத்தாள்.(1) பிறகு அர்த்த ராத்திரி சமயத்தில் முனிகுழந்தைகளான பாலகர்கள், சீதையின் சுபமான பிரசவம் குறித்த பிரியத்திற்குரிய செய்தியை {பின்வருமாறு} வால்மீகியிடம் தெரிவித்தனர்:(2) "பகவானே, மஹாதேஜஸ்வியே, ராமபத்தினியானவள் {சீதை} இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். எனவே, பூதவிநாசினியான ரக்ஷையை {பூதங்களை அழிக்க வல்லதான பாதுகாப்பைச்} செய்வீராக" {என்றனர்}.(3)
அவர்களுடைய அந்த வசனத்தைக் கேட்ட மஹரிஷி, பாலச்சந்திரனைப் போன்ற தோற்றமுடையவர்களும், தேவபுத்திரர்களைப் போன்றவர்களும், மஹா ஓஜஸ் {பேராற்றல்} உடையவர்களுமான அவர்களை அணுகினார்.(4) மகிழ்ச்சியடைந்த உள்ளம் கொண்ட அவர் அங்கே சென்று, அவ்விரு குமாரர்களையும் கண்டார். மேலும் அவர்களுக்கு பூதங்களையும், ராக்ஷசர்களையும் அழிக்க வல்ல ரக்ஷையை {பாதுகாப்பைச்} செய்தார்.(5) துவிஜரான {இரு பிறப்பாளரான} அந்த வால்மீகி, ஒரு பிடி குசத்தை {தர்ப்பைப் புல்லை} எடுத்து, அதிலொரு லவத்தை {சிறு அளவைக்} கொண்டு, அவ்விருவருக்கும் பூதவினாசினியான ரக்ஷையை அளித்தார் {பூதங்களை அழிக்கவல்ல பாதுகாப்பை அளித்தார்}[1].(6)
[1] தர்மாலயப் பதிப்பில், "அந்த அந்தணராகிய வால்மீகி முனிவர் அப்பொழுது ஒரு முடி அளவு தர்ப்பையின் நுனிப்பாகத்தையும், அவ்வளவே தர்ப்பையின் அடிப்பாகத்தையும் கையிலெடுத்து அவ்விரண்டிற்கும் பேச்பிசாசங்களுக்கு வினாசகரமாகிய ரக்ஷாபந்தனத்தை இப்படிச் சொல்லிக் கொடுத்தார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "குசமென்கிற தருப்பைப்புல் ஒருபிடியெடுத்து அதனை யிரண்டாக இடையேதறித்து, அவையிரண்டிலும் ரக்ஷாமந்திரம் ஜபித்து" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "வால்மீகி முனிவர், தீய சக்திகளை நெருங்கவிடாமல் தடுக்கும் சக்தி படைத்த குசம், லவம் என்கிற புற்களைக் கொண்டு வந்து, ஒரு கைப்பிடியளவு அவர்கள் (குழந்தைகள்) பாதுகாப்புக்காகக் கொடுத்தார்" என்றிருக்கிறது. சில பதிப்புகளில் குசம் என்பது தர்ப்பையின் நுனி என்றும், லவம் என்பது அதன் அடிப்பகுதி என்றும் விளக்கம் கூறுகின்றனர். ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில் லவம் என்பது, பசு வாலின் மயிர் என்று சொல்லப்படுகிறது.
அவ்விருவரில் எவன் பூர்வஜனாக {மூத்தவனாகப்} பிறந்தானோ, அவன் மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட குசத்தால் {தர்ப்பையால்} அப்போது துடைக்கப்பட்டான். எனவே அவனுடைய பெயர் குசன் என்றானது.(7) அவ்விருவரில் எவன் அவரனாக இருந்தானோ {மூத்தவன் அல்லாத இளையவனாக இருந்தானோ,} அவன் லவத்தை {சிறிய அளவைக்} கொண்டு சமாஹிதமுடைய {கவனத்துடன் கூடிய} முதிய பெண்களால் துடைக்கப்பட்டான். எனவே அவனுடைய பெயர் லவன் என்றானது[2].(8) "இவ்வாறு இரட்டைப் பிறவிகளான இவ்விருவரும், என்னாலிடப்பட்ட பெயர்களான குசன் லவன் என்ற பெயர் பூண்டவர்களாகப் புகழ் பெற்று விளங்குவர்" {என்றார் வால்மீகி}.(9) சமாஹிதர்களான அவர்கள் {கவனத்துடன் கூடிய அந்த முதிய பெண்கள்}, {வால்மீகி} முனிவரின் கையிலிருந்து அந்த ரக்ஷையைப் பெற்றுக் கொண்டனர். பிறகு களங்கமற்றவர்களான அவர்கள், அவ்விருவருக்கும் ரக்ஷையைச் செய்தனர்[3].(10)
[2] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 867ம் பாடல் பின்வருமாறு:சீதைதன் திருவயிற்றில் திருஅவதாரம்செய்த சிறுவர் தம்மைபூத பசாசுகள் முதலானவை வந்துபொருந்தா வண்ணம் புரைதீர்காட்சிக்கோது அறு மந்திரங்கள் சொலிக் குசலவங்களால்துடைத்துக் குறிக்கொண்டார்கள்ஆதலினால் அம்மைந்தர் குசலவர்கள்என்று பேர் ஆயினாரேபொருள்: சீதையின் சிறந்த வயிற்றில் திருவவதாரம் செய்த அந்தச் சிறுவர்களைப் பூதங்கள் பசாசுகள் முதலியவை வந்து அணுகாதபடி குற்றம் நீங்கிய அறிவினால் செய்யப்பட்ட குற்றமற்ற மந்திரங்களைச் சொல்லித் தருப்பையாலும், பசுவின் வால்மயிராலும் துடைத்துக் குறிக் கொண்டு காக்கப்பட்டார்கள்; ஆதலால், அந்த மைந்தர்கள் குசலவர்கள் என்ற பேர் உடையவர் ஆயினார்கள். குறிப்பில், "குசம்-தருப்பை, லவம்-பசுவின் வால்மயிர். குசத்தால் துடைக்கப்பட்ட பிள்ளை குசன் என்றும், லவத்தால் துடைக்கப்பட்ட குழந்தை லவன் என்றும், பெயர் பெற்றன" என்றிருக்கிறது.
[3] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "சூதிகாகிருகத்தினுள் முனிவர் அப்பொழுது செல்லலாகாதலின், அவர் அதனைக் கிழவிகளிடம் கொடுக்க வேண்டியதாயிற்று. அந்த ஸ்திரீகளும் அவற்றைப் பெற்றுக் கொண்டு சென்று அங்ஙனமே துடைத்துப் பிள்ளைகளுக்கு ரக்ஷை செய்தனர்கள். இதுவே அக்குமாரர்களுக்கு ஜாதகருமமாகியது. அப்பாலகர்களில் மூத்தவன் குசத்தினால் ரக்ஷை செய்யப்பட்டன னாதலின் அவன் குசசென்னவும், இளையவன் லவத்தினால் ரக்ஷை செய்யப்பட்டமையின் லவனெனவும் நாமதேயம் பெற்றுப் பிரசித்தராக வாழ்வார்களென அம்முனிவர் அப்பொழுதே தீர்மானஞ்செய்து கொண்டனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஜாதகருமம் ஒன்றுமாத்திரமே குழந்தை பிறந்ததினத்தில் செய்யத்தகுவது; நாமகரணம் பிறகு செய்ய வேண்டிய சடங்காதலின், தீர்மானித்திக் கொண்டனரென்றது" என்றிருக்கிறது.
முதிய பெண்களால் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததையும் {ரக்ஷையையும்}, அதேபோல, ராமனுடைய சீதையின் சுபமான பிரசவங்களையும், பிறப்பையும், பெயரையும் கீர்த்தனம் செய்யப்பட்ட(11) பெரும் பிரியத்திற்குரிய செய்தியை அர்த்தராத்திரியில் கேட்ட பிறகு, சத்ருக்னன், அந்த பர்ணசாலைக்கு {சீதை இருந்த குடிலுக்குச்} சென்று, "மாதா, என்ன பாக்கியம்! {தாயே, நல்ல வேளை. நலமுடன் மகப்பேற்றைப் பெற்றாய்}" என்று கூறினான்[4].(12) அவ்வாறே, பெரும் மகிழ்ச்சியடைந்தவனும், லகுவிக்ரமனுமான மஹாத்மா சத்ருக்னனுக்கு, வார்ஷிககாலத்திற்குரிய ஸ்ராவண ராத்திரி கழிந்தது {மழைக்காலத்திற்குரிய ஆவணி மாத இரவு கழிந்தது}[5].(13)
[4] தர்மாலயப் பதிப்பில், "சத்ருக்னர் நடுநிசியில் சீதாபிராட்டியாருடைய பெற்ற இரு புண்யாத்மாக்கள் விஷயத்தில் அப்படி செய்யப்படுகின்ற அந்த ரக்ஷாபந்தனத்தையும் ஸ்ரீராமருடைய பெயர் ஒன்றையே ஸர்வ பாக்கியமாயும் மிக்க இனிமையாகவும் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுவதையும் கேட்டார். அதன்மேல் பர்ணசாலைக்குள் சென்று "ஹே ஸர்வலோக மாதவே" என்றழைத்தும் "நான் இன்று இங்கிருக்க அந்தப் பாக்கியம் பெற்றேன்" என்று சொன்னார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "சீதையின் மக்களுக்குத் தவசிப் பெண்கள் ரக்ஷைசெய்யுமளவில் அக்குமாரர்களுடைய தோத்திர நாமத்தையும், சக்கரவர்த்தித் திருமகனது திருநாமத்தையும் சொல்லியதையும், சீதாபிராட்டி பிள்ளை பெற்றாளென முனிகுமாரர்கள் கூவியதையும் சத்துருக்கனாழ்வான் அர்த்தராத்திரியில் கேள்வியுற்றுக் களிப்பெய்தி, பிராட்டி பிரஸவித்த விடமான பர்ணசாலையிற் சென்று பிராட்டியை நோக்கி, "தாயே! தெய்வாதீனமாய் இத்தருணத்தில் அடியேன் தேவரீரைச் சேவிக்க நேரிட்டது அடியேனது பாக்கியமே"யென்று சொல்லி சந்தோஷப்படுத்தினார்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "உடல் ரட்சைக்கான சடங்குகளைச் செய்யும்போது, இராம-சீதைகளின் பெயர்களையும் தோத்திரத்தையும் உச்சரித்தார்கள். அந்த நடுநிசியில், செவிக்கினிய சொற்களைக் கேட்ட சத்ருக்ன், குழந்தைப் பேறு நிகழ்ந்திருந்த குடிலுக்குள் சென்று, (சீதையைப் பார்த்து), "அன்னையே! இது மிகவும் மகத்தான பேறு!" என்று கூறினான்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "சீதை எவ்விதச் சிரமமுமின்றி இரண்டு மகன்களைப் பெற்றெடுத்ததையும், முதிய பெண் துறவிகள் அக்குழந்தைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதையும், நள்ளிரவில் ராமனின் புகழைப் பாடும் ஓசையையும் கேட்ட சத்ருக்னன், "சீதை இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தது எப்படிப்பட்ட பேறு!" என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "அச்சடங்கு இரவில் நிறைவேறியதும், மகிழ்ச்சியான செய்திகளையும், குழந்தைகளுக்கு இடப்பட்ட பெயர்களையும், ராமனின் புகழையும், சீதை இரட்டைப் பேறுகளைப் பெற்ற நல்நிகழ்வையும் கேள்விப்பட்ட சத்ருக்னன், சீதை தங்கியிருந்த பர்ணசாலையை அணுகி, "அம்மா, நீ மகிழ்ச்சியுடன் இருப்பாயாக" என்று கூறினான்" என்றிருக்கிறது. விவேக்தேவ்ராய் பதிப்பில், "அவர்கள், அவர்களைக் காப்பதற்கான சடங்குகளைச் செய்து, அவர்களுக்குரிய கோத்திரங்களையும், பெயர்களையும் சூட்டினர். மங்கலமான அவ்விருவரும் ராமன், சீதையும் புதல்வர்கள் என்று அவர்கள் அறிவித்தனர். நள்ளிரவில் சத்ருக்னன் மகிழ்ச்சிமிக்க இந்தச் செய்தியைக் கேட்டான். இரவிலேயே அவன் அந்த பர்ணசாலைக்குச் சென்று, "இது நற்பேறு. இது பெரும்பாக்கியம்" என்றான்" என்றிருக்கிறது. ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டத்தில் சத்ருக்னன், சீதைக்கு மகன்கள் பிறந்த செய்தியை மட்டுமே அறிகிறான். பிறப்பில் மகிழ்ச்சியடைந்தாலும், எப்படிப்பட்ட இடத்தில் பிறக்க வேண்டியவர்கள் என்று எண்ணி வருந்துகிறான். அவன் பர்ணசாலைக்கு செல்லாமல், சீதையையும், பிள்ளைகளையும் பார்க்காமல் விடிந்ததும் மேற்கு நோக்கிப் புறப்படுகிறான்.
[5] தர்மாலயப் பதிப்பில், "அப்படியாய் சந்தோஷமாயிருந்த அந்த மஹாத்மாவாகிய சத்ருக்னருக்கு மாரிகாலத்தியதும் ஆவணி மாதத்தியதும் அஹஸைவிடக் குறைந்த நாழிகையுள்ளதுமாகிய இரவு கழிந்தது" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "இவ்வாறு அவர் அகமகிழ்ந்திருக்கையில், மாரிகாலத்தைச் சேர்ந்த அந்த ஆவணிமாதத்திரவு இனிதாகக் கழிந்து விடியற்காலமாயிற்று" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "இவ்வாறு, மகாத்மாவான சத்ருக்னன் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்துக் கொண்டிருக்கும்போது, மாரிக்கால அந்த இரவு கழிந்தது" என்றிருக்கிறது.
பிரபாதத்தில் {விடியற்காலையில்}, மஹாவீரியமிக்கவன் {சத்ருக்னன்}, முற்பகலுக்குரிய கிரியையைச் செய்து முடித்து, கைகளைக் கூப்பியவாறு முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு, மீண்டும் மேற்கு நோக்கிய முகம் கொண்டவனாகச் சென்றான்.(14) அவன், வழியில் ஏழு இரவுகள் தங்கி, யமுனையின் கரையை அடைந்து, புண்ணிய கீர்த்தி கொண்ட ரிஷிகளின் ஆசிரமத்தில் வாசம் செய்தான்.(15) பெரும்புகழுடைய அந்த நிருபன் {அரசன் சத்ருக்னன்}, அங்கே பார்க்கவர் {பிருகு வம்சத்து முனிவர்} முதலான முனிவர்களுடன் சேர்ந்து, மனம் கவரும் கதைகளுடன் {கதைகளைப் பேசி} வாசம் செய்தான்.(16) நரேந்திரனின் மகனும், ரகுப்ரவீரனுமான {ரகு குலத்தின் சிறந்த வீரனுமான} அந்த மஹாத்மா {சத்ருக்னன்}, அப்போது காஞ்சனர் முதலான முனிவர்களுடன் சேர்ந்து பலவகையான கதைகளால் {கதைகளைப் பேசி} அந்த இரவைக் கழித்தான்.(17)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 066ல் உள்ள சுலோகங்கள்: 17
| Previous | | Sanskrit | | English | | Next |
