Progeny of Sukesa | Sarga-005 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மாலியவான், சுமாலி, மாலி என்ற மூன்று மகன்களைப் பெற்ற சுகேசன்; அவர்கள் லங்கையில் குடிபுகுந்து, மணம்புரிந்து, பல மக்களைப் பெற்றது...
{கந்தர்வர்களின் தலைவனான} விஷ்வாவஸுவுக்கு சமமான பிரபையைக் கொண்டவனும், கிராமணீ என்ற பெயருடையவனுமான கந்தர்வன் ஒருவன், தார்மிகனாகவும், வரம்பெற்றவனாகவும் இருந்த ராக்ஷசன் சுகேசனைப் பார்த்தான்.(1) அவனுக்கு {கிராமணீக்கு}, தேவவதி என்ற பெயரைக் கொண்டவளும், இரண்டாவது ஸ்ரீயைப் போன்றவளுமான ஒரு மகள் இருந்தாள். அவள் ரூப, யௌவனஷாலினியாக {அழகும், இளமையும் கொண்டவளாக} மூன்று உலகங்களிலும் பிரசித்தி பெற்றிருந்தாள். அவன் {கிராமணீ}, ராக்ஷசசெல்வம் எப்படியோ, அப்படியே அவளை {தேவவதியை} தர்மத்திற்கிணங்க அந்த சுகேசனுக்கு கொடுத்தான்.(2) வரதானத்தால் பெற்ற ஐஷ்வர்யத்துடன் கூடியவனும், பிரியத்திற்குரியவனுமான பதியை {கணவனைப்} பெற்ற தேவவதி, தனமில்லாதவருக்கு தனம் கிடைத்தாற்போல மகிழ்ந்திருந்தாள்.(3) அஞ்ஜனத்திடமிருந்து {அஞ்சனம் என்ற திசையானையிடம் இருந்து} தோன்றிய மஹாகஜம், ஒரு கரேணுவுடன் {பெண்யானையுடன்} மகிழ்ந்திருப்பதைப் போல, அந்த ரஜனீசரன் {இரவுலாவியான சுகேசன்} அவளுடன் கூடி மகிழ்ந்திருந்தான்.(4)
இராகவா {ராமா}, சுகேசன் தேவவதியிடம் தன் வழித்தோன்றல்களைப் பெற்றான்.(5) திரேதாக்னிக்கு சமமான ஆற்றல்வாய்ந்த மூன்று புத்திரர்களை வழித்தோன்றல்களாக அவன் பெற்றான். அவர்கள், மால்யவந்தன், ஸுமாலி, பலவான்களில் சிறந்த மாலி ஆகியோராவர். அந்த ராக்ஷசாதிபனுக்கு {சுகேசனுக்குத்} திரிநேத்ரங்களுக்கு {முக்கண்களுக்கு} சமமான மூன்று புத்திரர்களாக அந்த ராக்ஷசர்கள் இருந்தனர்.(6) மூன்று உலகங்களைப் போல உறுதியானவர்களாகவும், மூன்று அக்னிகளைப் போலத் தடையற்றவர்களாகவும், மூன்று மந்திரங்களைப் போல கடுமையானவர்களாகவும், மூன்று நோய்களைப் போல கோரமானவர்களாகவும் அவர்கள் இருந்தனர்[1].(7) சுகேசனின் மூன்று சுதன்களும், மூன்று அக்னிகளைப் போன்ற தேஜஸ்விகளாகவும், புறக்கணிக்கப்பட்ட வியாதியைப் போலவும் விருத்தியடைந்தனர் {வளர்ந்து வந்தனர்}.(8)
[1] கோரக்பூர், கீதா பிரஸ் தமிழ்ப்பதிப்பில், "அவர்கள் மூன்று உலகங்களையும் போன்று உறுதி கொண்டவர்கள்; மூன்று அக்னிகளைப் போன்று தேசுமிக்கவர்கள்; மூன்று மந்திரங்களைப் போன்ற சக்தி உடையவர்கள்; பித்தம், வாதம், கபம் என்ற மூன்று காரணங்களால் உண்டாகும் நோயைப் போல் பயங்கரமானவர்கள். (மூன்று மந்திரங்கள் = மூன்று சக்திகள் = எதிர்ப்பில்லாத தலைமை, சோர்வின்மை, மந்திரம் அல்லது மூன்று வேதங்களையும் கொள்ளலாம்)" என்றிருக்கிறது.
தங்கள் பிதா {சுகேசன்}, தபோபலத்தால் வரப்பிராப்தி அடைந்ததை அறிந்து கொண்ட அந்த பிராதாக்கள் {உடன்பிறந்தோர்}, தபஸ் செய்ய நிச்சயித்துக் கொண்டு மேரு மலைக்குச் சென்றனர்.(9) நிருபசத்தமா {மன்னர்களில் சிறந்தவனே}, அந்த ராக்ஷசர்கள் கோரமான நியமங்களை மேற்கொண்டு, சர்வபூதங்களுக்கும் பயத்தை ஏற்படுத்தும் கோரமான தபத்தைச் செய்தனர்.(10) சத்தியம், நேர்மை, அடக்கம் ஆகியவற்றுடன் கூடிய கடுந் தபத்தால் அவர்கள் தேவ, அசுர, மானுஷர்கள் உள்ளிட்ட மூவுலகத்தாருக்கும் சந்தாபத்தை {வருத்தத்தை} ஏற்படுத்தினர்.(11)
அப்போது, நான்கு முகங்களைக் கொண்ட விபு {பிரம்மன்}, தன் சிறந்த விமானத்தில் ஏறி வந்து, சுகேசனின் புத்திரர்களை அழைத்து, "வரதனாக {வரம் தருபவனாக} வந்திருக்கிறேன்" என்று கூறினான்.(12)
இந்திரனுடன் கூடிய தேவகணங்கள் சூழ வரதனாக {வரம் தருபவனாக} பிரம்மன் வந்திருப்பதை அறிந்ததும், காற்றில் நடுங்கும் மரங்களைப் போலக் கூப்பியக் கைகளுடன் அவர்கள் அனைவரும் {பின்வருமாறு} கூறினார்கள்:(13) "தேவா, எங்கள் தப வழிபாட்டால் மகிழ்ச்சியடைந்து, எங்களுக்கு வரம் தருவதாக இருந்தால், நாங்கள் வெல்லப்படமுடியாதவர்களாகவும், சத்ருக்களைக் கொல்பவர்களாகவும், நீண்ட காலம் வாழ்பவர்களாகவும்,(14) பரஸ்பரம் {ஒருவரையொருவர்} அனுசரித்து, பேராற்றல் வாய்ந்தவர்களாகவும் ஆக வேண்டும்" {என்று கேட்டனர்}.(15)
பிராமணவத்சலனான {பிராமணர்களிடம் அன்பு கொண்டவனான} பிரம்மன், சுகேச தனயர்களிடம், "அப்படி ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு பிரம்மலோகம் சென்றான்.(16)
வரம்பெற்ற ராத்ரிஞ்சர்கள் அனைவரும், இராமா, அந்த வரதானத்தால் நிர்பயமடைந்து {பயமற்றவர்களாகி}, ஸுராஸுரர்களைத் துன்புறுத்தினர்.(17) அவர்களால் துன்புற்ற திரிதசர்கள் {தேவர்கள்}, ரிஷிசங்கத்தினர், சாரணர்கள் ஆகியோர் நிரயத்தில் விழுந்த நரர்களை {நரகத்தில் விழுந்த மனிதர்களைப்} போலத் தங்களை மீட்பார் எவரையும் காணாமல் இருந்தனர்.(18)
பிறகு, ரகுசத்தமா {ரகுக்களில் சிறந்த ராமா}, சிற்பிகளில் சிறந்தவனும், அழிவற்றவனுமான விஷ்வகர்மாவிடம் சென்று, ராக்ஷசர்கள் மகிழ்ச்சியுடன் {பின்வருமாறு} கூறினார்கள்:(19) "ஓஜஸ் {உயிராற்றல்}, தேஜோபலம் {வலிமை}, மஹத்தான ஆத்மதேஜஸ் {ஆத்மவொளி} ஆகியவற்றுடன் கூடிய தேவர்களின் ஹிருதயத்திற்கிணங்க நீ கிருஹங்களை {வீடுகள்} உண்டாக்கி இருக்கிறாய்.(20) மஹாமதி படைத்தவனே, எங்களுக்கும் உன்னால் முடிந்த ஒரு கிருஹத்தை உண்டாக்குவாயாக. ஹிமவந்தம், மேரு, மந்தரம் என எதையும் ஆசரிப்பாயாக {ஆகிய எந்த இடமாக இருந்தாலும் சரி}. அங்கே மஹேஷ்வரனின் கிருஹத்தைப் போன்ற மஹத்தான கிருஹத்தை எங்களுக்கு அமைத்துத் தருவாயாக" {என்று கேட்டனர்}.(21)
அப்போது மஹாபுஜனான விஷ்வகர்மா, அந்த ராக்ஷசர்களிடம், சக்ரனின் {இந்திரனின்} அமராவதியைப் போன்ற ஒரு வசிப்பிடத்தைக் குறித்து {பின்வருமாறு} விவரித்தான்:(22) "கடலின் தக்ஷிண தீரத்தில் {தென்கரையில்}, திரிகூடம் என்ற நாமத்தில் ஒரு பர்வதம் இருக்கிறது. சத்தமர்களே {உன்னதமானவர்களே}, அங்கே சுவேலம் என்ற இரண்டாவதும் {மற்றொரு மலையும்} இருக்கிறது.(23) அந்த சைல சிகரத்தின் மத்தியில், மேகம்போன்ற தோற்றம் கொண்டதும், சதுர்திசைகளிலும் {நாற்புறமும்} உளியால் செதுக்கப்பட்டதும், பறவைகளாலும் அடைவதற்கரியதுமான ஓரிடம் இருக்கிறது.(24) முப்பது யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் நீளமும் கொண்ட அது, பெரும் சுவர்ண பிராகாரங்களாலும் {பொன் மதில்களாலும்}, ஹேமத் தோரணங்களாலும் {பொன்னாலான நுழைவாயில்களாலும்} சூழப்பட்டிருக்கிறது.(25) சக்ரனின் {இந்திரனின்} ஆணைக்கிணங்க அங்கே லங்கை என்ற நகரம் என்னால் நிர்மிதம் செய்யப்பட்டது. இராக்ஷசபுங்கவர்களே, அங்கே அணுகுதற்கரியவர்களாக நீங்கள் வசித்திருப்பீராக.(26) திவௌகசர்களுடன் {சொர்க்கவாசிகளான தேவர்களுடன்} சேர்ந்து அமராவதியை அடைந்த இந்திரனைப் போல, ராக்ஷசர்கள் சூழ லங்கா துர்கத்தை {லங்கை எனும் கோட்டையை} நீங்கள் அடைவீராக.(27) சத்ருசூதனர்களே {பகைவரை அழிப்பவர்களே}, நீங்கள் சத்ருக்களால் அணுகப்பட இயலாதவர்கள் ஆவீர்கள்" {என்றான் விஷ்வகர்மன்}.(28)
விஷ்வகர்மாவின் சொற்களைக் கேட்ட அந்த ராக்ஷசோத்தமர்கள், தங்களைப் பின்தொடர்ந்த ஆயிரக்கணக்கானோருடன் சென்று அந்தப் புரீயில் வசித்தனர்.(29) அது திடமான பிராகாங்களாலும், அகழிகளாலும், நூற்றுக்கணக்கான கிருஹங்களாலும் சூழப்பட்டிருந்தது. அந்த ரஜனீசரர்கள் லங்கையை அடைந்து, மகிழ்ச்சியுடன் வசித்தனர்.(30)
இந்தக் காலத்தில், ராகவா, அவர்கள் விரும்பியதனைத்தும் நடந்தன. இரகுநந்தனா, நர்மதை என்ற பெயரில் ஒரு கந்தர்வி இருந்தாள்.(31) அவளுக்கு மூன்று கன்னிகைகள் இருந்தனர். அவர்கள் தைரியம், தனம், கீர்த்தி ஆகியவற்றுடன் கூடிய ஸ்ரீயைப் போன்றவர்களாக இருந்தனர். அவள் {நர்மதை} ராக்ஷசியாக இல்லாவிட்டாலும், மூப்பின் வரிசைப்படி அவர்களை அந்த ராக்ஷசர்களுக்கு {மூத்தவளை மூத்தவனுக்கும், இளையவளை இளையவனுக்கும் எனக்} கொடுத்தாள்.(32) பூர்ணச் சந்திரனைப் போன்று பிரகாசிக்கும் முகங்களைக் கொண்ட அந்தக் கன்னிகைகளை மகிழ்ச்சியுடன் அவர்களுக்குக் கொடுத்தாள். இராக்ஷசேந்திரர்கள் மூவருக்கும், மூன்று கந்தர்வக் கன்னிகைகளைக் கொடுத்தாள்[2].(33) மாதா, அந்த மஹாபாகைகளை {பெரும் பாக்கியவதிகளை}, பகதைவத நக்ஷத்திரத்தில் {தெய்வீகமான - பகம் / உத்தர பல்குனி / உத்தரம் - நக்ஷத்திரத்தில்} தத்தம் செய்தாள். இராமா, அந்த சுகேச தனயர்கள் தங்கள் தாரங்களுடன் அங்கே இருந்தனர்.(34)
[2] யாவராலும் கண்களினால் எட்டிப் பார்க்க ஒண்ணாதகாவல் இலங்கை வீற்றிருந்த காலைக் கானக் கந்திருவப்பாவையான நருமதை தான் பயந்த மூவர் மங்கையரில்மூவராய ஆங்கு அவர்க்கு மூப்பின் அடைவின் முறை கொடுத்தாள்.- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 100ம் பாடல், அரக்கர் பிறப்புப் படலம்பொருள்: எவராலும் கண்களால் எட்டிப்பார்க்கவும் இயலாத காவலைக் கொண்ட லங்கையில் இருந்த அம்மூவரும் பாடுவதில் வல்ல கந்தர்வப் பெண்ணான நர்மதை என்பவள், தான் பெற்ற மூன்று மங்கையரில் மூப்பின் தகுதிக்கேற்ப மூவராயிருந்த அவர்களுக்கு {மாலியவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு} முறையே கொடுத்தனள்.
பிறகு அவர்கள், அப்சரஸ்களுடன் அமரர்களைப் போலத் தங்கள் பாரியைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். மால்யவதனின் பாரியை சுந்தரி, பெயருக்கேற்ற சுந்தரியாவாள்.(35) அவன், அவளிடம் பெற்ற வழித்தோன்றல்களைக் குறித்துக் கேட்பாயாக. வஜ்ரமுஷ்டி, விரூபாக்ஷன், அதேபோல ராக்ஷசன் துர்முகன்,(36) ஸுப்தக்னன், யக்ஞகோபன், அதேபோல, மத்தன், உன்மத்தன் ஆகியோரும், சுந்தரியின் சுந்தரக் கன்னிகையான அனலையும் அவனுக்குப் பிறந்தனர்.(37)
சுமாலியின் பாரியை {மனைவி}, பூர்ணச் சந்திரனைப் போன்ற முகத்தைக் கொண்டவள். பெயர் கேதுமதீ. இராமா, அவள் அவனுக்குப் பிராணனைவிட அன்புக்குரியவள்.(38) சுமாலி, கேதுமதியின் மூலம் தன் வழித்தோன்றல்களைப் பெற்றான். மஹாராஜாவே {ராமா}, அவர்களை வரிசைப்படிச் சொல்கிறேன் கேட்பாயாக.(39) பிரஹஸ்தன், அகம்பனன், விகடன், காலகார்முகன், தூம்ராக்ஷன், அதேபோல தண்டன், மஹாபலவானான சுபார்ஷ்வன்,(40) சம்ஹ்ராதி, பிரகசன், பாசகர்ணன் ஆகிய ராக்ஷசர்களும், ராகா {ராகை}, புஷ்போத்கடா {புஷ்போத்கடை / புஷ்போதகை}, புன்சிரிப்புடன் கூடிய கைகசி, கும்பீனசி ஆகியோர் சுமாலிக்குப் பிறந்தவர்களாவர்.(41)
மாலி, வசுதா {வசுதை} என்ற பெயரைக் கொண்டவளும், ரூபஷாலினியுமான கந்தர்வீயை பாரியையாகக் கொண்டிருந்தான். அவள் பத்மபத்ராக்ஷீ {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவள்}; ஒப்பு கூற முடியாத யக்ஷினியைப் போன்ற சிறந்த கண்களைக் கொண்டவள்.(42) பிரபோ, சுமாலியின் அனுஜனுடைய {சுமாலியின் தம்பியான மாலியின்} வழித்தோன்றல்களை அவள் பெற்றெடுத்தாள். அவர்களைக் குறித்து நான் உனக்குச் சொல்கிறேன், ராகவா, நீ கேட்பாயாக.(43) மாலிக்குப் பிறந்த நான்கு நிசாசரர்களான அனலன், அனிலன், அதேபோல ஹரன், சம்பாதி ஆகியோர் விபீஷணனின் அமைச்சர்களாவர்.(44)
மூன்று ராக்ஷசபுங்கவர்களும், தங்கள் புத்திரர்களாலும், மற்றுமுள்ள நிசாசரர்களாலும் சூழப்பட்டவர்களாக பலவகை வீரியங்களால் செருக்குற்று, இந்திரனுடன் கூடிய ஸுரர்கள் {தேவர்கள்}, ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள் ஆகியோரைத் துன்புறுத்தினர்.(45) அனிலனை {வாயுவைப்} போலத் தங்கு தடையின்றி ஜகமெங்கும் சுற்றித் திரிந்தவர்களும், ரணத்தில் {போரில்} வெல்லப்பட முடியாதவர்களும், மிருத்யுவைப் போல் தாக்கி அழிக்கும் தேஜஸ் கொண்டவர்களுமான அவர்கள், வரங்களைப் பெற்றிருந்ததால் பெரும் செருக்குடன் யாகச் சடங்குகளை எப்போதும் அழிப்பவர்களாக இருந்தனர்.(46)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 005ல் உள்ள சுலோகங்கள்: 46
| Previous | | Sanskrit | | English | | Next |

