Boons and a curse | Sarga-036 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானுக்கு தேவர்கள் அளித்த வரங்கள்; ஆசிரமங்களில் சென்று தீங்கிழைத்த ஹனுமான்; முனிவர்களின் சாபம்; விடைபெற்றுக் கொண்ட அகஸ்தியர்...
பிறகு, தன் புத்திரன் தாக்கப்பட்டதால் வேதனையடைந்த வாயு, பிதாமஹனை {பிரம்மனைக்} கண்டு, தன் சிசுவை {குழந்தை ஹனுமானைக்} கைகளில் ஏந்திக் கொண்டு, தாதுவின் {படைப்போனின்} முன்னிலையில் எழுந்து நின்றான்.(1) வாயு, குண்டலங்கள் {காதணிகள்}, மௌலி {கிரீடம்}, மாலைகள், பசும்பொன்னாலான ஆபரணங்கள் அசைய, வேதஸ்ஸை {பிரம்மனை} மூன்று முறை {வலம் வந்து} வழிபட்டு, பாதங்களிரண்டில் விழுந்தான்.(2) தொங்கும் ஆபரணங்களால் பிரகாசிக்கும் அந்த வேதவித்தோ {வேதங்களை அறிந்தவனுமான பிரம்மனோ}, தன் கையால் அந்த வாயுவை எழச்செய்து, அந்த சிசுவைத் தடவிக் கொடுத்தான்.(3) பிறகு, பத்மயோனியால் {தாமரையை இருப்பிடமாகக் கொண்ட பிரம்மனால்} விளையாட்டாகத் தீண்டப்பட்ட மாத்திரத்திலேயே அத்தகையவன் {அடிபட்டிருந்த ஹனுமான்} ஜலத்தால் நனைக்கப்பட்ட பயிரைப் போல புனர்ஜீவிதம் {மறுவாழ்வை} அடைந்தான்.(4) இத்தகையவனைப் பிராணவந்தனாகக் கண்டு {அடிபட்டு வீழ்ந்திருந்த ஹனுமானை உயிர்பெற்றவனாகக் கண்டு}, கந்தவஹனான பிராணன் {நறுமணத்தைச் சுமந்து செல்பவனும், உயிர்க் காற்றுமான வாயு}, சர்வ பூதங்களிலும் {அனைத்து உயிரினங்களிலும்} அடைத்து நின்றதை விடுத்து முன்பு போல மகிழ்ச்சியுடன் சஞ்சரித்தான்.(5)
மருத்தின் {வாயுவின்} அடைப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களான அந்தப் பிரஜைகள் {உலக உயிர்கள்}, பனி, வெப்பங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட்ட அம்புஜங்களுடன் கூடிய பத்மினியை {தாமரைகளுடன் கூடிய தாமரைப்பொய்கைகளைப்} போல மகிழ்ச்சியடைந்தனர்.(6) பிறகு, மூன்று ஜோடிகளை {ஆறு குணங்களைக்} கொண்டவனும்[1], மூவுலகங்களுக்கும் தலைவனும், மூவுலகங்களின் பிரகாசமானவனும், திரிதசர்களால் {தேவர்களால்} அர்ச்சிக்கப்பட்டவனுமான பிரம்மன், மாருதனுக்கு {வாயுவுக்குப்} பிரியமானதைச்செய்ய விரும்பி தேவர்களை நோக்கி {பின்வருமாறு} கூறினான்:(7) "ஓ மஹேந்திரா, ஈசா {யமனே}, வருணா, பிரஜேஷ்வரா, தனேஷ்வரா {குபேரா}, உங்கள் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்த போதிலும், ஹிதமானதைக் கூறப் போகிறேன். கேட்பீராக.(8) இந்த சிசுவால் {ஹனுமானால் தேவர்களான} உங்கள் அனைவருக்கும் {எதிர்காலத்தில்} காரியங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கும். எனவே, இந்த மாருதனின் {வாயுவின்} மகிழ்ச்சிக்காக {நீங்கள்} அனைவரும் வரங்களைக் கொடுப்பீராக" {என்றான் பிரம்மன்}.(9)
[1] மூலத்தில் திரியுக்மன் என்றிருக்கிறது. அதன் பொருள் மூன்று ஜோடிகளை {குணங்களை} உடையவன் என்பதாகும், அதாவது, ஞானம் {அறிவு}, பலம் {வலிமை}, ஐஷ்வர்யம் {செல்வம் / செல்வாக்கு}, வீரியம் {பராக்கிரமம்}, சக்தி {ஆற்றல்}, தேஜஸ் {பிரகாசம்} என்ற ஆறு முக்கிய குணங்களைக் கொண்டவன் என்று பொருள்.
பிறகு, சஹஸ்ரநயனன் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன்}, பிரீதியுடையவனாக, சுபமான ஆனனத்தை {முகத்தை} உடையவனாக, தாமரை மலர்களாலான மாலையை {தன் கழுத்திலிருந்து கழற்றி} எடுத்து இந்தச் சொற்களைக் கூறினான்:(10) "என் கையால் ஏவப்பட்ட வஜ்ரத்தால் இவனது ஹனு {தாடை} தாக்கப்பட்டதால், இந்தக் கபிசார்தூலன் {குரங்குகளில் புலியானவன்}, ஹனுமான் என்ற பெயராலேயே {இனி} அழைக்கப்படுவான்.(11) நான் இவனுக்கு பரம அற்புதமான வரத்தைக் கொடுக்கிறேன். இது முதல் {இன்றிலிருந்து} என் வஜ்ரத்தால் {இந்த ஹனுமான்} கொல்லப்படமுடியாதவன் ஆவான்" {என்று சொல்லி அந்தத் தாமரை மாலையை ஹனுமானுக்குக் கொடுத்தான் இந்திரன்}.(12)
அங்கே, இருளைப் போக்குபவனான பகவான் மார்த்தாண்டன் {மடிந்த முட்டையில் இருந்து பிறந்து, இருளை நீக்கி ஒளியைத் தரும் சூரியன் பின்வருமாறு} கூறினான், "இவனுக்கு என் தேஜஸ்ஸில் {ஒளியில்} இருந்து நூறில் ஒரு பங்கைக் கொடுக்கிறேன்.(13) எப்போது இவனுக்கு சாஸ்திரங்களைப் படிப்பதற்கான சக்தி உண்டாகுமோ, அப்போது இவனுக்கு சாஸ்திரங்களை உபதேசிப்பேன். அதன்மூலம், {இவன்} மிகச் சிறந்த பேச்சாளன் ஆவான்.(14) மேலும் சாஸ்திரங்களை ஆராய்ந்து அறிவதில் இவனுக்கு நிகரானவனாக எவனுமே இருக்கமாட்டான்" {என்றான் சூரியன்}. வருணனும் {பின்வரும்} வரத்தை அளித்தான், "நூறு ஆயுத வருஷங்கள் {பத்து லக்ஷம் ஆண்டுகள்}[2] கடந்தாலுங்கூட என் பாசத்தாலும் {பாசக்கயிற்றினாலும்}, நீரினாலுங்கூட இவனுக்கு மிருத்யு {மரணம்} உண்டாகாது" {என்றான் வருணன்}.(15) யமன், "மகிழ்ச்சியடைந்தவனாக, {என் யம} தண்டத்தால் வதைக்கப்படாமை, நித்திய ஆரோக்கியம் {என்றும் பிணியுறாமை}, போரில் சோர்வில்லாமை என்ற வரத்தைக் கொடுக்கிறேன்" {என்றான்}.(16)
[2] ஆயுத' என்றால் 10,000. 'சத' என்றால் 100. எனவே வர்ஷ-ஆயுத-சதேன என்றால் 10,000 × 100 = 10,00,000 அதாவது பத்து லட்சம் வருடங்கள் என்று பொருள் வரும்.
அப்போது, வரதனான ஏகாக்ஷிபிங்களன்[3] {வரங்களை அளிப்பவனும், மஞ்சள் நிற ஒற்றைக் கண் உடையவனுமான குபேரன்}, இதை இப்படிக் கூறினான், "என்னுடைய இந்த கதை {கதாயுதம்}, போர்க்களங்களில் இவனை வதைக்காது" {என்றான்}.(17) சங்கரனாலும் {சிவனாலுங்} கூட, "இவன் என்னாலும், என் ஆயுதங்களாலும் வதைக்கப்பட முடியாதவன் ஆவான்" என்றிப்படிப் பரம வரம் தத்தம் செய்யப்பட்டது.(18) பிரம்மன், இந்தச் சொற்களைக் கூறினான், "இவன் எல்லாவிதமான பிரம்மதண்டங்களாலும் வதைக்கப்பட முடியாதவனாகவும், தீர்க்காயுசு உடையவனாகவும், மஹாத்மாவாகவும் ஆவான்" {என்றான்}.(19) சிற்பிகளில் சிறந்தவனும், மஹாமதியுடையவனுமான விஷ்வகர்மாவும், பாலசூரியனுக்கு ஒப்பான இந்த சிசுவைக் கண்டு, இவனுக்கு {பின்வரும்} வரத்தை அளித்தான்:(20) "யுத்தத்திற்காக எந்தெந்த திவ்யமான சஸ்திரங்கள் என்னால் செய்யப்பட்டனவோ, அவற்றால் வதைக்கப்படாமையை அடைந்து, சிரஞ்ஜீவியாக {நீண்ட ஆயுள் கொண்டவனாக} இருப்பான்" {என்றான் விஷ்வகர்மன்}.(21)
[3] இந்தப் பெயருக்கான காரணம் சர்க்கம் 13ல் இருக்கிறது.
பிறகு, ஜகத்குருவான சதுர்முகன் {பிரம்மன்}, ஸுரர்களின் {தேவர்களின்} வரங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவே இவனைக் கண்டு, மகிழ்ச்சியான மனத்துடன் வாயுவிடம் {பின்வருமாறு} கூறினான்:(22) "மாருதா {வாயுவே}, உன் புத்திரனான இந்த மாருதி {ஹனுமான்}, அமித்ரர்களுக்கு {பகைவருக்கு} பயங்கரனாகவும், மித்ரர்களுக்கு அபயங்கரனாகவும் {நண்பர்களுக்கு பயங்கரமற்றவனாகவும்}, எவராலும் வெல்லப்பட முடியாதவனாகவும் ஆவான்.(23) விரும்பிய வடிவம் எடுப்பவனாகவும், விரும்பியவாறு திரிபவனாகவும், விரும்பிய இடங்களுக்குச் செல்பவனாகவும், தடையற்ற கதியை {இயக்கத்தை} உடையவனாகவும் இருப்பவனான பிலவதர்களில் {தாவிச் செல்பவர்களில்} சிறந்தவன், {மேலும்} கீர்த்திமானாகவும் {பெரும் புகழுடையவனாகவும்} விளங்குவான்.(24) இவன் யுத்தத்தில் ராவணனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டவையும், ராமனுக்குப் பிரியமானவையும், ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்துபவையுமான கர்மங்களின் கர்த்தா ஆவான் {செயல்களைச் செய்பவன் ஆவான்" என்றான் பிரம்மன்}.(25)
இப்படிக் கூறிவிட்டு, அந்த மாருதனிடம் {வாயுவிடம்} விடைபெற்றுக் கொண்டு, பிதாமஹனை {பிரம்மனை} முன்னிட்டுக் கொண்ட சர்வ அமரர்களும் கூடி வந்த வழியே சென்றனர்.(26) அந்த கந்தவஹனும் {நறுமணத்தைச் சுமப்பவனான வாயுவும்} கூட, புத்திரனை எடுத்துக் கொண்டு, புறப்பட்டுச் சென்று, கிருஹத்தை {வீட்டை} அடைந்து, {தேவர்களால்} வரங்கள் தத்தம் செய்யப்பட்டதை அஞ்சனையிடம் கூறினான்.(27) இராமா, வரங்களின் கொடைகளைப் பெற்ற இவன் {ஹனுமான்}, வரங்களை அடைந்தவுடன், தன்னுள்ளே நிலைபெற்றிருந்த பலத்தால், கடல் {மழைநீரால்} எப்படிப் பெருகுமோ, {அப்படியே} இவன் நிறைந்து விளங்கினான்.(28)
அப்போது வேகத்தாலும், பேராற்றலாலும் நிறைந்த போதிலும் இந்த வானரபுங்கவன், பயமில்லாதவனாக மஹரிஷிகளின் ஆசிரமங்களில் அபராதங்களை {தவறுகளைச்} செய்யத் தொடங்கினான்.(29) இவன், சாந்த மனமுடையவர்களின் {முனிவர்களின் வேள்விக்குரிய} மரக்கரண்டிகளையும், பாண்டங்களையும் {பாத்திரங்களையும்}, அக்னி ஹோத்ரங்களையும் {ஹோம குண்டங்களையும்}, மரவுரிகள், மான்தோல்களின் குவியல்களையும் நொறுக்கியும், கிழித்தும், சிதறடித்தும் பாழாக்கினான்.(30) சம்புவால் {சிவனால் / பிரம்மனால்}[4] அனைத்துவகை பிரம்மதண்டங்களாலும் வதைக்கப்பட முடியாதவனாகச் செய்யப்பட்டிருந்த மஹாபலவான் {அந்த ஹனுமான்}, இவ்விதமான கர்மங்களில் {செயல்களில்} ஈடுபடத் தொடங்கினான்.(31) இவனைக் குறித்து ரிஷிகள் {முனிவர்கள்} அறிந்தே இருந்ததால், இவனையும், இவனுடைய சக்தியையும் சகித்துக் கொண்டனர்.(32) அஞ்சனையின் மகனான இந்த வானரன், எப்போதும் கேசரியாலும், வாயுவாலும் தடுக்கப்பட்ட போதிலுங்கூட மரியாதைகளை மீறிக் கொண்டே இருந்தான்.(33)
[4] சம்பு என்ற பெயர் பெரும்பாலும் சிவனையே குறிக்கும். "சம்" என்றால் சுகம், நலம், மங்கலம், பேரின்பம் என்று பொருள். "பூ/பவ" என்றால் கொடுப்பவன் என்று பொருள். 18ம் சுலோகத்தில் சிவன், "என்னாலும், என் ஆயுதங்களாலும் இவன் கொல்லப்பட முடியாதவனாக இருப்பான்" என்று சொல்கிறான். 19ம் சுலோகத்தில் பிரம்மன், "இவன் எல்லாவிதமான பிரம்மதண்டங்களாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பான்" என்று சொல்கிறான். சில பதிப்புகளில் 'சம்புனா' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ப்ரஹ்மணா' (பிரம்மனால்) என்ற பாடபேதமும் உள்ளது. எனவே 'சம்பு' என்ற சொல்லுக்குச் சிவன், அல்லது பிரம்மன் ஆகிய இருவரையுமே பொருளாகக் கொள்ளலாம்.
பிறகு, ரகுசிரேஷ்டா {ரகுக்களில் சிறந்த ராமா}, பிருகு, அங்கிரஸ் ஆகியோரின் வம்சத்தில் பிறந்த மஹரிஷிகள் குரோதமடைந்தவர்களாக {இருப்பினும்}, மிதமிஞ்சிய கோபமோ, மிகக் கடும் வஞ்சனையோ இல்லாதவர்களாக இவனுக்கு {பின்வருமாறு} சாபமளித்தனர்:(34) "பிலவங்கமா {தாவிச் செல்பவனே}, எந்த பலத்தைக் கொண்டு எங்களைத் துன்புறுத்துகிறாயோ, அதை {அந்த பலத்தை} எங்கள் சாபத்தால் மோஹிதம் அடைந்தவனாக {மயங்கி மறந்தவனாக} நீண்ட காலம் அறியாமல் இருப்பாய். எப்போது உன் கீர்த்தி {புகழ்} உனக்கு நினைவூட்டப்படுகிறதோ, அப்போது உன் பலம் வளரும் {திரும்பக் கிடைக்கும்}" {என்றனர் முனிவர்கள்}[5].(35)
[5] ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டம், அனுமப்படலம் 664ம் பாடல் பின்வருமாறுபொன்மை நிறத்த அயன் வரத்தால்புவன மூன்றும் பொடி படுத்தும்தன்மைப் பிரம தண்டினால்சாதிப்பரியோன் அவன் பொல்லாக்கன்மத்தினை எம்மிடைச் செய்யும்காற்றின் தனையன் கருத்து அழிவுற்றுஉன்மத்தன்போல் தன்வலிதான்உணரா தொழிக எனச் சபித்தார்பொருள்: அந்தப் பொன் நிறத்து பிரம்மன் வரத்தினால் உலகம் மூன்றையும் பொடி செய்யும் தன்மையுடைய பிரம்ம தண்டத்தினாலும் அடக்குவதற்கு அரியவன், அவன் ஆதலின், தீயச் செயல்களைத் தீமை புரியாத எங்களிடத்தில் செய்கின்றான்; காற்றின் மகனாகிய அந்த ஹனுமான், கருத்து அழிந்து பித்துடையவன் போலத் தன் வலிமையைத் தான் உணராது ஒழிவானாக என்று சாபம் கொடுத்தனர் அம்முனிவர்கள்.
பிறகு, மஹரிஷிகளுடைய வசனத்தின் ஓஜஸ்ஸால் பறிக்கப்பட்ட {வலிமையால் மறைக்கப்பட்ட} தேஜஸ்ஸையும், ஓஜஸ்ஸையும் உடையவனான[6] அத்தகைய இவன் {ஹனுமான்}, மிருதுபாவத்தை {மென்மையான தன்மையை} அடைந்தவனாக அதே ஆசிரமங்களில் திரிந்து கொண்டிருந்தான்.(36) பிறகு, வாலி, சுக்ரீவர்கள் இருவரின் பிதாவும், தேஜஸ்ஸால் பாஸ்கரனின் பிரபையை {ஒளியை உண்டாக்கும் சூரியனின் ஒளியை} உடையவனுமான ரிக்ஷரஜஸ் என்று பெயருடையவன், சர்வ வானரர்களுக்கும் ராஜாவாக இருந்தான்.(37) வானரர்களின் ஹரீஷ்வரனான அந்த ரிக்ஷரஜஸ் என்ற பெயருடையவன், நீண்ட காலம் ராஜ்ஜியத்தை ஆண்ட பிறகு, காலதர்மத்தோடு[7] இணைந்தான் {மரணம் அடைந்தான்}.(38) பிறகு, அவன் அஸ்தமித்ததும் {ரிக்ஷரஜஸ் மரணமடைந்த பிறகு}, மந்திரக் கோவிதர்களான {ஆலோசனை கூறுவதில் வல்லவர்களான} மந்திரிகளால் வாலி பிதாவின் பதவியில் அமர்த்தப்பட்டான். சுக்ரீவனோ, வாலிக்கு அடுத்த பதவியில் {இளவரசனாக அமர்த்தப்பட்டான்}.(39) எவ்வாறு அனிலனுக்கு அக்னியுடனோ {வாயுவுக்கு அக்னியுடன் நட்பு உண்டோ}, அதேபோல, இவனுக்கு {இந்த ஹனுமானுக்கு} சுக்ரீவனுடன் பாலியம் {குழந்தைப் பருவம்} முதலே, பிளவுகளோ, குறைகளோ அற்ற அத்வைதமான {இரண்டற்ற ஒரே உயிர் போன்ற} நட்புண்டானது[8].(40)
[6] 'ஹுருத-தேஜ-ஓஜா' என்பதில் 'ஹ்ருத' என்றால் பறிக்கப்பட்டது/மறைந்தது என்று பொருள். தேவர்களால் அளிக்கப்பட்ட வரம் முற்றிலும் அழியவில்லை, ஆனால் முனிவர்களின் சாபத்தால் அது வெளிப்பட முடியாமல் மறைந்து போனது என்பதை இது குறிக்கிறது.
[7] 'காலதர்மேண ஸங்கத:' என்பது சம்ஸ்கிருத மரபில் மரணத்தைக் குறிக்கும் மிக உயரிய, மரியாதைக்குரிய சொல்லாடலாகும். காலம் விதித்த தர்மத்தின்படி தன் வாழ்நாளை முடித்துக் கொண்டான் என்பது இதன் பொருள்.
[8] ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டம், அனுமப் படலம் 667ம் பாடல் பின்வருவதுஅந்த முனிவன் சாபத்துக்கு அஞ்சி வாலி அவ்வனத்துவந்து புகுதாது ஒழிதலால் வாழ்நாள் பெறும் சுக்ரீவனொடும்சிந்தை கலந்து சகியாகிச் சேர்ந்து தன்னை உணராதேஅந்தணாளர் சாபத்தால் அநுமான் அடங்கி அங்கு இருந்தான்பொருள்: அவ்வனத்துக்குரிய மதங்க முனிவரின் சாபத்துக்கு அஞ்சிய வாலி அந்த வனத்தில் புகாமல் இருந்ததால் {அவனால் கொல்லப்படாமல்} வாழ்நாளைப் பெற்ற சுக்ரீவனோடு மனம் கலந்து தோழனாகிச் சேர்ந்து தன் வலியை உணராமலேயே முனிவர்களின் சாபத்தால் அனுமன் அடங்கி அவ்வனத்திலேயே இருந்தான்.
இராமா, எப்போது வாலி, சுக்ரீவர்களுக்கிடையில் வைரம் {பகைமை} உண்டானதோ, {அப்போது} இவன் {அந்த முனிவர்களின்} சாப வசப்பட்டவனாகவே தன் பலத்தை அறியாமல் இருந்தான்.(41) இராமா, இந்தச் சுக்ரீவன், வாலியால் அலைக்கழிக்கப்பட்ட போதிலுங்கூட {இவன் தன் பலத்தை அறிந்திருந்தால் அந்த அலைக்கழிப்பை} அடைந்திருக்கமாட்டான்.(42) தேவா, ரிஷிசாபத்தால் பறிக்கப்பட்ட {மறைக்கப்பட்ட} பலத்தை உடையவனான இந்தக் கபி சத்தமன் {வானரர்களில் சிறந்த ஹனுமான்}, தன்னுள்ளிருந்த பலத்தை அப்போது அறிந்து கொள்ளவே இல்லை.(43) அல்லது குஞ்சரத்தால் {யானையால்} தடுத்து நிறுத்தப்பட்ட சிங்கம் போலவும், போர்க்களத்தில் {பகைவரை} சகித்து நிற்பது போலவும் {தன் பலத்தை அறிந்து கொள்ளாமல் இருந்தான்}.(44) பராக்கிரமம், உற்சாகம், மதி {கூரறிவு}, பிரதாபம், நல்ல சீலம் {பண்பு}, இனிய பேச்சு, நய அநயங்கள் {நேர்மையும், ஆபத்துக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தந்திரமும்}, காம்பீர்யம் {கடல் போன்ற மன அமைதி}, சாதுர்யம், நல்ல வீரியம், தைரியங்களில் ஹனூமதனைவிட உயர்ந்தவன் இவ்வுலகத்தில் எவன் இருக்கிறான்?(45)
அளவற்ற பெருமைக்குரியவனான இந்தக் கபீந்திரன் {குரங்குகளின் தலைவன் ஹனுமான்}, வியாகரணத்தின் மஹத்தான கிரந்தத்தை {பெரும் இலக்கண நூலைத்} தரித்து, மேலும் அதைக் கற்க விரும்பி, சூரியனை நோக்கிய முகத்துடனும், சந்தேகம் கேட்கும் மனத்துடனும் உதயகிரியில் இருந்து அஸ்தகிரிக்குச் சென்றான்.(46) கபீந்திரன், சூத்திரம் {விதி}, விருத்தி {விளக்கம்}, அர்த்தம் {பொருள்}, பதத்துடனும் {சொல்லுடனும்}, சங்கிரஹத்துடனும் {இலக்கணத் தொகுப்புகளுடனும்} கூடிய மஹார்த்தத்தை {பெரும்பொருள் கொண்ட இலக்கணத்தை} முழுமையாகவே கற்றுத் தேர்ந்தான்[9].(47) அதேபோல சாஸ்திரத்திலும், நிபுணத்துவத்திலும், சந்த கதியிலும் {செய்யுள் இலக்கண நடையிலும்} இவனுக்கு நிகரானவன் எவனும் இல்லவே இல்லை. உண்மையில் எவன் அனைத்துவகையான வித்யைகளிலும் {கல்விகளிலும்}, தபம் செய்யும் முறைகளிலும் ஸுரர்களின் குருவுக்கு {தேவ குருவான பிருஹஸ்பதிக்கு} நிகராக விளங்குகிறானோ, அத்தகைய இவன் {ஹனுமான்} நவ வியாகரணங்களின் அர்த்தங்களை {ஒன்பது வகையான இலக்கணங்களின் பொருளை} அறிந்தவனாக உன் அருளால் பிரம்மனாகக் கூட ஆகி விடுவான்.(48) கரையைக் கடந்து மூழ்கடிக்க விரும்பும் சாகரத்தைப் போலவும், உலகங்களை எரிக்க விரும்பும் பாவகனை {நெருப்பைப்} போலவும், யுகக்ஷயத்தில் {பிரளயகாலத்தில்} உண்மையிலேயே அந்தகன் எப்படியோ அத்தகைய {குரோதத்துடன் இருக்கும்} ஹனூமதனின் எதிரில் எவன் நிற்பான்?(49)
[9] ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் அனுமப் படலம் 668ம் பாடல் பின்வருவதுவேதம் ஒருநாலுடன் விளங்கியசட்அங்கமும் விரிந்த கலையும்ஓதநில வீதிமிசை ஏழுபரிபூண் அருணன் ஊர விரை தேர்மீது செலும் வெங்கதிரவன் தனொடுஅயிந்திர வியாகரணமும்ஓதி ஒருநாளினில் உணர்ந்தனன் இம்மாருதி உயர்ந்த புகழோய்பொருள்: உயர்ந்த புகழையுடைய ராமனே, இந்த அனுமான், வேதங்கள் ஒரு நான்கோடு விளக்கமுடைய ஆறு அங்கங்களையும், அறுபத்து நான்காக விரிந்த கலைகளையும், ஐந்திர வியாகரணத்தையும் {இலக்கணத்தையும்}, கடலால் சூழப்பட்ட நிலமான வீதிமேல் நின்றுகொண்டே, ஏழு குதிரைகள் பூண்டதும் அருணன் தூண்ட விரைந்து செல்வதுமாகிய தேர் மீது செல்கின்ற வெம்மையுடைய சூரியனோடு சென்று கற்று ஒரு நாளில் உணர்ந்து கொண்டவனானான்.
இராமா, இவனும் {ஹனுமானும்}, இன்னும் பிற மஹா கபீந்திரர்களான சுக்ரீவன், மைந்தன், துவிவிதன் ஆகியோரும், நீலனுடனும், தாரன், தாரேயன் {அங்கதன்}, நளனுடனும், ரம்பனுடனும் கூடிய {அனைவரும்} உன்னுடைய காரணத்திற்காகவே உண்மையில் ஸுரர்களால் {தேவர்களால்} சிருஷ்டிக்கப்பட்டனர்.(50) நீ என்னிடம் எதை வினவினாயோ, அத்தகைய இது அனைத்தும் என்னால் கூறப்பட்டது. ஹனூமதனின் பால பாவத்தில் {குழந்தைப் பருவத்தில்} நிகழ்ந்த இந்தக் கர்மம் {செயல்} கூறப்பட்டது" {என்றார் அகஸ்தியர்}.(51)
அகஸ்தியரின் கூற்றைக் கேட்டு ராமனும், சௌமித்ரியும் {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனும்}, கூடவே வானரர்களும் ராக்ஷசர்கள் சகிதர்களாகப் பரம வியப்பை அடைந்தனர்.(52) அகஸ்தியரோ ராமனிடம், "இது முழுவதும் உன்னால் கேட்கப்பட்டது. இராமா, {நீ எங்களால்} பார்க்கவும் பட்டாய், உரையாடவும் பட்டாய்; நாங்கள் செல்கிறோம்" என்று கூறினார்.(53)
இராகவன், உக்கிர தேஜஸ்ஸுடைய {பெருந்தப வலிமையுடைய} அகஸ்தியரின் இந்த வாக்கியத்தைக் கேட்டுக் கைகள் கூப்பியவனாகவும் பணிவுடையவனாகவும் மஹரிஷியிடம் இதைக் கூறினான்:(54) "உங்களின் தரிசனத்தாலேயே இன்று என் தேவர்களும், பித்ருக்களும், பெரும்பிதாமஹர்களும், பந்துக்களுடன் கூடியவர்களாக நித்யம் நிறைவும் மகிழ்ச்சியும் அடைந்தவர்கள் ஆனார்கள்.(55) ஆசை கொண்டவனாக எதைச் சொல்கிறேனோ, உண்மையில் அத்தகைய இஃதே என் விண்ணப்பமாகும். உங்களால் எனக்காக கருணையுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும்.(56) பௌர, ஜானபதர்களையும் {நகர மக்களையும், நாட்டு மக்களையும்} சொந்த காரியங்களில் ஸ்தாபித்துவிட்டு {கடமைகளில் நிலைநிறுத்திவிட்டு} நான் வந்திருக்கிறேன். நல்லோர்களான தங்களின் பிரபாவத்தால் கிரதுக்களையே {வல்லமையால் வேள்விகளை மட்டுமே} செய்யப் போகிறேன்.(57) மஹா வீரியத்தையுடைய தாங்கள் நித்யமாகவே என் மீதான அனுக்கிரகத்தை விரும்பியவர்கள். அதனால் என் யஜ்ஞங்களில் சதஸ்யர்காக {சபையின் சான்றோராக} விளங்குவீராக(58) தபத்தினால் பாபங்கள் கழுவிப் போக்கப்பட்டவர்களான உங்களை முழுமையாகச் சரணடைந்து, பித்ருக்களாலும் அனுக்கிரஹிக்கப்பட்டு, பெரும் மன அமைதி கொண்டவனாக நான் விளங்கப் போகிறேன்.(59) எனவே, தாங்கள் அனைவரும் ஒன்றுகூடி இங்கே {அயோத்திக்கு} எப்போதும் {இடைவிடாமல்} வந்து போக வேண்டும்" {என்றான் ராமன்}. உறுதியான விரதங்களை உடையவர்களான அகஸ்தியர் முதலான ரிஷிகளோ அதைக் கேட்டு,(60) அவனிடம் {ராமனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றும் கூறிவிட்டு, புறப்படத் தொடங்கினார்கள்.(61)
இவ்வாறு கூறிவிட்டு, அந்த சர்வ ரிஷிகளும் வந்த வழியே சென்றனர். இராகவனுங்கூட வியப்படைந்தவனாக அந்த அர்த்தத்தையே {ஹனுமானின் பெருமையையே} குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.(62) பிறகு, பாஸ்கரன் அஸ்தத்தை அடைந்தபோது {மறைந்தபோது}, நரவரோத்தமன் {மனிதர்களில் மிகச் சிறந்தவனான ராமன், {அங்கிருந்த} நிருப வானரர்களை {மன்னர்களையும், வானரர்களையும்} அனுப்பி வைத்தான். அப்போது, விதிப்படி சந்தியை உபாசித்து, இரவு தொடங்கியபோது அவன் அந்தப்புரத்திற்குள் செல்பவன் ஆனான்.(63)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 036ல் உள்ள சுலோகங்கள்: 63
| Previous | | Sanskrit | | English | | Next |
