Hanuman | Sarga-035 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமான் உற்பத்தி; சூரியனை நோக்கி எழுந்தது; ராஹு இந்திரனிடம் முறையிட்டது; இந்திரன் வஜ்ராயுதத்தால் ஹனுமானைத் தட்டியது; வாயுவின் கோபம்; பிரம்மனின் தலையீடு...
அப்போது ராமன், தக்ஷிண {தென்} திசையில் ஆசிரமத்தில் இருந்த {அகஸ்திய} முனிவரிடம் வினவினான்; {மேலும்} கைகளைக் கூப்பியவனாக, அடக்கத்துடன் கூடியவனாக இந்த அர்த்தமுள்ள சொற்களைக் கூறினான்:(1) "வாலியுடையதும், ராவணனுடையதுமான இந்த பலம் நிகரற்றதே. ஆனால், இவர்கள் இருவருடையதும் {இருவருடைய பலமும்} ஹனுமதனுக்கு {ஹனுமானின் பலத்துடன் ஒப்பிடுகையில்} சமமானதல்ல என்பது என் மதி {எண்ணம்}.(2) சௌரியம் {வீரம்}, காரியத்திறன் {சாமர்த்தியம்}, பலம் {வலிமை}, தைரியம் {மனவுறுதி}, பிரஜ்ஞை {பேரறிவு / புத்திக் கூர்மை}, நயசாதனம் {நீதிநெறிகளைச் செயல்படுத்தும் ஆற்றல் ஆகியவையும்}, விக்ரமமும், பிரபாவமும் ஹனூமதனிடம் கிருதாலயத்தை {செயல்புரி இடத்தைக்} கொண்டுள்ளன.(3)
சாகரத்தை {கடலைக்} கண்டதுமே, {அதனாலேயே} சோர்ந்து போயிருந்த கபிவாஹினியை {குரங்குப் படையைப்} பார்த்து, மஹாபாஹு {பெருந்தோள்களைக் கொண்ட ஹனுமான், அந்தப் படையை} ஆசுவாசப்படுத்தி {தேற்றி}, நூறு யோஜனைகளை {நூறு யோஜனைகள் கொண்டத் தொலைவைத்} தாவிக்குதித்தான்.(4) அப்போது, லங்காம்புரீயை அவமதித்து {நிலைகுலையச் செய்து}, ராவணனின் அந்தப்புரத்தையும் {கண்டு}, சீதை {அவனால்} காணப்பட்டு, மேலும் {அவனால்} உரையாடவும் பட்டாள். அதேபோலவே, {அவனால்} ஆசுவாசப்படுத்தவும்பட்டாள் {தேற்றவும் பட்டாள்}.(5) அங்கே {லங்கையில்}, சேனையின் தலைவர்களும், மந்திரிகளின் மகன்களும், கிங்கரர்களும் {சேவகர்களும்}, ராவணாத்மஜனும் {அக்ஷகுமாரனும்}[1] என இவர்கள் அனைவரும் ஏகனான {தனி ஒருவனான} ஹனுமதனாலேயே வீழ்த்தப்பட்டனர்.(6) மீண்டும், பந்தனத்திலிருந்து {பிரம்மாஸ்திரக் கட்டிலிருந்து} விடுபட்டவனாக, தசானனனுடன் உரையாடிவிட்டு, பாவகத்தால் மேதினி போல {நெருப்பால் பூமி எரிக்கப்படுவது போல} லங்கை எவனால் பஸ்மமாக்கப்பட்டதோ {சாம்பலாக்கப்பட்டதோ},(7) {அந்த} ஹனூமதனுடையவை {எனப்} போர்க்களத்தில் எவை {எந்த பராக்கிரமச் செயல்கள்} கேட்கப்படுகின்றனவோ, அவை காலனுடையவையுமல்ல, சக்ரனுடையவையுமல்ல, விஷ்ணுவுடையவையுமல்ல, வித்தபனுடையவையும் {குபேரனுடையதும்}[2] அல்ல.(8)
[1] சுந்தரகாண்டம் 42ம் சர்க்கத்தில் எண்பதாயிரம் கிங்கரர்களின் வதம், 45ம் சர்க்கத்தில் ஏழு மந்திரிகுமாரர்களின் வதம் 46ம் சர்க்கத்தில் ஐந்து சேனாதிபதிகள் வதம் 47ம் சர்க்கத்தில் ராவணனின் இளைய மகனான அக்ஷகுமாரன் ஹனுமானால் கொல்லப்பட்டான்.
[2] சம்ஸ்கிருதத்தில், "வித்த" என்றால் "செல்வம்" என்று பொருள், "ப" என்பது காப்பவனைக் குறிக்கும். எனவே, "வித்தபன்" என்றால் "செல்வத்தைக் காப்பவன்" என்பது பொருள். செல்வத்தின் காவலன் குபேரனே ஆவான்.
இவனது பாஹுவீரியத்தினால் {ஹனுமானின் தோள்வலிமையால்} என்னால் லங்கையும் {அடையப்பட்டது}; சீதையும், லக்ஷ்மணனும் அடையப்பெற்றனர்; மேலும் ஜயமும் {வெற்றியும்}, ராஜ்யமும் {அடையப்பட்டன}; மித்ரர்களும், பந்துக்களும் {நண்பர்களும், உறவினர்களும் அடையப்பெற்றனர்}.(9) வானராதிபதியின் சகாவான {சுக்ரீவனின் நண்பனான} ஹனூமதன், ஒருவேளை எனக்குக் கிடைக்காமல் இருந்தால், ஜானகியைக் குறித்த செய்தியைக் கூட அறிவதற்கு வேறு எவன் சக்திமானாக இருந்திருப்பான்?(10) அப்போது, {வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையே பகைமை} வைரம் விளைகையில், சுக்ரீவனின் பிரியத்தைச் செய்ய விரும்பிய இவனாலேயே {ஹனுமானாலேயே} வாலி ஏன் செடிகொடிகள் போல எரிக்கப்படவில்லை?(11) {அச்சமயத்தில்} ஹனூமான் தன் பலத்தை அறிந்திருக்கவே இல்லை {என்று} நான் நினைக்கிறேன். ஏனெனில், ஜீவிதத்தில் இஷ்டம் கொண்ட வானராதிபன்[3] {உயிரைக் காத்துக் கொள்ள விரும்பிய சுக்ரீவன், வாலியால்} துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை {இவன்} பார்த்துக் கொண்டிருந்தான்.(12) பகவானே {அகத்திய முனிவரே}, அமரர்களால் பூஜிக்கப்படுபவரே, மஹாமதியோனான ஹனூமதனை {பேரறிவுடைய ஹனுமானைக்} குறித்த இவை அனைத்தையும் எனக்கு விஸ்தாரமாக உள்ளது உள்ளபடியே கூறுவீராக" {என்று கேட்டான் ராமன்}.(13)
[3] தர்மாலயப் பதிப்பில், "ஹனுமான் தனது பலத்தைத் தெரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் உயிரினுமினியனான வானரமன்னனை கஷ்டத்திலிருப்பவனாய் கையாலாகாதவனாய் ஸஹானுபவம் மட்டும் கொண்டிருந்தானன்றோ" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "இந்த அநுமான் அப்பொழுது தன் ஆற்றலையுணர்ந்திலனோ? இல்லையாயின், தன் உயிரினுமினியனான நண்பனாகிய வானரராஜன் அங்ஙனம் துன்புறப் பார்த்துப் பொறுத்திருப்பானோ?" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "அந்தக் காலத்தில் அனுமானுக்குத் தன் வலிமையைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்று எண்ணுகிறேன். அதனால்தான் தன் உயிரைக் காட்டிலும் மேலாக மதித்த சுக்ரீவன் கஷ்டப்படுவதைப் பார்த்தும், வாலி விஷயத்தில் எதுவும் செய்ய முடியாதவனாக இருந்தான் {என்று எண்ணுகிறேன்}" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பிலும், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பிலும் கூட, "தன் உயிரினும் மேலான" என்றே இருக்கிறது. விவேக்தேவ்ராய் பதிப்பில், "உயிருடன் இருந்தும் துன்புறும் வானராதிபனைக் கண்டும் இவன் முயற்சித்தானில்லை" என்றிருக்கிறது. மூலத்தில் ஜீவிதேஷ்டம் என்ற சொல் இருக்கிறது. இதைப் பிரித்தால் ஜீவித, இஷ்டம் என்று வரும், "உயிர்வாழ வேண்டும் என்ற ஆசை கொண்ட" என்பது அதன் பொருள். சுக்ரீவனும் தன் உயிரைக் காத்துக் கொள்ள அஞ்சி, ஓடி, ரிச்யமூக பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருந்த காலம் அது.
அப்போது, ராகவனின் நியாயத்துடன்கூடிய சொற்களைக் கேட்ட {அகஸ்திய} ரிஷி, ஹனூமதனின் முன்னிலையிலேயே அவனிடம் {ராமனிடம்} இந்த வசனத்தைக் கூறினார்:(14) "இரகுசிரேஷ்டா {ரகுக்களில் சிறந்தவனே}, ஹனூமதனைக் குறித்து எதைக் கூறுகிறாயோ, அது சத்தியம் {உண்மையே ஆகும்}. பலத்தில் {இவனுக்கு} இணையானவன் காணப்படவில்லை; கதியிலும் {வேகத்திலும் இவனை விட} உயர்ந்தவன் இல்லை; மதியிலும் {புத்தி கூர்மையிலும்} உயர்ந்தவன் {எவனும்} இல்லை.(15) முற்காலத்தில் அமோகமான சாபங்களின் {வீண்போகாத சாபங்களை அளிக்கும்} முனிவர்களால் {இவன்} சபிக்கப்பட்டான். ஆனால், அரிமர்தனனும் {பகைவரை அழிப்பவனும்}, பலவானுமாக இருந்தும், எதனால் {எந்த சாபத்தால் தன் சொந்த} பலத்தை அறியவே இல்லையோ {அத்தகைய நிலை} இவனுக்குக் கொடுக்கப்பட்டது.(16) மஹாபலவானே, ராமா, பால்யத்திலுங்கூட {குழந்தைப் பருவத்திலேயே கூட} இவனால் எந்தக் கர்மம் செய்யப்பட்டதோ, அதை வர்ணிப்பது இயலாதது என்று {கருதியே, அவனது} பாலத்தன்மையால் {குழந்தைத் தன்மையால் என்னால்} மௌனம் காக்கப்பட்டது[4].(17) இராகவா, ஒருவேளை, உனக்கு அதைக் கேட்பதற்கான அபிப்ராயம் இருக்கிறதோ? இராமா, நான் கூறுகிறேன்; {உன்} மதியை நிலைநிறுத்தி {மனத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டு} அதைக் கேட்பாயாக[5].(18)
[4] "குழந்தைப்பருவத்தில் செய்த லீலைகளையே விவரிக்க முடியாது என்றால், இவனுடைய தற்போதைய மகிமைகளை நான் என்னவென்று சொல்வது?" என்பது உரையாசிரியர்களின் விளக்கம்.
[5] தர்மாலயப் பதிப்பில், "ஹே ராகவா! ஸ்ரீராம! நான் ஞாபகத்திலிருப்பதை மட்டும் கொண்டு இயம்புகிறேன். தேவரீருக்கு அதையும் கேட்க திருவுள்ளம் இருக்குமானால் திருச்செவிசாய்ப்பீராக" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "இவன் சிறுகுழந்தையா யிருக்கையில், சிறு பிள்ளைத்தனத்தினால் தெரியாமற் செய்த ஸாஹஸச்செய்கையே இத்தன்மைத்தென வர்ணித்துரைக்க முடியாதெனின், இவனது மகிமையை யானென்னவென்று இயம்புவது? அதைக் கேட்கத் திருவுள்ளமாயின் ஸாவதானமாய்த் திருச்செவிசார்த்துக, இயம்புகின்றேன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "பேராற்றல் படைத்த இராமனே! இவன் குழந்தையாக இருந்த காலத்திலேயே குழந்தைத்தனமாகச் செய்த அரும்பெரும் செயல்களை விளக்கிக் கூறவே முடியாது. இராகவா! அதைக் கேட்பதில் உனக்கு விருப்பம் இருந்தால் மனத்தைச் செலுத்தி, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக" என்றிருக்கிறது.
சூரியனால் தத்தம் செய்யப்பட்ட வரத்தால் ஸ்வர்ணமாக {பொன்னிறமாக} விளங்கும் ஸுமேரு என்ற பெயருடைய பர்வதம் {உள்ளது}. அங்கே கேசரி என்ற பெயருடைய, பிரசித்தி பெற்ற இவனுடைய பிதா {ஹனுமானின் தந்தை} ராஜ்ஜியத்தைப் பரிபாலனம் செய்து வந்தான்.(19) அஞ்சனை என்று புகழ்பெற்ற இவள் அவனுக்கு {கேசரிக்குப்} பாரியையாக {மனைவியாக} இருந்தாள். அவளிடத்தில் வாயு உத்தமமான ஆத்மஜனையே {மகனையே} பெற்றெடுத்தான்.(20) அப்போது அஞ்சனை, செந்நெல் முனையின் ஒளியைப் போல் பிரகாசத்தை உடைய இவனை {இந்த ஹனுமானைப்} பெற்றெடுத்தாள். பிறகு கஹநேசரா {காட்டில் சஞ்சரிப்பவளான அந்த அஞ்சனை உண்பதற்குப்} பழங்களைக் கொண்டு வர விரும்பியே {குழந்தையை விட்டுவிட்டுப்} புறப்பட்டுச் சென்றாள்[6].(21) இந்த சிசு {குழந்தை}, மாதாவின் {தாயின்} பிரிவாலும், பசியாலும் மிகவும் பீடிக்கப்பட்டவனாக சரவணத்தில் சிசு {நாணல் காட்டில் பிறந்த குழந்தையான முருகன்} எப்படியோ[7], அப்படியே மிக அதிகமாக அழுதான்.(22) அப்போது {அழுது கொண்டிருந்த போது}, ஜபாபுஷ்பங்களின் {செம்பருத்திப் பூக்களின்} குவியலுக்கு ஒப்பாக உதித்துக் கொண்டிருக்கும் விவஸ்வந்தனை {மனுவின் தந்தையான ஒளிமிக்க சூரியனைக்} கண்டான்; பழத்தின் மேலுள்ள ஆசையாலும் {பசியாலும்} ரவியை {சூரியனை} நோக்கி உண்மையில் பாய்ந்தான்.(23) பால அர்க்கனை {இளஞ்சூரியனை} நோக்கிய முகத்தைக் கொண்ட பாலன் {குழந்தையான ஹனுமான்}, வடிவெடுத்துவந்த மற்றொரு பால அர்க்கனைப் போல, பால அர்க்கனைப் பிடிக்க விரும்பியவனாக அம்பரத்தின் {ஆகாயத்தின்} மத்தியில் செல்பவனாகத் தாவினான்.(24)
[6] ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டம், அனுமப் படலம் 633ம் பாடலில் ஹனுமான் தனக்கு உணவு யாது என்று கேட்க அஞ்சனை கனியே உணவு என்று சொல்கிறாள். அது பின்வருமாறுதுனிவு இலாமதி அன்னையைப்புதல்வனும் தொழுது இங்குஇனியது ஆம் இரையாது எனக்குஇயம்புதி என்னப்பனி உலாவிய சோலையில்பருவத்தில் சிவந்தகனி எனலாம் உனக்கு ஆவது என்றுஅன்னைதான் கழறபொருள்: வெறுப்பில்லாத புத்தியைக் கொண்ட தன் தாயை, மகனான ஹனுமான் தொழுது, "எனக்கு இங்கு இனிய இரை யாது?" என்று கேட்க, அன்னைதான் குளிர்ச்சி பொருந்திய சோலையில் தக்க பருவத்தில் சிவந்த பழமெலாம் உனக்கு இரையாவதே என்று சொல்ல
[7] சரவணப் பொய்கையில், நாணல் காட்டில் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகன், பசியால் உலகமே அதிரும்படி உரக்க அழுதான். அந்த உவமையே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.
இந்த ஹனூமதன், சிசு பாவத்தில் {குழந்தைத் தன்மையுடன்} தாவிச் செல்கையில், தேவ, தானவ {அசுர}, யக்ஷர்களுக்கு மிகப் பெரும் வியப்பு ஏற்பட்டது.(25) எப்படி இந்த வாயுபுத்திரன் {ஹனுமான்}, உத்தமமான அம்பரத்தைக் {மிக உயர்ந்த ஆகாயத்தைக்} கடந்து செல்கிறானோ, அப்படிப்பட்ட வேகவானாக {வேகத்தை உடையவனாக} வாயுவும் கூட இல்லை; அல்லது கருடனும் இல்லை, அப்படியே மனமும் இல்லை.(26)
இந்த சிசுவுக்கே இப்போதே இத்தகைய கதிவிக்ரமம் {வேகம்} இருக்குமென்றால், யௌவனத்தையும் {இளமையையும்}, பலத்தையும் அடைந்ததும் {அவனது} வேகம் எப்படிஇருக்கும்?(27) வாயு, தாவிச் செல்லும் தன் புத்திரனை {ஹனுமானை} சூரிய வெப்பத்தின் பயத்தில் இருந்து பனித்திரள் போன்ற குளிர்ச்சி உடையவனாக ரக்ஷித்துக் கொண்டு அவனுக்குப் பின்தொடர்ந்து பாய்ந்தான்.(28) இவன் {ஹனுமான்} பல்லாயிரம் யோஜனைகளைக் கடந்து, அம்பரத்தை அடைந்து, பால்யத்தினாலும், பிதாவின் பலத்தாலும் பாஸ்கரனின் {ஒளியை உண்டாக்குபவனான சூரியனின்} அருகாமையை அடைந்தான்.(29) திவாகரன் {பகலை உண்டாக்குபவனான சூரியன்}, "இந்த சிசுவோ தோஷத்தை {குற்றத்தை} அறியாதவன்" என்று எண்ணி, மேலும் இவ்விஷயத்தில் {பெரும்} காரியம் சார்ந்தது என்ற காரணத்தால் அவன் {சூரியன் ஹனுமானை} எரிக்கவில்லை.(30)
உண்மையில் இவன் {ஹனுமான்} எந்த நாளிலே பாஸ்கரனைப் பிடிக்கப் பாய்ந்தானோ, அதே நாளிலேயே {அமாவாசையில்} ராஹு திவாகரனைப் பிடிக்க விரும்புகிறான்.(31) இராமா, சந்திர, அர்க்க மர்தனனான {சந்திரனையும், வேள்வியின் ஒளியான சூரியனையும் விழுங்குபவனான} அந்த ராஹு, சூரிய ரதத்தின் மேல் இவனால் {ஹனுமானால்} தீண்டப்பட்டான். அதன்பிறகு {அந்த ராகு} நடுங்கியவனாக விலகிச் சென்றான்.(32) அந்த ஸிம்ஹிகாசுதன் {சிம்ஹிகையின் மகனான ராகு}[8], ரோஷத்துடன் கூடியவனாக இந்திர பவனத்திற்குச் சென்று, புருவங்களை நெறித்துக் கொண்டு, தேவகணங்களால் சூழப்பட்டிருந்த தேவனிடம் {இந்திரனிடம் பின்வருமாறு} கூறினான்:(33) "வாசவா, பல {பலன்}, விருத்திரர்களைக் கொன்றவனே, பசிப்பிணியை நீக்கும் உணவாக சந்திர அர்க்கர்களை {சந்திரனையும், சூரியனையும்} எனக்குக் கொடுத்தபிறகு, இப்போது அது வேறொருவனுக்கு உன்னால் கொடுக்கப்பட்டது என்ன?(34) இன்று பர்வ காலத்தில் {அமாவாசையில்} சூரியனைப் பிடிக்க விரும்பியவனாக {ராகுவான} நான் வந்தேன். அப்போது வேறொரு ராஹு, ரவியை {சூரியனை} அணுகி திடீரெனப் பிடித்தான்" {என்றான் ராகு}.(35)
[8] மஹாபாரதம், ஆதிபர்வம், பகுதி 65ன் 31ம் சுலோகத்தில், "தக்ஷனின் மகளான சிம்ஹிகை, சூரியனையும், சந்திரனையும் விழுங்கும் ராகுவைப் பெற்றெடுத்தாள்" என்று சொல்கிறது. இராகு ஏன் சூரியனையும், சந்திரனையும் விழுங்குகிறான் என்பதற்கான காரணத்தை மஹாபாரதம், ஆதிபர்வம், பகுதி 19ல் காணலாம்.
காஞ்சன மாலையைத் தரித்தவனான வாசவன் {இந்திரன்}, அந்த ராஹுவின் வசனத்தைக் கேட்டுப் பதற்றமடைந்தவனாக, ஆசனத்தைவிட்டுத் துள்ளி எழுந்தான்.(36) பிறகு, கைலாசக் கூடத்தை {சிகரத்தைப்} போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், நான்கு தந்தங்களைக் கொண்டதும், மதநீர் பெருக்குவதும், சிருங்காரங்களைத் தரித்ததும் {நன்றாக அலங்கரிக்கப்பட்டதும்}, மிக உயர்ந்ததும், ஸ்வர்ண கண்டங்களின் அட்டஹாசத்தைக் கொண்டதும் {பொன் மணிகளின் ஒலியை சிரிப்பொலியாகக் கொண்டதும்},(37) ஆன கரீந்திரனின் {யானைகளின் அரசனான ஐராவதத்தின்} மீது இந்திரன் ஏறி, ராஹுவை முன்னிட்டுக் கொண்டு, இந்த ஹனூமதனுடன் சூரியன் எங்கே இருந்தானோ {அங்கே} புறப்பட்டுச் சென்றான்.(38)
அப்போது ராஹு, வாசவனைப் பின்னிருக்கவிட்டு, வெகு வேகமாக வந்தான். சைலக் கூடத்தைப் போல {மலைச் சிகரத்தைப் போலப்} பாய்ந்து வரும் அவன் {ராஹு} இவனாலும் {ஹனுமானாலும்} உண்மையில் பார்க்கப்பட்டான்.(39) பிறகு, ராஹுவைப் பழமாகக் கருதியதால், சூரியனை விட்டுவிட்டு, சிம்ஹிகையின் மகனை {ராஹுவைப்} பிடிப்பதற்காக வியோமத்தில் {வான்வெளியில்} மீண்டும் பாய்ந்தான்.(40) இராமா, அர்க்கனை {சூரியனை} விட்டுவிட்டு, இவ்விதம் பாய்ந்து வரும் பிலவங்கனை {குரங்கான ஹனுமானைப்} பார்த்து, முகம் மட்டுமே எஞ்சியவனான அவன் {ராஹு}, பின்னோக்கி முகம் திரும்பினான் {பின்நோக்கிச் சென்றான்}.(41) காப்பாற்றுபவனாக இந்திரனை நம்பியவனான சிம்ஹிகையின் மகன் {ராஹு}, பெரும்பயத்தால், "இந்திரா, இந்திரா" என்று மீண்டும் மீண்டும் கூவினான்.(42) இந்திரன், {கண்களுக்குப்} புலப்படாமல் அலறிக் கொண்டிருப்பவனான ராஹுவின் குரலை {அவன் அருகில் வருவதற்கு} முன்னதாகவே கேட்டு, "பயப்படாதே, நான் இவனை அழிக்கிறேன்" என்றான்[9].(43)
[9] தர்மாலயப் பதிப்பில், "இந்திரன் கூச்சலிடுகின்ற ராகுவின் குரலைக் கேட்டு "நீ அஞ்சாதே, நானே ஏற்கனவே தூரத்திலிருந்தே கவனிக்கப்பட்டவனாகி இவனை அதம்செய்து விடுகிறேன்" என்று வாக்களித்தார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "இராகு இவ்வண்ணம் கதறிக் கொண்டு ஓடிவருவதுகண்டு இந்திரன், "யான் இவனையதஞ்செய்துவிடுகின்றேன், நீ யஞ்சாதொழிக" வென் றபயமளித்து அருக்கனருகே சென்றனன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "ராகுவினுடைய முதல் அழைப்பிலேயே அவனைப் புரிந்து கொண்ட இந்திரன், "பயப்படாதே. நான், இவனை (சூரியனைக் கைப்பற்றியவனைக்) கொன்று போடுகிறேன்" என்று சொன்னான்" என்றிருக்கிறது.
பிறகு, ஐராவதத்தைக் கண்டு, பழமாகக் கருதி, "இத்தகைய அது மிகப் பெரியது" என்றும் கூட {நினைத்து}, ஹஸ்திராஜனை {யானைகளின் அரசனான ஐராவதத்தை} நோக்கி மாருதி {ஹனுமான்} பாய்ந்தான்.(44) அப்போது, ஐராவதத்தைப் பிடிக்க விரும்பிப் பாய்ந்தோடும் இவனது {ஹனுமானின்} ரூபம், ஒரு முஹூர்த்தத்திற்கு, இந்திரனையும், அக்னியையும் போல பிரகாசமானதாகவும், கோரமானதாகவும், மாறியது.(45) சசீபதி {சசியின் கணவனான இந்திரன்}, இவ்விதம் பாய்ந்து வருபவனை {ஹனுமானை}, அதிக கோபம் கொள்ளாதவனாக இருப்பினும், கையின் நுனியில் இருந்து வேகமாக எறியப்பட்ட குலிசத்தால் {வஜ்ராயுதத்தால்} அடித்தான்.(46) பிறகு, இந்திரனின் வஜ்ரத்தால் அடிக்கப்பட்டவனான இவன் கிரியின் மேல் விழுந்தான். மேலும் {அவ்வாறு} விழுந்து கொண்டிருக்கும் இவனுடைய வாம {இடதுபக்க} ஹனு {தாடை} உடைந்தது.(47)
வஜ்ரத்தின் அடியால் நிலைகுலைந்தவனாக அந்த பாலன் {குழந்தையான ஹனுமான்} விழுந்தபோது, பிரஜைகளுக்கு அஹிதமாகும்படி {உலகத்தின் உயிர்களுக்குத் தீங்கு விளையும்படி}, அந்தப் பவனன் {வாயு}, இந்திரன்மீது கடுங்குரோதம் அடைந்தான்.(48) பிரபுவான அந்த மாருதனோ {வாயுவோ}, பிரஜைகளிடம் அந்தர்கதனாக {உலகத்து உயிர்களின் உடலுக்குள் உறைபவனாக இருந்தும்} தன் நடமாட்டத்தை நிறுத்திக் கொண்டு தன் மகனான சிசுவை {குழந்தை ஹனுமானை} எடுத்துக் கொண்டு குகைக்குள் பிரவேசித்தான்.(49) வாசவன், மழைப்பொழிவை {தடுத்து நிறுத்துவது} எப்படியோ, அப்படியே {வாயுவானவன்} பிரஜைகளுக்குப் பரம வேதனையை ஏற்படுத்துபவனாக, மலப்பைகளையும், மூத்திரப்பைகளையும் அடைத்து, சர்வ பூதங்களையும் திணறச் செய்தான்.(50) வாயுவின் கடுங்கோபத்தால் எங்கும் {உள்ள} பூதங்கள் {உயிரினங்கள்}, சுவாசமற்றவையாகவும், மேலும் எலும்பு மூட்டுகள் பிளக்கப்பட்டவையாகவும், காஷ்டங்களைப் போலாகின {மரக்கட்டைகளைப் போல் செயலற்றவையாகின}.(51) வாயுவின் கடுங்கோபத்தால் மூவுலகும், ஸ்வாத்யாயம் {வேத பாராயணம்}, வஷட்காரம் {வேள்வியில் அக்னியில் ஆகுதி அளிக்கும்போது ஓதும் மந்திரங்கள்} அற்றதாகவும், காரியங்கள் நின்றதாகவும் {அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் நின்றதாகவும்}, தர்மங்கள் கைவிடப்பட்டதாகவும், நிரயத்தில் {நரகத்தில்} இருப்பதைப் போல் மாறியது.(52)
பிறகு, கந்தர்வர்களோடு கூடியவர்களும், தேவ, அசுர, மானுஷர்களுடன் கூடியவர்களுமான பிரஜைகள் {உயிரினங்கள்}, துக்கமடைந்தவர்களாகவும், சுகத்தில் இச்சை உள்ளவர்களாகவும் பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} விரைந்தோடினர்.(53) மஹோதரத்தை {பெரும் வயிற்றைப்} போன்ற வயிற்றைக்[10] கொண்டவர்களும், தங்கள் கைகளைக் கூப்பியவர்களுமான தேவர்கள் {பின்வருமாறு} கூறினர், "பிரஜாநாதரே, பகவானே, சதுர்விதங்களும் {நான்கு வகையான உயிரினங்களும்}[11] உம்மால் படைக்கப்பட்டனவன்றோ?(54) சத்தமரே {சிறந்தவர்களுள் சிறந்தவரே}, எங்களுடைய ஆயுசுக்குப் பதியாக இந்தப் பவனன் {வாயு} உம்மால் தத்தம் செய்யப்பட்டான். அவன் எங்களது பிராணேஷ்வரனாக {உயிரின் தலைவனாக} இருந்து கொண்டும், இன்று இவன் எதனால் {இவ்வாறு செய்கிறான்}?(55) அந்தப்புரத்தில் ஸ்திரீகளை {பெண்களைப்} போல, துக்கத்தை விளைவித்தபடி {எங்கள் பிராணனை} அடைத்து வைத்துள்ளான். எனவே, வாயுவால் பீடிக்கப்பட்ட நாங்கள் உம்மைச் சரணமாக {புகலிடமாக} அடைந்தோம்" {என்றனர் தேவர்கள்}.(56)
[10] அதாவது, வாயுவின் சீற்றத்தால் உடலில் வாயுவின் ஓட்டம் ஸ்தம்பித்துப் பெருத்த வயிறுகளை உடையவர்களாக தேவர்கள் மாறினர்.
[11] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஜராயுஜம், அண்டஜம், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் - எனப் பிராணிகள் நான்கு விதம். கருப்பையினின்று உண்டாகும் மானிடர் மிருகம் முதலியன ஜராயுஜம்; முட்டையினின்று உண்டாகும் பக்ஷி ஸர்ப்பம் முதலியன அண்டஜம்; புழுக்கத்தினாலுண்டாகும் பூச்சி புழு முதலியன ஸ்வேதஜம், பூமியைப் பிளந்து கொண்டு மேலெழுந்து உண்டாகும் செடி கொடி முதலியன உத்பிஜ்ஜம்" என்றிருக்கிறது.
பிரஜைகளிடமிருந்து இதை {இந்த முறையீட்டைக்} கேட்டுவிட்டு, பிரஜாநாதனான பிரஜாபதி {பிரம்மன்}, "காரணத்தால்தான் {இது நிகழ்ந்துள்ளது}" என்று கூறிவிட்டு, மீண்டும் பிரஜைகளிடம் அவன் {பின்வருமாறு பேசினான்}:(57) "பிரஜைகளே, எக்காரணத்தால் வாயு கோபித்திருக்கிறானோ, மேலும் அடைக்கிறானோ {அடைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறானோ}, அதை முழுமையாகக் கேட்பீராக. மேலும் {அது} உங்களுடைய நன்மைக்கு உகந்தது என்பதால் கேட்கப்பட வேண்டியதாகும்.(58) இராஹுவின் வசனத்தை ஏற்றுக் கொண்ட அமரேசனான இந்திரனால் இன்று அவனுடைய {வாயுவின்} புத்திரன் கீழே வீழ்த்தப்பட்டான். பிறகு {அதன் காரணமாக}, அந்த அநிலன் {வாயு} கோபமடைந்தான்.(59) வாயு, சரீரமில்லாதவனாக சரீரங்களில் {புகுந்து} பாதுகாத்து சஞ்சரிக்கிறான். வாயு இல்லாத சரீரம், மரக்கட்டைகளுடன் சமமான நிலையை அடையுமன்றோ?(60) வாயுவே பிராணன், வாயுவே சுகம், இந்த சர்வ ஜகத்தும் {இந்த உலகம் முழுவதும்} வாயுவே. வாயுவால் முற்றிலும் கைவிடப்பட்ட ஜகம் சுகத்தை அடைவதே இல்லை.(61) மேலும், ஜகத்தின் ஆயுசான வாயுவால் இன்றே ஜகம் கைவிடப்பட்டது. இன்றே அவர்கள் {பிரஜைகள் / உயிரினங்கள்} சுவாசமற்றவர்களாக, மரக்கட்டைகளுக்கும், சுவர்களுக்கும் சமமானவர்களாக நின்றுவிட்டனர்.(62) எனவே, நமக்குத் துயரத்தைத் தருபவனான மாருதன் எங்கே இருக்கிறானோ, அங்கே நாம் செல்வோம். அதிதியின் மகன்களே, சமாதானப்படுத்தாமல் {வாயுவின் கோபத்தைத் தணிக்காமல்} நாம் அழிவை அடைய வேண்டாம்" {என்றான் பிரம்மன்}.(63)
பிறகு, பிரஜைகளுடனும், தேவ, கந்தர்வ, புஜங்க {பாம்புகள்}, குஹ்யர்களுடன் {குபேரனின் காவலர்களுடனும்} கூடியவனான பிரஜாபதி {பிரம்மன்}, அந்த மாருதன் {வாயு} ஸுரேந்திரனால் அடிக்கப்பட்ட தன் {வாயுவின்} புத்திரனை வாரி அணைத்துக் கொண்டு எங்கிருக்கிறானோ, அங்கே சென்றான்.(64) பிறகு, தேவ, கந்தர்வ, ரிஷி, யக்ஷ, ராக்ஷசர்களுடன் கூடிய சதுர்முகன் {நான்கு முகங்களுடன் கூடிய பிரம்மன்}, சதாகதியின் {எப்போதும் திரிபவனான வாயுவின்} மடியில் கிடந்தவனும், அர்க்க {சூரிய}, வைஷ்வானர {அக்னி}, காஞ்சன {தங்கம்} போன்ற பிரபையை உடையவனுமான அவனது புத்திரனை {வாயுவின் புத்திரனான ஹனுமானைப்} பார்த்துவிட்டு, அதன் பிறகு கிருபை புரிந்தான்.(65)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 035ல் உள்ள சுலோகங்கள்: 65
| Previous | | Sanskrit | | English | | Next |
