Friday, 17 July 2026

இராமனின் பள்ளியெழுச்சி | சர்க்கம் – 037 (24)

Awakening of Rama | Sarga-037 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வந்திகள், சூதர்கள் ஆகியோரின் துதிகளால் ராமன் அதிகாலையில் விழித்தெழுவது; கோவிலுக்குச் செல்வது; அங்கே அவனைச் சூழ்ந்திருந்த பலர்...

இராமனின் பள்ளியெழுச்சி

விதிதாத்மனும் {தன்னை உணர்ந்தவனும்}, தர்மத்தின் வடிவமுமான காகுத்ஸ்தன் {ராமன்}[1], {அரசனாக} அபிஷேகம் செய்யப்பட்டபோது, எந்தப் பூர்வ நிசி {முதலாவது இரவு} கழிந்ததோ, {அது} பௌரர்களின் {நகர மக்களின்} மகிழ்ச்சியை அதிகரித்தது.(1) அந்த ரஜனி {இரவு} விடிந்தபோது காலையில் நிருபதியை எழுப்புகிறவர்களான சௌம்யமான வந்திகள் {மங்கலத் துதி பாடுவோர்} நிருபதியின் வேஷ்மத்தில் {அரசனின் அரண்மனையில்} வந்து சூழ்ந்து நின்றனர்.(2) 

[1] முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. அசுரர்களை வெல்ல முடியாத இந்திரனும், பிற தேவர்களும், உதவி தேடி அயோத்தியை ஆண்டு வந்த இக்ஷ்வாகு வம்சத்து அரசனான புரஞ்சயனை அணுகினர். அசுரர்களை அழிக்கத் தான் உதவுவதாகவும், ஆனால் தேவர்களின் தலைவனான இந்திரன் தனக்கு வாகனமாக மாற வேண்டும் என்றும் புரஞ்சயன் ஒரு நிபந்தனை விதித்தான். வேறு வழியின்றி இந்திரன் ஒரு பெரிய காளையின் வடிவத்தை எடுத்தான். சம்ஸ்கிருத மொழியில் 'ககுத்' என்றால் "காளையின் திமில்" என்று பொருள். புரஞ்சயன் அந்த இந்திரனாகிய காளையின் திமிலின் மீது அமர்ந்து, அசுரர்களுடன் போரிட்டு அவர்களை முழுமையாக வீழ்த்தினான். காளையின் திமிலில் அமர்ந்து போர் செய்ததால், அன்றிலிருந்து அவனுக்கு "காகுத்ஸ்தன்" என்ற பெயரும், இந்திரனை வாகனமாகக் கொண்டதால் "இந்திரவாகனன்" என்ற பெயரும் நிலைத்தது. இந்த சுலோகத்தில்  "அபிஷிக்தே து காகுத்ஸ்தே..." என்று இராமனை விளிப்பதன் நோக்கம், இந்திரனையே வாகனமாகக் கொண்டு அசுரர்களை வென்ற அந்தப் பெரும் பரம்பரையின் அரியணையில் இன்று இராமன் முறைப்படி அமர்ந்துள்ளான் என்பதை உணர்த்துவதற்கே ஆகும். இராமாயணத்திலோ, வேறு எங்குமோ ராமன் காகுத்ஸ்தன் என்று அழைக்கப்படுவது, இதை உணர்த்துவதற்காகவே.

இன்குரலுடைய அவர்கள் அனைவரும், நன்கு பயிற்சி பெற்ற கின்னரர்களைப் போலப் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக வீரனான நிருபதியை {அரசன் ராமனைப் பின்வருமாறு} முறைப்படித் துதித்தனர்:(3) "வீரா, சௌம்யா {மென்மையானவனே}, கௌசல்யையின் பிரீதியை அதிகரிப்பவனே, நராதிபா, நன்கு விழித்தெழுவாயாக[2]. ஏனெனில், நீ உறங்கும்போது சர்வ ஜகத்தும் {உலகம் முழுவதும்} உறங்குகிறது.(4) உன் விக்ரமம் விஷ்ணுவுடையதைப் போன்றது. மேலும் {உன்} ரூபமும் அஸ்வினிகளை {அஸ்வினி தேவர்களைப்} போன்றது. புத்தியால் பிருஹஸ்பதிக்கு நிகரானவனாகவும், பிரஜாபதிக்கு சமமானவனாகவும் உண்மையில் நீ இருக்கிறாய்.(5) உன் பொறுமை பிருத்விக்கு நிகரானது; தேஜஸ்ஸால் நீ பாஸ்கரனுக்கு ஒப்பானவன்; உன் வேகம் வாயுவுக்கு நிகரானது; காம்பீர்யம் {மனத்தின் ஆழம்} கடலைப் போன்றது.(6) ஸ்தாணுவை {சிவனை / அசையாத தூணைப்} போல் அசைக்கப்பட முடியாதவனான உன்னிடம் சந்திரனிடம் இருக்கும் சௌம்யத்வமும் {மென்மையும்} உள்ளது. நராதிபா, பூர்வத்தில் இத்தகைய பார்த்திபர்கள் {அரசர்கள்} இருந்ததுமில்லை; {இனி} தோன்றப்போவதுமில்லை.(7) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, வெல்வதற்கு மிக அரியவனும், தர்மநித்தியனும், பிரஜாஹிதனுமாக {எப்போதும் தர்மத்தில் நிலைத்து, மக்களின் நலனில் ஈடுபாடு கொண்டவனுமாக} நீ எவ்வாறு இருக்கிறாயோ, {அத்தகைய} உன்னை கீர்த்தியும், லக்ஷ்மியும் கைவிடுவதில்லை.(8) காகுத்ஸ்தா, ஸ்ரீயும் {லட்சுமியும் / செல்வமும்}, தர்மமும் நித்தியம் உன்னிடமே நிலைத்திருக்கின்றன" {என்று} இவையும், மற்றவையுமான மதுரமான புகழுரைகள் வந்திகளால் துதிக்கப்பட்டன.(9)

[2] வந்திகள் ராமனை "கௌசல்யையின் பிரீதியை அதிகரிப்பவனே" என்று பாடி எழுப்பும் இப்பகுதி, பாலகாண்டம் 23-ஆம் சர்க்கத்தின் 2-ஆம் ஸ்லோகத்தை நினைவூட்டுகிறது. அங்கே விசுவாமித்திரர், "கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்ததே, உத்திஷ்ட நரசார்தூல கர்தவ்யம் தைவமாஹ்நிகம்" என்று பாடி, அதாவது, "கௌசல்யையின் நன்மகனே, ராமா, கிழக்கில் விடியல் பிறக்கிறது. மனிதர்களில் புலியே, அன்றாடம் செய்யும் தெய்வ வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய நீ எழுவாயாக" என்று கூறிப் புற்படுக்கையில் உறங்கிய ராமனை விழித்தெழச் செய்தார். 

மேலும் சூதர்களும் திவ்யமான துதிகளால் ராகவனை எழுப்பினார்கள். துதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அத்துதிகளால் ராகவன் விழித்தெழுந்தான்.(10) அவன் {ராமன்}, வெண்மையான விரிப்பால் மூடப்பட்ட அந்த சயனத்தைவிட்டு, நாக சயனத்திலிருந்து {எழும்} ஹரியான நாராயணனைப் போல  எழுந்தான்.(11) {அவ்வாறு} எழுந்த அந்த மஹாத்மாவை {ராமனை} வணங்கியவர்களும், கைகூப்பியவர்களுமான ஆயிரக்கணக்கான நரர்கள் {மனிதர்கள்}, தூய்மையான பாத்திரங்களில் நீருடன் வந்து சூழ்ந்து நின்றனர்.(12) நீராடித் தூய்மையானவனாகி, உரிய காலத்தில் அக்னி வழிபாட்டை முடித்தவனாக {ராமன்}, விரைந்து இக்ஷ்வாகுக்களால் சேவிக்கப்பட்ட புண்ணியமான தேவாகரத்திற்கு {கோவிலுக்குச்} சென்றான்.(13) இராமன், அங்கே தேவர்களையும், பித்ருக்களையும், விப்ரர்களையும் {பிராமணர்களையும்} விதிப்படி அர்ச்சித்து, ஜனங்களால் சூழப்பட்டவனாக[3] வெளியறைக்கு வந்தான்.(14)

[3] இங்கே இருக்கும் மூலச் சொல் "ஜனைஹ் வ்ருதஹ்" என்பதற்கு மக்களால் சூழப்பட்டவனாக என்ற பொருள் வரும். வேறு பாடங்களில், "தனுஹ்-ப்ருதஹ்" என்று இருந்தால், அதன் பொருள், வில்லேந்தியவர்களால் சூழப்பட்டவனாக என்று பொருள் கொள்ள வேண்டும்.

வசிஷ்டரை முதன்மையாகக் கொண்டவர்களும், புரோஹிதர்களுடன் கூடியவர்களும், மஹாத்மாக்களுமான சர்வ மந்திரிகளும் ஒளிரும் அக்னிகளைப் போல வந்து சூழ்ந்து நின்றனர்.(15) மஹாத்மாக்களும், நானாவித ஜனபதங்களின் ஈஷ்வரர்களுமான {பல்வேறு நாடுகளின் அரசர்களுமான} க்ஷத்திரியர்களும், எப்படி அமரர்கள் சக்ரனின் {தேவர்கள் இந்திரனின்} பக்கத்திலோ {அமர்வார்களோ, அவ்வாறே} ராமனின் பக்கத்தில் வந்து அமர்ந்தனர்.(16) மேலும் அங்கே பரதனும், லக்ஷ்மணனும், பெரும்புகழ்மிக்க சத்ருக்னனும் மகிழ்ச்சியடைந்தவர்களாக, மூன்று வேதங்கள் அத்வரத்தை {வேள்வியைக் காப்பாது} போல, {ராமனை} அணுகி பணிவிடை செய்தனர்.(17) மகிழ்ச்சியான முகம் உடையவர்களாக, கைகூப்பியவர்களாக அங்கே வந்த கிங்கரர்களும் {ஏவலர்களும்}, முதிதர்கள் {மகிழ்ச்சியடைந்தவர்கள்} என்ற பெயருடைய {ராமனின்} பக்கத்தில் நிற்பவர்கள் பலரும் வந்து சூழ்ந்து அமர்ந்தனர்[4].(18) 

[4] தர்மாலயப் பதிப்பில், "சேவகர்கள், முகமலர்ந்தவர்களாய், கைகூப்பியவர்களாய் ஆகி ராமரது பக்கலிருப்பவர்களாய் சேவித்தார்கள். குடிகளும் அனேகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "கிங்கரர்கள் பலர் மனமகிழ்ச்சியுடனே வணங்கிக் கைகூப்பிக்கொண்டு வேண்டிய உபசாரங்கள் செய்யலாயினர்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அப்போது, எப்போதும் மலர்ச்சியான முகம் கொண்ட 'முதிதா' என்ற பெயர்கொண்ட பல பணியாளர்கள் அந்த அவைக்கு வந்து, இராமபிரானின் அருகில் அமர்ந்து கொண்டார்கள்" என்றிருக்கிறது.

சுக்ரீவனை முதன்மையாகக் கொண்டவர்களும், மஹாவீரியர்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, மஹௌஜஸர்களுமான {பெரும் தேஜஸ் உடையவர்களுமான} வானரர்கள் இருபது பேர் ராமனை உபாசிப்பவர்களாக இருந்தனர் {ராமனைச் சூழ்ந்து பணிவிடை செய்பவர்களாக இருந்தனர்}.(19) நான்கு ராக்ஷசர்களால் சூழப்பட்டவனான விபீஷணனும், குஹ்யகர்கள் தனேசனை {குபேரனை உபாசிப்பதைப்} போல, மஹாத்மாவை {ராமனை} உபாசிப்பவனாக இருந்தான்.(20) அதேபோல, எந்த நிகமவிருத்தர்களும் {வணிக சங்கப் பெரியோரும்}, நற்குடி பிறந்த மானவர்களும் {மனிதர்களும்} விவேகிகளாக இருக்கிறார்களோ, {அவர்கள்} சிரசால் வணங்கி ராஜாவை உபாசிப்பவர்களாக இருந்தனர்[5].(21) 

[5] இந்த சர்க்கத்தில் உள்ள செய்தி முழுமையுமே ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில் இடம்பெறவில்லை.

அதேபோல, ஸ்ரீமத் ரிஷிகளால் {மேன்மை பொருந்திய முனிவர்களால்} சூழப்பட்டவனாகவும், மஹாவீரியமுள்ள ராஜாக்களாலும், ராக்ஷசர்களுடன் கூடிய வானரர்களாலும் நன்றாகச் சூழப்பட்டவனாகவும் ராஜா {ராமன்} இருந்தான்.(22) எப்படி தேவேஷ்வரன் {இந்திரன்} நித்யம் ரிஷிகளால் சூழ்ந்து உபாசிக்கப்படுகிறானோ, {அப்படியே ரிஷிகளால் சூழப்பட்ட} அந்த ரூபத்தால் சஹஸ்ராக்ஷனைவிட {ஆயிரம் கண்களைக் கொண்டவனான இந்திரனைவிட ராமன்} அதிகம் பிரகாசிப்பவனாக இருந்தான்.(23) அவர்கள் வந்து சூழ்ந்து அமர்ந்திருந்தபோது, புராணங்களை அறிந்த மஹாத்மாக்களால் தர்மத்திற்கு இணக்கமான அந்தந்த மதுரமான கதைகள் கூறப்பட்டுக் கொண்டு இருந்தன.(24)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 037ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் தாரன் தாரை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி