Rama's Farewell to Agastya | Sarga-082 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அகஸ்தியரின் ஆசியையும் அறிவுரையையும் பெற்ற ராமன்; புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பி, லக்ஷ்மணனையும் பரதனையும் அழைக்கச் சொன்னது.
இராமன் {அகஸ்திய} ரிஷியின் வசனத்தை அறிந்து கொண்டு {ஏற்றுக் கொண்டு}, சந்தியை உபாசிக்க {சந்தியாவந்தனம் செய்து வழிபட} அப்சரகணங்களால் சேவிக்கப்பட்ட புண்ணியமான சரஸை {பொய்கையை} நோக்கிச் சென்றான்.(1) இராமன் அங்கே {அந்தப் பொய்கையில்} நீரைத் தொட்டு, மாலை நேர சந்தியை உபாசித்து, மஹாத்மாவான கும்பயோனியின் {குடத்தில் பிறந்த அகஸ்தியரின்} ஆசிரமத்திற்குள் பிரவேசித்தான்.(2) அகஸ்தியர் அவனது போஜன அர்த்தத்திற்காக {ராமனது உணவின் பொருட்டு} பல நற்குணங்களைக் கொண்ட கந்தமூலங்களையும் {வேர்க்கிழங்குகளையும்}, அவ்வாறே ஔஷதிகளையும் {மூலிகைகளையும் / கீரை வகைகளையும்}, பவித்ரமான சால்யாதிகளையும் {சாலி நெல் முதலிய தானியங்களையும்} ஏற்பாடு செய்தார்.(3) நரசிரேஷ்டனான அவன் {மனிதர்களில் சிறந்தவனான ராமன்}, அமுதத்துக்கு ஒப்பான அந்த அன்னத்தை {உணவைப்} புசித்தான். மேலும் பிரீதியடைந்தவனாகவும், மிகவும் திருப்தியடைந்தவனாகவும் அந்த ராத்திரியை {அகஸ்தியரின் ஆசிரமத்திலேயே} தங்கியிருந்தான்.(4)
அரிந்தமனான {பகைவரை அடக்குபவனான} ரகோத்தமன் {ரகு குலத்தில் உத்தமனுமான ராமன்}, பிரபாதத்தில் {விடியற்காலையில்} காலமே {அதிகாலையிலேயே} எழுந்து, அன்றாடக் கடன்களைச் செய்துவிட்டுப் புறப்படுவதற்காக {அகஸ்திய} ரிஷியை அணுகினான்.(5) இராமன் கும்பசம்பவரான மஹரிஷியை {குடத்தில் தோன்றிய அகஸ்திய முனிவரை} வணங்கி {பின்வருமாறு} கூறினான், "என் புரீக்கு {அயோத்திக்குச்} செல்வதற்காக விடைபெறுகிறேன். என்னை அனுமதிப்பதே உமக்குத் தகும்.(6) மஹாத்மாவின் தரிசனத்தால் தன்யனானேன் {உம்மைக் கண்டதால் பேறு பெற்றவனானேன்}. அனுக்கிரகிக்கப்பட்டவனானேன் {அருள்புரியப்பட்டவனானேன்}; மேலும், என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக {உம்மை} தரிசிப்பதற்கென்றே இங்கே மீண்டும் வருவேன்" {என்றான் ராமன்}.(7)
காகுத்ஸ்தன் {ககுத்ஸ்தனின் வழித்தோன்றலான ராமன்} அற்புத தரிசன {வியக்கத்தக்க} வாக்கியத்தை[1] இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், பரமப் பிரீதியடைந்தவரும் {பெரிதும் மகிழ்ச்சியடைந்தவரும்}, தர்மநேத்திரருமான தபோதனர் {தர்மத்தையே கண்ணாகக் கொண்டவரும், தபத்தையே செல்வமாகக் கொண்டவருமான அகஸ்தியர் பின்வருமாறு} சொன்னார்:(8) "இராமா, சுப அக்ஷரங்களுடைய {மங்கல எழுத்துகளையுடைய} உன்னுடைய இந்த வாக்கியம் அதியற்புதமானது. இரகுநந்தனா {ரகு குலத்தை மகிழ்விப்பவனே}, நீயே சர்வபூதங்களையும் {உயிரினங்கள் அனைத்தையும்} புனிதப்படுத்துபவன்.(9) மேலும், ராமா, ஒரு முஹூர்த்தமேனும் உன்னை தரிசிப்பவர் யாவரோ, அவர்கள் {பாபங்கள் நீங்கி} தூய்மையடைந்தவர்களும், சுவர்க்கவாசிகளுமாகி சர்வ தைவதங்களாலும் {தேவர்கள் அனைவராலும்} பூஜிக்கத்தக்கவர்கள் ஆவார்கள்.(10) மேலும், புவியில் எந்தப் பிராணிகள் {உயிரினங்கள்} உன்னை கோரக்கண்களால் பார்க்கிறார்களோ, அவர்கள் யமதண்டத்தால் உடனடியாக அழிக்கப்பட்டு நிரயகாமிகளாக {நரகத்தை அடைபவர்களாக} ஆவார்கள்.(11) இரகுசிரேஷ்டா {ரகு குலத்தில் சிறந்தவனே}, இத்தகைய நீ, சர்வதேஹிகளையும் {உடலெடுத்த அனைத்து உயிரினங்களையும்} தூய்மையடையச் செய்கிறாய். இராகவா, புவியில் உன்னைப் பற்றிக் கூறுபவர்களும்கூட சித்தியை {தங்கள் இலக்கை} அடைவார்கள்.(12) மேலும், தீங்கற்றதும், எங்கிருந்தும் பயமற்றதுமான பாதையில் {அயோத்திக்குக்} கலக்கமற்றவனாகச் செல்வாயாக. தர்மப்படி ராஜ்ஜியத்தை நடத்துவாயாக. ஏனெனில் நீயே ஜகத்தின் கதியாக {உலகிற்குப் புகலிடமாக} இருக்கிறாய்" {என்றார் அகஸ்தியர்}.(13)
[1] ‘அத்புததர்சனம் வாக்யம்’ என்பதற்கு ஸ்ரீநிவாசராகவாசாரியர், மன்மதநாத தத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோர் ராமனின் வியக்கத்தக்க வாக்கியம் என்று பொருள் கொள்கின்றனர். தர்மாலயப் பதிப்பும் இவ்விளக்கத்திற்கு இடமளிக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பு, ராமனின் பேச்சைக் கேட்ட அகஸ்தியர் பதிலளித்ததாகக் கூறினாலும், ‘அத்புததர்சனம்’ என்பதற்குத் தனிவிளக்கம் அளிக்கவில்லை. விவேக் தேவ்ராய் மட்டும் அச்சிறப்பை அகஸ்தியருடன் இணைக்கிறார். அதன் தமிழாக்கம், “காகுத்ஸ்தன், காண்பதற்கு அற்புதமானவரிடம் {அகஸ்தியரிடம்} இவ்வார்த்தைகளைக் கூறினான். தர்மத்தையே வழிகாட்டியாகக் கொண்ட அந்த தவச்செல்வர் {அகஸ்தியர்} மிகவும் மகிழ்ச்சியடைந்து {பின்வருமாறு} பதிலளித்தார்” என்று அமையும். விவேக் தேவ்ராய், ‘அத்புததர்சனம்’ என்ற சிறப்பை ராமனின் வாக்கியத்துடன் இணைக்காமல், அகஸ்தியரைக் குறிப்பதாக மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு ஆறு பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ராமனின் வியக்கத்தக்க வாக்கியத்தையே இத்தொடர் குறிப்பதாகப் பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இதற்கடுத்த சுலோகத்தில் அகஸ்தியரே ராமனின் வாக்கியத்தை மங்கல எழுத்துகளுடன் கூடியதாகவும், அற்புதமானதாகவும் சொல்வது இதற்கு வலுசேர்க்கிறது.
{அகஸ்திய} முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கைகூப்பியவனும், அடக்கமுடையவனும், பேரறிவுடையவனுமான நிருபன் {அரசன் ராமன்}, புண்ணியசாலியான அந்த ரிஷியை வணங்கினான்.(14) முனிசிரேஷ்டரையும் {முனிவர்களில் சிறந்தவரான அகஸ்தியரையும்} அந்த தபோதனர்கள் அனைவரையும் வணங்கிவிட்டு, ஹேமபூஷிதமான {பொன்னால் அலங்கரிக்கப்பட்ட} அந்தப் புஷ்பகத்தில் அப்போது கலக்கமற்றவனாக {அமைதியுடன்} ஏறினான்.(15) புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தவனும், மஹேந்திரனைப் போன்ற ஒளியுடையவனுமான அவனை {ராமனை}, அமரர்கள் சஹஸ்ராக்ஷனை {தேவர்கள் ஆயிரம் கண்களையுடைய இந்திரனைப் பூஜிப்பதைப்} போல, உண்மையில் முனிகணங்கள் நாற்புறங்களிலும் ஆசீர்வாதங்களால் பூஜித்தனர்.(16) மன அமைதியுடன் கூடிய அந்த ராமன், மழைக்காலத் தொடக்கத்தில் மேகத்தின் சமீபத்தில் இருக்கும் சசியை {சந்திரனைப்} போல ஹேமபூஷிதமான புஷ்பகத்தில் காணப்பட்டான்.(17) பிறகு ஆங்காங்கே பூஜிக்கப்பட்டுக் கொண்டிருந்த காகுத்ஸ்தன் {ராமன்}, நண்பகலில் அயோத்தியை அடைந்து, {அரண்மனையின்} நடுமுற்றத்தில் இறங்கினான்[2][3].(18)
[2] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 67ம் பாடல் பின்வருமாறு:சந்தி தொழுது தவத்தோன்றன் சரண இணைகள் தாழ்ந்திறைஞ்சிஅந்த முனி ஆசிகள் கூற அம்பொற்றேரின் மிசையேறிச்சிந்தை உவந்து கொடிகட்டித் தெருவுதோறும் அலங்கரித்துவந்த நகர் எதிர்கொள்ள வள்ளல் அயோத்தி நகர் புகுந்தான்.பொருள்: சந்தியில் {சந்தியாகாலத்தில்} தொழுது, தவத்தால் சிறந்த அகஸ்திய முனிவரின் இரு திருவடிகளிலும் விழுந்து வணங்கிய ராமன், அந்த முனிவர் ஆசிகள் கூறியதும், அழகிய பொன்னாலான தேரில் {புஷ்பக விமானத்தில்} ஏறினான். கொடிகள் கட்டப்பட்டு, தெருக்கள்தோறும் அலங்கரிக்கப்பட்டிருந்த அயோத்தி நகர மக்கள், மனம் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டு வரவேற்க, வள்ளலான ராமன் அயோத்தி நகரத்திற்குள் நுழைந்தான்.
[3] வால்மீகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டம் 13ஆம் சர்க்கம், 13ஆம் சுலோகத்தில், அகஸ்தியர் தமது ஆசிரமத்திலிருந்து பஞ்சவடி இரண்டு யோஜனை {சுமார் 29.25 கி.மீ.} தொலைவில் இருப்பதாக ராமனிடம் கூறுகிறார். அதே சர்க்கத்தின் 21, 22ஆம் சுலோகங்களில் பஞ்சவடிக்குச் செல்லும் வழியையும் விளக்குகிறார். இன்றைய மஹாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகருக்கு அருகிலுள்ள பகுதியே பஞ்சவடி என்று மரபுவழியாக அடையாளம் காணப்படுகிறது. எனவே, ஆரண்ய காண்டத்தில் குறிப்பிடப்படும் அகஸ்தியரின் ஆசிரமம் நாசிக்கிற்கு அருகில் அமைந்திருந்ததாகக் கருத இடமுள்ளது. உத்தர காண்டம் 7.76இல், சம்பூக வதத்திற்குப் பிறகு ராமன் அகஸ்தியரின் ஆசிரமத்திற்குச் செல்கிறான். ஆனால், அது ஆரண்ய காண்டத்தில் குறிப்பிடப்பட்ட அதே ஆசிரமம்தான் என்பதை உறுதிப்படுத்தும் துல்லியமான இடக்குறிப்பு இங்கே இல்லை.உத்தர காண்டம் 82ஆம் சர்க்கத்தின் இச்சுலோகத்தில், ராமன் நண்பகலில் அயோத்தியை அடைந்ததாகக் கூறப்படுகிறது. நாசிக்கிலிருந்து உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்திக்கு நேர்கோட்டு வான்வழித் தொலைவு ஏறத்தாழ 1,140 கிலோமீட்டராகும். அகஸ்தியரின் ஆசிரமம் நாசிக்கிற்கு அருகில் இருந்ததாகவும், ராமன் அதிகாலை 6 மணிக்குப் புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு அயோத்தியை அடைந்ததாகவும் அனுமானித்தால், புஷ்பக விமானம் மணிக்கு ஏறத்தாழ 190 கிலோமீட்டர் சராசரி வேகத்தில் பயணித்திருக்க வேண்டும். எனினும், ராமன் புறப்பட்ட நேரத்தை மூலச்சுலோகம் குறிப்பிடவில்லை. மேலும், அகஸ்தியரின் ஆசிரமத்திற்கும் பஞ்சவடிக்கும் இடையிலான இரண்டு யோஜனைத் தொலைவு இக்கணக்கில் தனியாகச் சேர்க்கப்படவில்லை. ஆகவே, இது புஷ்பக விமானத்தின் உண்மையான வேகத்தைக் குறிக்கும் கணக்கல்ல; இன்றைய புவியியல் தகவல்களையும் குறிப்பிட்ட அனுமானங்களையும் அடிப்படையாகக் கொண்ட தோராயமான மதிப்பீடாகும்.இன்றைய நவீன பயணிகள் விமானங்கள் பொதுவாக மணிக்கு 800 முதல் 900 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. சில வகையான இலகுரக விமானங்களும் ஹெலிகாப்டர்களும் மணிக்கு 200 முதல் 250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியவை. இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புஷ்பகம் மணிக்கு ஏறத்தாழ 190 கிலோமீட்டர் சராசரி வேகத்தில் பயணித்திருக்கக்கூடும் என்பது சுவாரஸ்யமான கணக்கீடாகும். மேலும், முந்தைய 16ஆம் சுலோகத்தில் ராமன் ஆங்காங்கே ஆசீர்வாதங்களால் பூஜிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வழியில் புஷ்பகம் சில இடங்களில் நின்றிருக்கக்கூடும் என்று அனுமானித்தால், அதன் உண்மையான பறக்கும் வேகம் கணக்கிடப்பட்ட சராசரி வேகத்தைவிட அதிகமாக இருந்திருக்கலாம். இருப்பினும், வழியில் விமானம் நின்றதாக மூலச்சுலோகம் வெளிப்படையாகக் கூறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிறகு, பிரபு {ராமன்}, "செல்வாயாக, உனக்கு ஸ்வஸ்தி {நன்மை} உண்டாகட்டும்" என்றும் {கூறி}, விருப்பம்போல் செல்வதும், அழகானதுமான அந்தப் புஷ்பகத்தை அனுப்பி வைத்தான்[4].(19) அரண்மனையின் மற்றொரு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாயிற்காவலனிடம் ராமன், "இலகுவிக்கிரமர்களான {விரைவுடன் செயல்படுபவர்களான} லக்ஷ்மணன், பரதன் ஆகிய இருவரிடமும் சென்று, என் வருகையைத் தெரிவித்து, தாமதிக்காமல் {அவர்களை} அழைத்து வருவாயாக" என்று கூறினான்.(20)
[4] இச்சுலோகத்தில் வரும் ‘விஸ்ருஜ்ய’, ‘விஸர்ஜயித்வா’ ஆகிய இரு சொற்களும் விடுவித்தல், அனுப்பிவைத்தல் என்ற தொடர்புடைய பொருள்களைக் கொண்ட வினையெச்சங்களாகும். ‘விஸர்ஜயித்வா’ என்பது காரணவினை வடிவத்திலிருந்து உருவானது. மேலும், ராமன் புஷ்பகத்தை நோக்கி, ‘செல்வாயாக, உனக்கு நன்மை உண்டாகட்டும்’ என்று கூறுவது, புஷ்பகம் கட்டளையை ஏற்றுச் செயல்படக்கூடிய தன்மையுடையதாகச் சித்தரிக்கப்படுவதைக் காட்டுகிறது. யுத்த காண்டத்தின் இறுதியில் (6.127.59–62அ), ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட புஷ்பக விமானத்தை அதன் உரிமையாளரான குபேரனிடம் ராமன் திருப்பி அனுப்பினான். பின்னர், உத்தர காண்டத்தின் 41ஆம் சர்க்கத்தில், குபேரனின் அனுமதியுடன் புஷ்பகம் மீண்டும் ராமனிடம் வந்தபோது, அதை ஏற்றுக்கொண்ட ராமன், தான் நினைக்கும்போதெல்லாம் மீண்டும் வருமாறு கூறி அனுப்பிவைத்தான் (7.41.3–15). அவ்வாறே, அகஸ்தியரின் ஆசிரமத்திற்குச் சென்று அயோத்திக்குத் திரும்பிய பிறகும், ராமன் புஷ்பகத்திற்கு மங்களம் கூறி விடைகொடுத்து அனுப்புகிறான்.
உத்தர ராமாயணம் சர்க்கம் – 082ல் உள்ள சுலோகங்கள்: 20
| Previous | | Sanskrit | | English | | Next |
