Friday, 13 November 2026

சுக்கிர சாபம் | சர்க்கம் – 081 (22)

Shukra's Curse | Sarga-081 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அரஜையின் நிலையைக் கண்டு, தண்டனையும் அவனது ராஜ்ஜியமும் அழியச் சபித்த சுக்கிராசாரியர். சாபத்தால் அழிந்து தண்டகாரண்யமாக மாறிய தண்டனின் நாடு.

சுக்கிர சாபம்

அமிதபிரபையுடைய {அளவற்ற ஒளியை உடையவரான} அந்த தேவரிஷி {சுக்கிராசாரியார்}, ஒரு முஹூர்த்தத்திற்குள் {சிறிது நேரத்திற்குள் விஷயத்தைக்} கேள்விப்பட்டு, சிஷ்யர்களால் சூழப்பட்டவராகவும், பசியால் வருந்துபவராகவும் தமது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(1) அவர், பிரதியூஷையில் கிரஹத்தால் {விடியற்காலையில் ராகு கிரகத்தால்} பீடிக்கப்பட்டு ஒளியிழந்த நிலவொளியைப் போலப் புழுதியால் முழுவதும் மறைக்கப்பட்டவளும், தீனமடைந்தவளுமான {துயருற்றவளுமான} அரஜையைக் கண்டார்[1].(2)

[1] அரஜா என்றால் மாசற்றவள் என்று பொருள், ஆனால், அதே அரஜா, ரஜஸால் {புழுதியால்} மூடப்பட்டவளாகக் காணப்படுகிறாள். இஃது அவளுடைய பெயருக்கும், அவளது அப்போதைய நிலைக்கும் இடையிலான பொருள் முரணை எடுத்துக்காட்டுகிறது.

பசித்திருந்த அவருக்கு விசேஷமான {மிகுதியான} ரோஷம் {கோபம்} எழுந்தது. மேலும், மூவுலகங்களையும் சுட்டெரிப்பவரைப் போல சிஷ்யர்களிடம் இதைச் சொன்னார்:(3) "விபரீதமானவனும் {நெறிதவறியவனும்}, தன்னைத்தானே வெல்லாதவனுமான தண்டனுக்கு நேரவிருக்கும், கோரத் தோற்றமுடையதும், குரோதத்துடன்கூடிய அக்னிசிகையைப் போன்றதுமான பேரழிவைப் பார்ப்பீராக.(4) எவன் நன்கு ஒளிரும் ஹுதாசனனின் சிகையை {தீப்பிழம்பை} உண்மையிலேயே ஸ்பரிசிக்க இச்சிக்கிறானோ, {அத்தகைய} துராத்மாவும், அனுகர்களுடன் {சுற்றத்தாருடன்} கூடியவனும், துர்மதியுடையவனுமான இவனுக்கு {தண்டனுக்கு} அழிவு வந்தடைந்துவிட்டது.(5) எதனால் அந்த துர்மேதை {தீய புத்தி கொண்ட தண்டன்} இத்தகைய கோரத்துடன்கூடிய பாபத்தைச் செய்தானோ, அதனால் அந்தப் பாப கர்மத்தின் பலனை {அவன்} அடைவான்.(6)

பாப கர்மங்களையே சமாசாரமாக {ஒழுக்கமாகக்} கொண்டவனும், துர்மதியுடையவனுமான அந்த ராஜா {தண்டன்}, தன் பணியாளர்கள், பலம் {படை}, வாகனங்களுடன் சப்தராத்திரிகளுக்குள் {ஏழு இரவுகளுக்குள்} வதம் {அழிவை} அடைவான்.(7) மேலும், பாகசாசனன் {இந்திரன்}, தீய புத்தியுடைய இவனுடைய விஷயத்தை {தண்டனுடைய நாட்டை} நாற்புறமும் நூறு யோஜனைகளுக்கு மிகப் பெரிய மண்மழையால் சுட்டெரிப்பான்.(8) இங்கே இருந்த ஸ்தாவரங்களும் {நிலைத்திருப்பனவும்}, சரங்களும் {இயங்குவனவும்} எவையெவையோ, {அந்த} சத்வங்கள் {உயிரினங்கள்} அனைத்தும் மிகப் பெரிய புழுதி மழையால் நாற்புறங்களிலும் அழிவை அடைந்தன.(9) தண்டனுடைய விஷயம் {நாடு} எவ்வளவோ {எவ்வளவு பரப்பளவோ}, அவ்வளவும் உயர்ந்து நிற்கும் அனைத்துடனும் சப்தராத்திரிகளுக்குப் புழுதி மழை போல {புழுதி மழையால் மறைக்கப்பட்டதைப் போல} கண்ணுக்குப் புலப்படாததாக மாறிவிடும்" {என்றார் சுக்கிராசாரியார்}[2].(10)

[2] தர்மாலயப் பதிப்பில், "தண்டனது தேசம் எவ்வளவோ அவ்வளவும் மண்மாரி பிரத்யக்ஷமாய் முழுவிரோதியென ஏழு ராத்திரி பொழியும்" என்றிருக்கிறது. இங்கே 'பிரத்யக்ஷமாய்' என்றிருப்பது மூலத்துக்கு மாறானது. சர்வ சமுச்சயம் இவ (உயர்ந்தவை அனைத்தும் போல) என்பதற்கு, "முழுவிரோதியென" என்பதும் உடன் பொருந்தவில்லை. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "'இத்தண்டகனது தேசம் எவ்வளவுதூரம் பரந்துளதோ, அவ்வளவுதூரமும் யாதும் கண்ணுக்குப் புலப்படாது பிரளயகாலமென ஏழுநாள் மழைபொழியும்' என இவ்வாறு வெகுண்டு கண்கள் சிவந்து கொதித்துக் கூறினார்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "தண்டனுடைய ராஜ்யம் எதுவரை பரவியிருக்கிறதோ, அதனிடையிலுள்ள உயிர்ப்பிராணிகள், ஜடப்பொருள்கள் எல்லாம் புழுதியில் மூழ்கி, கண்ணுக்குப் புலப்படாமல் போகப் போகின்றன" என்றிருக்கிறது.

குரோதத்தால் {தாமிரம் போல்} சிவந்த கண்களையுடையவர் {சுக்கிராசாரியார்}, இவ்வாறு கூறிவிட்டு, மேலும் அந்த ஆசிரமவாசிகளான ஜனங்களிடம், "ஜனபத தேசத்தின் எல்லைப்பகுதிகளில் தங்கியிருங்கள்" என்றும் கூறினார்.(11)

ஆசிரமத்தில் வசித்த அந்த ஜனங்களோ, உசனஸின் {சுக்கிராசாரியாரின்} வாக்கியத்தைக் கேட்ட பிறகு, அந்த விஷயத்திலிருந்து {தண்டனின் நாட்டிலிருந்து} வெளியேறி, வெளியே ஸ்தானத்தை {தங்குமிடத்தை} அமைத்துக் கொண்டனர்.(12) அவர் முனிஜனத்திடம் {முனிவர்களின் கூட்டத்திடம்} அவ்வாறு கூறிவிட்டு, அரஜையிடம் இதைக் கூறினார், "துர்மேதையே {தீய புத்தியுடையவளே}, இங்கு ஆசிரமத்திலேயே நல்ல சமாஹிதத்துடன் கூடியவளாக {நன்கு ஒருமுகப்பட்ட சித்தமுடையவளாக} வசிப்பாயாக.(13) அரஜே, ஒரு யோஜனை வரை பரந்ததும், மிக அழகிய பிரபையை {ஒளியைக்} கொண்டதுமான இந்த சரஸை ஜுவரம் {கவலை என்ற பிணி} நீங்கியவளாக அனுபவிப்பாயாக. மேலும் காலத்தை எதிர்பார்த்து இங்கே காத்திருப்பாயாக[3].(14) மேலும் அந்த நிசியில் {அந்த ஏழு இரவுகளில்} உன் சமீபத்தில் வாசத்தை அடையும் சத்வங்கள் {உயிரினங்கள்} எவையோ, அவை புழுதி மழையால் வதைக்கப்பட முடியாதவையாக நித்யமும் {எப்போதும்} இருக்கும்" {என்றார் சுக்கிராசாரியார்}.(15)

[3] தண்டனுடைய நாடு புழுதி மழையால் அழியப்போகும் நிலையில், மற்ற ஆசிரமவாசிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறிய சுக்கிராசாரியார், தம் மகள் அரஜையை மட்டும் ஆசிரமத்திலேயே தங்குமாறு அறிவுறுத்துகிறார். மேலும், ஒரு யோஜனை அளவுக்கு விரிந்த அழகிய சரஸை அனுபவித்துக்கொண்டு, கவலையின்றி உரிய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்குமாறு கூறுகிறார். இதனால், அந்த சரஸ் அமைந்த பகுதி அரஜைக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்பது உணரப்படுகிறது.

அப்போது பார்க்கவியான {பிருகு வம்சத்தவளான} அந்த அரஜை, பிரம்மரிஷியின் நியோகத்தை {கட்டளையைக்} கேட்டு, பெரும் துக்கமடைந்தவளாக, பிதாவான பார்க்கவரிடம் {சுக்கிராசாரியாரிடம்}, "அவ்வாறே {ஆகட்டும்}" என்றாள். பார்க்கவர், இவ்வாறு கூறிவிட்டு, வேறிடத்தில் வாசத்தை {வசிப்பிடத்தை} அமைக்கச் செய்தார்.(16) மேலும், பிரம்மவாதியால் {சுக்கிராசாரியாரால்} எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறே, பணியாட்களுடனும், பலத்துடனும் {படையுடனும்}, வாகனங்களுடனும் கூடிய நரேந்திரனின் {மனிதர்களின் தலைவனான தண்டனுடைய} அந்த ராஜ்ஜியம் ஏழு நாள்களில் பஸ்மம் {சாம்பல்} ஆயிற்று[4].(17)

[4] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 64ம் பாடல் பின்வருமாறு:

அந்த வெள்ளி அனலென்ன ஆலகால விடமென்னச்
சிந்தை எழுந்த பெருங்கோபம் தீரா இடும்பை என்மகட்குத்
தந்த தண்டன் வளநாடும் தானும் கிளையும் தந்திரமும்
வெந்து பொடியாய் வீழ்கவென எல்லாம் பொடியாய் வீழ்ந்தனவே.

பொருள்: அப்போது சுக்கிராசாரியார், கொழுந்துவிட்டெரியும் தீயைப் போலவும் ஆலகால விஷத்தைப் போலவும் உள்ளத்தில் பொங்கியெழுந்த பெருங்கோபத்துடன், "நீங்காத பெருந்துன்பத்தை என் மகளுக்கு இழைத்த தண்ட மன்னனின் வளமான நாடும், அவனும், அவனுடைய சுற்றத்தாரும், நால்வகைப் படைகளும் வெந்து சாம்பலாகி வீழ்வதாக!" என்று சபிக்க, அவ்வாறே அவை அனைத்தும் எரிந்து சாம்பலாகி அழிந்து போயின.

"நிருபா {அரசனே, ராமா}, விந்தியத்திற்கும், சைவலத்திற்கும் இடையிலுள்ள அவனுடைய அந்த தண்ட விஷயம் {தண்டநாடு}, தர்மத்திற்கு முரணான செயல் ஒன்றுசேர்ந்து நிகழ்த்தப்பட்டபோது, அந்த பிரம்மரிஷியால் சபிக்கப்பட்டது.(18) காகுத்ஸ்தா {ககுத்ஸ்தனின் வழித்தோன்றலே}, அது முதல் {அவ்விடம்} தண்டகாரண்யம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அங்கே உண்மையில் தபஸ்விகள் இருந்தனர். அதனால் {அவ்விடம்} ஜனஸ்தானம் ஆயிற்று[5].(19)

[5] தண்டனுடைய நாடு விந்தியத்திற்கும் சைவலத்திற்கும் இடையில் அமைந்திருந்ததாக இங்கே சொல்லப்படுகிறது. விந்தியம் மத்திய இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைத்தொடராகும். சைவலம் என்பது இராமாயணத்தில் குறிப்பிடப்படும் மற்றொரு மலையின் பெயராகும். அதன் தற்காலப் புவியியல் அமைவிடம் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை. எனவே, தண்டனுடைய நாட்டின் எல்லைகளை இன்றைய வரைபடத்தில் துல்லியமாக வரையறுக்க இயலாது. அந்நாடு சுக்கிராசாரியாரின் சாபத்தால் அழிந்த பின்னர் தண்டகாரண்யம் என்ற பெயரைப் பெற்றதாக இங்கே கூறப்படுகிறது. அப்பகுதியில் தபஸ்விகள் தங்கியிருந்ததால் ஜனஸ்தானம் என்ற பெயரும் ஏற்பட்டதாக விளக்கப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் ஜனஸ்தானம் தண்டகாரண்யத்துடன் தொடர்புடைய பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே, இவ்விரு பெயர்களும் எல்லா இடங்களிலும் ஒரே நிலப்பரப்பைக் குறிக்கின்றன என்று கொள்ள வேண்டியதில்லை.

இராகவா, எதை என்னிடம் நீ கேட்கிறாயோ, அது முழுவதும் உனக்குச் சொல்லப்பட்டது. வீரா, சந்தியையை {சந்திப்பொழுதை} உபாசிப்பதற்கான சமயம் {வழிபடுவதற்கான நேரம்} உண்மையில் கடந்து கொண்டிருக்கிறது.(20) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, நீரால் செய்ய வேண்டிய செயல்களை நிறைவேற்றியவர்களும், பூர்ணகும்பங்களை {நிறைகுடங்களை} உடையவர்களுமாக இந்த சர்வ மஹரிஷிகளும் நாற்புறமும் ஆதித்யனை உபாசிக்கிறார்கள் {சூரியனை வழிபடுகிறார்கள்}.(21) இராமா, ஒன்றுகூடிய அந்த பிரம்மவித்தகர்களால் {பிரம்மஞானிகளில் சிறந்தவர்களான அவர்களால்} பிராஹ்மணம் அப்பியாசம் செய்யப்பட்டது {சந்தியா மந்திரங்கள் ஓதப்பட்டன}. அந்த ரவியும் {சூரியனும்} அஸ்தம் {அஸ்த மலையை / அஸ்தமனத்தை} அடைந்துவிட்டான். செல்வாயாக. நீரைத் தொடுவாயாக {நீரைத் தொட்டு மாலைக் கடன்களைச் செய்வாயாக}" {என்றார் அகஸ்தியர்}[6].(22)

[6] இச்சுலோகத்தில் வரும் ‘பிராஹ்மணம் அப்பியாசம் செய்யப்பட்டது’ என்பது பிரம்மஞானிகளில் சிறந்தவர்களான முனிவர்கள் மேற்கொண்ட வேதப் பாராயணத்தைக் குறிக்கிறது. முந்தைய சுலோகங்களில் சந்தியா உபாசனை குறிப்பிடப்பட்டிருப்பதால், இஃது அந்த வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ‘உதகத்தைத் தொடுதல்’ என்பது சந்தியா உபாசனையின்போது மேற்கொள்ளப்படும் நீர்ச்சடங்குகளுடன் தொடர்புடையது. சூரியன் அஸ்தமனத்தை அடைந்துவிட்டதாகக் கூறப்படுவதால், இங்கு மாலைச் சந்தியா உபாசனையே குறிப்பிடப்படுகிறது.


உத்தர ராமாயணம் சர்க்கம் – 081ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

தொடர்ந்து படிக்க: பொருளடக்கம் · நூல்கள்: அச்சு நூல்கள் · கிண்டில் நூல்கள்

Labels

அகஸ்தியர் அக்னி அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் கல்மாஷபாதன் காசியபர் காஞ்சனர் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குசன் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கைடபன் கோமுகன் கௌ கௌசல்யை கௌதமர் க்ஷுபன் சங்கன் சத்ருக்னன் சம்பூகன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாபாலி ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மதயந்தி மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாந்தாதா மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மித்ரஸஹன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லவணன் லவன் லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாமதேவர் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஸௌதாஸன் ஹனுமான் ஹேதி