Friday, 30 October 2026

சம்பூக வதம் | சர்க்கம் – 076 (52)

The Slaying of Shambuka | Sarga-076 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சம்பூகனை வதைத்த ராமன்; உயிர்பெற்ற பிராமணச் சிறுவன்; அகஸ்தியரைச் சந்தித்து ஆபரணத்தைப் பெற்றதும், அரசன் தோன்றிய வரலாற்றின் விளக்கத்தைப் பெற்றதும்.

சம்பூக வதம்

{அந்த தபஸ்வி}, அக்லிஷ்டகர்மனான {சோர்வின்றிச் செயல்களைச் செய்பவனான} ராமனின் அந்த வாக்கியத்தைக் கேட்டு, அவ்வாறே தலைகீழாக இருந்தபடியே இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "பெரும்புகழுடைய ராமா, நான் சூத்திரயோனியில் பிறந்தவன். பெயரால் சம்பூகன் என்றழைக்கப்படுகிறேன். சரீரத்துடனேயே தேவத்வத்தை அடைய விரும்புகிறேன்.(2) இராமா, நான் பொய் சொல்லவில்லை. காகுத்ஸ்தா, தேவலோகத்தை வெல்லும் விருப்பத்தால் உக்ர தபஸ்ஸை மேற்கொண்டுள்ள சூத்திரனாக என்னை அறிவாயாக" {என்றான் சம்பூகன்}.(3)

இராகவன் {ரகு குல ராமன்}, அழகிய பிரபையுடன் ஒளிரும் விமலமான கட்கத்தை {களங்கமற்ற வாளை} உறையிலிருந்து உருவி, பேசிக்கொண்டிருந்த அந்தச் சூத்திரனின் தலையை வெட்டினான்.(4) அந்தச் சூத்திரன் கொல்லப்பட்டதும், இந்திரனுடன் கூடியவர்களும், அக்னியை முன்னிட்டவர்களுமான தேவர்கள், "சாது! சாது! {நன்று, நல்லது}" என்று காகுத்ஸ்தனை மீண்டும் மீண்டும் புகழ்ந்தனர்.(5)

வாயுவால் {காற்றால்} விடுவிக்கப்பட்ட, திவ்யமான, சுகந்தமிக்க {நல்ல நறுமணமுடைய} புஷ்பங்களின் பெரும் விருஷ்டி {மலர்களின் பெரும் மழை} உண்டாகி எங்கும் பொழிந்தது.(6) பெரும்பிரீதியடைந்த தேவர்கள், சத்யபராக்ரமனான ராமனை நோக்கி {பின்வருமாறு} கூறினர், "சௌம்யா {அன்பானவனே}, மஹாமதே {மதிமிக்கவனே}, உன்னால் இந்த ஸுர காரியம் {தேவ காரியம்} நன்றாகச் செய்யப்பட்டது.(7) சௌம்யா, அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, ரகுநந்தனா {ரகு குலத்தவருக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே}, நீ எவ்வரத்தை இச்சிக்கிறாயோ, {அதைப்} பெற்றுக் கொள்வாயாக. இந்தச் சூத்திரன் உன்னால் நிச்சயமாக ஸ்வர்க்கத்தைப் பெறுபவனாக மாட்டான்" {என்றனர் தேவர்கள்}[1].(8)

[1] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 34, 35ம் பாடல்கள் பின்வருமாறு:

விண்ணவர் பூமழை பொழிய வேதியர்
    ஆசிகள் கூற வேலை சூழ்ந்த
மண்ணதனில் திகழ் வருண தன்மத்தை
    வரம்பழித்து நின்கை மாண்டேன்
புண்ணியஞ் செய்தோரெண்ணும் பொன்னுலகும்
    புகலரிது புரைதீர் நின்னுள்
கண்ணியதோர் வரம் வேண்டிக் கொள்ளென்னக்
    கார்மேனிக் கண்ணன் கூறும் (34)

மறுகு பெருந் துயருடைய மறையவன் சேய்
    அத்தலத்தின் மாண்டோனாகி
பெறுவகை வேண்டுவென் என்னப் பெருந்தவனுமவன்
    ஆவி பெற்றான் என்றான்
செறி வலி இந்திரன் ஆதி தேவர்களும்
    சீதரனும் தீய பாவம்
குறுகரிய மாதவருக்குக் குறுமுனி வாழ்
    தவனத்தை குறுகினாரால் (35)

பொருள்: தேவர்கள் {வானிலிருந்து} மலர்மாரி பொழியவும், வேதியர்கள் வாழ்த்துரைகளை முழங்கவும் {நின்ற அந்த வேளையில், வாளுண்ட சம்பூகன்}, "கடல் சூழ்ந்த இப்பூவுலகில் விளங்கும் வர்ண தர்மத்தின் வரம்பை மீறிய யான், உன் கையால் மாண்டு நற்கதி அடைந்தேன்; புண்ணியம் செய்தவர்கள் அடையக் கருதும் பொன்னுலகமும் {சுவர்க்கமும்} கூட உன் கையால் மடிந்து பெறும் இந்நிலைக்கு முன் புகுதற்கு அரியதாகும். குற்றங்கள் நீங்கிய உன் தூய உள்ளத்தில் நீ விரும்பிய ஒரு வரத்தை என்னிடம் வேண்டிக் கேட்பாயாக" என்று கூறினான். அதைக் கேட்ட கார்மேக வண்ணத் திருமேனி கொண்ட கண்ணன் {ராமன்},(34) "மனம் சுழன்று பெரும் துயருற்ற அந்த மறையவனின் மகன் அவ்விடத்திலேயே மாண்டு கிடக்கின்றான்; அவன் மீண்டும் உயிரைப் பெறும் வகையிலான வரத்தையே யான் வேண்டுகிறேன்" என்று கேட்க, "அந்தப் பெருந்தவசியான பிராமணனும் தன் மகனுடைய உயிரை மீண்டும் பெற்றான்" என்று {சம்பூகன்} கூறினான். {அதன்பின்}, மிகுந்த வலிமை பொருந்திய இந்திரன் முதலான தேவர்களும், சீதரனும் (திருமாலாகிய ராமனும்), கொடிய பாபங்கள் நெருங்குவதற்கரிய பெருந்தவமுடைய குறுமுனிவர் (அகஸ்தியர்) வாழும் தவ வனத்தை (ஆசிரமத்தை) அடைந்தனர்.(35)

தேவர்களின் பேச்சைக் கேட்டு, மனத்தை நன்கு ஒருநிலைப்படுத்திய ராகவன், கைகளைக் கூப்பியவாறு சஹஸ்ராக்ஷனான புரந்தரனிடம் {ஆயிரம் கண்களைக் கொண்டவனும், பகைவரின் நகரை அழிப்பவனுமான இந்திரனிடம் பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(9) "தேவர்கள் என்னிடம் அருள் கொண்டால், அந்த துவிஜபுத்திரன் {இருபிறப்பாளரின் மகன்} ஜீவிதம் பெறட்டும். நான் பெரிதும் வேண்டும் இந்த வரம் எனக்கு அளிக்கப்படட்டும்.(10) அந்தப் பிராமணரின் ஏகபுத்ரகன் {ஒரே மகன்}, பிராப்த காலத்திற்கு முன்பே {உரிய காலம் [ஆயுள்] நிறைவடைவதற்கு முன்பே}, என் அபசாரத்தால் {தவறால்} சென்றுவிட்டான்; காலனால் வைவஸ்வதக்ஷயத்திற்கு {யமனின் இருப்பிடத்திற்கு} கொண்டு செல்லப்பட்டான்.(11) உங்களுக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. அவனை ஜீவிக்கச் செய்வீராக. {என் வாக்கைப்} பொய்யாக்கத்தகாது. அந்த துவிஜருக்கு, "உமது மகனை ஜீவிக்கச்செய்வேன்" என்ற அர்த்தம் என்னால் உறுதியளிக்கப்பட்டது" {என்றான் ராமன்}.(12)

விபுதசத்தமர்களான {எப்போதும் விழிப்புடன் கூடிய புத்தியைக் கொண்ட தேவர்களில் சிறந்தவர்களான} தேவர்கள், ராகவனுடைய அந்த வாக்கியத்தைக் கேட்டுப் பிரீதியடைந்து, பிரீதி நிறைந்த ராகவனிடம் {பின்வரும்} மறுமொழியைக் கூறினர்:(13) "காகுத்ஸ்தா {ககுத்ஸ்தனின் வழித்தோன்றலே}, வருத்தமற்றவனாவாயாக. இந்த நாளில் அந்த பாலகன் மீண்டும் ஜீவிதத்தை அடைந்தான்; கூடவே பந்துக்களுடன் {உறவினருடன்} சேர்ந்தவனும் ஆனான்.(14) காகுத்ஸ்தா, எந்த முஹூர்த்தத்தில் இந்தச் சூத்திரன் வீழ்த்தப்பட்டானோ, அந்த முஹூர்த்தத்தில் அந்த பாலன் ஜீவனோடு சேர்க்கப்பட்டான் {தன் உயிரைப் பெற்றான்}.(15) நரரிஷபா {மனிதர்களில் காளையே}, ராகவா, ஸ்வஸ்தி {நலம்} அடைவாயாக. உனக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. நன்று, {இனி நாங்கள்} புறப்படுகிறோம். அகஸ்தியரின் ஆசிரமபதத்தைக் காண விரும்புகிறோம்.(16) மிகப்பெரும் ஒளியையுடைய அந்தப் பிரம்மரிஷியின் தீக்ஷை {விரத காலம்} உண்மையில் நிறைவடைந்தது. ஜலசய்யையில் {ஜலசயன விரதத்தில் / நீரில் கிடந்து செய்யும் தபத்தில்} இருக்கும் அவருக்குப் பன்னிரண்டாம் வருஷமும் உண்மையில் கழிந்தது.(17) காகுத்ஸ்தா, அதனால் {நாங்கள்} முனிவரைப் பாராட்டுவதற்காகச் செல்லப் போகிறோம். உனக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. நீயும் கூட அந்த ரிஷிசத்தமரை {முனிவர்களில் சிறந்தவரான அந்த அகஸ்தியரைப்} பார்ப்பதற்கு வருவாயாக" {என்றனர்}.(18)

இரகுநந்தனனான அவன், தேவர்களிடம், "அப்படியே {ஆகட்டும்}" என்று பிரதிஜ்ஞை செய்து {உறுதி கூறி}, ஹேமபூஷிதமான {பொன்னால் அலங்கரிக்கப்பட்ட} அந்தப் புஷ்பக விமானத்தில் ஏறினான்.(19) பிறகு அந்த தேவர்கள் மிக விஸ்தாரமான விமானங்களில் புறப்பட்டுச் சென்றனர். உடனே ராமனும் கூடக் கும்பயோனியின் {குடத்தில் தோன்றிய அகஸ்திய முனிவரின்} தபோவனத்திற்குப் பின்தொடர்ந்து சென்றான்.(20) தபங்களின் நிதியும், தர்மாத்மாவுமான அகஸ்தியரோ, {தமது ஆசிரமத்திற்கு} வந்து சேர்ந்த தேவர்களைக் கண்டு, அவர்கள் அனைவரையும் பாகுபாடின்றி அர்ச்சித்தார் {வழிபட்டார்}.(21) பிறகு அந்தத் திரிதசர்கள் {தேவர்கள்}, {அகஸ்தியரால் செய்யப்பட்ட} பூஜையை ஏற்றுக் கொண்டு, மஹாமுனிவரையும் பூஜித்து, மகிழ்ச்சியடைந்தவர்களாக {தங்களைப்} பின்தொடர்ந்து வந்தோருடன் நாகப்ருஷ்டத்திற்கு {ஸ்வர்க்கத்தின் மேற்பரப்பிற்குச்} சென்றனர்.(22)

அவர்கள் சென்ற பிறகு, காகுத்ஸ்தன் புஷ்பகத்திலிருந்து கீழே இறங்கிவிட்டு, பின்னர் ரிஷிசத்தமரான {முனிவர்களில் சிறந்தவரான} அகஸ்தியரை உண்மையில் வணங்கினான்.(23) அந்த நராதிபன் {மனிதர்களின் அரசனான ராமன்}, தேஜஸ்ஸினால் ஜுவலிப்பதைப் போன்றவரான மஹாத்மாவை {அகஸ்தியரை} வணங்கி, பரம ஆதித்யத்தை அடைந்து {அதிதி சத்காரத்தை / விருந்தோம்பலை ஏற்று} அமர்ந்தான்.(24) மஹாதேஜஸ்வியும், மஹாதபஸ்வியுமான கும்பயோனி {அகஸ்தியர்} அவனிடம் {பின்வருமாறு} சொன்னார், "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, ராகவா, உனக்கு ஸ்வாகதம் {நல்வரவாகட்டும்}. {நீ என்} நல்லூழால் {இங்கே} வந்து சேர்ந்திருக்கிறாய்.(25) இராமா, பல உத்தம குணங்களால் நீ எனக்குப் பெரிதும் மதிப்புக்குரியவனாக, பூஜிக்கத்தகுந்தவனாக, அதிதியாக {விருந்தினனாக}, மேலும் {நீ} நித்யம் என் ஹிருதயத்தில் நிலைபெற்றவனாகவும் {இருக்கிறாய்}.(26) ஸுரர்கள் {தேவர்கள்} சூத்திரனைக் கொன்றுவிட்டு வந்து சேர்ந்தவனாக உண்மையில் உன்னைக் கூறுகின்றனர். மேலும் உன்னால் தர்மத்தின்படி பிராமணனுடைய மகன் ஜீவிக்க வைக்கப்பட்டான் {உயிர் பெறச் செய்யப்பட்டான்}.(27) மேலும், ராகவா, இங்கே என் அருகிலேயே ரஜனி {இரவு} கழிக்கப்படட்டும் {இன்று ஓரிரவு இங்கே நீ தங்குவாயாக}. உண்மையில் நீ பிரபாதத்தில் {விடியற்காலையில்} புஷ்பகத்தால் புரத்திற்கே {அயோத்தி நகருக்கே} செல்வாய்.(28) ஸ்ரீமானான நீயே உண்மையில் நாராயணன்; உன்னிடத்திலேயே அனைத்தும் நிலைபெற்றுள்ளன. நீயே சர்வ தேவர்களுக்கும் பிரபு. நீயே சனாதன புருஷன் {எப்போதும் இருப்பவன்}.(29) சௌம்யா, காகுத்ஸ்தா, ராகவா, விஷ்வகர்மனால் நிர்மிதம் செய்யப்பட்டு, திவ்யமான வடிவோடு, சொந்த தேஜஸ்ஸினால் ஒளிரும் இந்த திவ்யமான ஆபரணத்தை ஏற்றுக் கொள்வாயாக. மேலும் எனக்குப் பிரியமானதைச் செய்வாயாக.(30) தத்தம் செய்யப்பட்டதை {தானமாகப் பெறப்பட்டதை} மீண்டும் தானம் செய்வதில் உண்மையில் மஹத்தான பலன் {கிடைக்கும் என்று சாஸ்திரங்களில்} கூறப்படுகிறது. இந்திரனுடன் கூடிய மருத்துகளையும் {தேவர்களையும்} கூடக் காப்பதில் உண்மையில் நீ ஆற்றல்வாய்ந்தவனாவாய்.(31) நராதிபா {மனிதர்களின் தலைவா}, இந்திரனுடன் கூடிய திவௌகஸர்களை {தேவலோகவாசிகளைக்} கூடக் கரைசேர்ப்பதற்கு நீ உண்மையில் ஆற்றல்வாய்ந்தவனாவாய். எனவே, {இவ்வாபரணத்தை} விதிப்படி வழங்குவேன்; அதனை {மறுக்காமல்} ஏற்றுக் கொள்வாயாக.(32) பாஸ்கரனை {ஒளியை உண்டாக்குபவனான சூரியனைப்} போல நன்கு ஒளிர்வதும், சித்திரமானதும், திவ்யமானதுமான {இந்த} ஆபரணத்தை {ஏற்றுக் கொள்வாயாக}" {என்றார் அகஸ்தியர்}.(33)

அப்போது, இக்ஷ்வாகுக்களில் மஹாரதனும், மதிமிக்கவர்களில் சிறந்தவனுமான ராமன், க்ஷத்ரதர்மத்தை நினைவுகூர்ந்து, அந்த மஹாத்மாவை {அகஸ்திய முனிவரை} நோக்கி {பின்வருமாறு} சொன்னான்:(34) "பகவானே {முழுமையான தப ஆற்றல் பொருந்தியவரே}, பிராமண புங்கவரே {அந்தணர்களில் முதன்மையானவரே}, இதை {இந்த தானத்தைப்} பெற்றுக் கொள்வது பிராமணனுக்குப் பழிக்கப்படாதது; உண்மையில் க்ஷத்திரியனான நானோ, எவ்வாறு ஏற்பேன் {பெற்றுக் கொள்வேன்}?(35) விசேஷமாக பிராமணரால் தத்தம் செய்யப்பட்டதை {க்ஷத்திரியனான நான் எவ்வாறு ஏற்கலாம் என்பதை} நீர் விளக்குவதற்குத் தகுந்தவராவீர்" {என்றான் ராமன்}.

இராமனால் இவ்வாறு கூறப்பட்டவுடன், மஹாரிஷி {அகஸ்தியர் பின்வருமாறு} மறுமொழி கூறினார்:(36) "இராமா, பிரஹ்மபூதமும் {பிரம்மனின் ஆதிக்கத்தில் விளங்கியதும்}, முந்தைய யுகமுமான கிருதயுகத்தில் சர்வ பிரஜைகளும் {மக்களும்}[2] பார்த்திபர்கள் {அரசர்கள்} இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் ஸுரர்களுக்கோ {தேவர்களுக்கோ} சதக்ரது {நூறு வேள்விகளைச் செய்த இந்திரன் அரசனாக இருந்தான்}.(37) அந்தப் பிரஜைகள் ஒரு ராஜாவுக்காக தேவதேவேசனை {ஓர் அரசன் வேண்டும் என்பதற்காக பிரம்மனை} விரைந்து அணுகினர். {அவர்கள் பிரம்மனிடம்}, "தேவா, உன்னால் ஸுரர்களுக்கு சதக்ரது ராஜாவாக ஸ்தாபிக்கப்பட்டான்.(38) லோகேசா, எங்களுக்கு நரபுங்கவனான {மனிதர்களின் முதன்மையான} ஒரு பார்த்திபனை உண்மையில் அருள்வாயாக. எவனுக்கு நாங்கள் பூஜை செய்து கொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டவர்களாக வாழ்வோமோ {அத்தகைய அரசனை அளிப்பாயாக}. இராஜா இல்லாமல் நாங்கள் வாழ மாட்டோம். இதுவே எங்களின் உறுதியான நிச்சயமாகும் {முடிவாகும்}" {என்றனர் மக்கள்}.(39)

[2] பிரஜைகள் என்றால் குடிமக்கள் என்றே அறிந்திருக்கிறோம். சம்ஸ்கிருதத்தில், "ப்ர" என்றால் "நன்கு / மேலாக" என்ற பொருளும், "ஜன்" என்றால் "பிறத்தல் / தோன்றுதல்" என்ற பொருளும் வரும். எனவே, நன்கு பிறப்பிக்கப்பட்டவர்கள் அல்லது தோற்றுவிக்கப்பட்டவர்கள் யாரோ, அவர்களே பிரஜைகள் என்று கொள்ளலாம். அதாவது, பிரபஞ்சத்தில் பிரம்மதேவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும், சந்ததியினரும், உயிரினங்களுமே இயல்பாகப் 'பிரஜைகள் (படைப்புகள் / மக்கள்)' என அழைக்கப்படுகின்றனர். படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் தொடக்கத்தில் 'பிரஜைகள் (மனுமக்கள் / மானிடர்கள்)' மட்டுமே. அவ்வாறு சுயமாக வாழ்ந்துவந்த மக்கள், தங்களுக்குள் நீதிநெறியைப் பாதுகாக்கவும் வழிநடத்தவும் ஒரு தலைவன் வேண்டும் என்று விரும்பியபோது உருவானதே 'அரசன் (ராஜா)' என்ற பதவி. அரசன் அமைந்த பிறகு, அவன் தன் குழந்தைகளைப் போலக் குடிகளைப் பாதுகாத்துப் பேணியதால், அம்மக்கள் அவனுக்குரிய குடிகளாக மாறினர். சாஸ்திரங்களில் 'பிதாவைப் போல மக்களைக் காப்பவன் ராஜா' என்று கூறப்படுவதன் காரணமும் இதுவே ஆகும்.

பிரஜைகளின் வசனத்தைக் கேட்டு, உத்தம அர்த்தத்தை நிச்சயித்து {மேலான காரியத்தை முடிவு செய்து},(40) பிறகு, ஸுரர்களில் சிறந்தவனான பிரம்மன், வாசவனுடன் {அஷ்ட வசுக்களின் தலைவனான இந்திரனுடன்}[3] கூடிய சர்வ லோகபாலர்களையும் {திசைக்காவலர்களையும்} ஒன்றாக அழைத்து, "நீங்கள் {உங்களுடைய} தேஜஸ்ஸின் பாகங்களை {ஆற்றற்கூறுகளை} அளியுங்கள்" என்று கூறினான்.(41)

[3] உலக உயிர்கள் வாழ்வதற்குரிய வாழ்விடங்களையும், செல்வங்களையும் (வசுக்களை), மழை மற்றும் வளத்தின் வழியாக நிலைபெறச் செய்பவன் (வசிப்பிடம் அளிப்பவன்) என்பதால் இந்நாயகனுக்கு 'வாசவன்' என்ற காரணப்பெயர் அமைந்தது. அஷ்ட வசுக்கள் {எட்டு செல்வர்கள்} என்போர் இயற்கையின் பல்வேறு ஆற்றல்களையும் அம்சங்களையும் குறிக்கும் தேவக்குழுவினர் ஆவர். இவர்களின் அதிபதியாக விளங்குபவனே இந்திரன் {வாசவன்}. மகாபாரதத்திலும், விஷ்ணு புராணத்திலும் குறிப்பிடப்படும் அஷ்ட வசுக்களின் பெயர்களும் அவற்றின் குறியீடுகளும்: 1. தரன் – நிலம் / பிருத்வி {பூமித் தத்துவம்}, 2. அனலன் – நெருப்பு / தீ {அக்னித் தத்துவம்}, 3. அனிலன் – காற்று {வாயுத் தத்துவம்}, 4. ஆபன் – நீர் {ஜலத் தத்துவம், மஹாபாரதத்தில் இவருக்குப் பதிலாக அஹன் – பகல் என்று வருகிறது}, 5. பிரத்தியூஷன் – விடியல் / அதிகாலை ஒளி, 6. பிரபாசன் {தியு} – பேரொளி / பிரகாசம் {மகாபாரதத்தில் இவரே கங்கையின் மைந்தனான பீஷ்மராக அவதரித்தவர்}, 7. சோமன் – சந்திரன் / சோமக்கதிர், 8. துருவன் – துருவ நட்சத்திரம் / அசைவின்மை (நிலைத்தன்மை).

பிறகு சர்வ லோகபாலர்களும் தங்களுடைய தேஜஸ்ஸின் பாகங்களை {ஆற்றற்கூறுகளைக்} கொடுத்தனர். பிறகு பிரம்மனும் தும்மினான்; {அந்தத் தும்மலிலிருந்தே} க்ஷுபன்[4] என்ற நிருபன் {மனிதர்களைக் காக்கும் அரசன்} பிறந்தான்.(42) பிரம்மன் அவனை லோகபாலர்களின் அம்சங்களோடு ஒன்றாக இணைத்தான். பிறகு அந்தப் பிரஜைகளுக்கு {மக்களுக்கு} ஈஷ்வரனான {தலைவனான} நிருபனாக க்ஷுபனை அளித்தான்.(43) அங்கே நிருபன் இந்திரனுக்குரிய பாகத்தால் மஹீயின் {பூமியின்} மீது ஆணை செலுத்துபவனாகவும் இருந்தான்; அந்தப் பார்த்திபன் வருணனுக்குரிய பாகத்தாலோ உடலை ஊட்டமளித்துக் காத்தான்.(44) அப்போது {அவன்} குபேரனுக்குரிய பாகத்தாலோ இவர்களுக்கு {பிரஜைகளுக்குச்} செல்வத்தை அளித்தான். எந்த பாகம் யமனுக்குரியதாக இருந்ததோ, அதைக் கொண்டு அவன் பிரஜைகளை நெறிமுறைப்படுத்தி ஆண்டான்.(45) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, ரகுநந்தனா, பிரபோ, அங்கே இந்திரனுக்குரிய பாகத்தின் மூலம் {அரசனான நீ} என்னைக் கரைசேர்ப்பதற்காக {இவ்வாபரணத்தை} ஏற்றுக்கொள்வாயாக. உனக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}" {என்றார் அகஸ்தியர்}.(46)

[4] பூலோக மக்களுக்குத் தலைவனாக ஓர் அரசனை உருவாக்குவதற்காக, லோகபாலர்கள் அளித்த ஆற்றல் கூறுகளைப் பெற்ற பிரம்மதேவன் தும்மியபோது {அக்ஷுபத் என்பது மூலச் சொல்}, அவனது தும்மலில் இருந்து அம்மன்னன் வெளிப்பட்டதால் அவனுக்கு, 'க்ஷுபன்' என்ற காரணப்பெயர் வழங்கப்பட்டது.

இராமன், அந்த ரிஷியின் பரமதார்மிகமான {தர்மநெறி தவறாத} அந்த வசனத்தைக் கேட்டு, முனிவருடைய அந்தச் சிறந்த ஆபரணத்தை ஏற்றுக்கொண்டான்.(47) பிறகு ராமன், அந்த உத்தம ஆபரணத்தைப் பெற்றுக் கொண்டு, ஒளிவீசும் அதன் தோற்றத்தை {வரலாற்றைக்} குறித்து {பின்வருமாறு} கேட்கவே தொடங்கினான்:(48) "அதியற்புதமானதும், திவ்யமானதும், அழகுடன் கூடியதும், உத்தமமானதுமான இது {இந்த ஆபரணம்}, பகவானால் {மாமுனிவரான தங்களால்} எவ்வாறு, அல்லது எங்கிருந்து பெறப்பட்டது? அல்லது யாரால் கொண்டுவரப்பட்டது?(49) பிராமணரே, பெரும் புகழ்பெற்றவரே, குதூஹலத்துடன் {ஆவலுடன்} தங்களைக் கேட்கிறேன்; உண்மையில் தாங்கள் பல ஆச்சர்யங்களின் பரம நிதியாக {மேலான கருவூலமாக} விளங்குகிறீர்" {என்றான் ராமன்}.(50)

காகுத்ஸ்தன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, {அகஸ்திய} முனிவர் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினார், "இராமா, முன்பு திரேதாயுகம் என்ற யுகத்தில் நடந்ததை உள்ளவாறு கேட்பாயாக.(51) மஹாபாஹோ {பெருந்தோள்களையுடையவனே}, ரமணீயமான பிரதேசத்தைக் கொண்ட இந்த வனத்தில், தானத்தின் மூலமே எனக்கு நேர்ந்ததும், நான் கண்டதுமான ஆச்சரியங்களைக் {கேட்பாயாக}.(52)


உத்தர ராமாயணம் சர்க்கம் – 076ல் உள்ள சுலோகங்கள்: 52

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அக்னி அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் கல்மாஷபாதன் காசியபர் காஞ்சனர் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குசன் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கைடபன் கோமுகன் கௌ கௌசல்யை கௌதமர் க்ஷுபன் சங்கன் சத்ருக்னன் சம்பூகன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாபாலி ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மதயந்தி மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாந்தாதா மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மித்ரஸஹன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லவணன் லவன் லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாமதேவர் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஸௌதாஸன் ஹனுமான் ஹேதி