Tuesday, 6 October 2026

அகால பாலவதம் | சர்க்கம் – 073 (19)

The Untimely Death of a Boy | Sarga-073 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சிறுவயது மகனின் சடலத்துடன் அரண்மனை வாயிலை அடைந்த பிராமணர்; அவனது அகால மரணத்திற்கு இராமனின் ஆட்சிக்குறைவே காரணமென முறையிட்டது.

அகால பாலவதம்

அந்த ராகவன் {ரகு வம்சத்து ராமன்}, சத்ருக்னனை வழியனுப்பிவிட்டு, தன்னிரு பிராதாக்களுடன் {சகோதரர்களுடன்} சுகீயாக {மகிழ்ச்சியுடையவனாக} தர்மத்தின்படி ராஜ்ஜியத்தைப் பரிபாலித்துக்கொண்டு ஆனந்தமடைந்தான்.(1)

பிறகு சில நாட்களில், ஜானபதத்தை {நாட்டுப்புறத்தைச்} சேர்ந்த வயதான ஒரு துவிஜர் {இருபிறப்பாளர்}, மரித்த பாலனை {சிறுவனை} எடுத்துக் கொண்டு ராஜத்வாரத்தை {அரசவாயிலை} வந்தடைந்தார்.(2)

அழுது கொண்டிருந்த அவர், சினேகமும், துக்கமும் நிறைந்த பலவிதமான சொற்களையும், மீண்டும் மீண்டும் "புத்திரா! புத்திரா!" என்றும் கூறி, {பின்வரும்} இந்த வாக்கியத்தையும் சொன்னார்:(3) "முன்பு வேறொரு தேஹத்தில் {முற்பிறவியில்} நான் என்ன தீய கர்மத்தைச் செய்தேனோ, அதனால் என் ஏக புத்திரனான {ஒரே மகனான} உன்னை நிதனம் {மரணம்} அடைந்தவனாகக் காண்கிறேன்.(4) புத்திரகா {அன்பு மகனே}, யௌவனத்தை {இளமைப் பருவத்தை} அடையாத, ஐயாயிரம் வயதுடைய பாலனான நீ, அகாலத்தில் காலமடைந்தது {மரணத்தை அடைந்தது} எனக்குத் துக்கத்தை உண்டாக்கியுள்ளது[1].(5) புத்திரகா, உன்னைக் குறித்த சோகத்தால் நானும் உன் ஜனனியும் {அன்னையும்} இன்னும் சில நாட்களிலேயே நிதனத்தை {மரணத்தை} அடைவோம். இதில் சந்தேகம் இல்லை.(6) நான் பொய் கூறியதாக நினைவில்லை. ஹிம்சை {தீங்கு} செய்ததாகவும் நினைவில்லை. எந்தப் பிராணிக்கும் பாபம் செய்ததாகவும் எனக்குச் சிறிதும் நினைவில்லை.(7) எந்தத் தீவினையால் இன்று என்னுடைய இந்த ஆத்மஜன் {மகன்}, பாலனாகவே இருந்து, பித்ரு காரியங்களை {தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்கள் முதலியவற்றைச்} செய்யாமல் வைவஸ்வதக்ஷயத்தை {யமனின் இருப்பிடத்தை} அடைந்தான்?[2](8)

[1] மூலத்தில் "பஞ்சவர்ஷஸஹஸ்ரகம்" என்றிருக்கிறது. இதனைச் சொற்பொருளாகக் கொண்டால், “ஐயாயிரம் வருஷங்கள்” என்று பொருள்படும். ஆனால் பல்வேறு பதிப்புகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் இது வெவ்வேறு விதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது. தர்மாலயப்பதிப்பில், "யௌவன பருவம் முடியாதவனும் ஐந்து வயதுள்ள சிசுவும் ஏகபுத்திரனுமாகிய உன்னை அகாலத்தில் யமனிடம் சிக்கிக் கொண்டவனாய் பிணமாய்கிடக்கிறதை நான் பார்த்துப்படுகிறேன்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "பதினான்கு பிராயமும் பூர்த்தியாகாத பாலகனாகிய ஒரே பிள்ளையான உன்னை இங்ஙனம் பிணமாக்கிப் பார்க்கின்ற பெரும்பாவியானேனே" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "நீ இன்னும் சிறுகுழந்தைதான்; யௌவனப் பருவத்தைக்கூட அடையவில்லை. நீ பிறந்து ஐயாயிரம் நாட்களே ஆகின்றன. (பதினான்கு வயது கூட நிறையவில்லை)" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "என் மகனே, நீ இன்னும் பதினான்கு வயதைக்கூட நிறைவு செய்யவில்லை. என் துரதிர்ஷ்டத்தால், நீ அகால மரணமடைந்துவிட்டாய்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "இந்தப் பிள்ளை இன்னும் பதின்பருவத்தைக் கூட எட்டவில்லை. அவனுக்குப் பதினான்கு வயது கூட இன்னும் நிறைவடையவில்லை. என் துரதிர்ஷ்டத்தால், அகாலத்தில் இந்த அன்புக் குழந்தை மரணத்தால் வீழ்த்தப்பட்டுவிட்டது" என்றிருக்கிறது. செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், "நீ இன்னும் இளமைப் பருவத்தை அடையாத ஒரு சிறு குழந்தை. உனக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. என் மகனே! எனக்குப் பெருந்துயரத்தை அளித்துவிட்டு, உனக்குரிய காலம் வரும் முன்பே நீ மரணத்தைத் தழுவிவிட்டாய்" என்றிருக்கிறது. இவ்வாறு “பஞ்சவர்ஷஸஹஸ்ரகம்” என்பதன் வயதுக் குறிப்பு பதிப்புகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் ஒரே விதமாகப் பொருள் கொள்ளப்படவில்லை. இதில் குறிப்பாக கீதா பிரஸ் கூறும் “ஐயாயிரம் நாட்கள்” என்பதைக் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. 5,000 நாட்கள் என்பது சுமார் 13 ஆண்டுகள் 8 மாதங்கள்; அதாவது பதினான்காவது வயது நடைபெறும் காலம். ஆகவே “பதினான்கு வயதுகூட நிறையவில்லை” என்பதுடன் அது கணிதரீதியாகச் சரியாகப் பொருந்துகிறது. அதேவேளையில், “ஐயாயிரம் வயதுடைய பாலன்” என்பது கதையின் சூழலோடு இயல்பாகப் பொருந்தாததால், இது மூலபாடம் அல்லது அதன் விளக்கம் சார்ந்த சிக்கலாகத் தோன்றுகிறது. பாலகாண்டம் 20ம் சர்க்கம் 10ம் சுலோகத்தில் தசரதன் தனக்கு அறுபதாயிரம் வயது என்று குறிப்பிடுகிறான். இந்தக் குறிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

[2] ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டம், துவிஜர் புலம்புவதற்கு முன்பே அவரது மனைவி மயக்கமடைவதையும், அழுது புலம்புவதையும் சொல்கிறது. அங்கே துவிஜர் முதிர்ந்த பிராமணராகவும், அவரது மனைவி பார்ப்பனியாகவும் சொல்லப்படுகின்றனர். அதன் பின் அந்தப் பிராமணர் புலம்புகிறார். சம்புவன் வதைப் படலம், 919ம் பாடல் பின்வருமாறு:

தனக்குநோய் வேண்டாதான் சந்ததி பெற்
    றிடாதொழிக தளர்வு மிக்கு
மனத்துநோய் தான்பெருக மலடனுக்கு இன்று
    யாம்படும்இம் மறுக்கம் இல்லை
எனக்குநீ செயஇருந்த நீர்க்கடன் நான் நின்னின்பின்
    இருந்து பிள்ளாய்
உனக்குநான் செய்வேனோ செய்யேன் காண்
    உனைத் தொடர்ந்து வருகின்றேனே

பொருள்: என் பிள்ளாய்! தனக்குத் துன்பம் வரல்வேண்டாம் என்று நினைக்கின்றவன், பிள்ளை பெறாதிருப்பானாக! பிள்ளை பெறாத மலடனுக்கு, தளர்ச்சி மிகுந்து மனநோய் பெருகிட இன்று யாம் படுகின்ற இந்தக் கலக்கம் இல்லையன்றோ? எனக்கு இறுதிக் காலத்தில் நீ செய்தற்கு இருந்த நீர்க்கடனை நான் நினக்குப் பின் உயிர்வாழ்ந்திருந்து உனக்கு நான் செய்வேனோ? செய்யேன்; உன்னைப் பின்தொடர்ந்து வருகின்றேன்.

பாடலின் "நீர்க்கடன்" என்பது மூலத்தின் "பித்ருகார்யாணி" என்பதன் எதிரொலியாக இருக்கிறது. அதாவது மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடனைத் தந்தை மகனுக்குச் செய்ய நேர்கிறது.

இராமனின் விஷயத்தில் {ஆட்சிப்பகுதியில்} காலம் வராதவர்களுக்கு இவ்வாறு மிருத்யு {மரணம்} ஏற்படுவது போன்ற இத்தகைய கோரக் காட்சியை நான் இதற்கு முன்பு கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.(9) இராமனிடம் ஏதோ மஹத்தான தீவினை இருக்கிறது; இதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அவனது விஷயத்தில் வாழும் பாலர்களுக்கு {சிறுவர்களுக்கு} மரணம் நேர்ந்துள்ளது.(10) வேறு விஷயங்களில் {வேறு அரசர்களின் ஆட்சிப்பகுதிகளில்} வாழும் பாலர்களுக்கு மிருத்யுவால் பயம் இல்லையே. இராஜனே {ராமனே}, மிருத்யுவசம் அடைந்த இந்த பாலனை ஜீவன் {உயிர்} பெறச் செய்வாயாக.(11) இராமா, என் பத்னியுடன் {மனைவியுடன்} சேர்ந்து, அநாதையைப் போல ராஜத்வாரத்தில் {அரசவாயிலில்} நான் இறப்பேன். பிறகு, பிரம்மஹத்தியை {பிராமணனைக் கொன்ற பாபத்தை} அடைந்து, சுகீயாக {மகிழ்ச்சியுடையவனாக} இருப்பாயாக[3].(12)

[3] இங்கு "ப்ரஹ்மஹத்யா" என்பது முக்கியமான சொல். வெறுமனே “கொலை” என்பதைக் குறிக்காமல் இது பிராமணனைக் கொல்லுதல் அல்லது அதனால் ஏற்படும் மஹாபாதகம் என்பதைக் குறிக்கும். இங்கு பிராமணர், “உன் அரண்மனை வாயிலிலேயே நானும் என் மனைவியும் இறந்துவிடுகிறோம்; அதனால் ஏற்படும் பிரம்மஹத்தி பாபத்தை நீ அடைந்து சுகமாக இரு” என்று ராமனைச் சினத்துடனும், துயரத்துடனும் இடித்துரைக்கிறார். "ஸுகீ பவ" என்பது இங்கு உண்மையான வாழ்த்து அல்ல. சூழலில் கசப்பான ஏளனம் அல்லது இடித்துரை: “அந்தப் பாபத்தை அடைந்துவிட்டு சுகமாக இருப்பாயாக!” என்ற தொனி உள்ளது. அடுத்த சுலோகத்தில் வரும், "தீர்க்க ஆயுளை அடைவாய்" என்பது அதே கசப்புத் தொனியின் தொடர்ச்சிதான்.

இராஜனே, மாபெரும் பலமுடையவனே, நீ உன் பிராதாக்களுடன் {உடன்பிறந்தோருடன்} சேர்ந்து தீர்க்கமான ஆயுளை அடைவாய். உன்னுடைய இந்த ராஜ்ஜியத்தில் நாங்கள் சுகமாக வாழ்ந்திருக்கிறோம்.(13) இராமா, உன் வசத்தில் வாழ்ந்திருந்ததால் எங்களுக்கு இது {இந்தத் துக்கம்} நேரிட்டது. நாங்கள் காலத்தின் {மரணத்தின்} வசத்தை அடைந்துவிட்டோம். எங்களுடைய சுகம் மிகச் சிறியதே; உண்மையில் அஃது இல்லவே இல்லை.(14) மஹாத்மாக்களான இக்ஷ்வாகுக்களின் விஷயம் {ஆட்சிப்பகுதி} இப்போது அநாதையாகிவிட்டது {தலைவனற்றதாகிவிட்டது}. இங்கு ராமனை நாதனாக {தலைவனாக} அடைந்ததால், பாலர்களுக்கு அந்தம் {முடிவு / மரணம்} ஏற்படுவது நிச்சயம்.(15)

விதிப்படி பாலிதம் செய்யப்படாத பிரஜைகள் {பாதுகாக்கப்படாத குடிமக்கள்}, ராஜனின் தோஷங்களால் அழிவடைகிறார்கள். அல்லது, நிருபதி {அரசன்} தீய நடத்தையுடையவனாக இருக்கும்போது, ஜனன் {குடிமகன்} அகாலத்தில் மரிக்கிறான்.(16) மேலும், எப்போது ஜனங்கள் புரங்களிலும் {நகரங்களிலும்} ஜனபதங்களிலும் {நாட்டுப்புறங்களிலும்} தகாதவற்றைச் செய்கிறார்களோ {தகாத செயல்களில் ஈடுபடுகிறார்களோ}, ரக்ஷையும் {பாதுகாப்பும்} இல்லையோ, அப்போது காலத்தால் {மரணத்தால்} பயம் உண்டாகிறது.(17) புரத்திலும், ஜனபதத்திலும் ராஜதோஷம் {அரசனுடைய குற்றம்} இருக்கும் என்பது மிகத் தெளிவு; இதில் சந்தேகமில்லை. அதனால்தான் இந்த பாலவதம் {சிறுவனின் மரணம்} ஏற்பட்டுள்ளது" {என்றார் இருபிறப்பாளர்[4]}.(18)

[4] “துவிஜர்” {இருபிறப்பாளர்} என்பது பிராமணரை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. மரபுப்படி, உபநயனம் எனப்படும் பூணூல் அணிவிக்கும் சடங்கின் மூலம் இரண்டாம் பிறப்பைப் பெற்றவர்களாகக் கருதப்படும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தாரும் துவிஜர்கள் எனப்படுவர். எனினும், 12ம் சுலோகத்தில் இந்த துவிஜர், தானும் தன் மனைவியும் இறப்பதால் இராமன் “பிரம்மஹத்தி” பாபத்தை அடைவான் என்று குறிப்பிடுகிறார். எனவே இங்கு குறிப்பிடப்படும் துவிஜர் பிராமணராகவே இருக்க வேண்டும்.

துக்கத்தால் வாடிய அவர் {அந்தப் பிராமணர்}, இவ்வாறு பலவிதமான வாக்கியங்களால் மீண்டும் மீண்டும் ராஜனை {ராமனை} நெருக்கி {குற்றஞ்சாட்டி}, அந்த மகனை அணைத்துக் கொண்டார்.(19)


உத்தர ராமாயணம் சர்க்கம் – 073ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி