Monday, 5 October 2026

இராமனின் அறிவுரை | சர்க்கம் – 072 (21)

Rama's instruction | Sarga-072 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வால்மீகியிடம் விடைபெற்றுச் சென்று அயோத்தியில் ராமனைச் சந்தித்த சத்ருக்னன், ராமனின் அறிவுரைப்படி ஏழு நாட்களுக்குப் பின் மதுராவுக்குத் திரும்பியது.

இராமனின் அறிவுரை

அப்போது அநேக அர்த்தங்களைக் கொண்டதும், ஒப்புயர்வற்றதுமான ராமகீதத்தைச் சிந்தித்தபடியே சயனித்திருந்த {படுத்திருந்த} அந்த நரவியாகரனை {மனிதர்களில் புலியான சத்ருக்னனை} நித்திரை வந்தடையவில்லை.(1) மிக மதுரமானதும் {இனிமையானதும்}, தந்த்ரீயின் {வீணையின்} லயத்துடன் கூடியதுமான அந்த {ராமகீதத்தின்} சப்தத்தைக் கேட்டவாறிருந்த மஹாத்மாவான சத்ருக்னனுக்கு ராத்திரி விரைவாகக் கழிந்தது.(2)

அந்த நிசி {இரவு} விடிந்ததும், சத்ருக்னன், முற்பகலில் செய்யவேண்டிய கர்மங்களை {நியமங்களை / கடமைகளை} கிரமப்படிச் செய்துவிட்டு, கைகளைக் கூப்பியவனாக முனிபுங்கவரான வால்மீகியிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(3) "பகவானே, ரகுநந்தனரான ராகவரை {ரகு வம்சத்தவரை மகிழ்விப்பவரும், ரகு வம்சத்தவருமான ராமரைத்} தரிசிக்க விரும்புகிறேன். தங்களாலும், கடும் விரதங்களைக் கடைப்பிடிப்பவர்களான இவர்களாலும் செல்ல அனுமதிக்கப்பட விரும்புகிறேன் {தங்களின் அனுமதியையும், இவர்களின் அனுமதியையும் வேண்டுகிறேன்}" {என்றான் சத்ருக்னன்}.(4)

வால்மீகியோ, இவ்வாறு கூறியவனும், சத்ருதாபனனும் {சத்ருக்களை வாட்டுபவனும்}, ராகவனுமான {ரகு வம்சத்தவனுமான} சத்ருக்னனை ஆரத் தழுவிக்கொண்டு, செல்ல அனுமதித்து அனுப்பினார்.(5) அவன் {சத்ருக்னன்}, முனிசிரேஷ்டரை {முனிவர்களில் சிறந்த வால்மீகியை} வணங்கி, ஒளிமிக்க ரதத்தில் ஏறி, ராகவனை {ராமனைத்} தரிசிக்க ஆவலுடையவனாகத் துரிதமாக அயோத்திக்குச் சென்றான்.(6) ஸ்ரீமானும், இக்ஷ்வாகுநந்தனனுமான {இக்ஷ்வாகு வம்சத்தவரை மகிழ்விப்பவனுமான} அந்த மஹாபாஹு {பெருந்தோள்களையுடைய சத்ருக்னன்}, ரம்யமான புரீக்குள் {அழகிய அயோத்தி நகருக்குள்} பிரவேசித்துப் பேரொளி பொருந்திய ராமன் இருந்த இடத்திற்குள் பிரவேசித்தான்.(7) அவன், மந்திரிகளின் மத்தியில் வீற்றிருந்தவனும், பூர்ணசந்திரனைப் போன்ற முகத்தைக் கொண்டவனுமான ராமனை, அமரர்களின் மத்தியில் வீற்றிருக்கும் சஹஸ்ரநயனனை {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனைப்} போலக் கண்டான்.(8)

அவன் {சத்ருக்னன்}, தேஜஸ்ஸால் ஜுவலிப்பவனைப் போன்றவனும், மஹாத்மாவும், சத்யபராக்கிரமனுமான ராமனை வணங்கி, கைகளைக் கூப்பியவனாக {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(9) "மஹாராஜா, எவை ஆணையிடப்பட்டனவோ, அவை அனைத்தையும் நான் செய்துவிட்டேன். அந்தப் பாபியான லவணன் கொல்லப்பட்டான்; அவனுடைய புரீயும் {நகரமும்} நிறுவப்பட்டது.(10) இரகுநந்தனரே, உம்மைப் பிரிந்து இந்தப் பன்னிரண்டு வருஷங்கள் கடந்துவிட்டன. நிருபரே {அரசரே}, உம்மைப் பிரிந்தவனாக நான் {அங்கே மதுராவில்} வசித்திருக்க இயலாது.(11) காகுத்ஸ்தரே, அமிதவிக்ரமரே {அளவில்லா ஆற்றல் படைத்தவரே}, மாதாவைப் பிரிந்த கன்றைப் போல, நான் நெடுங்காலம் வெளியிடத்தில் வசிக்க வேண்டாதபடி எனக்கு அந்த அருளைச் செய்வீராக" {என்றான் சத்ருக்னன்}.(12)

இவ்வாறு கூறிக்கொண்டிருந்த சத்ருக்னனைத் தழுவிக்கொண்டு, ராமன் {பின்வருமாறு} கூறினான், "சூரனே, வருந்தாதே. இது க்ஷத்ரியனுக்குரிய செயலல்ல.(13) இராகவா, ராஜாக்கள் தங்கள் வசிப்பிடத்தைவிட்டுப் பிரிந்து {வேற்றிடங்களில் வசிக்க} நேர்வதைக் குறித்து மனம் தளர்வதில்லை. இராகவா, நமது பிரஜைகள் {குடிமக்கள்} க்ஷத்ரிய தர்மத்தின்படியே பரிபாலிக்கப்பட வேண்டியவர்கள்.(14) வீரா, நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, நீ காலகாலங்களில் {அவ்வப்போது} என்னைக் காண்பதற்காக அயோத்திக்கு வருவாயாக. உன்னுடைய புரத்திற்கும் {மதுரா நகருக்கும்} செல்வாயாக.(15) எனக்கும் நீ பிராணன்களைவிடப் பெரும் அன்புக்குரியவன். இதில் சந்தேகமில்லை. இராஜ்யத்தைப் பரிபாலிப்பதும் அவசியம் செய்யப்பட வேண்டியதாகும் {கடமையாகும்}.(16) எனவே, காகுத்ஸ்தா {ககுத்ஸ்த வம்சத்தவனே}, நீ இங்கே ஏழு ராத்திரிகள் வசித்திருப்பாயாக. பிறகு, பணியாளர்கள், பலம் {படை}, வாஹனங்களுடன் மதுராவுக்குச் செல்வாயாக" {என்றான் ராமன்}[1].(17)

[1] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 906ம் பாடல் பின்வருமாறு:

இன்னன பலவும் இளையவன் வலியே
    இராப்பகல் இனிது கொண்டாடித்
தன்னருள் பொழியும் தாமரைக் கண்ணான்
    தம்பி சத்துருக்கனை நோக்கி
நின்னெடுபடையும் அளவிலா நிதியும்
    அங்குவைத்து இங்கே நீ இருத்தல்
நன்னெறி அன்று இன்று என்று உலகு எவைக்கும்
    நாயகன் போகென நவின்றான்

பொருள்: இதுபோன்ற பலவற்றையும் சொல்லித் தம்பி சத்துருக்கன் வலிமையையே இரவும் பகலும் இனிதாகக் கொண்டாடிவிட்டு உலகங்கட்குத் தலைவனும் தனது அருளைப் பொழிதற்கு இடமாகக் கொண்ட தாமரை மலர்போன்ற கண்ணையுடையவனுமாகிய இராமன், தன் தம்பி சத்துருக்கனைப் பார்த்து, "நின் பெரிய சேனையையும் அளவு இல்லாத செல்வத்தையும் அந்த மதுபுரியில் வைத்துவிட்டு, இங்கு காலம் தாழ்த்திருத்தல் நல்ல நெறியன்று"; என்றும், "இன்று போவாயாக" என்றும் சொன்னான்.

ஒட்டக்கூத்தரில் ராமன் "இன்று போவாயாக" என்கிறான். ஆனால் இராப்பகல் இனிது கொண்டாடி' என்பதால், அதற்கு முன் சில நாள்கள் கழிந்ததாகத் தொனிக்கிறது. அஃது எவ்வளவு நாட்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. வால்மீகியில் ஏழு இரவுகள் தங்கச் சொல்கிறான். மேலும் ஆங்கிலத்தில் செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், "ஐந்து ராத்திரிகள்" என்றிருக்கிறது இதைத்தவிர நாம் ஒப்பிடும் வேறு அனைத்துப் பதிப்புகளிலும் ஏழு இரவுகள் என்றே இருக்கிறது.

தர்மத்துடன் கூடியதும், மனக்கருத்தை வெளிப்படுத்துவதுமான ராமனுடைய இந்தச் சொற்களைக் கேட்ட சத்ருக்னன், தீனமான {துயரம் தோய்ந்த} குரலில், "பாடம் {அப்படியே ஆகட்டும்}" என்று மட்டுமே கூறினான்.(18) பெரும் வில்லாளியான அந்தக் காகுத்ஸ்தன் {ககுத்ஸ்த வம்சத்துச் சத்ருக்னன்}, ராகவனின் {ராமனின்} ஆணைப்படி அங்கே ஏழு ராத்திரிகள் தங்கியிருந்து, புறப்பட்டுச் செல்லத் தொடங்கினான்.(19) மஹாத்மாவும், சத்யபராக்கிரமனுமான ராமனிடமும், பரதனிடமும், லக்ஷ்மணனிடமும் விடைபெற்றுக் கொண்டு மஹாரதத்தில் ஏறினான், சத்ருக்னன்.(20) மஹாத்மாவான லக்ஷ்மணன், பரதன் ஆகிய இருவராலும் வெகுதூரம் வரை வழியனுப்பப்பட்ட சத்ருக்னன், அதன் பிறகு விரைவாகத் தனது புரத்திற்கு {மதுரா நகருக்குச்} சென்றான்.(21)


உத்தர ராமாயணம் சர்க்கம் – 072ல் உள்ள சுலோகங்கள்: 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி