Monday, 12 October 2026

நாரதரின் யுகதர்மம் | சர்க்கம் – 074 (33)

Narada’s Yuga Dharma | Sarga-074 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சிறுவனின் அகால மரணம் குறித்து ராமன் விசாரிக்க, யுகதர்மங்களை விளக்கி, சூத்திரனின் தபமே காரணமெனக் கூறி, தீர்வு காண அறிவுறுத்திய நாரதர்.

நாரதரின் யுகதர்மம்

இராகவனோ {ராமனோ}, கருணைக்குரியதும் {இரங்கத்தக்கதும்}, துக்கமும் சோகமும் நிறைந்ததுமான அந்தத் துவிஜரின் {இருபிறப்பாளரின்} அவ்வாறான புலம்பல் முழுவதையும் கேட்டான்.(1) மேலும், துக்கத்தால் வருந்திய அவன் {ராமன்}, அந்த மந்திரிகளையும், வசிஷ்டரையும், வாமதேவரையும், பிராதாக்கள் {சகோதரர்கள்} இருவரையும், நைகமர்களையும் {நகரத்தாரையும்} ஒருசேர அழைத்தான்.(2) பிறகு, வசிஷ்டருடன் எட்டு துவிஜர்கள் பிரவேசிக்கச் செய்யப்பட்டனர் {உள்ளே அனுமதிக்கப்பட்டனர்}. அப்போது அவர்கள், தேவனுக்கு ஒப்பான ராஜாவை நோக்கி, "வளர்வாயாக {செழிப்பாயாக}" என்று கூறினர்.(3) பிறகு, மார்கண்டேயர், மௌத்கல்யர், வாமதேவர், காசியபர், காத்யாயனர், ஜாபாலி, கௌதமர், அதேபோல நாரதர் ஆகிய துவிஜரிஷபர்கள் {இருபிறப்பாளர்களில் காளைகள்} அனைவரும் ஆசனங்களில் அமர வைக்கப்பட்டனர்.(4)

கைகூப்பியவனாக, {அங்கு} வந்தடைந்த மஹரிஷிகளையும், மந்திரிகளையும், இன்னும் நைகமர்களையும் {நகரத்தாரையும்} அவரவருக்குத் தகுந்த முறையில் அனுகூலமாக {இணக்கமாக} வணங்கி,(5) தேஜஸ்ஸுடன் ஒளிரும் அவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தபோது, ராகவன் {ரகு குல ராமன்}, "இந்தத் துவிஜர் {இருபிறப்பாளர்} நெருக்கடி கொடுக்கிறார்" {என்று அவர் சொன்ன குற்றச்சாட்டுகள்} அனைத்தையும் எடுத்துரைத்தான்.(6)

தீனமடைந்த {வருத்தமடைந்த} அந்த ராஜாவின் அந்த வாக்கியத்தைக் கேட்டு, நாரதர் ரிஷிகளின் முன்னிலையில் நிருபனை {அரசனை} நோக்கி {பின்வரும்} சுபமான வாக்கியத்தை மறுமொழியாகக் கூறினார்:(7) "இராஜனே, ரகுநந்தனா, பாலனுக்கு எவ்வாறு அகாலத்தில் அழிவு வாய்த்தது {மரணம் நேர்ந்தது} என்பதைக் கேட்பாயாக. இராஜனே, கேட்டறிந்து கர்த்தவ்யத்தை {செய்ய வேண்டிய கடமையைச்} செய்வாயாக.(8)

இராஜனே, முன்பு கிருதயுகத்தில் பிராமணர்களே தபஸ்விகளாக {தபம் செய்பவர்களாக} இருந்தனர். இராஜனே, அப்போது அபிராமணர் {பிராமணரல்லாதோர்} எவரும் எவ்வகையிலும் தபஸ்விகளாக இல்லை[1].(9) ஒளிவீசியதும், பிரம்மபூதமானதும் {பிரம்மத்தின் இயல்பைப் பெற்றதும்}, மறைப்பற்றதுமான {ஏதும் மறைக்கப்படாததுமான} அந்த யுகத்தில், அப்போது அனைவரும் மிருத்யுவற்றவர்களாகவும் {மரணமற்றவர்களாகவும்}, தீர்க்கதரிசிகளாகவும் {தொலைநோக்குடையவர்களாகவும்} தோன்றினர்.(10)

[1] தர்மாலயப் பதிப்பில், "ஹே ராஜரே! பூர்வம் கிருதயுகத்தில் பிராம்மணர்கள் மாத்திரமே தவம்புரியும் அதிகாரமுடையவர்கள். ஹே ராஜரே! அக்காலத்தில் பிராம்மணனில்லாத இதரஜாதியான் என்னபாடுபட்டாலும் தவம்புரிய அதிகாரமுடையவனாய் ஆகான்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஹே ரகுநந்தன! பூர்வம் கிருதயுகத்தில் பிராம்மணர்கள் மாத்திரமே தவம்புரியும் அதிகாரம் பெற்றிருந்தனர், பிராமணரல்லாத மற்றவருணத்தவர் தவம்புரிந்தவர்களல்லர்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "முன்னர் கிருதயுகத்தில், அந்தணர்கள் மட்டுமே தபஸ்விகளாக இருந்தார்கள். மன்னரே, அந்தணரல்லாதார் எவ்விதத் தவமும் செய்வதில்லை" என்றிருக்கிறது. மூலத்தில் தபம் செய்யும் ‘அதிகாரம்’ பற்றிய குறிப்பு நேரடியாக இல்லை; கிருதயுகத்தில் தவம் செய்தவர்கள் யார் என்பதே கூறப்பட்டுள்ளது.

பிறகு, அழகிய உடலமைப்புடைய மானவர்களுக்கு {மனிதர்களுக்குத்} திரேதம் என்ற பெயருடைய யுகம் {ஏற்பட்டது}. அங்கே க்ஷத்திரியர்கள் பூர்ணமான தபத்தைக் கொண்டவர்களாகப் பிறக்கின்றனர்[2].(11) திரேதா யுகமெனும் இந்த யுகத்தில் மஹாத்மாக்களான மானவர்கள் {மனிதர்கள்} யாவரோ, அவர்கள் பூர்வஜன்மத்தாரைவிட {முந்தைய யுகத்தில் பிறந்தவர்களைவிட} வீரியத்தாலும், தபத்தாலும் மேம்பட்டவர்களேயாவர்.(12) பூர்வம் {முந்தையது} எதுவோ {கிருதயுகமோ}, அபரம் {பிந்தையது} எதுவோ {திரேதா யுகமோ}, இரு யுகங்களிலும் இருந்த பிரம்மக்ஷத்ரம் முழுவதும் சமவீரியம் கொண்டதாக இருந்தது {அனைத்துப் பிராமணர்களும், அனைத்து க்ஷத்திரியர்களும் சம வீரியம் கொண்டவர்களாக இருந்தனர்}.(13) ஆனால், அவர்கள் அனைவரும் அவர்களுக்கிடையில் அதிக விசேஷம் {வேறுபாடு} எதையும் காணாததால், அங்கே சாதுர்வர்ணியத்தின் சம்மதமான ஸ்தாபனத்தைச் செய்தனர் {ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வர்ண அமைப்பை நிறுவினர்}[3].(14)

[2] மூலத்தில் "வபுஷ்மதாம்" என்றிருக்கிறது. தர்மாலயப்பதிப்பில், "அதன்பிறகு சரீரமுள்ள மானிடர்களுடைய த்ரேதாயுகம் என்பது. அதில் முதலில் க்ஷத்திரியர்கள் தவத்தால் மேன்மை பெற்றவர்களாய் ஒப்புக்கொள்ளப்பட்டார்கள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "அந்தக் கிருதயுகம் முடிந்தவளவில் க்ஷத்திரியர்கள் மிகப் பிரபலராகி அவர்களும் தவமியற்றும் அதிகாரம் பெற்றனர்; அக்காலமே திரேதாயுகமெனப் பெயர் பெற்றது" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அதற்குப் பின்னர், உடல் வலிமை கொண்டவர்களான க்ஷத்திரியர்களுக்குப் பெருமை சேகரிக்கும் திரேதாயுகம் வந்தது. அந்த யுகத்தில், முன் யுகத்தைப் போல் தவம் செய்யும் சீரிய நோக்குடன் கூடிய க்ஷத்திரியர்கள் தோன்றினர்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "அதன் பின்னர், கிருதயுகத்தின் முடிவில், பிராமணர்களின் அறிவாற்றல் தளர்ச்சியடைந்து, திரேதாயுகம் தொடங்கியது. அந்த யுகத்தில், முன்பு மேற்கொண்ட தூய்மையான கடுந்தபத்தால் பெற்ற சக்தியுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினர். திரேதாயுகத்தில் பிறந்து, கடுந்தவங்களில் ஈடுபட்டிருந்த அந்த மனிதர்கள், முந்தைய யுகத்தில் வாழ்ந்தவர்களைவிட அதிக வலிமையுடையவர்களாகவும், தபத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாகவும் இருந்தனர்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "மனுவின் புதல்வர்களான க்ஷத்திரியர்கள் தோன்றியபோது திரேதாயுகம் தொடங்கியது. அவர்கள் தபம் மேற்கொண்டவர்களாகவும், ஆட்சியாளர்களாகவும், சக்தியும் பராக்கிரமமும் நிறைந்த உத்தம புருஷர்களாகவும் விளங்கினர்" என்றிருக்கிறது. செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், "அதன் பிறகு, திரேதாயுகத்தில் மனிதர்கள் உடல்களைப் பெற்றனர். முற்பிறவிகளில் தபம் மேற்கொண்டிருந்த க்ஷத்திரியர்கள் பிறந்தனர். பராக்கிரமத்தாலும் தபத்தாலும், திரேதாயுகத்தில் தோன்றிய இந்த மஹாத்மாக்கள், முந்தைய யுகத்தில் பிறந்தவர்களைவிட மேன்மை பெற்றவர்களாக விளங்கினர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "கிருதயுகத்தில், உடல் இல்லாதவர்கள் இருந்தனர்" என்றிருக்கிறது. அடுத்த அடிக்குறிப்பில், "கிருத யுகத்தில் க்ஷத்திரியர்கள் இல்லை" என்றுமிருக்கிறது.

[3] தர்மாலயப் பதிப்பில், "ஆனதால் அப்பொழுது அவர்கள் எல்லோரும் அதிகமான வித்தியாசத்தை காணவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் நான்கு வர்ணத்தவருக்கும் ஆசாரபேதத்தை விதியாய் ஏற்படுத்தினர்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஆனதுபற்றி அவ்விருதிறத் தோர்க்கும் வேற்றுமை காணாதவர்களாகி அக்காலத்துப் பெரியோர் நான்கு வருணத்தவர்களுக்கு வேத விதிப்படி ஆசாரபேதத்தை விதித்து அது காரணமாக அவர்கட்குள் ஒருவர்க்கொருவர் வேற்றுமை விளங்கச் செய்தனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "கிருதயுகத்திலே, தவம் புரிகின்றவர் பிராம்மண ரெனவும், புரியாதவர் க்ஷத்திரிய ரெனவும் வேற்றுமை விளங்கிற்று; திரேதாயுகத்தில் க்ஷத்திரியரும் தவம்புரியத் தொடங்கியதனால் வேறுவிதமாக வேற்றுமை தேடவேண்டிய தாயிற்று" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அந்த சமயத்தில் அறநூல் ஆசிரியர்கள் (மனு முதலியோர்) அந்தணர்-க்ஷத்திரியர்களிடையே ஏற்றத்தாழ்வு அல்லது தனிச்சிறப்பு எதனையும் காணாததால், எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில், மக்கட்சமூகத்தை நான்கு வருணங்களாகப் பாகுபாடு செய்து உறுதிப்படுத்தினார்கள்" என்றிருக்கிறது.

ஒளிவீசியதும், தர்மபூதமானதும் {தர்மத்தின் இயல்பைப் பெற்றதும்}, மறைப்பற்றதுமான {ஏதும் மறைக்கப்படாததுமான} அந்த யுகத்தில், அதர்மம் தனது ஒரு பாதத்தைப் பிருத்வீதலத்தில் {பூமியின் மீது} பதித்தது.(15) அதர்மத்துடன் சேர்ந்திருப்பதால் தேஜஸ் மந்தமாகும்.(16) பூர்வர்களுடைய ஆமிஷமும் {முன்னோர்களுக்குரிய புலனின்பப் பொருள்களும் / போகப்பொருள்களும்}, ராஜஸத்திற்குரிய மிகுந்த மலமும் {ரஜோ குணம் சார்ந்த அதிக களங்கமும்} எதுவோ, அஃது ஒரு பாதத்தால் பிருத்வீதலத்தில் அந்ருதம் {உண்மையின்மை / பொய் / பயிர்த்தொழில்}[4] எனப்படும் ஒன்றானது.(17) அதர்மம், அந்ருதம் {பொய்ம்மை} என்னும் ஒரு பாதத்தைப் பதித்த பிறகு, அதனால் ஆயுளின் முடிவு முன்கூட்டியே வெளிப்படுத்தப்பட்டது.(18) அந்த அந்ருதமும் {பொய்ம்மையும்} அதர்மமும் மஹீதலத்தில் விழுந்தபோதிலும், சத்தியத்தையும் தர்மத்தையும் கடைப்பிடிப்பதில் ஈடுபாடுடைய உலகத்தார் {மக்கள்} சுபங்களையே {நற்செயல்களையே} செய்து வந்தனர்.(19) திரேதாயுகத்தில் வாழும் பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் யாவரோ, அவர்கள் அனைவரும் தபமும், பிற ஜனங்கள் பணிவிடையும் {தொண்டும்} செய்தனர்.(20) அதுவே {அந்தப் பணிவிடையே} அவர்களுக்குரிய பரமதர்மமாக வைசியசூத்திரரை வந்தடைந்தது. மேலும், சூத்திரர்கள் சர்வ வர்ணத்தாருக்கும் விசேஷமாகப் பூஜை செய்தனர்[5].(21) நிருபசத்தமா {மன்னர்களில் உயர்ந்தவனே}, அப்போது அவர்களுக்கிடையில் {நிலவிய} அதர்மம், அந்ருதம் ஆகியவற்றால், பூர்வர்கள் {முன்னிருந்தவர்கள்} பிறகு மிகவும் வீழ்ச்சியடைந்தனர்.(22)

[4] தமிழில் தர்மாலயப்பதிப்பிலும், ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பிலும், "பயிர்த்தொழில்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அசத்தியம்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "பொய்ம்மை" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "தவறான செயல், மங்கிய புகழ்" என்றிருக்கிறது. செம்பதிப்பை அடிப்படையாகக் கொண்ட விவேக் தேவ்ராயின் மொழிபெயர்ப்பில், இங்கே 17–19ஆம் சுலோகங்களுக்குரிய செய்தி இடம்பெறவில்லை. இந்தச் சர்க்கம் வர்ணபேதம் குறித்த அடிப்படைக் கருத்துகளைக் கூறும் நிலையில், நாம் ஒப்பிடும் பதிப்புகளுக்கிடையே இத்தகைய பொருள் வேறுபாடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

[5] தர்மாலயப் பதிப்பில், "அவர்களுடைய அந்த கடமையானது வைசியசூத்திரஜாதியாரிடம் சரியாய் நடைபெற்றது. சூத்ரர்கள் முக்கியமாய் ஸகலவர்ணத்தவர்களுக்கும் ஊழியஞ்செய்தலை அனுஷ்டித்தார்கள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "வைசிய சூத்திரர்கள் பணிவிடை செய்தலுடன் பயிர்த்தொழிலையும் பிரதானமாகக் கொண்டனர்; வைசியர்கள் பயிர்த்தொழிலை முக்கியமாகக் கொள்ள, சூத்திரர்கள் ஸகல வருணத்தவர்களுக்கும் ஊழியஞ் செய்தலையே தமக்கு உத்தமமான தருமமாகக் கொண்டனர்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "வணிக-வேளாள வருணத்தவர்களுக்கு மற்ற இரு வருணத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சேவை செய்வது என்பது சுதர்மமாக (இயல்பான வாழ்க்கை நெறியாக) வந்தமைந்தது. குறிப்பாக, மற்ற மூன்று வருணத்தவர்களுக்கும் வாழ்க்கையில் இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் சிறப்புப் பணியைப் பெற்றார்கள், வேளாளர்கள்" என்றிருக்கிறது.

பிறகு, அதர்மம் இரண்டாம் பாதத்தை இறக்கியது. பிறகு இந்த யுகத்திற்குத் துவாபரம் என்ற பெயர் உண்டாயிற்று.(23) ஆனால், புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, துவாபரம் என்ற பெயருடைய அந்த யுகக்ஷயம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது {யுகத்தின் முடிவில்}, அதர்மமும், அந்ருதமும் {பொய்ம்மையும்} பெருகின.(24) துவாபரம் என்றழைக்கப்பட்ட அந்த யுகத்தில் தபம் வைசியர்களை வந்தடைந்தது. மூன்று யுகங்களில் தபம் முறையே உண்மையில் மூன்று வர்ணத்தாரையும் வந்தடைந்தது[6].(25) மூன்று யுகங்களிலும் மூன்று வர்ணத்தாரிடையே தர்மமும் நிலைபெற்றிருந்தது. ஆனால், நரரிஷபா {மனிதர்களில் காளையே}, யுகத்தின் அடிப்படையில் சுத்தன் {தூய்மையானவன் / சூத்திரன்} தர்மத்தை அடைவதில்லை. நிருபசிரேஷ்டா {அரசர்களில் சிறந்தவனே}, ஹீனவர்ணத்தவன் {தாழ்ந்த வர்ணத்தைச் சேர்ந்த சூத்ரன்} மிகப்பெரிய தபத்தைச் செய்கிறான்[7].(26) கலியுகத்தில் சூத்திர யோனியில் தபச்சர்யை நிச்சயம் நிகழும் {சூத்திரப் பிறவியில் தப ஒழுக்கத்தைப் பின்பற்றுதல் நிச்சயம் நிகழும்}. இராஜனே, துவாபரத்தில் சூத்திரஜன்மனுக்கு {துவாபர யுகத்தில் சூத்திர வர்ணத்தில் பிறந்தவனுக்கு தபம் மேற்கொள்ளுதல்} பரம அதர்மம்[8].(27)

[6] இராமன் ஆட்சி செய்தது திரேதாயுகத்தில்தான்; துவாபரயுகத்தில் அல்ல. திருமாலின் கிருஷ்ண அவதாரமும், மகாபாரதப் போரும் இந்த துவாபர யுகத்தில் நடைபெற்றது. ஆனால், 74ஆம் சர்க்கத்தின் 23–25ஆம் சுலோகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தால் ஒரு காலவரிசைச் சிக்கல் எழுகிறது. 23ஆம் சுலோகத்தில் அதர்மம் தனது இரண்டாவது பாதத்தை இறக்கிய பிறகு, அந்த யுகத்திற்குத் துவாபரம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 24ஆம் சுலோகத்தில் துவாபரயுகத்தில் அதர்மமும் அந்ருதமும் பெருகியதாகக் கூறப்படுகிறது. 25ஆம் சுலோகத்தில் துவாபரயுகத்தில் தபம் வைசியர்களையும் வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது. இவை ராமனுடைய ஆட்சிக்கால நிகழ்வுகளை நேரடியாக விவரிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, யுகங்கள் மாறும்போது தர்மம், அதர்மம், தபம் ஆகியவற்றின் நிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை நாரதர் ராமனுக்கு விளக்குகிறார். அதாவது, இங்கே கதையின் நிகழ்காலமும் முனிவர் விவரிக்கும் யுகங்களின் காலமும் வெவ்வேறானவை. இருப்பினும், திரேதாயுகத்தில் வாழும் ராமனிடம், அடுத்து வரபோகும் துவாபரயுகத்தின் நிலையை ஏற்கெனவே நிகழ்ந்ததாக இறந்தகால வினைகளில் (ஸமாவிசத், ஆவிசத்) விவரிப்பது காலவரிசை சார்ந்த கேள்வியை எழுப்புகிறது.

[7] இந்தச் சுலோகத்தில் விக்கிமூலப் பாடத்தில் "சுத்த:" என்று உள்ளது. ஆனால், ஒப்பிடப்பட்ட பிற பதிப்புகளின் தமிழாக்கங்களில் "சூத்ரன்" என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இது "சூத்ர:" என்ற மாற்றுப் பாடத்தைச் சார்ந்திருக்கக்கூடும். பிற பதிப்புகளின் சமஸ்கிருத மூலப்பாடங்களை ஒப்பிட்டே இதை உறுதிப்படுத்த முடியும். சுலோகத்தின் வர்ணதர்மச் சூழலைப் பார்த்தால் "சூத்ர:" என்ற பாடம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதல் அடியிலுள்ள "த்ரீன் வர்ணான் தர்ம꞉ ச பரிநிஷ்டித꞉" என்ற தொடரிலும் தெளிவின்மை இருப்பதாகத் தெரிகிறது. தர்மாலயப் பதிப்பில், "ஹே புருஷோத்தம! மூன்று யுகங்களிலும் மூன்று வர்ணத்தவர்களுக்கும் தவம்புரிதல் ஏற்றது. இந்த யுகங்களில் சூத்திரன் மட்டும் தவம்புரிய பாத்திரனாகான். ஹே ராஜோத்தம! கீழ்க்குலத்தவனொருவன் மிகவும் உக்கிரமான தவத்தை இயற்றுகிறான்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "இங்ஙனம் இம்மூன்று யுகங்களிலும் முறையே மூன்று வருணத்தவருமே தவம்புரியு முரிமைபெற்றிருக்கின்றன ராதலின், இவர்கள் அந்தந்த யுகத்தில் தவம்புரிதலே அறமாகும். இந்தயுகங்களிலே சூத்திரனுக்குத் தவமியற்றும் அதிகாரமிலது; சூத்திரனுக்கு தவம்புரியும் அதிகாரம் கலியுகத்திலுண்டாகும். இப்பொழுது கீழ்க்குலத்தவனான சூத்திரனொருவன் துர்ப்புத்தியுடையவனாகி உமது ராஜ்யத்தின் எல்லையில் மிகவும் உக்கிரமான தவமியற்றுகின்றனன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "மக்கட்தலைவனே! மூன்று யுகங்களிலும், மூன்று வருண மக்களின் ஆதரவில், தவம் என்னும் அறநெறி நிலைத்து நின்றது. ஆனால், இந்த மூன்று யுகங்களிலும், தவம் என்னும் அறநெறியைக் கைக்கொள்ளும் உரிமையை வேளாளர்கள் அடையவில்லை. வேந்தர் வேந்தே! தாழ்ந்த குடியில் பிறந்த மனிதர்களும், கடுமையான தவநெறியை மேற்கொள்ளும் (கெட்ட) காலம் வரப்போகிறது. கலியுகம் வந்ததும், வேளாளர் குடியில் தோன்றுபவர்களும் (அவர்களுக்கு உரியது அல்லாத) தவநெறியில் ஈடுபடுவார்கள்" என்றிருக்கிறது.

[8] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 930ம் பாடல் பின்வருமாறு:

கோத்திரத்துக் கொளல்விற்றல் கோக்
    காத்தல் உழல்வேட்டல் வசியர்தன்மம்
சூத்திரற்குத் தன்மம் அவர் சிச்சிருடை
    என உரைப்பர் அது செய்யாது
காத்திரத்தை அற உலர்த்தித் தலைக்கீழாய்க்
    கால்மேலாய்த் தனக்கு வாய்த்த
சாத்திரத்தில் சொல்லாத தவம் செய்வானால்
    வரும் இத்தவறே என்றான்

பொருள்: "பூமியில் விளையும் பொருள்களைக் கொள்ளுதலும் கொண்டவற்றை விற்றலும் பசுக்களைக் காப்பாற்றுதலும் உழுதலும் வேள்வி செய்தலும் வைசியர் தருமம் ஆகும். சூத்திரர்கட்குத் தருமம் ஆவது மேற்கூறிய மூவருணத்தார்க்கும் பணி செய்தல் என்று மேலோர் சொல்லுவர். அதனைச் செய்யாமல் உடம்பை முழுவதும் உலரச் செய்து, தலைகீழாகவும், கால் மேலாகவும் மாறிநின்று தனக்குரிய சாத்திரத்தில் சொல்லப்படாத தவத்தினைச் செய்பவனாகிய ஒரு சூத்திரனால் வந்தது இந்தத் தவறு" என்று நாரதன் கூறினான்.

இராஜனே, துர்ப்புத்தியுடைய அந்த மஹாதபஸ்வி, உன்னுடைய விஷயத்தின் {ஆட்சிப்பகுதியின்} எல்லையில் இன்று நிச்சயமாக தபம் செய்கிறான். அதனால்தான் இந்த பாலவதம் {சிறுவனின் மரணம்} நிகழ்ந்துள்ளது.(28) துர்மதியுடைய எந்த நரன் {மனிதன்}, பார்த்திபனின் விஷயத்திலோ {அரசனின் ஆட்சிப்பகுதியிலோ}, புரத்திலோ {நகரத்திலோ} அதர்மத்தை, அல்லது அஸ்ரீமூலமான {மங்கலமின்மைக்குக் காரணமான}[9] அகாரியத்தை {செய்யத்தகாததைச்} செய்வானோ, அவனும், {அந்த} ராஜாவும் சீக்கிரமே நரகத்தை அடைவார்கள். இதில் சந்தேகமில்லை.(29) ஆனால், பிரஜைகளை {குடிமக்களை} தர்மத்தின்படி பரிபாலிப்பவன் {ராஜா}, {அந்தப் பிரஜைகள்} கற்றதிலும், தபம் செய்ததிலும், கர்மங்களிலும், நற்செயல்களிலும் {கிடைக்கும் பலனில்} ஆறில் ஒரு பங்கை அடைகிறான்.(30) பிரஜைகளை ரக்ஷிக்காதவன் {குடிமக்களைக் காக்காத மன்னவன்} ஆறில் ஒரு பங்கை எவ்வாறு அனுபவிப்பான்?[10](31) ஆகவே, புருஷசார்தூலா {மனிதர்களில் புலியே}, நீ உன் விஷயத்தை {ஆட்சிப்பகுதியை} ஆராய்வாயாக. எங்கே தீச்செயலைக் காண்பாயோ, அங்கே யத்னத்தை {முயற்சியை} மேற்கொள்வாயாக.(32) இவ்வாறாயின், நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, தர்ம விருத்தியும், நரர்களின் ஆயுள் அதிகரிப்பும், இந்த பாலனின் ஜீவிதமும் {சிறுவனின் உயிர்வாழ்வும்} உண்டாகும்[11].(33)

[9] "அஸ்ரீமூலம்" என்பதற்கு "செல்வச்சிறப்பின்மைக்குக் காரணமான" என்றும் "மங்கலமின்மைக்குக் காரணமான" என்றும் பொருள் கொள்ள இடமுள்ளது. இச்சொல்லின் பொருளை நாம் ஒப்பிடும் பதிப்புகள் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகின்றன. தர்மாலயப் பதிப்பில் "எவனேனுமொரு புத்திஹீனனான மனிதன் தருமவிரோதமான காரியத்தையேனும் செய்யத்தகாத செய்கையையேனும் ஒரு ராஜனது நகரிலோ நாட்டிலோ செய்வானாகில் இதுதான் உடனேயே துர்த்தசைகளுக்கு காரணமாகின்றது. அந்த மன்னனும் நரகத்தையே அடைகிறான். இதற்கு ஐயமில்லை" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "எவனேனுமொருவன் ஒரு ராஜனது நாட்டிலாயிலும் நகரத்திலாயினும் செய்யத்தகாத செய்கைகளையேனும் அதருமங்களையேனும் செய்வானாகில், அங்ஙனம் செய்கின்றவன் மாத்திரமேயன்றி அந்நாட்டரசனும் நரகம் புகுவானென்பது நூற்றுணிபு" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அறநெறி வழுவிய செயலைச் செய்கிறவன் அல்லது செய்யக்கூடாத செயலைச் செய்கிறவன், எந்த நாட்டில் வாழ்கிறானோ, அந்த நாட்டின் மன்னனுடைய செல்வச்செழுமை, பெருமை அழிந்து போகின்றன. அந்த மன்னன் விரைவில் நரகத்தில் வீழ்கிறான் என்பதில் ஐயமில்லை" என்றிருக்கிறது.

[10] தர்மாலயப் பதிப்பில், "ஆறிலொரு பாகத்திற்கு உரிமையுடைய பார்த்திவனாகும் இவன் பிரஜைகளை பாதுகாக்காதிருக்கிறது எங்ஙனமாகும்?" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "பலவற்றிலும் ஆறிலொரு பாகம் புண்ணியத்தைப் பெறுகின்றனன்; அங்ஙனமாக, அவர்கள் புரியும் அதருமத்தில் ஆறிலொருபாகம் பாபத்தைமாத்திரம் பெறாதொழிவனோ?" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "குடிமக்களின் புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெறுகிற மன்னன், அவர்களைக் காப்பாற்ற வேண்டாமா?" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், பிரஜைகளின் புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெறும் அரசன், அவர்களுடைய பாபத்திலும் பங்குபெறுவான் என்ற கருத்து விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இச்சுலோகத்தின் மூலத்தில் "பாபத்தில் ஆறில் ஒரு பங்கு" என்று நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. மற்ற இரு பதிப்புகளும் பிரஜைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசனின் கடமையை முதன்மைப்படுத்துகின்றன.

[11] இச்சுலோகத்தில் "இந்த பாலனின் ஜீவிதம்" என்று குறிப்பிடப்படுவது, ஏற்கெனவே இறந்ததாகக் கூறப்பட்ட பிராமணச் சிறுவன் மீண்டும் உயிர்பெறுவதைக் குறிக்கிறது. இருப்பினும், மூலத்தில் "மீண்டும் உயிர்பெறுதல்" என்பதற்கான தனிச்சொல் இடம்பெறவில்லை. "ஜீவிதம்" என்ற சொல்லும் கதையின் சூழலுமே இப்பொருளை உணர்த்துகின்றன.

உத்தர ராமாயணம் சர்க்கம் – 074ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அக்னி அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் கல்மாஷபாதன் காசியபர் காஞ்சனர் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குசன் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கைடபன் கோமுகன் கௌ கௌசல்யை கௌதமர் க்ஷுபன் சங்கன் சத்ருக்னன் சம்பூகன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாபாலி ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மதயந்தி மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாந்தாதா மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மித்ரஸஹன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லவணன் லவன் லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாமதேவர் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஸௌதாஸன் ஹனுமான் ஹேதி