Thursday, 17 September 2026

மாந்தாதாவும் லவணனும் | சர்க்கம் – 067 (26)

Mandhata and Lavana | Sarga-067 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலவணனுடைய சூலத்தின் வலிமையையும், மாந்தாதாவின் அழிவையும் கூறி, சூலமின்றி வரும் அவனை வெல்லும் வழியை சத்ருக்னனுக்கு விளக்கிய சியவனர்...

மாந்தாதா லவணன் கதையை சத்ருக்னனிடம் சொன்ன சியவனர்

பிறகு, ராத்திரி தொடங்கியபோது, சத்ருக்னன் பிருகு நந்தனரான விப்ரர் சியவனரிடம் {பிருகுவின் வழித்தோன்றல்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவரும், வேதியருமான சியவனரிடம் பின்வருமாறு} கேட்டான், "லவணனின் பலம் எத்தகையது?(1) பிரஹ்மரே {பிராமணரே}, மேலும் சூலத்தின் பலம் {என்ன}? பூர்வத்தில் {முன்பு} துவந்தயுத்தம் {தனிப்பட்ட போர்} புரிய வந்தவர்கள் எவரெவர் இந்த முக்கிய {சிறந்த} சூலத்தால் அழிக்கப்பட்டனர்?" {என்று கேட்டான் சத்ருக்னன்}.(2)

மஹாத்மாவான சத்ருக்னனின் அந்த வசனத்தைக் கேட்ட மஹாதேஜஸ்வியான சியவனர், ரகுநந்தனனிடம் {சத்ருக்னனிடம் பின்வரும்} மறுமொழியைச் சொன்னார்:(3) "இரகுநந்தனா, இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றியவனே, இவனுடைய எண்ணிலடங்காத கர்மங்களில் {செயல்களில்} எவை நிகழ்ந்தனவோ, அவற்றை என்னிடமிருந்து கேட்பாயாக.(4) முன்பு அயோத்யையில் யுவனாஸ்வனின் மகனும், பலவானுமான ராஜா ஒருவன் இருந்தான். வீரியவானான அவன் மாந்தாதா என்று {என்ற பெயரில்} மூன்று உலகங்களிலும் புகழ்பெற்றிருந்தான்.(5) 

பிருத்வீபதியும் நிருபனுமான அந்த மாந்தாதா, முழு பிருத்வியையும் {பூமியையும்} தன் சாசனத்தின் {ஆணையின்} கீழ் கொண்டுவந்து, இங்கிருந்து ஸுரலோகத்தை வெல்லும் உத்யோகத்தில் ஈடுபட்டான் {முயற்சியில் ஈடுபட்டான்}.(6) அவ்வாறு தேவலோகத்தை வெல்லவேண்டும் என்ற விருப்பத்தால் மாந்தாதா உத்யோகத்தில் ஈடுபட்ட போது {முயற்சி மேற்கொண்டபோது}, இந்திரனுக்கும் மஹாத்மாக்களான தேவர்களுக்கும் தீவிர பயம் உண்டானது.(7) சக்ரனின் {இந்திரனின்} பாதி ஆசனத்தையும் {இந்திரனுடைய ஆசனத்தில் பாதி பங்கையும்}, பாதி ராஜ்ஜியத்தையும் {ராஜ்ஜியத்தில் பாதி பங்கையும்} பெற்று, ஸுரகணங்களால் {தேவர்களால்} வணங்கப்பட்ட அந்தப் பார்த்திபன் {மன்னன் மாந்தாதா} ஒரு பிரதிஜ்ஞையை ஏற்றுக் கொண்டான்.(8)

அவனுடைய பாப அபிப்ராயத்தை {தீய எண்ணத்தை} அறிந்த பாகசாஸனன் {இந்திரன்}, யுவனாஸ்வஜனிடம் {யுவனாஸ்வனின் மகனான மாந்தாதாவிடம்} ஸாந்தப் பூர்வமாக இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(9) "புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, நீ மானுஷலோகத்தில் ராஜா {அரசனாக இருக்கிறாய்}. பிருத்வியை வசப்படுத்தாமல் இருக்கும்போதே இங்கு தேவராஜ்ஜியத்தை இச்சிக்கிறாய்.(10) வீரா, மொத்தமாக இந்த மேதினி முழுவதும் உன் வசத்தில் இருந்தால், பணியாளர்கள், பலம் {படை}, வாகனங்களுடன் கூடியவனாக இங்கேயே தேவராஜ்ஜியத்தை நடத்துவாயாக" {என்றான் இந்திரன்}.(11)

இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இந்திரனிடம் அந்த மாந்தாதா, "சக்ரா, பிருத்வீதலத்தில் {பூமியின் மேற்பரப்பில்} என் சாசனம் {ஆணை} எங்கே தடுக்கப்பட்டது?" என்று வினவினான்.(12)

சஹஸ்ராக்ஷன் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன்} அவனிடம் {மாந்தாதாவிடம்}, "அனகா {பாபமற்றவனே}, மதுவனத்தில், மதுவின் புத்திரனும், லவணன் என்ற பெயருடையவனுமான ராக்ஷசன் உன் ஆணையை ஏற்றுக் கொள்வதில்லை" {என்று} சொன்னான்.(13)

சஹஸ்ராக்ஷனால் கூறப்பட்ட அந்த கோரமான, விரும்பத்தகாத {வார்த்தையைக்} கேட்டு வெட்கமடைந்த ராஜா {மாந்தாதா}, முகம் தாழ்ந்து, பேசவும் இயலாதவனாக இருந்தான்.(14) கொஞ்சம் வெட்கத்தால் முகம் தாழ்ந்த ஸ்ரீமான் நரேஷ்வரன் {செல்வச் சிறப்புடையவனும், மனிதர்களின் தலைவனுமான மாந்தாதா}, சஹஸ்ராக்ஷனை வணங்கி விடைபெற்று, மீண்டும் இந்த உலகத்திற்கு வந்தான்.(15) அந்த அரிந்தமன் {பகைவரை அடக்குபவனான மாந்தாதா}, பணியாளர்கள், பலம் {படை}, வாகனங்களுடன் கூடியவனாக, மனத்தில் கோபத்தை ஏற்படுத்திக் கொண்டு, மதுவின் புத்திரனை {லவணனைத்} தன் வசப்படுத்த வந்தான்.(16) அந்தப் புருஷரிஷபன் {மாந்தாதா}, லவணனுடன் யுத்தம் செய்ய விரும்பி, லவணனுடைய முன்னிலைக்கு ஒரு தூதனை அனுப்பினான்.(17)

அவன் {அந்தத் தூதன்} மதுவின் மகனிடம் சென்று பிரியமற்ற பலவற்றைச் சொன்னான். அவ்வாறு கூறிக்கொண்டிருந்த அந்தத் தூதனை அந்த ராக்ஷசன் {லவணன்} பக்ஷித்தான் {உண்டான் / விழுங்கினான்}.(18) தூதன் தாமதித்தபோது, குரோதத்துடன்கூடிய ராஜா {மாந்தாதா}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சரவிருஷ்டியால் {கணை மழையால்} அந்த ராக்ஷசனை {லவணனைத்} தாக்கினான்.(19) பிறகு, ஏளனமாகச் சிரித்த அந்த ராக்ஷசன், சூலத்தைக் கையில் எடுத்து, பந்துக்களுடன் கூடியவனை {உறவினர்களுடன் / பரிவாரத்துடன் கூடிய மாந்தாதாவை} வதம் செய்வதற்காக அந்த உத்தம ஆயுதத்தை ஏவினான்.(20) ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த சூலம், பணியாளர்கள், பலம் {படை}, வாகனங்களுடன் கூடிய நிருபனை பஸ்மமாக்கி {அரசன் மாந்தாதாவை சாம்பலாக்கி}, மீண்டும் லவணனுடைய கரத்திற்கே சென்றது[1].(21) 

[1] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 882ம் பாடல் பின்வருமாறு:

ஏழின் பேர் உலகம் எல்லாம் இப்பொழுதே 
  முடியும் என இமையோர் அஞ்ச
ஊழித்தீக் கிளர்ந்தது என உலகம் எலாம் 
  எரிபரப்பி ஓடிச் சென்று அங்கு
ஆழித்தேர் மன்னவனை அவன்சேனை
  யொடும் முருக்கி அளவில் ஆற்றல்
பாழித்தோள் இலவணன்தன் பாணிமிசைப் 
  பண்டுபோல் இருந்தது அன்றே

பொருள்: ஏழாகிய பெரிய உலகம் எல்லாம் இப்பொழுதே அழிவெய்து முடிந்து விடும் என்று இமையாநாட்டம் கொண்ட தேவர்கள் அஞ்சாநிற்க, ஊழிக்காலத்தில் தோன்றும் வடவைக் கனல் கிளர்ந்து எழுந்தது என்று சொல்லுமாறு உலகம் முழுவதிலும் எரியைப் பரப்பிக் கொண்டு ஓடிச் சென்று அங்குள்ள சக்கரத்தையுடைய தேரினையுடைய மன்னவனாகிய மாந்தாதாவை அவன் சேனையோடு சேர்த்து அழித்துவிட்டு அளவில்லாத ஆற்றலை யுடையவனாகிய வலிய தோளினையுடைய இலவணன் தன் கையில் முன்போலவே இருந்தது.

சௌம்யா {மென்மையானவனே}, இவ்வாறே பலம் {படை}, வாகனங்களுடன் கூடிய அந்த மிகப்பெரும் ராஜா {மாந்தாதா} கொல்லப்பட்டான். எனவே, சூலத்தின் பலம் {வலிமை} அளவிடற்கரியதும், ஒப்பற்றதுமாகும்.(22) நாளை பிரபாதத்தில் {விடியற்காலையில்} ஆயுதம் எடுத்துக் கொள்ளாத லவணனை சீக்கிரம் வதைப்பாய். உன் விஜயம் {வெற்றி} நிச்சயமானது; {இதில்} சந்தேகமில்லை.(23) உன்னால் இந்தக் கர்மம் {செயல்} செய்யப்பட்டால் உலகங்களின் நலம் நிச்சயமாகும். {எனவே}, துராத்மாவான லவணனைக் குறித்த இவை அனைத்தும் உனக்குச் சொல்லப்பட்டன.(24) நரரிஷபா {மனிதர்களில் காளையே}, பார்த்திபா {மன்னா, சத்ருக்னா}, சூலத்தின் பலம் கோரமானதும், அளவிடற்கரியதுமாகும். அதனாலேயே மாந்தாதாவின் அழிவு ஏற்பட்டது.(25) மஹாத்மாவே, நரேந்திரா, நாளை பிரபாதத்தில் சூலம் இல்லாமல் இறைச்சிக்காக வெளியே வரும் அந்த லவணனை நீ வதைப்பாய். இதில் எனக்குச் சந்தேகம் இல்லை. உனது ஜயம் {வெற்றி} நிச்சயமானது" {என்றார் சியவனர்}.(26)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 067ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி