Yayati's senility and Puru's Sacrifice | Sarga-059 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்கிரரின் சாபத்தால் ஏற்பட்ட முதுமையை மகன்களிடம் மாற்றிக் கொள்ள முயன்ற யயாதி; அதை ஏற்றுக் கொண்ட பூரு; பின்னர் பூருவிடமிருந்த தன் முதுமையை மீண்டும் பெற்றுக் கொண்டு அவனை அரசனாக்கியது...
அப்போது குரோதமடைந்த உசனஸை (சுக்கிராசாரியரைக்} கேட்டு வருந்திய நஹுஷாத்மஜன் {நஹுஷனின் மகனான யயாதி}, மிகக் கடும் ஜரையை {முதுமையை} அடைந்து, யதுவிடம் இந்த வசனத்தைக் கூறினார்:(1) "யதுவே, புத்திரா, நீ தர்மஜ்ஞனாக {தர்மத்தை அறிந்தவனாக} இருக்கிறாய். என் பொருட்டு மிகக்கடுமையான {இந்த} முதுமையை ஏற்றுக் கொள்வாயாக. பெரும் புகழுடையவனே, நான் போகங்களில் இன்புறுவேன்.(2) நரரிஷபா {மனிதர்களில் காளையே}, நான் இப்போதுவரை விஷயங்களில் {புலனின்பங்களில்} நிறைவுபெற்றவனாக இல்லை. காமத்தை {விருப்பங்களை / ஆசைகளை} அனுபவித்த பிறகு, நான் ஜரையை {முதுமையைத்} திரும்பப் பெற்றுக் கொள்வேன்[1]" {என்றார் யயாதி}."(3)
[1] மஹாபாரதம், ஆதிபர்வம், 83ம் பகுதி, 40ம் சுலோகத்தில் சுக்கிரர் யயாதிக்கு, "நீ விரும்பினால் உன் முதுமையை இன்னொருவருக்கு மாற்ற முடியும்" என்ற சாபவிமோசனத்தைக் கொடுக்கிறார். ஆனால் இங்கே உத்தர ராமாயணத்தில் சுக்கிரர் இத்தகைய சாபவிமோசனத்தை வழங்கியதாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் யயாதி யதுவிடம் இவ்வாறு கேட்கிறான். ஆதிபர்வம் 84ம் பகுதி, 2, 3, 4ம் சுலோகங்களில், "அன்புக் குழந்தாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் சாபத்தால், பலவீனமடைந்து, தோல் சுருக்கம் ஏற்பட்டு, தலை மயிர் வெண்மையாகி முதுமை என்னை ஆட்கொண்டது. ஆனால், நான் இன்னும் எனது இளமையின் இனிமையில் மனநிறைவுகொள்ளவில்லை.(2) எனவே, யதுவே! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(3) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையை உனக்குத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்" என்று கேட்கிறான்.
அந்த வசனத்தைக் கேட்ட யது, நரரிஷபரிடம் {மனிதர்களில் காளையான யயாதியிடம் பின்வரும்} பதிலைச் சொன்னார், "உம் நேசத்திற்குரிய புத்திரன் பூருவே {இந்த} ஜரையை ஏற்றுக் கொள்ளட்டும்.(4) பார்த்திபரே, நான் அர்த்தங்களிலிருந்தும், நெருக்கத்திலிருந்தும் பஹிஷ்கரிக்கப்பட்டவனாக இருக்கிறேன் {செல்வங்களிலிருந்தும், தொடர்பிலிருந்தும் விலக்கப்பட்டவனாக இருக்கிறேன்}. மேலும், ராஜரே, சேர்ந்து போஜனம் செய்பவன் {உணவை உண்பவன்} எவனோ, அவன் {அந்தப் பூரு}[2] ஏற்றுக் கொள்ளட்டும்" {என்றார் யது}[3].(5)
[2] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 837ம் பாடல் பின்வருமாறு:என்று அவள் விளம்பக் கேட்ட யது இது விளம்பும்உன்தனக்கு அரிய மைந்தன் தன்னைநீ உடன் கொண்டு உண்ணும்அன்று எனக்கு உரிமை இல்லை ஆகுலத்துடனே உண்ணஇன்று எனக்கு உரிமை உண்டே இவ்விடர் நீக்க என்றான்பொருள்: என்று யயாதி சொல்லக் கேட்ட யது, இதனைச் சொல்வான்:- "என் தந்தையே! உனக்கு அருமையான மைந்தனாகிய பூருவை உடன் கொண்டு உண்ணும் அன்றைக்கு யானும் ஆரவாரத்துடனே உண்பதற்கு உரிமையில்லை; இன்றைக்கு மட்டும் இந்த மூப்புத் துன்பத்தை நீக்க எனக்கு உரிமை உண்டோ? என்று வினவினான்.
[3] மஹாபாரதம், ஆதி பர்வம் 84ம் சர்க்கம், 5 முதல் 7ம் சுலோகம் வரை யது, "முதுமையால் ஏற்படும் பலவீனத்தால் உண்பதிலும், குடிப்பதிலும் எண்ணற்றத் தொல்லைகள் இருக்கின்றன. எனவே, ஓ மன்னா, நான் உமது முதுமையை ஏற்க மாட்டேன். இஃது எனது உறுதியானத் தீர்மானம். தலையில் வெண்மயிர் தாங்கி, மகிழ்ச்சியற்று, நரம்புகள் தளர்ந்து, உடலெங்கும் தோல் சுருக்கம் ஏற்பட்டு, உருக்குலைந்து, உறுப்புகளின் வலிமை குன்றி, நலிவடைந்து, எந்த வேலையையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு, நண்பர்களிடமும், தோழர்களிடமும் தோல்வியுற்று வாழ்வதே முதுமையின் நிலையாகும். எனவே, ஓ மன்னா! நான் அதனை ஏற்க விரும்பவில்லை. ஓ மன்னா! உமக்கு நிறைய மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் உமக்கு மிகவும் அன்பானவர்கள் ஆயிற்றே. நீர் அறத்தின் கட்டளைகளை அறிந்தவர். உமது மற்ற மகன்களிடம் உமது முதுமையை ஏற்கச் சொல்லும்" என்று சொல்கிறான். ஹரிவம்சம், ஹரிவம்ச பர்வம் 33ம் அத்தியாயத்தில், 24, 25, 26ம் சுலோகங்களில், "நான் ஒரு பிராமணருக்குப் பிச்சை அளிப்பதாக உறுதியளித்திருக்கிறேன். இஃது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இதை உறுதி செய்யாமல் என்னால் உமது முதுமையை ஏற்றுக் கொள்ள முடியாது. உணவு மற்றும் பானம் தொடர்பான பல தொல்லைகள் முதுமையில் உண்டு. எனவே, ஓ! மன்னா, உமது முதுமையை ஏற்க நான் விரும்பவில்லை. ஓ! மன்னா, என்னைவிட உமது அன்புக்குரிய மற்ற மகன்களை நீர் கொண்டிருக்கிறீர். எனவே, ஓ! பக்திமிக்க மன்னா, உமது மற்ற மகன்களிடம் உமது முதுமையை ஏற்றுக் கொள்ள ஆணையிடுவீராக" என்று யது யயாதியிடம் கூறுகிறான். அதன் பிறகு துர்வசுவிடமும், திருஹ்யுவிடமும், அனுவிடமும் முதுமையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிய பிறகே பூருவிடம் வேண்டுகிறான்.
அவருடைய {யதுவின்} அந்த வசனத்தைக் கேட்ட ராஜா {யயாதி}, பிறகு, பூருவிடம், "மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, இந்த ஜரையை {முதுமையை} என் பொருட்டு ஏற்றுக் கொள்வாயாக" {என்று} கூறினார்.(6)
நாஹுஷரால் {நஹுஷனின் மகனான யயாதியால்} இவ்வாறு கூறப்பட்ட பூரு, கைகூப்பியவாறு, "நான் தன்யன் {நான் பாக்கியசாலி}, நான் அனுக்கிருஹிக்கப்பட்டேன் {அருளப்பட்டேன்}. நான் உமது சாசனத்தில் {கட்டளையில்} நிலைத்திருக்கிறேன்" {என்று} கூறினார்.(7)
பூருவின் வசனத்தை அறிந்த நாஹுஷர், பேரானந்தத்தால் ஒப்பற்ற பெரும் மகிழ்ச்சியை அடைந்தார். மேலும் அந்த ஜரையை {தம்மிடம் இருந்த முதுமையை பூருவுக்கு} மாற்றி அளித்தார்.(8) பிறகு, இளமையைப் பெற்ற அந்த {யயாதி} ராஜர், ஆயிரக்கணக்கான யஜ்ஞங்களை {வேள்விகளைச்} செய்து, பல்லாயிரம் வருஷங்கள் மேதினியை {பூமியை} ஆட்சி செய்தார்.(9)
நீண்ட காலத்திற்குப் பிறகு, ராஜா பூருவிடம் {பின்வருமாறு} கூறினார், "புத்திரா, ஜரையைத் திரும்பக் கொண்டு வருவாயாக. என்னுடைய நியாஸத்தை {வைப்பை / உன்னிடம் ஒப்படைத்திருந்த முதுமையைத்} திருப்பிக் கொடுப்பாயாக.(10) புத்திரா என்னுடைய நியாஸபூதமான ஜரை {என்னால் வைப்பாக ஒப்படைக்கப்பட்ட முதுமை} உன்னிடம் மாற்றி அளிக்கப்பட்டது. எனவே, அந்த ஜரையை நான் மீண்டும் பெற்றுக் கொள்வேன். வருந்தங் கொள்ளாதே.(11) மஹாபாஹோ, நீ என் சாசனத்தை ஏற்றுக் கொண்டதால் நான் பிரீதியடைந்தவனாக இருக்கிறேன். பிரீதியுடன் கூடிய நான், உன்னை நராதிபனாக {மனிதர்களின் தலைவனாக} அபிஷேகம் செய்வேன்" {என்றார் யயாதி}.(12)
நஹுஷாத்மஜரான {நஹுஷரின் மகனான} ராஜா யயாதி, தம் மகனான பூருவிடம் இவ்வாறு கூறிவிட்டு, தேவயானியின் மகனிடம் {யதுவிடம்} குரோதமடைந்து {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னார்:(13) "அணுகற்கரிய ராக்ஷசனான நீ, என்னால் புத்திர ரூபத்தில் பிறந்திருக்கிறாய். எதனால் நீ என் ஆணையை மீறினாயோ, {அதனால்} பிரஜைகளின் அர்த்தத்தில் {குடிமக்களை ஆள்வதில்} பயனற்றவனாவாயாக.(14) எதனால் நீ குருபூதமான பிதாவாகிய {குருவுக்கு நிகரான தந்தையான} என்னை அவமதிக்கிறாயோ, அதனால் நீ கொடிய ராக்ஷசர்களையும், யாதுதானர்களையும்[4] ஜனனிக்கச் செய்வாய் {பிறக்கச் செய்வாய்}.(15) துர்மதியோனே, உன் வம்சம் சோம {சந்திர} குலத்தில் உற்பத்தியான வம்சத்தில் நிலைத்திருக்காது. உன் வம்சமும் உன்னைப் போலவே துர்விநீதமாக {அடக்கமற்ற, கட்டுப்பாடற்ற, ஒழுக்கமற்ற வம்சமாக} இருக்கும்[5]" {என்றார் யயாதி}.(16)
[4] யாதுதானர்கள் என்பது தீய ஆவிகளை அல்லது ராக்ஷசர்களை குறிக்கும் சொல்லாகும். யாதுதானன், கசியபர் மற்றும் சுரஸையின் மகனாவான். அவனது பத்து மகன்களும் சூரிய தேவனைப் பின்பற்றும் ராக்ஷசர்களாவர். மஹாபாரதம், அஸ்வமேதபர்வம் பகுதி 8, 6ம் சுலோகத்தில் சிவவழிபாட்டாளர்களாக இந்த யாதுதானர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்" என்று விஸ்டம் லைப்ரரி வலைத்தளத்தில், https://www.wisdomlib.org/definition/yatudhana என்ற சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
[5] மஹாபாரதம், ஆதிபர்வம், 84ம் பகுதியில், 8ம் சுலோகத்தில், "ஓ மகனே! நீ எனது இதயத்திலிருந்து உற்பத்தியானாய், ஆனால் எனக்கு உனது இளமையைத் தர மறுக்கிறாய். எனவே, உனது மகன்கள் மன்னர்களாக இருக்க மாட்டார்கள்" என்றும், ஹரிவம்சம், ஹரிவம்ச பர்வம் 30ம் அத்தியாயத்தில், 28, 29ம் சுலோகங்களில், "தீய புத்தி கொண்டவனே, உன் ஆசானும், உனக்கான கல்வியைக் கொடுத்தவனுமான என்னை அலட்சியம் செய்துவிட்டு, வேறு யாரை நாடி எந்த அறத்தை உன்னால் பின்பற்ற முடியும்? ஓ! அற்ப மூடா, உன் மகன்கள் தங்கள் அரசை இழப்பார்கள்" என்றும் யதுவிடம் யயாதி சொன்னதாக வைசம்பாயனர் சொல்கிறார்.
அவரிடம் {யதுவிடம்} இவ்வாறு கூறிய ராஜரிஷி {யயாதி}, ராஜ்யவிவர்த்தனரான {அரசை வளர்ப்பவரான} பூருவை அபிஷேகத்தால் {முடிசூட்டி} நன்கு கௌரவித்து, ஆசிரமத்திற்குள் பிரவேசித்தார்[6].(17) அதன்பின், நீண்ட காலத்திற்குப் பிறகு, நஹுஷாத்மஜரான யயாதி ராஜா, திஷ்டாந்தத்தை {விதியின் முடிவை / மரணத்தை} அடைந்து, திரிதிவத்தை {ஸ்வர்க்கத்தைச்} சேர்ந்தார்.(18) பெரும்புகழுடைய பூரு, பெரும் தர்மத்துடன் கூடியவராக, காசி ராஜ்ஜியத்தில் உள்ள சிறந்த புரமான {நகரமான} பிரதிஷ்டானத்தில் அந்த ராஜ்ஜியத்தை நடத்தினார் {அரசை ஆண்டார்}.(19) இராஜவம்சத்தில் இருந்து பஹிஷ்கரிக்கப்பட்ட {விலக்கப்பட்ட} யது, அணுகற்கரிய கிரௌஞ்சவனபுரத்தில் {கிரௌஞ்ச வனத்தில் உள்ள நகரத்தில்} ஆயிரக்கணக்கான யாதுதானர்களை ஜனனிக்க {பிறக்கச்} செய்தார்.(20)
[6] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 840ம் பாடல் பின்வருமாறு:நீ சுரரோடு மண்ணோர் இகழ நின் மைந்த னோடும்ஆசுர நரகம் சார்வாய் ஆகெனச் சபித்துச் செற்றோர்கூசு உரமுடைய கோமான் கொடுவினை அறுப்பான் கோலிமாசுரம் அடைந்தான் மற்றை மைந்தனை மகுடம் சூட்டிபொருள்: "யதுவே நீ விண்ணவரும் மண்ணவரும் இகழுமாறு நினைக்குப் பிறக்கும் மைந்தனோடு அசுரத்தன்மை வாய்ந்த கொடிய நரகத்தை அடைவாயாக", என்று சபித்துவிட்டுப் பகைவர்கள் நெருங்கிப் போர் செய்யக் கூசுதற்கேட்ட பெரிய வலிமையுடைய யயாதி என்னும் அரசன் மற்றை மைந்தனாகிய பூருவை மணிமுடி சூட்டிவிட்டுத் தவத்தினைச் செய்து, தன் கொடிய இருவினைகளை அறுத்தற்காகப் பெரிய காட்டை அடைந்தான்.
உசனஸால் {சுக்கிராசாரியரால்} வழங்கப்பட்ட இந்த சாபவிடுப்பு, யயாதியின் க்ஷத்ரதர்மத்தால் {க்ஷத்திரிய தர்மத்தால்} தாங்கப்பட்டது. இதை நிமியோ பொறுத்துக்கொள்ளவில்லை.(21) சௌம்யா {மென்மையானவனே, லக்ஷ்மணா}, அனைத்துக் காரியங்களையும் செய்பவர்களின் இந்த தரிசனம் {கருத்து} உனக்குக் கூறப்பட்டது. நிருகருக்கு ஏற்பட்டதைப் போன்ற தோஷம் {குற்றம்} உண்டாகாதபடி நாம் நடப்போம்" {என்றான் ராமன்}.(22)
சந்திரனுக்கு நிகரான ஆனனத்தையுடைய {முகத்தையுடைய} ராமன் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தபோது, வானம் மிகக் குறைந்த தாரைகளுடன் {நக்ஷத்திரங்களுடன்} விளங்கியது. அருணக் கிரணங்களால் {சூரியனின் செந்நிறக் கதிர்களால்} சிவந்த பூர்வ திக்கு {கிழக்குத் திசை}, மலர்களின் ரசம் நீங்கிய சுருங்கிய வஸ்திரம் போல் ஒளிர்ந்தது.(23)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 059ல் உள்ள சுலோகங்கள்: 23
| Previous | | Sanskrit | | English | | Next |

