First Janaka | Sarga-057 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: உடலைப் பெற்ற வசிஷ்டர்; தேவர்களின் வரத்தால் உயிரினங்களின் கண்ணிமைகளில் வசித்த நிமி; நிமியின் மகனாக உண்டான ஜனகன்...
அந்த திவ்யத் தோற்றமுடையதும், அற்புத தரிசனமுடையதுமான {வியப்பூட்டும் தன்மையுடையதுமான} கதையைக் கேட்ட பிறகு, பரமப்ரீதியடைந்த லக்ஷ்மணன் ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "காகுத்ஸ்தரே, தேகத்தைத் துறந்த அந்த துவிஜபார்த்திவர்கள் {பிராமணரும், அரசருமான அந்த} இருவரும், தேவர்களால் மதிக்கப்பட்டவர்களாக மீண்டும் தேகத்துடனான சம்யோகத்தை {சேர்க்கையை} எவ்வாறு அடைந்தனர்?" {என்று கேட்டான்}.(2)
சத்யபராக்கிரமனான ராமன், அவனுடைய {லக்ஷ்மணனின்} அந்தப் பேச்சைக் கேட்டு, மஹாத்மாவான வசிஷ்டரின் அந்தக் கதையை {பின்வருமாறு} விவரித்தான்:(3) "இரகுசிரேஷ்டா {ரகுக்களில் சிறந்தவனான லக்ஷ்மணா}, மஹாத்மாக்களான எந்த இருவரின் தேஜஸ்ஸால் நிறைந்திருந்ததோ, {அந்தக்} கும்பத்தில், தேஜோமயமானவர்களும், ரிஷிசத்தமர்களுமான விப்ரர்கள் {வேதியர்கள்} இருவர் தோன்றினர்.(4) அந்தக் கும்பத்தில் முதலில் பகவானான அகஸ்திய ரிஷி தோன்றினார். "நான் உன்னுடைய மகன் இல்லை" என்று கூறி, மித்ரனிடமிருந்து அவர் விலகிச் சென்றார்.(5) ஏனெனில், மித்ரனுடைய அந்தத் தேஜஸ் ஊர்வசியிடம் பூர்வத்தில் {முன்பே} வைக்கப்பட்டிருந்தது[1]. வருணனுடைய அந்தத் தேஜஸ் எந்தக் கும்பத்தில் {வைக்கப்பட்டிருந்ததோ}, அதே கும்பத்தில் {மித்ரனின் தேஜஸ்} தோன்றியது.(6) சில காலத்திற்குப் பிறகு, மித்ராவருணர்களால் தோன்றியவரும், தேஜஸ் பொருந்தியவருமான இக்ஷ்வாகுக்களின் தைவதம் பிறந்தார் {இக்ஷ்வாகு வம்சத்தவரின் வழிபாட்டுக்குரிய குல குரு வசிஷ்டர் பிறந்தார்}.(7) சௌம்யா {மென்மையானவனே, லக்ஷ்மணா}, மஹாதேஜஸ்வியான இக்ஷ்வாகு, நிந்திக்கத்தகாதவரான இந்த வசிஷ்டரைப் பிறந்த மாத்திரத்திலேயே, நம்முடைய இந்த வம்சத்தின் நன்மைக்காகப் புரோகிதராகத் தேர்ந்தெடுத்தார்.(8)
[1] தர்மாலயப் பதிப்பில், "ஏனெனில், எந்தக் கும்பத்தில் முதலில் மித்திரனது அந்த வீர்யமிருந்ததோ அதிலேயே அந்த ஊர்வசியின் அபசாரத்தால் விளைந்ததும் வருணனதுமாகிய வீர்யம் கலக்கப்பட்டது" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "அந்தக் கும்பத்தில் முதலில் மித்ரனது வீரியமும், அதன்மேல் வருணனது வீரியமும் வைக்கப்பட்டனவன்றோ" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "ஊர்வசியிடம் ஏற்கப்பட்ட காமமயக்கத்தால் மித்திரனிடமிருந்து நழுவிய வீரியம், முன்னதாக அந்தக் குடத்தில் இருந்தது. பின்னர், வருணனுடைய வீரியமும் அந்தக் குடத்தில் கலந்தது" என்றிருக்கிறது.
இவ்வாறு மஹாத்மாவான வசிஷ்டருடைய அபூர்வ தேகத்தின் {புதிய உடலைப் பெற்ற பிறகு இக்ஷ்வாகுவிடம் சென்ற} வெளியேறுதல் கூறப்பட்டது. சௌம்யா, நிமியின் நிலை எவ்வாறானது {என்பதைக்} கேட்பாயாக.(9) ஆழ்ந்த அறிவுடைய அந்த சர்வ ரிஷிகளும், தேகமற்ற {நிமி} ராஜரைக் கண்டு, அவரை யாக தீக்ஷையில் ஈடுபடுத்தினர்.(10) ஒன்றுகூடியவர்களான துவிஜோத்தமர்களும் {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்களும்}, பௌரர்களும் {நகரமக்களும்}, பணியாளர்களும், நரேந்திரனின் அந்த தேகத்தை {உணர்வற்ற / உயிரற்ற உடலை} நறுமணப் பொருள்களாலும், மாலைகளாலும், வஸ்திரங்களாலும் {ஆடைகளாலும்} தொடர்ந்து பராமரித்தனர்.(11)
பிறகு, யஜ்ஞம் நிறைவேறியபோது, அங்கே பிருகு {முனிவர்} இதைக் கூறினார், "பார்த்திபா, உன்னிடம் திருப்தியடைந்துள்ளேன். உன் சேதனத்தை {உணர்வை / உயிரை} மீண்டும் கொண்டு வருவேன்".(12)
பெரும்பிரீதியடைந்த சர்வ ஸுரர்களும் {தேவர்கள் அனைவரும்}, நிமியின் சேதனத்திடம் இவ்வாறு கூறினர், "ராஜரிஷியே, {ஒரு} வரத்தைத் தேர்ந்தெடுப்பாயாக. உன் சேதனம் எங்கு நிலைநிறுத்தப்பட வேண்டும்?"(13)
சர்வ ஸுரர்களாலும் இவ்வாறு கூறப்பட்டதும், நிமியின் தேசனம் அப்போது {பின்வருமாறு} கூறியது, "ஸுரசத்தமர்களே {தேவர்களில் சிறந்தவர்களே}, சர்வ பூதங்களின் நேத்திரங்களில் {அனைத்து உயிரினங்களின் கண்களில்} நான் வசிப்பேன்[2]."(14)
[2] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 818ம் பாடல் பின்வருமாறு:அந்த வேலையில் வந்து அமரர்கள் கூடிஅந்நிமி ஆவியை அழைத்துச்சிந்தையாம் உவந்தோம் ஒருவரம் வேண்டிக்கொள் கெனத் தேவர்கள் செப்பஇந்த மாநிலத்தோர் கண்களில் யான் நின்றுஇயங்கிட இவ்வரம் எனக்குத்தந்திட வேண்டும் என அவர் தந்தோம் என்று தாம்உறைவிடம் சார்ந்தார்பொருள்: வேள்வி முடியும் அந்த வேளையில் அமரர்கள் அங்கு வந்துகூடி, அந்த நிமியின் ஆவியை அழைத்து, "(இந்த வேள்வியால்) யாம் சிந்தை மகிழ்ந்தோம்; எங்களிடம் ஒருவரம் வேண்டிக் கொள்க" என்று சொல்ல, "இந்தப் பூமியில் உள்ளவர்கள் கண்களில் யான் நின்று உலவுகின்ற இந்த வரத்தை எனக்குத் தந்திட வேண்டும்" என்று நிமியின் ஆவி கேட்க, அந்தத் தேவர்கள் "தந்தோம்" என்று சொல்லிவிட்டுத் தாம் தங்கியிருக்கும் பொன்னுலகத்தைச் சேர்ந்தார்கள்.
அப்போது விபுதர்கள் {தேவர்கள் / ஞானிகள்}[3], "அவ்வாறே {ஆகட்டும்}" என்று நிமியின் சேதனத்திடம் கூறிவிட்டு, "வாயுபூதமாகி, சர்வபூதங்களின் நேத்திரங்களிலும் சஞ்சரிப்பாயாக {காற்றின் வடிவம் அடைந்து, அனைத்து உயிரினங்களின் கண்களிலும் இயங்குவாயாக}.(15) பிருத்வீபதே {பூமியின் தலைவா, நிமியே}, உன் காரணமாக வாயுபூதமாக சஞ்சரிப்பது {காற்றின் வடிவத்தில் இயங்கும் சேதனம்}, ஓய்வடைவதற்காக {உயிரினங்களின்} கண்களை மீண்டும் மீண்டும் இமைக்கச்செய்யும்[4]" {என்றனர்}.(16)
[3] விபுதர் என்பது தேவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்களில் ஒன்று. "வி" என்றால் சிறப்பு; "புத்" என்றால் அறிதல், உணர்தல் என்று பொருள். எனவே, "விபுத" என்றால் சிறப்பாக அறிந்தவர்கள் என்று பொருள். சாதாரண மனிதர்களைவிட திவ்ய ஞானம் பெற்றவர்களாதலால் தேவர்கள் விபுதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மேலும், ஸுரர்கள் {தெய்வீகமானவர்கள் / சிறந்தவர்கள்}, அமரர்கள் {அழிவற்றவர்கள்}, திரிதசர்கள் {முப்பத்து மூன்று தேவர்கள்} உள்ளிட்ட பல பெயர்களில் தேவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
[4] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "நிமியினால் உண்டானமை பற்றி இமைகொட்டுதலுக்கு நிமிஷமென்கிற பெயர் வழங்கலாயிற்று" என்றிருக்கிறது.
சர்வ விபுதர்களும் இவ்வாறு கூறிவிட்டு, வந்தவாறே திரும்பிச் சென்றனர். மஹாத்மாக்களான ரிஷிகளும் நிமியின் தேகத்தை {முன்பு போலவே} பராமரித்தனர்.(17) அப்போது, மஹாத்மாக்களான ரிஷிகள், நிமியின் புத்திர ஹேதுவுக்காக {நிமிக்கு புத்திரனைப் பெறுவதற்காக}, அங்கே அரணியை வைத்து, மந்திர ஹோமங்களுடன் {அந்த அரணிக்கட்டையை} வலிமையாக மதனம் செய்தனர் {கடையும் செயலைச் செய்தனர்}.(18) அரணி மதனம் செய்யப்பட்டு {கடையப்பட்டுக்} கொண்டிருந்தபோது, {ஒரு} மஹாதபமுடையவர் தோன்றினார். மதனத்தால் {கடைந்ததால் தோன்றிய} அவரை மிதி என்று கூறுகின்றனர். ஜனித்ததால் {பிறந்ததால்} அவர் ஜனகர் ஆனார். எந்த விதேஹரிடமிருந்து {தேகமற்ற நிமியிடம் இருந்து} தோன்றினாரோ, அதனால் வைதேஹர் என்றும் {அந்த நிமியின் மகன்} கருதப்பட்டார்.(19) இவ்வாறு மிதி என்ற பெயருடைய மஹாதேஜஸ்வி, பூர்வக {முதல்} ஜனகராகவும், விதேஹ ராஜராகவும் {விதேஹ நாட்டு மன்னராகவும்} ஆனார். அவரால் {அவரது வம்சத்தாரான} இவர்கள் மைதிலர்கள் ஆனார்கள்.(20)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 057ல் உள்ள சுலோகங்கள்: 20
| Previous | | Sanskrit | | English | | Next |
