Wednesday, 5 August 2026

விஷ்ணுவே ராமன் | சர்க்கம் – 051 (32)

Rama is Vishnu | Sarga-051 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற விஷ்ணு; பிருகு முனிவர் விஷ்ணுவுக்கு அளித்த சாபம்; "விஷ்ணுவே ராமனாகப் பிறந்தான்" என துர்வாசர் சொல்வது...

தசரதன் வசிஷ்டர் துர்வாசர் சுமந்திரன்

அவ்வாறு மஹாத்மாவான லக்ஷ்மணனால் தூண்டப்பட்ட சூதன் {சுமந்திரன், துர்வாச} ரிஷியால் கூறப்பட்ட அந்த வாக்கியத்தை {பின்வருமாறு} உரைக்கத் தொடங்கினான்:(1) "முன்பு அத்ரி புத்திரரும் {அத்ரி முனிவரின் மகனும்}, பெயரால் துர்வாசருமான {துர்வாசர் என்றழைக்கப்படுபவருமான} மஹாமுனிவர்[1], புண்ணியமான வசிஷ்டரின் ஆசிரமத்தில் வார்ஷிக்யத்திற்காக {சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதற்காகத்} தங்கியிருந்தார்[2].(2) மஹாதேஜஸ்வியும், பெரும் புகழுடையவருமான உம் பிதா {தசரதர்}, மஹாத்மாவான புரோஹிதரை {வசிஷ்டரைக்} காண விரும்பி அந்த ஆசிரமத்திற்கு தாமே[3] சென்றார்.(3) அவர் {தசரதர்}, சூரியனுக்கு ஒப்பாக, தேஜஸ்ஸால் பிரகாசிப்பவரைப் போன்ற மஹாமுனிவர் {துர்வாசர்}, வசிஷ்டரின் இடது பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.(4) அவர் பாத்யத்தாலும் {பாதங்களைக் கழுவுவதற்கான நீராலும்}, பழ, மூலங்களாலும் {கனி, கிழங்குகளாலும் உபசரிக்கப்பட்டு}, முனிவர்களுடன் சேர்ந்து {அங்கே} வசித்தார்.(5) 

[1] துஃ - கடினமான / துன்பமான, வாஸ - வாசம் செய்தல் / தங்குதல். துர்வாசர் என்றால், "உடன் வசிக்கக் கடினமானவர்" என்று பொருள். கடுமையான கோபத்திற்கும், உடனடியாகச் சாபம் வழங்கும் இயல்பிற்கும் துர்வாசர் புகழ்பெற்றவர். அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டு அவருடன் பழகுவதும், வசிப்பதும் மிகவும் கடினம் என்பதால் “துர்வாசர்” என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது.

[2] தர்மாலயப் பதிப்பில், "வசிஷ்டருடைய புண்ய ஆச்ரமத்திலேயே வார்ஷிகத்திற்காக வசித்துக் கொண்டிருந்தார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "முனிவர்கள் தக்ஷிணாயனம் முதல் நான்கு பக்ஷங்கள் ஒரே இடத்தில் இருப்பதாய் சங்கற்பித்துக் கொண்டு அங்ஙனமே செய்வது சாதுர்மாஸியம் அல்லது வார்ஷிக்யமென்பது" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "சாதுர்மாஸிய ஸங்கற்பத்திற்காக வசிஷ்டரது ஆச்சிரமத்திற் கெழுந்தருளி ஆங்கே வசித்திருந்தனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "கிராமைக ராத்திரமாக வசிக்கும் முனிவர்கள் வருஷாகாலத்திற்காக ஆடிமாதம் முதல் நான்கு மாதம் ஒரே இடத்தில் நிலையாய் வசிப்பதாகச் சங்கற்பித்துக் கொண்டு அங்ஙனமே செய்வது சாதுர்மாஸிய மென்னப்படும்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "முன்னொரு காலத்தில், புனிதமான வசிஷ்டருடைய ஆசிரமத்தில், மாரிக்காலத்தில் அனுஷ்டிக்க வேண்டிய சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார்" என்றிருக்கிறது. இங்கே மூலத்தில் உள்ள சொல், "வார்ஷிக்யம்" ஆகும்.

[3] இங்கே சில பாடங்களில் "த்வயம்" என்ற பாடம் காணப்படுகிறது. இது பொருள் தராத வடிவமாக உள்ளது. வேறு பாடங்களில் அவ்விடத்தில் "ஸ்வயம்" என்ற சொல் உள்ளது. அதன் பொருள் "தாமே" என்பதாகும். இச்சூழலில் "தாமே" என்ற பொருளே பொருத்தமாகத் தெரிவதால், "ஸ்வயம்" என்ற பாடமே இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆதித்யன் {சூரியன்} பகலின் மத்தியை அடைந்தபோது {நண்பகலில்}, அங்கே அமர்ந்திருந்தவர்களான பரமரிஷிகளின் அந்தந்த மதுரமான {இனிய} கதைகள் நிகழ்ந்தன.(6) பிறகு, ஏதோவொரு கதையின்போது, கைகூப்பிய நிருபன் {அரசன் தசரதன்}, மஹாத்மாவும், தபோதனருமான அந்த அத்ரி புத்திரரிடம் {தபத்தையே செல்வமாகக் கொண்டவரும், அத்ரி முனிவரின் மகனுமான துர்வாசரிடம் பின்வருமாறு} சொன்னார்:(7) "பகவானே, என்னுடைய வம்சம் நிலைத்திருக்கும் பிரமாணம் என்ன? {என் வம்சம் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்?} மேலும், என்னுடைய ராமனின் ஆயுள் என்ன? மேலும், பிற புத்திரர்களுக்கு ஆயுள் என்ன?(8) மேலும் ராமனின் மகன்கள் எவர்களோ, அவர்களின் ஆயுள் எவ்வளவு இருக்கும்? பகவானே, விருப்பத்துடன் என்னுடைய இந்த வம்சத்தின் கதியைக் கூறுவீராக" {என்று கேட்டார் தசரதர்}.(9)

இராஜாவான தசரதரால் கூறப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, மஹாதேஜஸ்வியான துர்வாசர் {பின்வருமாறு} உரைக்கத் தொடங்கினார்:(10) "இராஜன் {தசரதா}, முன்பு நடந்ததைக் கேட்பாயாக. தேவாசுர யுத்தத்தில், தேவர்களால் அச்சுறுத்தப்பட்ட தைத்தியர்கள் {அசுரர்கள்}, பிருகு பத்தினியை {பிருகு முனிவரின் மனைவியை} முழுமையாகச் சார்ந்தனர் {தஞ்சம் அடைந்தனர்}.(11) அப்போது, அவளால் அபயம் அளிக்கப்பட்ட அவர்கள் அங்கே பயமில்லாமல் வசித்தனர்.(12) அவளால் பாதுகாக்கப்பட்ட அவர்களை {தைத்தியர்களைக்} கண்டு குரோதமடைந்த ஸுரேஷ்வரன் {விஷ்ணு}[4], கூர்முனைகளையுடைய சக்கரத்தால் பிருகு பத்தினியின் சிரத்தை {பிருகு முனிவரின் மனைவியுடைய தலையை} வெட்டினான்.(13) பிறகு, {தம்} குலத்தைத் தாங்குபவரான பிருகு, ஹதம் செய்யப்பட்ட அந்த பத்தினியை {கொல்லப்பட்ட தம் மனைவியைக்} கண்டு, திடீரெனக் குரோதமடைந்து, ரிபுகுலார்த்தனனான {பகைவர் குலத்தை அழிப்பவனான} விஷ்ணுவைச் சபித்தார்.(14) 

[4] பொதுவாக, "ஸுரேஷ்வரன்" என்பது இந்திரனைக் குறிக்கும். ஆனால், இங்கு சக்கராயுதப் பயன்பாடு குறிப்பிடப்படுவதாலும், அடுத்த சுலோகத்தில் பிருகு விஷ்ணுவைச் சபித்தார் என்று நேரடியாக வருவதாலும், அதற்கடுத்த சுலோகத்தில் "ஜனார்த்தனா" என்ற விஷ்ணுவின் பெயர் பயன்படுத்தப்படுவதாலும், இங்கு குறிப்பிடப்படுபவன் விஷ்ணு என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

"ஜனார்த்தனா {ஜனங்களின் துன்பங்களை அழிப்பவனே, விஷ்ணுவே}, குரோதத்தில் மூர்ச்சித்து {கோபத்தால் மயங்கி}, வதைக்கத்தகாதவளான என் பத்தினியை {மனைவியை} எதனால் வதைத்தாயோ, அதனால் நீ மானுஷ லோகத்தில் {மனிதர்களின் உலகில்} பிறப்பாயாக.(15) அங்கே, நீ பல வருஷங்கள் நீடிக்கும் பத்னீவியோகத்தை {மனைவியின் பிரிவை} அனுபவிப்பாய்" {என்றார் பிருகு}.(16)

சாபத்தால் உள்ளங்கலங்கிய அவன் {விஷ்ணு}, தன் ஆத்மாவால் {உள்ளுணர்வால்} சிந்தனையில் ஆழ்ந்தான்[5].(17) பிருகு, சாபத்தால் பீடிக்கப்பட்ட அந்த தேவனை {விஷ்ணுவை} அர்ச்சித்தார் {வழிபட்டார்}[6].{18} தபத்தினால் ஆராதிக்கப்பட்டவனும், பக்தவத்ஸலனுமான தேவனோ {பக்தர்களிடம் அன்பு கொண்டவனுமான விஷ்ணுவோ}, "லோகங்களின் ஹித அர்த்தத்திற்காக {உலக நன்மைக்காக} அந்த சாபம் ஏற்றுக் கொள்ளத்தக்கது" என்று கூறினான்.(19) 

[5] இந்த சுலோகத்திற்கு முன்னோ, பின்னோ ஒரு சுலோகம் விடுபட்டிருக்க வேண்டும். கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "ஆனால், சாபம் கொடுத்த பிறகு, தன்னுடைய சாபம் பலிக்காமல் போய்விடுமோ? என்று பரிதவித்த பிருகு முனிவர், தான் கொடுத்த சாபம் பலிக்க வேண்டும் என்பதற்காக அந்த மஹாவிஷ்ணுவையே வழிபட்டார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "சீற்றங்கொண்டு இவ்வாறு சபித்தபின்னர் அம்முனிவர், "ஓகோ! மதிமயங்கி யிங்ஙனம் பகவானைச் சபித்தனமே! இஃது வீணாகுமாயின் யாது செய்வதெனப் பச்சாத்தாப மடைந்தவராகி, அந்தப் பகவானையே தவத்தில் ஆராதிக்கலாயினார்" என்றிருக்கிறது.  தர்மாலயப் பதிப்பில் இன்னும் அதிக செய்திகள், இன்னும் 7 அதிக சுலோகங்களில் வருகின்றன. அது பின்வருமாறு, "அந்த பிருகுமஹரிஷி இவ்வண்ணமாய் சாபத்தை இட்டுவிட்டு தனது பிறவிப் பெருந்தன்மையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடைய மஹிமையை நினைத்து சபித்ததில் பச்சத்தாபமடைந்தவராகி இனி என்ன செய்யலாமென சிந்திப்பவராகவும் ஆனார்.(1) வெகுகாலம் தன் அறிவு இழந்தவராகவே இருந்தார். இப்படி சாப இருளால் பற்றப்பட்டவராய் உணர்ந்து விச்வாசத்தாலேயே சப்தரிஷிகள் கிருபை செய்வதற்காக நேரில் வந்தார்கள்.(2) பிருகுமஹரிஷி எதிரில் எழுந்து நின்றார். சாபத்தை கொடுத்துவிட்ட அவர் தாழ்ந்த குரலில் இப்படி விண்ணப்பம் செய்தார்:(3) "ஹே மஹரிஷிகளே! என் பக்கலில் இருந்துகொண்டு உதவி புரிபவர்களாய் என்னை சாபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்".(4) மஹரிஷிகளும் பிருகுமஹரிஷியின் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்து அவரைப் பார்த்து இவ்விஷயத்தில் இப்படி பதிலுரைத்தார்கள்:(5) "நல்ல விரதம் பூண்டவரே! யாவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பிரம்ம, ருத்திர, சக்ராதிகளான {இந்திரன் முதலியோராலான} தேவர்களால் போற்றிப்புகழ சரியான பாத்திரராகிய ஸ்ரீமன் நாராயணனையே பகலிலும் இரவிலும் இடைவிடாது ஸதா ஸ்தோத்திரங்களாலேயே நீர் சரணமடைவீராக".(6) ரிஷிகளால் இவ்வண்ணமாய் சொல்லப்பட்ட அவர் ஸ்ரீமஹாவிஷ்ணு பூஜை ஒன்றையே செய்துவந்தார்.(7)" என்றிருக்கிறது.

[6] நாம் பார்க்கும் சம்ஸ்கிருத மூலப்பாடத்தில் 18ம் எண் கொண்ட சுலோகம் காணப்படவில்லை. எண்ணிக்கையிடுவதில் எண் மட்டும் விடுபட்டிருக்கிறதா, அல்லது ஒரு சுலோகமே விடுபட்டிருக்கிறதா என்ற ஐயத்தில் பிற பதிப்புகளை ஒப்புநோக்கும்போது, 5ம் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் கிடைத்தன. 5ம் அடிக்குறிப்பில் குறிப்பிடப்படும் அனைத்துப் பதிப்புகளிலும் உள்ள ஒரு சுலோகமே, அதாவது தர்மாலயப்பதிப்பில் முதல் சுலோகமே இங்கு விடுபட்டுள்ள அந்த 18ம் சுலோகமாக இருக்க வேண்டும்.

பார்த்திவ சத்தமா {அரசர்களில் சிறந்தவனே, தசரதா}, பூர்வஜன்மத்தில் பிருகுவினால் இவ்வாறு சபிக்கப்பட்ட மஹாதேஜஸ்வி {விஷ்ணு}, இங்கு உன்னுடைய புத்ரத்வத்தை அடைந்தான் {உனக்குப் புதல்வனானான்}.(20) மானதா {மதிப்பளிப்பவனே, தசரதா}, மூன்று உலகங்களிலும், "ராமன்" என்று பிரசித்திபெற்றவன் ஆவான். மேலும், பிருகுவின் சாபத்தால் உண்டான அந்த மஹத்தான பலனையும் {சாபத்தின் பெரும் விளைவையும்} அடைவான்.(21) இராமன், அயோத்தியின் பதியாக {தலைவனாக}, தீர்க்ககாலம் {நீண்ட காலம்} இருப்பான். இவனைப் பின்பற்றுபவர்கள் எவரோ, அவர்கள் சுகமுடையவர்களாகவும், செழிப்புடையவர்களாகவும் இருப்பார்கள்.(22) 

இராமன், பத்து ஆயிரம் வருஷங்களும், பத்து நூறு வருஷங்களும் {அதாவது மொத்தம் பதினோராயிரம் ஆண்டுகள்} ராஜ்ஜியத்தை உபாசித்து {நாட்டை அதன் அருகில் இருந்து தொண்டாற்றி}, பிரம்மலோகத்தை அடைவான்.(23) பரமதுர்ஜயனான {பெரிதும் வெல்வதற்கரியவனான ராமன்}, செழிப்புடைய அஷ்வமேத யஜ்ஞங்களை {குதிரை வேள்விகளைச்} செய்து, பல ராஜவம்சங்களையும் பல இடங்களில் ஸ்தாபிப்பான் {நிறுவுவான்}.(24) இராகவனுக்கோ {ராமனுக்கோ}, சீதையிடம் அயோத்தியிலில்லாமல் வேறிடத்தில் இரண்டு புத்திரர்கள் இருப்பார்கள் {பிறப்பார்கள்}. இது சத்யம் {உண்மை}; இதில் சந்தேகமில்லை.(25) பிறகு, சீதையின் புத்திரர்கள் இருவருக்கும் ராகவன் அபிஷேகம் செய்வான் {ராமன் பட்டம் சூட்டுவான்}" {என்றார் துர்வாசர்}.(26)

மஹாதேஜஸ்வி {துர்வாசர்}, ராஜனுடைய வம்சத்தில் கதாகதங்களான {நடந்ததும், நடக்கப் போவதுமான} அனைத்தையும் முழுமையாகக் கூறிய பின்னர் அமைதியாக இருந்தார்.(27) பிறகு, அந்த முனிவர் {துர்வாசர்} மௌனமான போது, ராஜா தசரதன் அந்த மஹாத்மாக்கள் இருவரையும் {துர்வாசரையும், வசிஷ்டரையும்} வணங்கி, மீண்டும் {தன்} உத்தம நகருக்கு {அயோத்திக்குச்} சென்றான்.(28) முன்பு அங்கே முனிவரால் உரைக்கப்பட்ட அந்தச் சொற்கள் என்னால் கேட்கப்பட்டன; மேலும், ஹிருதயத்திலும் வைக்கப்பட்டன {என் மனத்தில் ஆழமாகப் பதிந்தன}. அது வேறு விதமாகாது.(29)

இராகவரே {லக்ஷ்மணரே}, இவ்வாறு நிகழ்ந்த நிலையில், சந்தாபம் {வருத்தம்} உமக்குத் தகாது. நரோத்தமரே {மனிதர்களில் உத்தமரே}, சீதையின் அர்த்தத்திற்காகவோ, ராகவரின் அர்த்தத்திற்காகவோ திடமாக {சீதைக்காகவோ, ராமனுக்காகவோ உறுதியுடன்} இருப்பீராக" {என்றான் சுமந்திரன்}.(30)

மேலும், சூதனால் {தேரோட்டியான சுமந்திரனால்} கூறப்பட்ட பரம அற்புதமான வாக்கியத்தைக் கேட்டு, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து, "சாது, சாது {நன்று, நல்லது}" என்று கூறினான் {லக்ஷ்மணன்}.(31)

பிறகு, பாதையில் இவ்வாறு உரையாடிக் கொண்டிருந்த சூத, லக்ஷ்மணர்கள் இருவரும் {சுமந்திரனும், லக்ஷ்மணனும்}, அர்க்கன் அஸ்தம் {சூரியன் அஸ்த மலையை} அடைந்தபோது, கேசினியில் {கேசினி ஆற்றங்கரையில்} தங்கினர்.(32)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 051ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி