Valmiki | Sarga-049 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தனியே புலம்பித் தவித்த சீதையைக் கண்ட முனிகுமாரர்கள்; அவளைத் தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்ற வால்மீகி; அவளை ரிஷிபத்தினிகளிடம் ஒப்படைத்தது...
அழுதுகொண்டிருந்த சீதையைக் கண்டு, முனிதாரகர்களானவர்கள் {முனிவர்களின் பிள்ளைகளானவர்கள்}, பெரும் ஞானம் கொண்ட பகவான் வால்மீகி எங்கே இருந்தாரோ, அங்கே விரைந்து சென்றனர்[1].(1)
[1] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம் 781ம் பாடல் பின்வருமாறு:இன்னபலவும் பன்னி இடர் உறுவாள் இடர்தீரஎன்உயிர்தான் போகாதோ எனக் கதறும் அக்காலைவன்னியினும் தூயோனாம் வான்மீக மைந்தர்கள்தாம்நன்னுதலாள் அழும்ஓசை வழிவந்து நணுகுற்றார்பொருள்: இவைபோன்ற பலவற்றையும் சொல்லித் துன்புறுகின்ற சீதை, "இந்தத் துன்பம் எலாந்தீர எனது உயிர்தான் போகாதோ?" என வெறுத்துக் கதறுகின்ற பொழுது, நெருப்பினும் தூயவனாகிய வான்மீகியின் மைந்தர்கள், நல்ல நெற்றியையுடைய அந்தச் சீதை அழுகின்ற ஓசை வரும்வழியை ஓர்ந்து வந்து நெருங்கினார்கள்.சம்ஸ்கிருத மூலத்திலோ, நாம் ஒப்பிடும் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளிலோ இவர்கள் நேரடியாக வால்மீகியின் பிள்ளைகள் என்ற குறிப்பு எங்கும் கிடைக்கவில்லை. இவர்கள் முனிவர்களின் பிள்ளைகள், முனிமக்கள், ரிஷிகுமாரர்கள் என்றே சொல்லப்படுகிறார்கள். இந்த சர்க்கத்தின் இறுதி சுலோகத்தைப் படிக்கும்போது இவர்கள் வால்மீகியின் சிஷ்யர்களாகவும் இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் ஒட்டக்கூத்தர் இவர்களை வால்மீகியின் பிள்ளைகளாகவே காட்டுகிறார்.
முனிபுத்திரர்கள், {வால்மீகி} முனிவரின் இரு பாதங்களை வணங்கி, {அந்த} மஹரிஷியிடம் அனைத்தையும், அவளுடைய {சீதையின்} அழுகைச் சத்தத்தையும் {பின்வருமாறு} தெரிவித்தனர்.(2) பகவானே, {இதற்கு} முன்பு காணப்படாத இவள், எவரோ ஒரு மஹாத்மாவின் பத்தினியாக {மனைவியாக} இருக்க வேண்டும். ஸ்ரீயைப் போன்ற {லக்ஷ்மிதேவியைப் போன்ற} இவள், பெரும் மோஹத்தால் {மிகுந்த மயக்கத்தினால்} முகம் மாறிய {முகம் வாடி வதங்கிய} நிலையில் கதறி அழுகிறாள்.(3) பகவானே, வானத்திலிருந்து விழுந்த தேவதையைப் போன்றவளும், நதியின் தீரத்தில் {கங்கை ஆற்றங்கரையில்} துக்கத்துடன் இருப்பவளுமான யாரோ ஒரு சிறந்த ஸ்திரீயை நீர் நன்றாகப் பார்ப்பீராக.(4) திடமான சோகத்தில் ஆழ்ந்து, துக்கத்திற்கும் சோகத்திற்கும் தகாதவளாக, தனியாக, அனாதையைப் போல தீனமாக {பரிதாபமான நிலையில்} கதறி அழுதுகொண்டிருந்தவள் எங்களால் காணப்பட்டாள்.(5) நாங்கள் இவளை மானுஷியாக {மனிதப் பெண்ணாக} அறியவில்லை. இவளுக்கு சத்கிரியை {நல்ல உபசாரம்} செய்யப்படட்டும். மேலும், இவள் ஆசிரமத்திற்கு தூரமில்லாமல் {அருகில்} உம்மையே சரணமாக {அடைக்கலமாக} வந்தடைந்தாள்.(6) சாத்வீயானவள் {நல்லொழுக்கமுடையவளான அவள்}, தன்னைக் காப்பவரை விரும்புகிறாள்; ஆகையால், பகவானே, அவளைக் காப்பதற்கு தகுதியுடையீர்" {என்றனர் முனிகுமாரர்கள்}.
தர்மவித்தான அவர் {தர்மத்தை அறிந்தவரான வால்மீகி}, அவர்களுடைய வசனத்தைக் கேட்டு, புத்தியால் நிச்சயித்து, தவத்தினால் ஞானக் கண் பெற்றவராக, மைதிலி எங்கேயோ {எங்கே இருந்தாளோ}, அங்கே விரைந்து சென்றார்.(7) சீடர்கள், மஹாமதி உடையவரான {பேரறிவுடையவரான} அவர் புறப்பட்டுச் செல்வதை நோக்கி, அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த மஹாமதி உடையவரோ {வால்மீகி முனிவரோ}, அந்த இடத்தை நோக்கி சற்றே {சிறிது தூரம்} பாதநடையாகச் சென்றார்.(8) சிறந்த அர்க்கியத்தை {மங்கலப் பொருள்களுடன் கூடிய வரவேற்புக்குரிய நீரை} எடுத்துக் கொண்டு அவர் ஜாஹ்னவீ தீரத்தை {கங்கை ஆற்றங்கரையை} அடைந்தார். அங்கே ராகவனுக்கு இஷ்ட பத்தினியான சீதையை {அன்புக்குரிய மனைவியான சீதையை} அனாதையைப் போலக் கண்டார்.(9)
முனிபுங்கவரான வால்மீகி, சோகபாரத்தால் துன்புற்ற அந்த சீதையைத் தமது தேஜஸ்ஸால் மகிழ்விப்பவரைப் போல, மதுர வாணியை {இன்சொற்களைப் பின்வருமாறு} சொன்னார்:(10) "நீ தசரதனின் மருமகள்; ராமனின் பிரியத்திற்குரிய மஹிஷி {பட்டத்தரசி}; ஜனக ராஜனின் மகள். பதிவிரதே {கணவனையே நினைக்கும் நோன்புடையவளே}, உனக்கு ஸ்வாகதம் {நல்வரவு}.(11) தர்மசமாதியிலுள்ளவனான {தர்மத்தில் ஆழ்ந்து நிலைக்கும் மனத்தையுடைய} என்னால் {நீ} வருபவளாக அறியப்பட்டாய். மேலும் சர்வ காரணமும் {உன் வருகைக்கான முழுக் காரணமும்} என் ஹிருதயத்தால் உணரப்பட்டது.(12) மேலும், மஹாபாகே {பெரும்பாக்கியம் உடையவளே}, உன்னைப் பற்றிய அனைத்தும், மூவுலகங்களிலும் எவை நிகழ்கின்றனவோ {அவை அனைத்தும் உள்ளது} உள்ளபடியே என்னால் அறியப்பட்டுள்ளது.(13) சீதே, தபத்தின் மூலம் அடையப்பெற்ற பார்வையால் {ஞானக்கண்ணால்} உன்னை பாபமற்றவளாக அறிகிறேன். வைதேஹி, தற்போது என்னிடம் இருக்கிறாய். {எனவே} நம்பிக்கையுடன் இருப்பாயாக.(14) என் அசிரமத்திலிருந்து தூரமில்லாமல் {அருகில்} தபத்தில் நிலைபெற்ற தாபஸ்யைகளானவர்கள் {பெண் தபஸ்விகளானவர்கள்}, வத்ஸே {குழந்தாய்}, வத்ஸத்தை {பசுக்களால் காக்கப்படும் கன்றைப்} போல உன்னை நித்யம் பராமரிப்பார்கள்[2].(15) இந்த அர்க்கியத்தை நீ ஏற்றுக் கொள்வாயாக. ஜுவரம் நீங்கி {வேதனை எனும் பிணி விலகி}, சொந்த கிருஹத்தை {வீட்டை} அடைந்தவளைப் போன்ற நம்பிக்கையுடன், இனி விஷாதம் {வேதனை} அடையாதே" {என்றார் வால்மீகி}.(16)
[2] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 786ம் பாடல் பின்வருமாறு:எங்கள் ஆச்சிரமத்து எல்லை இவ்விடத்து எல்லை இல்லாமங்கையர் தவவேடத்தைத் தாங்கி மாதவம் செய்வோர்கள்அங்கு அவர் உன்னைக் கண்டால் அகமகிழ்ந்து உடனே கொண்டுதங்கள் ஆச்சிரமத்தே போய்த் தாங்குவர் தளரல் என்றான்பொருள்: "எங்கள் ஆச்சிரமத்து எல்லையாகிய இவ்விடத்தில் அளவில்லாத பெண்டிர் தவவேடம் தாங்கிப் பெருந்தவம் செய்கின்றவர்களாகவுள்ளார்கள்; அவர்கள் உன்னைக் கண்டுவிட்டால் மனமகிழ்ந்து உன்னை தங்கள் ஆச்சிரமத்திற்கு உடனே கொண்டு போய்ப் பாதுகாப்பார்கள்; எனவே மனந்தளராதே" என்றான் {வான்மீகி}.
சீதை, முனிவரின் பரம அற்புதமான பேச்சைக் கேட்ட பிறகு, சிரஸால் சரணங்களை {தலையால் அவரது இரு பாதங்களையும்} வணங்கி, கைகளைக் கூப்பியவளாக, "அப்படியே {ஆகட்டும்}" என்று கூறினாள்.(17) புறப்பட்டுச் செல்லும் அந்த முனியை {வால்மீகி முனிவரைப்} பின்தொடர்ந்து, கைகளைக் கூப்பியவளாக சீதை சென்றாள்.(18) வைதேஹியுடன் வந்து கொண்டிருக்கும் அந்த முனியை {வால்மீகி முனிவரைக்} கண்டு, அருகில் வந்த முனிபத்தினிகள் {முனிவர்களின் மனைவியர்}, மேலும் மகிழ்ச்சியுடன் கூடியவர்களாக {பின்வரும்} இந்த வசனத்தைக் கூறினர்:(19) "முனிசிரேஷ்டரே {முனிவர்களில் சிறந்தவரே}, உமக்கு ஸ்வாகதம் {நல்வரவு}. மேலும் நீண்ட காலத்திற்குப் பிறகு வருகிறீர்[3]. நாங்கள் அனைவரும் உம்மை வணங்குகிறோம். நாங்கள் செய்ய வேண்டியது என்ன? {என்பதைக்} கூறுவீராக" {என்றனர் பெண்தபசிகள்}.(20)
[3] தர்மாலயப் பதிப்பில், "ஹே முனிபுங்கவரே! தேவரீருக்கு ஸ்வாகதம். (தேவரீர் இங்கு வந்ததை மிகக் கொண்டாடுகிறோம்.) தேவரீர் இவ்விடம் எழுந்தருளி பலநாள் கடந்து விட்டன. தேவரீரை அனைவோரும் நமஸ்கரிக்கின்றோம். செய்ய வேண்டிய காரியம் ஏதேனும் உண்டானால் அது நியமித்தருளப்படட்டும். நாங்கள் செய்யக் காத்திருக்கின்றோம்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "முனிபுங்கவரே! ஏன் இவ்வளவு நாழிகைதாமதம்? தேவரீரது வரவை வெகுநேரமா யெதிர் பார்த்திருக்கின்றோமே; நாங்கள் அனைவோரும் நமஸ்கரிக்கின்றோம். யாங்கள் தமக்குச் செய்ய வேண்டிய காரியமேதேனும் உளதாயின் நியமித்தருள்க; செய்யக் காத்திருக்கின்றோம்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "வெகுநேர மென்றதனால், சீதையைச் சமாதானப் படுத்தல் முதலியவைகளுக்குச் சற்றுத் தாமஸமாகியதென விளங்கும்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "முனிவரே! தங்கள் வரவு நல்வரவாகுக. தாங்கள் இங்கு வந்து வெகுகாலமாகிவிட்டது. நாங்கள் எல்லோரும் தங்களை வணங்குகிறோம். நாங்கள், தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் விவேக்தேவ்ராயின் செம்பதிப்பின் அடிக்குறிப்பில், "வால்மீகி தம் ஆசிரமத்திலிருந்தே சீதையைச் சந்திக்கச் சென்றார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வேறு முனிவர்கள் அவரவர் ஆசிரமங்களில் இருந்த நிலையில், அவரைச் சந்தித்துச் சில காலம் ஆகியிருந்தது" என்றிருக்கிறது.
அவர்களுடைய {அந்தப் பெண் தபசிகளின்} அந்த வசனத்தைக் கேட்ட வால்மீகி இதைக் கூறினார், "வந்திருக்கும் இவள் சீதை. மதிமிக்க ராமனின் பத்தினி.(21) இவள் தசரதனின் மருமகள்; ஜனகனின் ஸதீ ஸுதை {நல்லொழுக்கமுள்ள மகள்}; பாபமற்றவள்; பதியால் {கணவன் ராமனால்} கைவிடப்பட்டவள்; என்னால் சதா பராமரிக்கப்பட வேண்டியவள்.(22) நீங்கள் இவளை பரம சினேகத்துடன் {மிகுந்த அன்புடன்} பார்ப்பீராக. மேலும் {என்} கௌரவத்தினாலும் {என் மீது கொண்ட மதிப்பினாலும்}, என் வாக்கியத்தினாலும் {இந்த சீதை} உங்களால் விசேஷமாக பூஜிக்கப்படுபவளாக {சிறப்பாக மதிக்கப்படுபவளாக} இருக்கட்டும்" {என்றார் வால்மீகி}.(23)
மஹாதபங்கள் செய்த பெரும் புகழுடையவர் {வால்மீகி முனிவர்}, வைதேஹியை {சீதையை} மீண்டும் மீண்டும் நோக்கி, மேலும், சிஷ்யர்களால் சூழப்பட்டவராகத் தமது ஆசிரமத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார்[4].(24)
[4] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவர் பிற முனிவர்களிடம் {பெண்தபஸ்விகளிடம்} சீதையை விட்டுவிட்டு வந்தார்" என்றிருக்கிறது.
உத்தர ராமாயணம் சர்க்கம் – 049ல் உள்ள சுலோகங்கள்: 24
| Previous | | Sanskrit | | English | | Next |
