Friday, 31 July 2026

கைவிடப்பட்ட சீதை | சர்க்கம் – 048 (26)

Sita abandoned | Sarga-048 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் ஆணை கேட்டு சோகக் கடலில் விழுந்த சீதை; லக்ஷ்மணனுக்கு விடைகொடுத்தனுப்பியது...

கங்கைக் கரையில் சீதை

ஜனகாத்மஜையான வைதேஹி {ஜனகனின் மகளும், விதேஹ நாட்டைச் சேர்ந்தவளுமான சீதை}, லக்ஷ்மணனின் கொடுஞ்சொல்லைக் கேட்டுப் பரமவிஷாதத்தை {பெரும் வேதனையை} அடைந்து {கீழே} விழுந்துவிட்டாள்.(1) ஜனகாத்மஜையான அவள் {சீதை}, ஒரு முஹூர்த்தம் உணர்வற்றவள் போலிருந்து, {மயங்கிக் கிடந்த பிறகு} கண்ணீரால் கலங்கிய கண்களை உடையவளாக தீனமான சொற்களால் லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(2) "இலக்ஷ்மணரே, என்னுடைய இந்த உடல் நிச்சயம் துக்கத்துக்காகவே தாத்ரனால் சிருஷ்டிக்கப்பட்டது {படைப்பாளியான பிரம்மனால் படைக்கப்பட்டது}. இன்று அஃது {அந்த உடல்} இவ்வாறான துக்கத்தின் வடிவமாக எனக்குக் காணப்படுகிறது[1].(3) பூர்வத்தில் {என்னால்} என்ன பாபம் செய்யப்பட்டதோ? அல்லது தாரங்களிடமிருந்து எவர் பிரிக்கப்பட்டாரோ? சுத்தசமாசாரமுடைய சதீயான {தூய நடத்தை கொண்ட நல்லவளான} நான் நிருபதியால் {ராஜா ராமரால்} கைவிடப்பட்டேன்.(4) 

[1] தர்மாலயப்பதிப்பில், "லக்ஷ்மணா! எந்த என்னுடைய அந்த மிக ஆசையுடன் போஷித்து வளர்க்கப்பட்ட தேஹம் துக்கமே வடிவெடுத்து வந்ததென இப்பொழுது காணப்படுகிறது. ஆனபடியால் நிச்சயமாய் பிரம்மதேவரால் துக்கத்துக்கென்றே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "லக்ஷ்மணா! என்னைப் பிரமதேவன் துக்கத்திற்கென்றே ஒரு பெண்ணாகப் படைத்தனன் போலும்; எனது தேகம் முழுவதுமே துக்கவடிவமாகவே யன்றோ காணப்படுகின்றது!" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "லட்சுமணா! என்னுடைய இந்த உடலை, துக்கங்களை அனுபவிப்பதற்காகவே பிரம்மா படைத்திருக்கிறார் போலும்! உலகத்தின் துக்கமெல்லாம் உருவம் ஏற்று, என்முன் வந்து நிற்பது போலக் காணப்படுகிறது" என்றிருக்கிறது.

சௌமித்ரே, முன்பு நான் ஆசிரம வாசத்தையும் {ஆசிரமத்தில் வசிப்பதையும்}, ராமரின் பாதங்களைப் பின்பற்றுவதையும் விரும்பி {ஏற்றுக் கொண்டு} துக்கத்திலும் இருந்தேன்.(5) சௌம்யரே, ஜனங்களிடமிருந்து பிரிக்கப்பட்டவள் {தனிமையில் விடப்பட்டவள்} எவ்வாறு ஆசிரமத்தில் வசிப்பாள்? மேலும் துக்கத்தில் ஆழ்ந்தவளான நான் எவரிடம் {என்} துக்கத்தைத் தெரிவிப்பேன்?6) முனிவர்களிடம் என்ன கூறுவேன்? அல்லது, செய்யப்பட்ட நற்கர்மம் {நற்செயல்} என்ன? மஹாத்மாவான ராகவரால் ஏதோவொரு காரணத்தால் கைவிடப்பட்டேன்.(7) சௌமித்ரே, நிச்சயம் இன்றே ஜாஹ்னவீஜலத்தில் {கங்கை நீரில்} ஜீவிதத்தை விடமாட்டேன். எனினும், {அவ்வாறு உயிரை விட்டால்}, என் பர்த்தாவின் {கணவர் ராமரின்} ராஜவம்சம் பரிஹாசம் செய்யப்படும் {கேலியாக இகழப்படும்}[2].(8) சௌமித்ரே, ஆணைப்படி செயல்படுவீராக. துக்கபாகினியான {துக்கத்தின் பங்குடையவளான} என்னைக் கைவிடுவீராக. ராஜாவின் கட்டளையில் நிலைபெறுவீராக. மேலும் என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்பீராக.(9)

[2] தர்மாலயப் பதிப்பில், "மஹாத்மாவாகிய ஸ்ரீராகவராலேயே ஏதோ ஒரு காரணத்தைப்பற்றி கைவிடப்பட்டேன். முனிவர்களிடத்தில் எந்த ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளுகிறதாகிய கார்யத்தில் என்னதான் நான் சொல்லவிருக்கிறது. லக்ஷ்மண! உயிரை கங்காபிரதேசத்தில் இப்பொழுதே நான் ஒழித்துவிடலாம். எனது பர்த்தாவினது ராஜவம்சமானது நிந்திக்கப்படும் என்கிறபடியால் நான் அது செய்யலாகாது" என்றிருக்கிறது, "ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "முனிவர்களிடம் யான் யாது சொல்வேன்? யாது நற்செய்கை செய்யத்துணிவேன்? இராகவன் ஏதோ ஒரு காரணம் பற்றி யென்னைத் துறந்தனர்; இஃது பொறுக்கத்தகுவதன்றதாலின், யான் இப்பொழுதே இக்கங்கையில் வீழ்ந்து உயிரையொழித்து விடலாம்; ஹே ஸௌமித்திரே! அங்ஙனஞ் செய்வேனாயின், அஃது களங்கமற்ற மஹாகுலத்திற் பிறந்த எனது பர்த்தாவுக்கு ஒரு பெரிய பழிப்பாகுமாதலின், அங்ஙனஞ் செய்யத் துணிகின்றிலேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இப்பொழுதே யென்றதனால், பிரஸவமானபின் உயிரை விடுவது திண்ணமென்பது குறிப்பித்த தாயிற்று" என்றும், "பழிப்பு - ஸ்திரீஹத்தி செய்தாரென்கிற அபகீர்த்தி. கருவுற்றிருக்கின்ற இத்தருணத்தில் யான் உயிரை விடுவேனாயின், எனது பர்த்தாவினது குலம் இவ்வளவோடு அழிந்துவிடு மாதலின் - என்பதும் இதற்குப் பொருளாகும். கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், ""மஹாத்மாவான இராகவன் எந்தக் காரணத்தால் உன்னைத் தியாகம் செய்தார்?" என்று முனிவர்கள் கேட்குபோது, நான் எந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறுவேன்? லட்சுமணா! கங்கையில் மூழ்கி, இப்போதே என் வாழ்க்கைக்கு முடிவு கட்டுவேன். அவ்வாறு நான் உயிரைவிட்டால், என் கணவரின் வம்சப் பரம்பரை தடைபட்டுப் போகும்" என்றிருக்கிறது.

வேறுபாடின்றி {என்} மாமியார்களின் சரணங்களை சிரசால் {பாதங்களைத் தலையால்} வணங்கி, கைகூப்பிய நிலையில் பார்த்திபரிடம் குசலம் {நலம்} தெரிவிப்பீராக.(10) இலக்ஷ்மணரே, சிரசால் பணிந்து வணங்கியவராகவே அனைவரிடமும் கூறுவீராக. மேலும் தர்மங்களில் நன்கு நிலைப்பவரான நிருபதியிடமும் {ராஜா ராமரிடமும்} கூறுவீராக.(11) "இராகவரே, சீதை உள்ளபடியே எவ்வாறு சுத்தமானவள் என்றும், மிகவுயர்ந்த பக்தியுடையவள் என்றும், நித்தயம் உமக்கு ஹிதம் {நன்மை} செய்பவள் என்றும் {நீர்} அறிவீர்.(12) வீரரே, புகழ் இழப்புக்கு {இகழ்ச்சிக்கு} அஞ்சுபவரான உம்மால் நான் ஜனங்களிடையே கைவிடப்பட்டேன். உமக்கு அபவாதத்தால் {அவதூறால்} எழுந்த வசை {பழிச்சொல்} எதுவோ, அதுவும் என்னாலேயே நீக்கப்பட வேண்டும். நீரே எனக்குப் பரம கதியாவீர் {எனக்கு உயர்ந்த புகலிடமாவீர்}.(13) பிராதாக்களிடம் {சகோதரர்களிடம்} எவ்வாறோ, அவ்வாறே பௌரர்களிடமும் {நகர மக்களிடமும்} நடந்து கொள்வீராக" என்று தர்மத்தில் நன்கு நிலைப்பவரான நிருபதியிடம் {ராஜா ராமரிடம் நான் சொன்னதாகக்} கூறுவீராக.(14)

"இதுவே உமது பரம தர்மமாகும். அதனால் {உமக்கு} ஒப்பற்ற கீர்த்தி {உண்டாகும்}.(15) இராஜரே, நரரிஷபரே {மனிதர்களில் காளையே}, பௌரஜனங்கள் {நகரமக்கள்} தர்மத்தால் எதை அடைவார்களோ, அதற்காக {அந்த நன்மைக்காக} நான் என் சரீரத்தைக் குறித்து வருந்தவில்லை.(16) இரகுநந்தனரே, பௌரர்களின் அபவாதம் எவ்வாறோ, அவ்வாறே {நகரத்தாரின் அவதூறின்படியே} நடக்கட்டும். நாரிக்கு பதியே தேவதை {பெண்ணுக்குக் கணவனே தெய்வம்}; பதியே பந்து {உறவினன்}; பதியே குரு {வழிகாட்டி}.(17) எனவே, பர்த்தாவின் {கணவரின்} காரியம் பிராணன்களைக் காட்டிலும் பிரியமானது; விசேஷமானது {குறிப்பாகச் செய்யப்பட வேண்டியது}"[3] என்ற  என் வசனத்தை ராமரிடம் கூறுவீராக. ருது காலத்தைக் கடந்தவளான {கருவுற்றவளான} என்னைப் பார்த்து {என் நிலையை அறிந்து}[4] இன்றே நீர் செல்வீராக" {என்றாள் சீதை}.(18)

[3] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தப் பகுதியை மேற்கோள் குறிகளுக்குள் வைப்பதற்கான எந்தக் காரணத்தையும் அந்த உரை சுட்டிக்காட்டவில்லை. சீதை இச்சொற்களை லக்ஷ்மணனை நோக்கியும் கூறியிருக்கலாம். ஆனால் லக்ஷ்மணன் மூலமாக ராமருக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகவே இது தோன்றுகிறது. எனவே, நாங்கள் இதனை மேற்கோள் குறிகளுக்குள் அமைத்துள்ளோம்" என்றிருக்கிறது. இந்தக் கருத்து 12 முதல் 14ம் சுலோகம் வரையுள்ள பகுதிக்கும் பொருந்தும். ஆனால் அந்தப் பகுதி விவேக்தேவ்ராயின் ஆங்கில செம்பதிப்பில் இல்லை.

[4] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 771ம் பாடல் பின்வருமாறு:

இளையோய் நான் ருதுவாகி ஈரிண்டு திங்கள்உள
வளை ஆழி உலகத்தை வாய்மூட ஒண்ணாது
விளைவு ஏதாய் முடியுமோ என்று அறியேன் என்மேனிதனை
உளையாத சிந்தையனாய் உற்று நோக்கு என உரைத்தாள்.

பொருள்: இளையவனே, நான் பூப்பு அடைந்து நான்கு மாதங்கள் ஆயின! கடலால் வளைக்கப் பெற்ற பெரிய உலகத்தின் வாயை மூட முடியாது! என்னை வனத்தில் புகுத்தியதன் விளைவு என்னவாக முடியுமோ என யான் அறியேன்; கருவுற்றிருத்தலால் வேறுபட்டுள்ள மேனிதனை வருந்தாத சிந்தையனாய் உற்று நோக்குவாயாக.


சீதை இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில், உள்ளம் வாடிய லக்ஷ்மணன், பேசுவதற்கு இயலாதவனாகவே தரணீயை சிரசால் {தரையைத் தலையால்} வணங்கினான்.(19) மஹாஸ்வனத்துடன் {பேரொலியுடன் உரக்க} அழுது கொண்டே, அவளைப் பிரதக்ஷிணஞ்செய்து {வலம் வந்து}, ஒரு முஹூர்த்தம் சிந்தித்து, அவளிடம் {பின்வருமாறு} கூறினான், "சோபனே, என்னிடம் என்ன கூறப்போகிறாய்?(20) அநகே {குற்றமற்றவளே}, உனது ரூபத்தைப் பூர்வத்தில் கண்டதில்லை; உன்னிரு பாதங்களையே கண்டிருக்கிறேன். இராமரின்றி விடப்பட்டவளை {ராமரைப் பிரிந்தவளை} இவ்வனத்தில் எவ்வாறு காண்பேன்?"[4] {என்றான் லக்ஷ்மணன்}.(21)

[4] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 773ம் பாடல் பின்வருமாறு:

கன்றிய சிந்தையினாய் உன் கணவன் உனைக்கைப்பிடித்த
அன்றுமுதல் இன்று அளவும் உன்னுடைய அடிபணிந்து
நின்ற பொழுதிலும் தூயோய் நின்மேனி கண்டறியேன்
இன்றுதான் உனைக்காண வல்லனோ என உரைத்தான்

பொருள்: "வருந்திய சிந்தையுடையவளே, தூய்மையுடையவளே, உன் கணவன் உன்னைக் கைப்பற்றி மணந்து கொண்ட அன்று முதல் இன்று வரையில் உன்னுடைய திருவடிகளைப் பணிந்து நின்ற போதும் (நின் திருவடியை யன்றி) நின்மேனியை நிமிர்ந்து பார்த்தறியேன்; அத்தகைய யான் இன்றைக்குத்தான் உன் மேனியைப் பார்க்க வல்லவன் ஆவேனோ" என்று சொன்னான்.

இவ்வாறு கூறி, அவளை வணங்கி, மீண்டும் நாவத்தில் {படகில்} ஏறினான். மீண்டும் படகில் ஏறியதும் நாவிகனை {படகோட்டியைத்} தூண்டினான்.(22) மேலும், சோகபாரத்துடன் கூடிய அவன், துக்கத்தால் மயங்கியவன் போல, உத்தர தீரத்தை {கங்கையாற்றின் வட கரையை} அடைந்து, துரிதமாக ரதத்தில் ஏறினான்.(23) பிறகு லக்ஷ்மணன், பரதீரத்தில் {மறுகரையில்} அநாதையைப் போலத் தவித்துக் கொண்டிருந்த சீதையைக் கண்டு, மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தபடியே  சென்றான்.(24) தூரத்தில் சென்ற ரதத்தைக் கண்டு, மேலும் லக்ஷ்மணனையும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கலங்கிய சீதை சோகத்தால் ஆட்கொள்ளப்பட்டாள்.(25) புகழுடையவளும், புகழையே தனமாக {செல்வமாகக்} கொண்டவளும், துக்க பாரத்தால் தாழ்ந்தவளும், நாதனை {தன் தலைவன் ராமனைக்} காணாமல் துக்கத்தில் ஆழ்ந்தவளுமான அவள் {சீதை}, மயில்களின் நாதத்தால் நிறைந்த வனத்தில் மஹாஸ்வனத்துடன் {பேரொலியுடன்} அழுதாள்.(26)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 048ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி