Janaka and other Kings | Sarga-038 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மாமனாரான விதேஹ ராஜன் ஜனகன், தாய்மாமனான கேகய ராஜன் யுதாஜித், நண்பனான காசி ராஜன் பிரதர்த்தனன் உள்ளிட்ட முன்னூறு ராஜாக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய ராமன்...
இவ்வாறு[1] மஹாபாஹுவான ராகவன் {ராமன்} நாள்தோறும் பௌர, ஜானபதங்களின் {நகர மக்கள், நாட்டு மக்களின்} சர்வ காரியங்களையும் நிர்வகித்துக் கொண்டிருந்தான்.(1) பிறகு சில நாட்களில் ராகவன், வைதேஹனான மிதிலாதிபனிடம் {விதேஹ நாட்டு மன்னனும், மிதிலையின் அதிபதியுமான ஜனகனிடம்} கைகளைக் கூப்பி வணங்கியவனாக இந்த வாக்கியத்தைச் சொன்னானாம்.(2) "தாமே கலக்கமில்லாத கதி {புகலிடம்}. தம்மால் நாங்கள் பாலிதம் செய்யப்பட்டோம் {பாதுகாக்கப்பட்டோம்}. தங்கள் உக்கிர தேஜஸ்ஸால் ராவணன் என்னால் ஹதம் செய்யப்பட்டான் {அழிக்கப்பட்டான்}.(3) இராஜரே, இக்ஷ்வாகுக்கள் அனைவருக்கும், மைதிலர்களுக்கும் {மிதிலையைச் சேர்ந்தவர்களுக்கும்} அனைத்துவிதங்களிலும் சம்பந்தத்தை முதன்மையாகக் கொண்ட ஒப்பற்ற பிரீதிகள் {மகிழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன}.(4) எனவே, பார்த்திபரே {மன்னரே}, தாம் ரத்தினங்களை எடுத்துக் கொண்டு {உமது} சொந்த புரத்திற்கு {மிதிலா நகருக்குச்} செல்வீராக. மேலும் பரதனும் சஹாயத்திற்காக {உதவிக்காக} உமக்குப் பின்னால் பின்தொடர்ந்து வருவான்" {என்றானாம் ராமன்}.(5)
[1] ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர், ஹரிபிரசாத்சாஸ்திரி பதிப்புகளிலும், தமிழில் ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பிலும், இதற்கு முன்பு இன்னும் 4 அத்தியாயங்கள் அதிகபாடமாக இடம்பெறுகின்றன. அவற்றின் சுருக்கங்கள் ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில் உள்ளபடி பின்வருவனவாகும். ஸ்ரீராமபிரான் வினவ, அகஸ்தியர் வாலி சுக்ரீவர்களின் பிறப்பு வரலாற்றைக் கூறுகியது.(1) இராவணன் வைதேஹியை அபகரித்த காரணத்தை அகஸ்தியர் ஸ்ரீராமனுக்கு உரைக்கத் தொடங்கி, இராவணன் சனத்குமாரரை அடுத்து, யாவர்க்கும் மேலான புருஷன் யாவனெனவும், போரில் பிராணனை விடுக்கின்றவர்களுக்குக் கிடைக்கும் கதியாதெனவும் வினவியது கூறுகின்றனர்.(2) ஸ்ரீமந்நாராயணனே இணையில்லாத உத்தமபுருஷனென்றும், அவன் கையினால் மடிகின்றவர் மோக்ஷம் பெறுவரென்றும், அவன் தசரதசக்கரவர்த்திக்குப் புதல்வனாய் அவதரித்துத் தன் தம்பியுடனும் தருமபத்தினியுடனும் தண்டகாவனத்திற் புகுந்து வசிக்கப்போகிறனரென்றும் சனத்குமாரர் கூறியது கேட்டு இராவணன் தேவரீர் கையினால் மரணமடைய விரும்பி, தேவரீருடன் பகை கொள்ளும் நிமித்தமே பிராட்டியைப் பற்றிக் கொண்டு போயினானென அகஸ்தியர் கூறியது.(3) சுவேதத்வீபவாசிகளின் மகிமையை நாரதர் கூறக்கேட்டு, இராவணன் அவர்களுடன் அமராட ஆவல்கொண்டு அவ்விடஞ்சென்று அங்கிருந்த பெண்களால் பரிபவமடைந்ததும், பிறகு ஸனத்குமாரமுனிவரிடம் சுவேதத்வீபவாசிகளின் பெருமையைப் பின்னும் நன்றாகக்கேட்டுணர்ந்து ஸ்ரீராமாவதாரகாலம் குறுகுவது யெதிர்பார்த்திருந்ததும் கூறி அகஸ்தியர் முதலாயினோர் விடைபெற்றுச் சென்றது.(4)
அந்த நிருபன் {மன்னன் ஜனகன்}, "அவ்வாறே" என்று ஏற்றுக்கொண்டு, ராகவனிடம் {இந்த} வாக்கியத்தைக் கூறினான், "இராஜரே, தம்முடைய தரிசனத்தாலும், நயத்தினாலும் {பண்பினாலும்} நான் பிரீதி அடைந்தவனாக இருக்கிறேன்.(6) ஆனால், ராஜரே, எனக்காக மேலும் திரட்டப்பட்ட இந்த ரத்தினங்கள் எவையோ, அவை அனைத்தையுமே என் துஹிதைக்கே {மகளான சீதைக்கே} அளிக்கிறேன்" {என்றான் ஜனகன்}.(7) மகிழ்ச்சியான மனத்துடன்கூடிய ஸ்ரீமான் ஜனகனோ, காகுத்ஸ்தனிடம் இவ்வாறு கூறிவிட்டு, அந்த ராகவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு மிதிலைக்குப் புறப்பட்டான்.(8)
பிறகு, ஜனகன் புறப்பட்டுச் சென்றதும், பிரபுவான ராகவன் தன் மாதுலனான {தாய்மாமனான} கேகயனிடம் {யுதாஜித்திடம்} கைகளைக் குவித்தவனாக இருந்து கொண்டு இந்த வாக்கியத்தைக் கூறினானாம்:(9) "இராஜரே, புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, இந்த ராஜ்ஜியமும், நானுங்கூட, மேலும் பரதனும், லக்ஷ்மணனும்[2] தம்மையே சார்ந்தவர்களாக இருக்கிறோம். ஏனெனில் தாமே எங்களுக்கு கதியாகவும் {புகலிடமாகவும்} திகழ்கிறீர்.(10) ஏனெனில், விருத்தரான ராஜா {முதிய மன்னரும், உமது தந்தையுமான அஷ்வபதி}, உம் பொருட்டு சந்தாபத்தை {உம்மைக் காணாமல் வேதனையை} அடைவார். எனவே, பார்த்திபரே, இன்றே புறப்படுவது உமக்கு உகந்ததாக இருக்கிறது.(11) விபுலமான தனத்தையும் {பெருஞ்செல்வத்தையும்}, மேலும் விதவிதமான ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு, லக்ஷ்மணன் அனுயாத்திரிகனாக {உடன் பயணிப்பவனாக} உமக்குப் பின்னால் பின்தொடர்ந்து வருவான்" {என்றானாம் ராமன்}.(12)
[2] சத்ருக்னனின் பெயரை இங்கே ராமன் குறிப்பிடவில்லை. "சத்ருக்னன் அப்போது அயோத்தியில் இல்லை; லவணாசுரனை வதம் செய்துவிட்டு மதுராவின் ஆட்சியில் இருந்தான்" என்று சிலரும், "பரதனின் பெயருக்குள்ளேயே சத்ருக்னனும் அடக்கம்" என்று சிலரும் கூறுகின்றனர். உத்தரராமாயணத்தின் 64 முதல் 70ம் சர்க்கம் வரை சத்ருக்னன் லவணனுடன் போரிட்டு, மதுவனத்தை அழித்து, மதுரா என்ற நகரத்தை அமைத்து, அங்கே 12 ஆண்டுகள் வசித்தது சொல்லப்படுகிறது. எனவே, அதற்கு முன்பே இந்நிகழ்வு நடந்திருக்க வேண்டும். சத்ருக்னன் அப்போது அயோத்தியில் இருந்தபோதிலும், கேகய, விதேஹ நாட்டு அரசர்களை வழி அனுப்பும் பொறுப்பு முறையே அவர்களின் மருமகன்களான லக்ஷ்மணன், பரதன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டதால் சத்ருக்னன் பெயர் விடுபட்டிருக்கலாம்; எனினும் அடுத்த சர்க்கத்தில் அவன் தமையன்மார்களுடன் இணைகிறான்.
யுதாஜித்தோ, "அவ்வாறே" என்று கூறிவிட்டு, புறப்படுவது குறித்து ராகவனிடம், "ரத்தினங்களும், மேலும் தனமுங்கூட உன்னிடமே அக்ஷயமாக {வற்றாததாக} இருக்கட்டும்" என்றான்.(13) கேகய வர்தனனான அவன் {யுதாஜித்}, ராஜாவை {ராமனை} பிரதக்ஷிணம் செய்தான் {வலம் வந்தான்}. ஏனெனில் முன்பே ராமனால் {யுதாஜித்துக்கு} வணக்கம் செலுத்தப்பட்டு, பிரதக்ஷிணமும் செய்யப்பட்டிருந்தது.(14) அசுரன் விருத்திரன் ஹதம் செய்யப்பட்ட பிறகு, விஷ்ணுவுடன் கூட வாசவன் {இந்திரன் சென்றது} போல, சகாயனான லக்ஷ்மணனுடன் கேகயேஷ்வரன் {யுதாஜித்} புறப்பட்டுச் சென்றான்.(15)
பிறகு ராமன், அவனை {யுதாஜித்தை} வழியனுப்பிவிட்டு, எங்குமெதிலும் பயமில்லாதவனும், தன் நண்பனும், காசிபதியுமான பிரதர்த்தனனை ஆரத்தழுவிக் கொண்டு, இதைக் கூறினான்:(16) "இராஜனே, உன்னால் பிரீதி காட்டப்பட்டது. பரம {மேலான} நட்பும் காட்டப்பட்டது. மேலும் உன்னுடனுங்கூட பரதனால் உத்யோகமும் {முயற்சியும்}[3] செய்யப்பட்டது.(17) எனவே, காசேயா, நீ இன்று ரமணீயமானதும், உன்னால் பாதுகாக்கப்பட்டதும், பிரகாசம் மிக்கதும், தோரணங்களை உடையதுமான {காசியின் தலைநகர்} வாராணசிக்குப் புறப்பட்டுச் செல்வாயாக" {என்றான் ராமன்}.(18)
[3] தர்மாலயப் பதிப்பில், "அரசே! பரதனோடுகூட தேவரீரால் ப்ரீதியானது காட்டப்பட்டது. அதனால் தேவரீரால் ப்ரீதியானது பிரத்யக்ஷத்தில் விளங்குகிறது. பரம விச்வாசமும் ப்ரத்யக்ஷத்தில் விளங்குகிறது" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "காசிதேசாதிபதியான நண்பனே! உனக்கு என்னிடமுள்ள பிரீதி விசுவாஸங்களை நீ நன்கு வெளியிட்டன்; நீ இராவணனை வதைசெய்யும் விஷயத்தில் பரதனுடன் கூடிய எனக்கு உதவிபுரிய உத்யோகஞ் செய்தனையன்றோ?" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இவ்வாறு இங்கு அநுவாதஞ்செய்தமையின், அக்காசிவேந்தன் இராவணஸம்ஹாரத்திற்கு உதவிபுரியச் சென்றிருந்தன னென்பது விளங்கும்" என்றிருக்கிறது. இப்பதிப்பிலும், இந்த அடிக்குறிப்பிலும் உள்ள செய்தியை உறுதிப்படுத்த யுத்தகாண்டத்திலோ, உத்தரகாண்டத்திலோ, ஏன் எந்த காண்டத்திலுமே இல்லை. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "மன்னரே, தாங்கள் என் பட்டாபிஷேக காரியங்களில் பரதனுக்கு மிகவும் அனுகூலமாக இருந்து பேருதவி செய்து, தங்கள் பேரன்பையும் நட்பையும் வெளிக்காட்டினீர்கள்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது தெளிவற்று உள்ளது. பிரதர்த்தனன் பரதனுக்கு எதில் உதவினான் என்பது தெளிவாக இல்லை. செம்பதிப்பல்லாதவையும் அதிகபாடமுள்ளவையுமான பதிப்புகளிலும் இது தெளிவாக இல்லை. இராவணனுக்கு எதிராகப் போரிட ராமனுக்கு உதவுவதாகப் பிரதர்த்தனன், பரதனிடம் உறுதியளித்தான் என்பதே இதற்கான விளக்கமாகும்" என்றிருக்கிறது.
மேலும் தர்மாத்மாவான காகுத்ஸ்தன் {ராமன்}, இவ்வளவு கூறிவிட்டுத் தன் பரம ஆசனத்திலிருந்து எழுந்து, தன் மார்பை அடைந்த அவனை {பிரதர்த்தனனை} இடைவெளியின்றி தழுவிக் கொண்டான்.(19) அப்போது, கௌசல்யா ஆனந்த வர்தனன் {ராமன், பிரதர்த்தனனுக்கு} விடைகொடுத்து அனுப்பினான். இராகவனிடம் விடைபெற்றுச் சென்றவனும், எதற்கும் பயப்படாதவனுமான காசீசனும், ராகவனால் வழியனுப்பப்பட்டவனாக, விரைவாக வாராணசிக்குச் சென்றான்.(20)
அந்தக் காசிபதியை வழியனுப்பிவிட்டு, முன்னூறு பிருதிவிபதிகளிடம் {மன்னர்களிடம்} ராகவன் புன்னகைத்தபடியே மதுரமான அக்ஷரங்களுடைய {இனிமையான எழுத்துகளுடைய பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(21) "தங்களின் கலங்காத பிரீதி, தேஜஸ்ஸால் முழுதாகப் பாதுகாக்கப்பட்டது. மேலும் தங்களின் தர்மமும் நித்யமாக நியதமாக {மாறாமல் முறையாக} இருக்கிறது. மேலும் தங்களிடம் சதா சத்தியமும் நிலைத்திருக்கிறது.(22) மேலும் மஹாத்மாக்களான தங்களின் மகிமையாலும், மற்றும் தேஜஸ்ஸினாலும், துராத்மாவும், துர்ப்புத்தியுடையவனும், ராக்ஷசாதமனுமான {ராக்ஷசர்களில் இழிந்தவனுமான} ராவணன் ஹதம் செய்யப்பட்டான்.(23) யுத்தத்தில், தன் கணங்களுடனும் {கூட்டத்தாருடனும்}, புத்திரர்கள், அமைச்சர்கள், பந்துக்களுடனும் {சுற்றத்தாருடனும்} கூடிய ராவணன், அங்கே தங்களின் தேஜஸ்ஸால் ஹதம் செய்யப்பட்டான்[4]. நான் அதற்கு ஹேதுவாக மாத்திரமே இருந்தேன்.(24) மேலும் கானகத்திலிருந்து ஜனகராஜரின் தனயை {மகளான சீதை} அபகரித்துச் செல்லப்பட்டதைக் கேட்டறிந்த தாங்கள், மஹாத்மாவான பரதனால் ஒன்றுதிரட்டப்பட்டு {இங்கே அயோத்திக்கு} அழைத்துவரப்பட்டீர்கள்[5].(25) மேலும், உத்யோகம் {முயற்சி} செய்து கொண்டிருந்த மஹாத்மாக்களான பார்த்திபர்கள் {மன்னர்கள்} அனைவருக்கும் {இங்கேயே} நீண்ட காலம் கடந்துவிட்டது. எனவே, தங்கள் புறப்பாட்டை நான் விரும்புகிறேன்"[6] {என்றான் ராமன்}.(26)
[4] இந்த மன்னர்கள் ராமராவண யுத்தத்திற்கு என்ன செய்தனர்? ஏன் ராமன் இவ்வாறு கூறுகிறான்? காசிமன்னன் பிரதர்த்தனனிடமும் இதேமாதிரிதான் சொன்னான். ஒருவேளை அயோத்தியின் பாதுகாப்புக்கு உதவியாக இருந்தனரா? என்றால், அதற்கான குறிப்பேதும் ராமாயணம் முழுவதும் தேடினாலும் கிட்டாது. பாரதத்தின் எந்த ஒரு சத்திரிய மன்னனும் அந்த ராமராவண யுத்தத்தோடு தொடர்பு கொள்ளவில்லை. எனவே, இந்தச் சர்க்கத்தில் திடீரென 300 அரசர்கள் அயோத்தியில் தோன்றுவதும், அவர்களை நோக்கி ராமன் "உங்களால் தான் ராவணன் அழிந்தான்" என்று கூறுவதும் தர்க்க ரீதியாகப் பெரும் முரண்பாடே ஆகும். இம்மன்னர்கள் போரில் நேரடியாகப் பங்கேற்காவிடினும், ராமனின் பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த இவர்களை, சத்திரிய முறைப்படியும் உபசார நிமித்தமும் 'உங்கள் தேஜஸ்ஸே ராவண வதத்திற்குக் காரணம்' என ராமன் புகழக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. எனினும், கதையோட்டத்தோடு இது சற்றே முரண்படுவதால் இடைச்செருகல் என்ற ஐயமும் வலுக்கிறது. கிட்டத்தட்ட உத்தரகாண்டத்தின் பெரும்பகுதிகளே கூட இடைச்செருகல்தான் என்ற கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் உண்டு. உத்தரகாண்டத்தை ராமாயணத்தின் ஏழாம் காண்டமாகச் சேர்க்காமல், தனியாக உத்தரராமாயணம் என நாம் செய்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
[5] இந்தச் சுலோகத்தில் ராமன், "சீதை காட்டில் இருந்து கடத்தப்பட்டதை அறிந்து, பரதன் உங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அயோத்திக்கு அழைத்து வந்தான்" என்று கூறுகிறான். ஆனால், சீதை கடத்தப்பட்ட விஷயமே ராமன் சுக்ரீவனைச் சந்திக்கும் வரை அயோத்தியில் இருக்கும் பரதனுக்குத் தெரியாது. இது தெரிந்திருந்தால், அவன் அயோத்திப் படைகளுடன் உடனே இலங்கைக்குப் புறப்பட்டிருப்பான். யுத்த காண்டத்தின் இறுதியில் ராமன் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பும்போது, ஹனுமானை நந்திகிராமத்திற்கு முன்பே அனுப்பி, பரதனிடம், ராவணனை வதம் செய்துவிட்டுச் சீதையுடன் தான் மீண்டு வரும் செய்தியைக் கூறச் சொல்கிறான். ஹனுமான் கூறக் கேட்டே பரதன் முதன்முதலில் ராமனின் ராவண வத வெற்றிக் கதையையும், சீதையின் மீட்பையும் அறிகிறான். பரதன் முன்பே இச்செய்தியை அறிந்தவனாக இருந்தால், ஹனுமான் செல்லும்போது நந்திகிராமத்தில் இருக்க வாய்ப்பில்லை. தான் திரட்டி வைத்திருந்த மன்னர்களுடன் அயோத்தியில் இருந்திருப்பான். அல்லது தென்கடற்கரையிலாவது இருந்திருப்பான். எனவே, பரதன் இவர்களைப் போருக்காகத் திரட்டியிருப்பதற்கான வாய்ப்பில்லை; ராமனின் மீள்வையும் பட்டாபிஷேகத்தையும் சிறப்பிக்கவே பரதன் இந்த 300 மன்னர்களையும் அயோத்திக்கு அழைத்திருப்பான். அச்செய்தியே 'ஒன்றுதிரட்டப்பட்டு' என்ற சொல்லுக்கான பொருளாக இங்கே எடுத்துக் கொள்ள முடியும்.
[6] அதாவது, "எனக்காகப் படைகளைத் திரட்டி முயன்று கொண்டிருந்த அரசர்களே, நீங்கள் அயோத்தியில் தங்கி மிக நீண்ட காலம் ஆகிவிட்டது, எனவே நீங்கள் தங்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதை நான் விரும்புகிறேன்" என்று ராமன் சொல்கிறான்.
பெரும் மகிழ்ச்சியால் சூழப்பட்ட ராஜாக்கள், அவனை {ராமனை} நோக்கி மறுமொழியாக, "இராமா, அதிர்ஷ்டவசமாக விஜயீயான {வெற்றியாளனான} நீ, சொந்த ராஜ்ஜியத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவனாக இருக்கிறாய்.(27) அதிர்ஷ்டவசமாக சீதை மீட்டுக் கொண்டுவரப்பட்டாள். அதிர்ஷ்டவசமாக சத்ரு தோற்கடிக்கப்பட்டான். இது எங்களின் பரம விருப்பம்; இது எங்களுக்கு உத்தமமான பிரீதி.(28) இராமா, எதனால் உன்னை சத்ருவைக் கொன்றவனாக, விஜயீயாக {வெற்றியாளனாகப்} பார்க்கிறோமோ,(29) மேலும் எதனால் நீ எங்களைப் புகழ்கிறாயோ, இஃது உனக்குப் பொருத்தமானதே. புகழுக்குத் தகுந்தவனே {ராமா}, இத்தகைய புகழைச் சொல்வதற்கு {நாங்கள்} அறியமாட்டோம்.(30) {நாங்கள்} விடைபெறுகிறோம்; புறப்படுகிறோம். நீ சதா எங்கள் ஹிருதயத்தில் இருப்பவன். மஹாபாஹுவே, நாங்கள் இங்கே மஹத்தான பிரீதியால் சூழப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். மேலும் {நாங்கள் இங்கே இல்லாதபோதும்}, மஹாராஜாவே, உனக்கு எங்களிடத்தில் நித்யம் பிரீதி உண்டாகட்டும்" {என்றனர் மன்னர்கள்}.(31)
புறப்படும் உற்சாகத்தில் இருந்த சர்வ ராஜாக்களும் {ராமன் விடைகொடுத்ததும்}, மேலான மகிழ்ச்சியால் நிரம்பியவர்களாகக் கைகளைக் கூப்பியபடி ராகவனிடம் "அப்படியே ஆகட்டும்" என்று கூறினர்.(32) மேலும், ராமனால் பூஜிக்கப்பட்டவர்களாகத் தங்கள் தங்கள் தேசங்களுக்குச் சென்றனர்[7].(33)
[7] ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டம், அனுமப்படலம் 675 முதல் 678ம் பாடல் வரை ஜனகனும், வேறு மன்னர்களும் வந்தது குறித்தும் இங்கு சொல்லப்பட்டதற்கு வேறுபட்ட செய்திகள் இருக்கின்றன. அப்பாடல்களின் பொருள் சுருக்கம் மட்டும் பின்வருமாறு: "முனியணிந்த சனகமகாராசன் உலகத்தையே மறைப்பதற்குரிய பெரும் படையோடு மகிழ்ச்சியுடன் வரக் கண்டு தடுத்தற்கரிய பெருமகிழ்ச்சியுடன் பணிகின்ற இராமபிரானைத் தழுவிக் கொண்டு சனகன் தான் முன் ஈட்டிய தனம், அணிகலன், ஆடை விளக்கம் பொருந்திய பெண்டிர்கள் முதலிய பலவற்றையும் கொடுத்த பின்பு, இராமபிரான் இராவணனது கலத்தை வேரறுத்த வரலாற்றைச் சொல்ல வேண்டியதாயிற்று.(675) பெரிய சேனையையுடைய முடிமன்னர்கள், யானை, குதிரை, அணிகலன், ஆடை, தனம் முதலிய பரிசிற் பொருள்களோடு சென்று அடிவணங்கி அருகில் இருந்தபொழுது, பெருமை வாய்ந்த குணங்களையே அணிகலன்களாகக் கொண்ட இராமன், மகிழ்ந்து அந்த முனி மன்னர்களுக்குரிய உபசார மொழிகளைச் சொல்லி அவர்களோடு கலந்து பேசிய பின்பு,(676) சனகன் வானுலகம் போன்ற தன் மிதிலை நகரத்து வாழ்கின்ற சனங்களோடு அயோத்திவிட்டு நீங்கிச் செல்ல, அவன் பிரிவால் வருத்தம் அடைந்தவனும், அந்தச் சனகனின் சிறந்த மகளாகிய சீதையோடு கெடாத மஞ்சன நீராடியவனும் ஆகிய இராமன் அயோத்திக்கு வந்திருந்த மன்னர்களையெல்லாம் அவர் குறிப்பினையறிந்து விடை கொடுத்தபின்,(677) பகைவர்கள், தூசிப்படையாகியமுன் அணியில் பொருந்தாதபடி (பின்னிடும்படி) போர் செய்கின்ற வேந்தர்களுக்கும் பூமி பாரம் பொருந்தாவண்ணம் தீர்த்தவனாகிய இராமபிரான், மாலை அணிந்த தோள்களையுடைய மன்னர்கள் தனக்குப் பரிசாகத் தந்த பொருள்களை இவ்வுலகத்தில் (இன்னார் இனியார் என்று பாராது) ஏற்றோர் அனைவர்க்கும் தானமாகக் கொடுத்தான்.(678)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 038ல் உள்ள சுலோகங்கள்: 33
| Previous | | Sanskrit | | English | | Next |
