Thursday, 30 July 2026

இராஜ சாசனம் | சர்க்கம் – 047 (18)

Royal Decree | Sarga-047 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கங்கை ஆற்றின் அக்கரையை அடைந்தது; லக்ஷ்மணன் அரசகட்டளையை சீதையிடம் சொன்னது...

இலக்ஷ்மணனும் சீதையும்

பிறகு, ராகவானுஜன் {ராமனின் தம்பியான லக்ஷ்மணன், துடுப்புகள், படகோட்டி முதலிய} தேவையானவற்றுடன் கூடியதும், நன்கு விஸ்தீர்ணமானதும், நைஷாதர்களுக்குரியதுமான நாவத்தில் {படகில்} முன்னதாக மைதிலியை ஏற்றிவிட்டு, {தானும்} ஏறினான்[1].(1) சோகத்தில் தவித்த லக்ஷ்மணன், ரதத்துடன் கூடிய சுமந்திரனிடம், "நிலைகொள்ளப்படட்டும் {இங்கேயே தேருடன் இருப்பீராக}" என்றும், அப்படியே நாவிகனிடமும் {படகோட்டியிடமும்}, "புறப்படவும்" என்றும் கூறினான்.(2) 

[1] தர்மாலயப் பதிப்பில், "இப்பொழுது லக்ஷ்மணர் குஹனுடைய அதிவிஸ்தாரமாய் அமைக்கப்பட்ட ஓடத்தில் மைதிலியாரை முதலில் ஏற்றி வைத்து, பிறகு ஏறிக் கொண்டார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "அநந்தரம் இளையபெருமாள் குஹப்பெருமா ளனுப்பிய மிக விசாலமாகிய அழகான ஓடத்தில் முதலிலே பிராட்டியையேற்றுவித்துப் பிறகு தாமும் ஏறிக் கொண்டு" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "வேடுவர்களுடைய அந்தப் படகு மிகவும் அகலமாகவும், இருக்கை முதலிய சாதனங்கள் உடையதாகவும் இருந்தது. படகில், முதலில் சீதையை ஏற்றிவிட்டு, பின்னர் இலக்குவன் ஏறிக் கொண்டான்" என்றிருக்கிறது. நைஷாதீம் என்பது மூலச் சொல், இதற்கு "நிஷாதர்களுக்குரிய", அல்லது "வேடர்களுக்குரிய" என்பது பொருள். கங்கை நதிக்கரையின் வேட்டுவத் தலைவன் குகன். எனவே இங்கே சொல்லப்படும் நிஷாதர்கள் வெவ்வேறு பதிப்புகளில் குகனின் ஆட்களாகக் கொள்ளப்படுகிறார்கள், அல்லது படகு குகனுக்குரியதாகக் குறிப்பிடப்படுகிறது. இதுவரை சொல்லப்பட்ட கதைப்படி, ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்புவதை குகன் அறிந்திருப்பதற்கான காலமும், வாய்ப்பும்  இல்லை.

பிறகு அந்த லக்ஷ்மணன் பாகீரதியின் தீரத்தை {கங்கையின் மறுகரையை} அடைந்து, கைகூப்பியவனாகவும், கண்ணீர் மல்கியவனாகவும் மைதிலியிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(3) "வைதேஹி, மதிமிக்க ஆரியர் {அண்ணன் ராமர்} எதனால் இந்த நிமித்தத்தில் {இக்காரியத்தில்} உலகத்தாரால் வசைபாடப்பட்டாரோ, {அதனால்} மஹத்தான சல்லியம் {பெரும் முள்} என் ஹிருதயத்தை அடைந்திருக்கிறது[2][3].(4) எனக்கு இன்று மரணமே, அல்லது எது பரம மிருத்யுவாக ஆகுமோ {கொடிய மரணமாக ஆகுமோ அதுவே} மேன்மையானது. மேலும், உலகத்தால் நிந்திக்கப்பட்ட இத்தகைய இந்தக் காரியத்தில் {நான்} ஏவப்படத்தக்கவன் அல்ல.(5) சோபனே {மங்கல குணங்கள் பொருந்தியவளே}, அருள்புரிவாயாக. மேலும் எனக்கு பாபத்தைச் செய்ய {தீங்கு விளைவிக்க நீ} தகுந்தவள் அல்ல[4]" என்று கூறி அந்த லக்ஷ்மணன் கைகளைக் கூப்பியவனாக பூமியில் விழுந்தான்.(6)

[2] அயோத்தி மக்கள் ஏற்கனவே இராமனைப் பழித்துப் பேசிவிட்டார்கள் (வசைபாடினார்கள்). அந்தப் பழிச்சொல்லின் காரணமாகவே இராமன் சீதையைத் துறக்கத் துணிந்தான். அந்த வேதனையே இப்போது லக்ஷ்மணனின் ஹிருதயத்தை முள்ளாகத் தைக்கிறது.

[3] இங்கே லக்ஷ்மணன் பெரும் சல்லியம் தன் இதயத்தில் தைத்ததாகச் சொல்கிறான். ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டத்தில், "ராமனின் மார்பில் மானமெனும் வேல் தைத்தது" என்று இருக்கிறது. ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 747ம் பாடல் பின்வருமாறு:

வாடிய முகத்தன் வெய்ய 
  மானவேல் மருமத்து ஊன்ற
நீடிய உயிர்ப்பின் தான்முன் 
  நினைத்த காரியத்தின் மேலே
ஓடிய மனக்காகுத்தன் 
  ஒல்லையின் அழைப்ப வந்து
கூடிய தம்பிமாரின் எனைக் 
  குறித்து இனைய கூறும்

பொருள்: கொடிய மானமாகிய வேல் தன்மார்பில் தைத்தலால் வாடிய முகத்தனாய், நீடிய பெருமூச்சுடையவனாய்த் தான் முன்பு நினைத்திருந்த காரியத்தின் மேலே சென்ற மனத்தையுடைய இராமன், விரைவில் அழைக்க, வந்து கூடிய தம்பிமார் மூவரில், எனைக் குறிப்பிட்டு இத்தன்மையான சொற்களைச் சொல்வான்.

[4] தர்மாலயப் பதிப்பில், "வைதேஹியாரே! மஹா கஷ்டமாயிருக்கின்ற மனதை விடாது குத்தி கொண்டிருக்கும் செய்தி என்னுடைய உள்ளத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இப்பொழுது மரணம் பெரும் பாக்கியம் அல்லவா என்கிற பக்ஷத்தில் மரணமும் முடிவாய் ஆகாது. ஏனென்றால் ஸர்வக்ஞராகிய பூஜ்யரால் இந்த இப்படிப்பட்டதாகிய உலகநிந்திதமாகிற கார்யத்தில் ஆளாக்கப்பட்டிருக்கிறேன். அதனால் இந்த விஷயத்தில் உலகத்தாருடைய சாச்வதமாயிருக்கும் நிந்தனைக்குப் பாத்திரனாயிருக்கிறேன். பதிவிரதாசிரோமணியே! என்னுடைய குறையாக திருவுள்ளத்தில் கொள்ளலாகாது. என்னை அனுக்கிரஹித்தருளும்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஹே வைதேஹி! அடியேன் உள்ளத்தில் ஒளித்து வைத்திருக்கின்ற மிகவும் குரூரமான ஒரு செய்தியை இப்பொழுது தேவரீரிடம் விண்ணப்பம் செய்ய நேரிட்டிருக்கின்றது. இஃது நம் மையரது கட்டளை. இத்தன்மையதான கொடிய காரியஞ்செய்தற்கு உடன்பட்டு அடியேன் உலகத்தார் பழித்தற் காளாயினேன்; இஃது என் மனத்தில் ஆணிபோலத்தைக்கின்றது. உலக நிந்தனைக் கிடமான இக்கொடிய செய்கை செய்யப்புகுந்த அடியேனுக்கு இத்தருணத்தில் மரணமேனும் மிருத்தியுவாயினும் ஸம்பவிக்குமாகில், அதுவே மிகச் சிறப்புடைய தாகும். தேவரீர் அடியேன்மீது அருள்புரிக; அருந்ததியு மொப்பாகாதவுத்தமி! அடியேன் விஷயத்தில் திருவுள்ளங் கலங்கலாகாது" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "வைதேகிப் பிராட்டியே! மன்னர் என்னிடம் ஒப்படைத்த இந்தப் பணி என்னை முள்ளாகக் குத்துகிறது. இந்தச் செயலினால் உலகத்தில் எனக்கும் (மன்னருக்கும்) பெரும் பழி ஏற்படப்போகிறது. இந்த நிலையில், இப்போது எனக்கு மரணம், அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் ஏற்பட்டால், அதுவே எனக்கு நலம் பயப்பதாகும். மக்களால் தூற்றப்படப்போகும் இந்தக் காரியத்தைச் செய்யும்படி, என்னை நியமித்திருக்கக் கூடாது. தேவி! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்னைக் குறைகூறக்கூடாது" என்றிருக்கிறது.

அழுகின்றவனும், கைகூப்பியவனும், தனக்கு மிருத்யுவை {மரணத்தை} விரும்புகிறவனுமான லக்ஷ்மணனைக் கண்டு மிகவும் திடுக்கிட்ட மைதிலி {சீதை} லக்ஷ்மணனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினாள்:(7) "இலக்ஷ்மணரே, இஃது என்ன? நான் அறிந்துகொள்ளவில்லை. {உள்ளதை} உள்ளபடி கூறுவீராக. உம்மை சுவஸ்தம் {நலம்} இல்லாதவராகப் பார்க்கிறேன். மஹீபதி {மன்னர் ராமர்} க்ஷேமம்தானா {நலம்தானா}?(8) நரேந்திரரால் ஆணையிடப்பட்டவராக இருக்கிறீரெனில் எதனால், நீர் சந்தாபம் {கவலை} அடைகிறீர்? அதை என் சந்நிதியில் {முன்னிலையில்} கூறுவீராக. நான் உமக்கு ஆணையிடுகிறேன்" {என்றாள் சீதை}.(9)

வைதேஹியால் கேட்கப்பட்ட லக்ஷ்மணனோ, உள்ளம் வருந்தியவனாக, தலைகுனிந்தவனாக, கண்ணீரால் தழுதழுக்க இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(10) "ஜனகாத்மஜே {ஜனகனின் மகளே}, பரிஷத்தின் {சபையின்} மத்தியில், உன்னைக் குறித்து புரத்திலும், அப்படியே ஜனபதத்திலும் நிலவும் மிகக் கொடிய அபவாதத்தை {பழிச்சொல்லை} உண்மையிலேயே கேட்டு துயரடைந்த ஹிருதயத்தை உடையவரான ராமர், என்னிடம் {இதைத்} தெரிவித்து விட்டு கிருஹத்திற்குச் சென்றார்.(11) தேவி, ராஜாவால் எவை ஹிருதயத்தில் வைக்கப்பட்டனவோ, பொறுக்கமுடியாத கோபத்தினால் {எவை என்னால்} புறக்கணிக்கப்பட்டனவோ, அவை {அந்தச் சொற்கள்} உன் முன்னிலையில் என்னால் சொல்லத்தக்கவை அல்ல[5].(12) என் சந்நிதியில் {முன்னிலையில்} தோஷமற்றவளான {குற்றமற்றவளான} அத்தகைய நீ, பௌராபவாதத்தில் பீதியடைந்தவரான நிருபதியால் கைவிடப்பட்டாய் {நகரமக்களின் பழிச்சொற்களில் அச்சமடைந்த ராஜா ராமரால் கைவிடப்பட்டாய்}. தேவி, {இது} வேறுவிதமாக எடுத்துக் கொள்ளத்தக்கது அல்ல.(13) இராஜாவின் சாசனத்தை {கட்டளையை} ஏற்று, என்னால் ஆசிரம எல்லைகளில் நீ கைவிடப்பட வேண்டியவள் ஆகிறாய். இஃது உன்னுடைய தௌர்ஹ்ருதமும் {கர்ப்பகால ஆசையும்}[6] அன்றோ!(14) 

[5] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "நான் அவற்றைப் புறக்கணிக்கிறேன். அவற்றை மறந்துவிட்டேன்" என்றிருக்கிறது.

[6] கருவுற்றிருக்கும் பெண்ணை சம்ஸ்கிருதத்தில் 'தௌர்ஹ்ருதினி' என்று அழைப்பார்கள். அதாவது, "இரண்டு இதயங்களை உடையவள்" (தாயின் இதயம் + வயிற்றில் வளரும் குழந்தையின் இதயம்) என்று பொருள். அந்த இரு இதயங்களின் சங்கமத்தால், கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படும் சில விசித்திரமான ஆசைகள், வேட்கைகள் அல்லது உணர்வுப்பூர்வமான விருப்பங்களே 'தௌர்ஹ்ருதம்' எனப்படும்.

சுபே {மங்கலமானவளே}, ஜாஹ்நவீதீரத்தில் {கங்கைக்கரையில்} புண்ணியமானதும், ரமணீயமானதுமான அந்த பிரம்மரிஷிகளின் தபோவனம் இதோ {இருக்கிறது}. விஷாதம் {வேதனை} அடையாதே.(15) என் பிதாவும், ராஜாவுமான தசரதருக்கு இஷ்டரும் {விருப்பத்திற்குரியவரும்}, மிகச்சிறந்த சகாவும் {நண்பரும்}, மிகப்பெரும் புகழ்வாய்ந்தவரும், விப்ரருமானவர் {வேதியருமானவர்} முனிபுங்கவர் வால்மீகி.(16) ஜனகாத்மஜே {ஜனகரின் மகளே}, இந்த மஹாத்மாவின் {வால்மீகியின்} பாதச்சாயையை {பாத அடி நிழலை} அடைந்து, உபவாசத்தில் நிலைத்தவளாகவும், மனம் ஒருமுகப்பட்டவளாகவும் நீ சுகமாக வசிப்பாயாக.(17) தேவி, சதா ராமரை ஹிருதயத்தில் வைத்து, பதிவிரதத்வத்தை {கணவரையே நினைத்திருக்கும் நோன்பு நிலையை} மேற்கொள்வாயாக. அவ்வாறு செய்வதால் உனக்கு மேலான நன்மை உண்டாகும்" {என்றான் லக்ஷ்மணன்}.(18)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 047ல் உள்ள சுலோகங்கள்: 18

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி