Saturday, 7 November 2026

சுவேத ராஜன் | சர்க்கம் – 078 (30)

King Shveta | Sarga-078 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தானம் செய்யாததால் பிரம்மலோகத்திலும் பசிதாகத்தால் வாடித் தன் உடலைத் தானே உண்ட சுவேத மன்னன்; அகஸ்தியருக்கு ஆபரணத்தைத் தானமாக அளித்து விடுதலை பெற்றது.

சுவேத ராஜன்

{அகஸ்தியர்}... “இராமா, ரகுநந்தனா {ரகு குலத்தவருக்கு மகிழ்ச்சியளிப்பவனே}, சுப அக்ஷரங்களுடன் உரைக்கப்பட்ட {இன்சொற்களுடன் கூடிய} என் வாக்கியத்தைக் கேட்டுவிட்டு, அந்த சுவர்க்கீ கைகூப்பியவனாக இந்த மறுமொழியைச் சொன்னான்:(1) "துவிஜரே {இருபிறப்பாளரே}, பிராமணரே, நீர் என்னிடம் எவ்வாறு கேட்கிறீரோ {அவ்வாறே} சுகதுக்கங்களுடையதும் {இன்ப துன்பங்கள் கலந்ததும்}, உண்மையில் மீற இயலாததுமான என்னுடைய இந்த முந்தைய வரலாற்றைக் கேட்பீராக.(2) முற்காலத்தில், என்னுடைய பிதாவான வைதர்பக ராஜர் {விதர்ப்ப மன்னர்}, பெரும்புகழ் பெற்றவராகவும், வீரியவானாகவும் {இருந்தார்; அவர்} மூன்று உலகங்களிலும் சுதேவன் என்ற பெயரில் புகழ்பெற்றிருந்தார்.(3) பிராமணரே, அவருக்கு {சுதேவருக்கு} இரண்டு ஸ்திரீகளிடமிருந்து {மனைவியரிடமிருந்து} இரண்டு புத்திரர்கள் பிறந்தனர். நான் சுவேதன் என்று அறியப்பட்டேன். இளையவன் சுரதன் எனப்பட்டான்.(4) பிறகு, பிதா {என் தந்தை சுதேவர்} சுவர்க்கத்திற்குச் சென்றபோது, பௌரர்கள் {நகரவாசிகள்} என்னை {மன்னனாக} அபிஷேகம் செய்தனர். அங்கே {விதர்ப்ப நாட்டில்} நானும் மிகுந்த சமாஹிதனாக {மன ஒருமைப்பாட்டுடன் கூடியவனாக}, தர்மத்திற்கு இணக்கமாக ராஜ்ஜியத்தை நடத்தினேன்.(5)

நல்விரதங்களையுடையவரே, பிராமணரே, தர்மத்தின் வழியில் பிரஜைகளை {மக்களை} ரக்ஷித்து {பாதுகாத்து} ராஜ்ஜியத்தை நடத்திவந்த {எனக்கு}, இவ்விதம் பல்லாயிரம் வருஷங்கள் கழிந்தன.(6) துவிஜோத்தமரே {இருபிறப்பாளர்களில் சிறந்தவரே}, ஏதோ ஒரு நிமித்தத்தால் என் ஆயுளை அறிந்த அத்தகைய நான், காலதர்மத்தை {மரணத்தை / விதியை} ஹிருதயத்தில் நிறுத்திக்கொண்டு, பிறகு வனத்திற்குச் சென்றேன்.(7) அத்தகைய நான், தபம் செய்வதற்காக, மிருகங்களும் பக்ஷிகளும் அற்றதும், அணுகற்கரியதுமான இந்த வனத்திற்குள், சரஸின் சமீபத்திலுள்ள சுபமான {தூய்மையான} இடத்தில் பிரவேசித்தேன்.(8) பிராதாவான {என்னுடன் பிறந்தவனான} சுரதனை ராஜ்ஜியத்தில் மஹீபதியாக உண்மையில் அபிஷேகம் செய்துவிட்டு, இந்த சரஸை {பொய்கையை} அடைந்து, நீண்ட கால தபம் என்னால் செய்யப்பட்டது.(9) அத்தகைய நான், மஹாவனத்தில் மூவாயிரம் வருஷங்கள் மிகக் கடுமையான தபத்தைச் செய்துவிட்டு, ஒப்பற்ற பிரம்மலோகத்தை அடைந்தேன்.(10)

துவிஜோத்தமரே, பரமோதாரரே {பெருந்தன்மைமிக்கவரே}, சுவர்க்கத்தை அடைந்தவனான அத்தகைய என்னைப் பசியும் தாகமும் வருத்தின. பிறகு இந்திரியங்கள் கலங்கியவனான நான், திரிபுவன சிரேஷ்டனான பிதாமஹனை {மூவுலகிலும் சிறந்தவனும், பெரும்பாட்டனுமான பிரம்மனை} அணுகி உண்மையில் {பின்வருமாறு} கூறினேன்:(11) "பகவானே, இந்த பிரம்மலோகம் பசி தாகம் அற்றது. உண்மையில் நான் பசி தாகங்களுக்கு ஆட்படுகிறேன். இஃது எந்த கர்மத்தின் பாகம் {வினையின் விளைவு}?(12) மேலும், தேவனே, பிதாமஹனே, எனக்குரிய ஆஹாரம் எது? அதை எனக்குச் சொல்வாயாக" {என்றேன்}.(13)

பிதாமஹனோ {பிரம்மனோ} என்னிடம் {பின்வருமாறு} கூறினான், "சுதேவஜனே {சுதேவனின் மகனே, சுவேதா}, உனக்குரிய ஆஹாரம் சுவையான உன் சொந்த மாமிசங்களே. அவற்றை நாள்தோறும் பக்ஷிப்பாயாக {உண்பாயாக}.(14) சுவேதா, பெரும் மதிமிக்கவனே, உத்தமமான தபத்தைச் செய்துவந்த உன்னால் உனது சொந்த சரீரமே புஷ்டியாக்கப்பட்டது {ஊட்டமளிக்கப்பட்டு வளர்ந்தது}. விதைக்கப்படாதது ஒருபோதும் முளைப்பதில்லை.(15) சத்வங்கள் {உயிரினங்கள்} நிறைந்த வனத்தில் உனக்கு ஸூக்ஷ்ம திருப்தியும் {சிறு மனநிறைவு கூட / சிறிதளவு பசிதீர்வுகூட} இல்லை. நிருபா {அரசனே}, இந்திராபா {இந்திரனைப் போன்ற ஒளியுடையவனே}, பிக்ஷை கேட்ட யதிக்கோ {துறவிக்கோ}, அதிதிக்கோ {விருந்தினருக்கோ} கூட முன்பு எதனால் உன்னால் பிக்ஷை உண்மையில் அளிக்கப்படவில்லையோ,(16) {அதனால்}, நீ கொடுத்ததென்று சிறிதளவும் உனக்கு இல்லை. நீ தபத்தை மட்டுமே மேற்கொண்டாய். எனவே, வத்ஸா {குழந்தாய்}, சுவர்க்கத்தை அடைந்தவனான நீ பசிதாகத்தால் துன்புறுகிறாய்[1].(17)

[1] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 53ம் பாடல் பின்வருமாறு:

பெறுதற்கரி இவ்வுலகம் பெற்றும் பெருந்தாகமும் பசியும்
உறுதற்கு என்காரணம் இனி யான் உண்பது ஏது என்றிட நெஞ்சில்
இறுகத் தனத்தால் இரப்போர்க்கு இட்டு உணாதே உன் வயிறும்
பறியைத் தூர்த்து வளர்த்ததனால் பசிநோய் நின்னைப் பற்றியதால்

பொருள்: "அடைவதற்கரிய இந்த தேவலோகத்தைப் பெற்றிருந்தும், கொடிய தாகமும் பசியும் எனக்கு உண்டாவதற்குக் காரணம் என்ன? இனி நான் எதை உண்பேன்?" என்று கேட்டேன். அதற்குப் பிரம்மன், "உலோபக் குணத்தால் உள்ளம் இறுகி, யாசிப்போருக்கு எதனையும் தானம் செய்யாமல் உண்டு, உன் வயிற்றை மட்டுமே ஒரு பாழடைந்த குழியைத் தூர்ப்பது போலத் தீனிபோட்டு வளர்த்த காரணத்தால், இந்தப் பசிநோய் உன்னைப் பற்றிக்கொண்டது" என்றான்.

அத்தகைய நீ, பலவகை ஆஹாரங்களால் நன்கு புஷ்டியடைந்ததும் {ஊட்டமளித்து வளர்க்கப்பட்டதும்}, ஒப்பற்றதும், அம்ருதரசம் {அமுதத்தின் சுவையைக்} கொண்டதுமான உன் சொந்த சரீரத்தைப் பக்ஷிப்பதனால் திருப்தி உண்டாகும் {உன் பசி தாகம் நீங்கும்}.(18) ஆனால், சுவேதா, வெல்வதற்கரியவரும், மஹானுமான அகஸ்திய ரிஷி எப்போது அந்த வனத்திற்கு வருவாரோ, அப்போது {அந்தக்} கடும் துன்பத்திலிருந்து விமோசனம் அடைவாய் {விடுவிக்கப்படுவாய்}.(19) சௌம்யா {அமைதியானவனே}, மஹாபாஹோ {பெருந்தோள்களையுடையவனே}, அவர் உண்மையில் ஸுரகணங்களைக்கூட {தேவக்கூட்டத்தினரையேகூட} கரைசேர்க்கும் சக்தி உடையவர். பசி தாகத்தின் வசத்தை அடைந்திருக்கும் உன்னை {அவர் விடுவிப்பதைப் பற்றிக்} கூறவும் வேண்டுமோ?" {என்றான் பிரம்மன்}.(20)

துவிஜோத்தமரே {இருபிறப்பாளர்களில் சிறந்தவரே}, அத்தகைய நான் தேவதேவனான பகவானின் நிச்சயத்தை {தீர்மானத்தைக்} கேட்டு, என் சொந்த சரீரத்தையே இகழத்தக்க ஆஹாரமாகக் கொண்டேன்.(21) பிராமணரே, பிரம்மரிஷியே, பல வருஷகணங்களாக {ஆண்டுகளின் தொகுப்பாக} என்னால் புசிக்கப்பட்டு வரும் இது {இந்த உடல்} அழிவை அடைவதில்லை. எனக்கு உத்தம திருப்தியும்கூட உண்டாகிறது[2].(22) துவிஜரும் கும்பயோனியுமான {குடத்திலிருந்து பிறந்தவருமான} உம்மைத் தவிர வேறு எவருக்கும் உண்மையில் இங்கே கதி இல்லை {வேறு எவரும் இங்கே வருவதற்கான வாய்ப்பில்லை}. கடுந்துன்பத்தில் வீழ்ந்துள்ளவனான அத்தகைய என்னை, இவ்விடரிலிருந்து விடுவிப்பீராக.(23) சௌமியரே, துவிஜோத்தமரே, {என்னை மீட்டுக்} கரைசேர்ப்பதற்காக இந்த ஆபரணத்தை ஏற்றுக்கொள்வீராக. உமக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. அருள்புரிவதே உமக்குத் தகும்.(24) துவிஜரே, பிரம்மரிஷியே, இப்போதைக்கு இது {இந்த ஆபரணம்}, ஸுவர்ணத்தையும் {பொன்னையும்}, தனத்தையும் {செல்வத்தையும்}, வஸ்திரங்களையும் {ஆடைகளையும்}, பக்ஷணத்தையும் {தின்பண்டத்தையும்}, போஜனத்தையும் {உணவையும்}, ஆபரணங்களையும் கொடுக்கிறது.(25) முனிபுங்கவரே {முனிவர்களில் சிறந்தவரே}, பகவானே, அனைத்துக் காமங்களையும் {விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருள்களையும்}, போகங்களையும் {இன்ப நுகர்ச்சிப் பொருள்களையும்} அளிக்கிறேன். என்னை விடுவிப்பதில் எனக்கு அருள்புரிவதே உமக்குத் தகும்" {என்று கேட்டான் சுவேதன்}.(26)

[2] தர்மாலயப் பதிப்பில், "ஹே த்விஜோத்தம! அந்த நான் மஹாபூஜ்யராகிய தேவர்களுக்கும் தேவருடைய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு நிக்ருஷ்டமான எனது உடலை உணவாய் உட்கொண்டுவருகிறேன். வேதவித்தாகிய வேதியமுனிவரே! என்னால் அனேக ஆண்டுகளாய் புசித்துவரப்படுகிறதாகிய இதற்கு இளைத்தலென்பதும் எனக்கு மகாப்பெரிதாகிய போதும் இனி வேண்டாமென்னும் தெவிட்டலும் ஏற்படவில்லை" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஹே த்விஜோத்தம! தேவர்களனைவர்க்கும் தேவனான பிரமதேவன் இங்ஙனம் புகன்றதுகேட்டு அன்றுதொட்டு அடியேன் அநேகமாண்டவளவாக மிகவும் இகழத்தக்கதான எனது உடலையே உணவாயருந்தி நாள்கழிக்கின்றேன்; எத்தனை காலம் புஜித்தும் இவ்வுடலினூன் சிறிதளவேனும் குறைவுபடவில்லை, எனக்கும் பசி தணிந்து திருப்தி யுண்டாகவில்லை" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "அந்தணோத்தமரே! தேவர்களுக்கெல்லாம் தலைவரான பிரும்மாவின் உறுதியான சொற்களைக் கேட்ட நான், என்னுடைய உடலான வெறுக்கத்தக்க உணவைப் புசித்து வருகிறேன். பிரும்மரிஷியே! நான் மிக நீண்ட காலமாக இதனை உண்டு வருகிறேன். ஆனால், இது (சடலம்) குறைவடையவில்லை. எனக்குத் திருப்தியும் ஏற்படுகிறது" என்றிருக்கிறது.

அந்த சுவர்க்கீயின் துக்கம் நிறைந்த வாக்கியத்தைக் கேட்டு, அவனை விடுவிப்பதற்காக நான் அப்போது {அந்த} உத்தம ஆபரணத்தை ஏற்றுக் கொண்டேன்.(27) ஆனால், என்னால் அந்த சுபமான ஆபரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அந்த ராஜரிஷியின் {அரசமுனியான சுவேதனின்} முந்தைய மானுஷ தேஹம் {மனித உடல்} உண்மையிலேயே அழிந்துபோனது.(28) அதனால், சரீரம் அழிந்ததும், ராஜரிஷியான அந்த ராஜா {சுவேதன்} பேருவகையுடன் திருப்தியடைந்தவனாகவும், பெரும் மகிழ்ச்சியடைந்தவனாகவும் சுகமாகத் திரிதிவத்தை {சுவர்க்கலோகத்தை} அடைந்தான்.(29) காகுத்ஸ்தா {ககுத்ஸ்தனின் வழிவந்தவனே}, சக்ரதுல்யனான {இந்திரனுக்கு நிகரான} அவனால் {சுவேதனால்}, அந்த நிமித்தத்தில் {பசிதாகத்திலிருந்து விடுதலை பெறும் பொருட்டு}, அற்புத தரிசனமுடைய {தோற்றமுடைய} இந்த திவ்யமான ஆபரணம் எனக்கு அளிக்கப்பட்டது" {என்றார் அகஸ்தியர்}.(30)


உத்தர ராமாயணம் சர்க்கம் – 078ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next

தொடர்ந்து படிக்க: பொருளடக்கம் · நூல்கள்: அச்சு நூல்கள் · கிண்டில் நூல்கள்

Labels

அகஸ்தியர் அக்னி அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் கல்மாஷபாதன் காசியபர் காஞ்சனர் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குசன் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கைடபன் கோமுகன் கௌ கௌசல்யை கௌதமர் க்ஷுபன் சங்கன் சத்ருக்னன் சம்பூகன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாபாலி ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மதயந்தி மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாந்தாதா மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மித்ரஸஹன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லவணன் லவன் லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாமதேவர் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஸௌதாஸன் ஹனுமான் ஹேதி