The Astonishing Sight | Sarga-077 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: முனிவர்கள் இல்லாத வனத்தில், தெய்வீக விமானத்தில் வந்த ஒருவன் பிணத்தை உண்பதைக் கண்ட அகஸ்தியர், அவனிடம் அதன் காரணத்தைக் கேட்கிறார்.
இராமா, முன்பு திரேதாயுகத்தில், சுற்றிலும் நூறு யோஜனைகள் வரை {ஒரு வனம்} மிக விஸ்தாரமானதாகவும், மிருகங்களற்றதாகவும், பக்ஷிகள் {பறவைகள்} இல்லாததாகவும் இருந்தது.(1) சௌம்யா {மென்மையானவனே}, மானுஷர்கள் இல்லாத அந்த அரண்யத்தில் உத்தமமான தபத்தைச் செய்யும் நோக்குடன், அந்த அரண்யத்தில் அடியெடுத்து வைக்க அணுகினேன்.(2) இன்சுவையுடைய பழங்களையும், மூலங்களையும் {கிழங்குகளையும்} கொண்டதும், பல்வகை மரங்கள் நிறைந்ததுமான அந்த அரண்யத்தின் ரூபத்தை {தோற்றத்தை} உண்மையாக விவரிக்க முடியவில்லை.(3) அந்த அரண்யத்தின் மத்தியிலோ ஒரு யோஜனை நீளமுடையதும், ஹம்ஸங்கள் {அன்னப்பறவைகள்}, காரண்டவங்கள் {நீர்ப்பறவைகள்} நிறைந்ததும், சக்கரவாகங்களால் {செந்நிறக் காட்டுவாத்துகளால்} சோபிப்பதுமான ஒரு சரஸ் {பொய்கை} இருந்தது.(4) அது {அந்தப் பொய்கை} பத்மங்களும் {தாமரைகளும்} உத்பலங்களும் {கருநெய்தல்களும்} நிறைந்ததாகவும், சைவலங்களை முற்றிலும் கடந்ததாகவும் {நீர்ப்பாசிகளற்றதாகவும்}, மிகவும் ஆச்சரியமானதைப் போலவும், இனிய சுவை உடையதாகவும், ஒப்பற்றதாகவும் இருந்தது.(5)
புழுதியற்றதும், அதேபோலக் கலங்காததும், அழகு பொருந்திய பக்ஷிகணங்களை {பறவைக்கூட்டங்களைக்} கொண்டதுமான அந்த சரசின் சமீபத்தில், மஹத்தான ஓர் அற்புத ஆசிரமம் இருந்தது.(6) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே, ராமா}, மிகப் பழமையானதும், மிகப்புண்ணியமானதும், தபஸ்விகள் இல்லாததுமான அங்கே {அந்த ஆசிரமத்தில்}, நான் நைதாகீ ராத்திரியை {ஒரு கோடைக்கால இரவைக்} கழித்தேன்.(7) பிரபாதத்தின் {விடியற்காலையின்} அதிகாலையிலேயே எழுந்து அந்த சரசை அணுகினேன். அப்போது அங்கே ஓரிடத்தில் நன்கு புஷ்டியானதும், முதுமையடையாததுமான ஒரு சவத்தைக் கண்டேன்.(8) நிருபா {அரசனே}, அந்தத் தடாகத்தில், {உறுப்புகள்} வரிசையாகப் பிரிந்து {ஒவ்வொரு அங்கமும் தனித்தனியாகத் தெளிவாகத் தெரியும்படி} புஷ்டியான அங்கங்களைக் கொண்டதும், அந்த சரஸைச் சார்ந்திருந்ததுமான அது மேலான அழகுடன் நிலைத்திருந்தது.(9) இராகவா, பிரபோ, நான் அங்கே சரஸின் தீரத்தில் {பொய்கைக்கரையில்} "இஃது என்னவாகத்தான் இருக்கக்கூடும்" என்ற அந்த அர்த்தத்தை {விஷயத்தைக்} குறித்துச் சிந்தித்தவனாக ஒரு முஹூர்த்தம் தங்கியிருந்தேன்[1].(10)
[1] தர்மாலயப் பதிப்பில், "ஹே பிரபோ! சக்கிரவர்த்தியாரே! ராகவ! அந்தத் தடாகஜலத்தில் புஷ்டியான தேஹமுடையதாய் பொய்கையே தன்னிடமாய்க் கொண்டதாய் மிக்க சோபையோடு மிதக்கின்றதாய் போஜனப் பந்தியில் செய்யும் பக்ஷபாதந்தான் காரணமாயிருந்தபோதிலும் "இதென்ன" என்று அதன் வாஸ்தவமான காரணத்தை நான் பொய்கைக்கரையில் சிந்தித்தவாறே ஒரு முகூர்த்தகாலம் பிரமித்து நின்றுவிட்டேன்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஆங்கு அக்கோடையில் ஒரு நாளிராத்திரியான் வதிந்து வைகறைத் துயிலெழுந்து அத்தடாகத்தின்கண் நீராடச் சென்றேன்; அதில் ஒரு மனிதப்பிணம் கிஞ்சித்தேனும் கரையாது புஷ்டியுள்ளதாய் மூப்பிலதாய் மிதக்கக்கண்டேன். ஹே மஹாப்பிரபோ! அதனைக் கண்டு, ஈதென்ன? இங்கு இவ்வண்ணம் உருக்குலையாது மிக்க சோபையுடனே விளங்காநின்ற சவமெங்ஙனம் வந்ததெனச் சிந்தித்தவாறு ஒரு முகூர்த்தம் அவ்விடத்திலேயே நின்றேன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "பஞ்சபூதங்களின் (கொழுப்பு, சதை, எலும்பு முதலியவைகளின்) ஒழுங்கான சேர்க்கையால் புஷ்டியான உடல் உறுப்புகளுடன் ஏரி வரை வியாபித்துக் கிடந்தது. மன்னனே! அந்தச் சடலம் மிகுந்த ஒளியுடன் ஏரிக்கரையில் காணப்பட்டது. ரகுநந்தனா! அந்தச் சடலத்தைக் கண்டு "இது என்ன?" என்று யோசித்தவாறே ஏரியின் கரையில் இரண்டு நாழிகை நேரம் நின்று கொண்டிருந்தேன்" என்றிருக்கிறது. மூலச்சுலோகங்களில் நீராடுதல், சவம் நீரில் மிதத்தல், சவம் உருக்குலையாமல் இருத்தல் ஆகியவை வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. அவை உரையாசிரியர்கள் சூழலுக்கேற்ப அளித்த விளக்கங்களாகத் தோன்றுகின்றன. குறிப்பாக, ‘பங்கிபேதேன’ என்ற பதத்திற்கு கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பு உடலின் கூறுகளுடைய ஒழுங்கான அமைப்பை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தைத் தருகிறது. இப்பதத்திற்குச் “சேற்றைப் பிளந்து”, "வரிசையாகப் பிரிந்து" என்ற பொருள்களும் முன்வைக்கப்படலாம் என்றாலும், அப்பொருள்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இங்கே குறிப்பிடப்படுவது சவம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்பதத்தின் துல்லியமான பொருளை சம்ஸ்கிருத அறிஞர்களின் ஆய்வின் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பிறகு, ஒரு முஹூர்த்தத்திற்குள் {சிறிது நேரத்தில்}, திவ்யமானதும், அற்புத தரிசனமுடையதும் {தோற்றமுடையதும்}, மிக மேன்மையானதும், ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்} பூட்டப்பெற்றதும், மனத்தின் வேகத்தைக் கொண்டதுமான ஒரு விமானத்தைக் கண்டேன்.(11) இரகுநந்தனா, வீரா, அந்த விமானத்தில் திவ்ய பூஷணங்களை அணிந்த ஆயிரம் அப்சரஸ்கள், மிகமேன்மையான ஒரு சுவர்க்கீயை {சுவர்க்கவாசியான ஒருவனை} உபசரித்தனர்.(12) இன்னும் சிலர் திவ்யமான பாடல்களைப் பாடினர். அதேபோல, வேறு சிலர் {வாத்தியங்களை} இசைத்தனர். மேலும், வேறு சிலர் {மகிழ்ச்சிக்} கூச்சலிட்டனர். அதேபோல இன்னும் சிலர் நடனமாடினர்.(13) மேலும், வேறு சிலர், சந்திரனின் கதிர்களைப் போன்ற ஒளியுடையதும், ஹேமதண்டங்களை {தங்கத்தண்டுகளைக்} கொண்டதுமான சாமரங்களால் {விசிறிகளால்}, புண்டரீகத்தைப் போன்ற {வெண்தாமரைக்கு ஒப்பான} கண்களைக் கொண்ட அவனுடைய வதனத்தை {முகத்தை} நோக்கி மீண்டும் மீண்டும் விசிறினர்.(14) பிறகு, ராமா, ரகுநந்தனா, அம்சுமான் மேருகூடத்தை போல {கதிர்களுடன் கூடிய சூரியன் மேருமலையின் சிகரத்தை விட்டு நீங்குவது போல}, அந்த சுவர்க்கீ சிம்மாசனத்தை விட்டுவிட்டு, அப்போது விமானத்திலிருந்தும் இறங்கி, நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த சவத்தை பக்ஷித்தான் {சடலத்தை உண்டான்}.(15)
அவ்வாறு அந்த சுவர்க்கீ, நன்கு கொழுத்த மாமிசத்தை விருப்பம் போல் புசித்துவிட்டு, இறங்கி அந்த சரசை {பொய்கையின் நீரைத்} தொட முனைந்தான்.(16) இரகுபுங்கவா {ரகுக்களில் சிறந்தவனே}, அந்த சுவர்க்கீ, நியாயப்படி ஆசமனஞ்செய்து {நீரைத் தொட்டு சுத்தி செய்து கொண்டு}, உத்தமமான, சிறந்த விமானத்தில் ஏறத் தொடங்கினான்.(17) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, தேவனைப் போன்ற தோற்றமுடைய அந்த சுவர்க்கீ ஏறிக் கொண்டிருப்பதை உண்மையில் பார்த்த பின்னர், அவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினேன்[2]:(18) "தேவனைப் போன்ற தோற்றமுடைய தாம் யார்? மேலும், சௌம்யரே {மென்மையானவரே}, நிந்திக்கத்தக்க இந்த ஆஹாரம் {உணவு} உம்மால் எதற்காகப் புசிக்கப்படுகிறது? கூறுவதே உமக்குத் தகும்.(19) சௌம்யரே, யாருக்கு இத்தகைய பாவம் இருக்கக்கூடும் {இத்தகைய மனநிலை ஏற்படக்கூடும்}? {இந்த} ஆஹாரம் தேவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இஃது ஆச்சரியமாக இருக்கிறது. உள்ளதை உள்ளபடியே கேட்க விரும்புகிறேன்.(20) உமக்குப் பக்ஷணமாகும் {உணவாகும்} இந்த சவத்தை {உமக்குப்} பொருத்தமானதாக நான் கருதவில்லை" {என்று கேட்டேன்}.(21)
[2] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 47, 48ம் பாடல்கள் பின்வருமாறு:இந்திரா தியிமையவர் போற்றிடவந்து தோன்றினன் மாமணித் தேரின்மேல்அந்த ரார்வி மானத் தடந்தேரினன்றிந்த மன்னன் இழிந்துசெப் தன். (47)சார வந்த அச் சவத்தினைத் தன்வயிறுஆர உண்டு பெயர்ந்து அணி பொய்கையில்வாரி மொண்டு குடித்து வாய் பூசிநல்தேரிலேறிப் புகுதலும் சென்று யான். (48)பொருள்: இந்திரன் முதலான தேவர்கள் யாவரும் துதித்துப் போற்றும்படியாக, சிறந்த மணிகளால் இழைக்கப்பட்டதும் ஆகாயத்தில் உலவக்கூடியதுமான பெரிய விமானத் தேரின் மீது ஒருவன் வந்து தோன்றினான். அவ்வாறு தோன்றிய அந்த மன்னன் {சுவேதன்}, தன் தேரிலிருந்து கீழே இறங்கி, (அந்தப் பொய்கையில்) தன் முன்னே கிடந்த பிணத்தை {சவத்தை} அணுகினான்.(47) அங்குப் பொருந்திச் சேர்ந்திருந்த அந்தப் பிணத்தைத் தன் வயிறு நிறையும்படியாக உண்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து விலகி, அழகிய அந்தத் தடாகத்தில் நீரை அள்ளிக் குடித்து, வாய் கொப்பளித்துக் கழுவி, மீண்டும் தனது நல்ல விமானத் தேரின் மீது ஏறிச் செல்ல முயன்றான். அவன் புறப்பட்டுச் செல்ல முற்பட்ட அந்நேரத்தில், நான் அவனருகே சென்றேன்.(48)
நரேந்திரா, இவ்வாறு சொல்லப்பட்ட அந்த நாகீ {விண்ணுலகைச் சேர்ந்தவன்}, கௌதூகலத்தாலும் {பேரார்வத்தாலும்}, இனிமையும் உண்மையும் கொண்ட பேச்சாலும், என்னுடைய இந்த சர்வ வாக்கியத்தையும் {வாக்கியம் முழுமையும்} கேட்டுவிட்டு, அவ்வாறே எனக்கு அனைத்தையும் கூறினான்" {என்று அகஸ்தியர் கூறினார்}. (22)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 077ல் உள்ள சுலோகங்கள்: 22
| Previous | | Sanskrit | | English | | Next |
