Thursday, 12 November 2026

தண்ட ராஜன் | சர்க்கம் – 079 (20)

King Danda | Sarga-079 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுவேத ராஜன் தவம் செய்த வனம் வெறிச்சோடியதற்கான காரணத்தைக் கேட்ட ராமன்; இக்ஷ்வாகுவின் மகனான தண்டனின் பிறப்பையும், அவனது ராஜ்ஜியத்தையும் விவரித்த அகஸ்தியர்.

தண்ட ராஜன்

அகஸ்தியரின் மிக அற்புதமான அந்த வாக்கியத்தைக் கேட்ட ராகவன் {ரகு குல ராமன்}, கௌரவத்தாலும் {மதிப்பாலும்}, மேலும் வியப்பாலும் மீண்டும் கேள்வி கேட்கத் தொடங்கினான்:(1) "பகவானே {பூஜிக்கத்தக்கவரே}, வைதர்பக {விதர்ப்ப} ராஜாவான அந்த சுவேதன் எங்கு தபம் செய்தானோ, அந்த கோரமான வனம் எப்படி மிருகங்களும் துவிஜங்களுமற்றதாக {பறவைகளும் அற்றதாக} ஆனது?(2) அந்த ராஜா, சூனியமானதும், மனுஜர்கள் நீங்கியதுமான அந்த வனத்திற்குள் தபம் செய்வதற்காக எவ்வாறு பிரவேசித்தான்? உள்ளதை உள்ளபடியே கேட்க விரும்புகிறேன்[1]" {என்றான் ராமன்}.(3)
[1] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 56ம் பாடல் பின்வருமாறு:

இன்னது ஆம் இவ்வாபரணம் என்பால் வந்த வழி என்று
பன்னு வேதமா முனிவன் பகரப் பரமன் வியப்பெய்தி
மன்னும் மிருகம் பறவை நரர் வழங்காது ஒழி தவ்வனத்தில்
என்ன நிமித்தத்தால் இது நீ இயம்பு என்று இயம்ப முனி இயம்பும்.

பொருள்: "இந்த ஆபரணம் எனக்கு வந்த வரலாறு இது" என்று வேதம் நன்கு கற்ற முனிவர் (அகஸ்தியர்) சொல்லக் கேட்ட இராமன் வியப்படைந்து, "நிலையாக மிருகமோ பறவையோ மனிதரோ நடமாடாத அந்த வனத்தில் என்ன காரணத்தால் இது நேர்ந்தது, நீ சொல்வாயாக" என்று கேட்க, முனிவர் சொல்லத் தொடங்கினார்.

கௌதூஹலத்துடன் கூடிய {ஆவல் நிறைந்த} ராமனின் வசனத்தைக் கேட்ட பரமதேஜஸ்வி {பேரொளியும் ஆற்றலும் கொண்ட அகஸ்தியர்}, {பின்வரும்} வாக்கியத்தைக் கூறவே தொடங்கினார்:(4) "இராமா, முற்காலத்தில் கிருதயுகத்தில் மனு தண்டதரனாகவும் {நீதிச் செங்கோலைத் தாங்கியவனாகவும்}, பிரபுவாகவும் {தலைவனாகவும்} இருந்தான். அவனுக்கு மஹானும், குலநந்தனனுமான {தன் குலத்தை மகிழ்விப்பவனுமான} இக்ஷ்வாகு புத்திரனாக இருந்தான்[2].(5) புவியில் வெல்வதற்கரியவனான அந்த மூத்த புத்திரனை {இக்ஷ்வாகுவை} ராஜ்ஜியத்தில் அமர்த்தி {நிலைநிறுத்தி}, "பிருத்வியில் {பூமியில்}, ராஜவம்சங்களுக்குக் கர்த்தாவாக {அரசவம்சங்களை தோற்றுவிப்பவனாக} இருப்பாயாக" என்று உண்மையில் கூறினான்.(6)
[2] மனு இங்கே முதல் தண்டநீதி வழங்குபவனாக அறிமுகப்படுத்தப்படுகிறான். மனுஸ்மிருதியிலும் (7ம் அத்தியாயம்) மனு அரசநீதியையும் தண்டவிதிகளையும் விரிவாக எடுத்துரைப்பது இதன் ஒப்புமையாகும்.

இராகவா, பிதாவுக்கு {தந்தையான மனுவுக்குப்} புத்திரனால் {இக்ஷ்வாகுவால்}, "அப்படியே {ஆகட்டும்}" என்று பிரதிஜ்ஞை செய்யப்பட்டது {உறுதியளிக்கப்பட்டது}. பிறகு பரம திருப்தியடைந்த மனு, உண்மையில் தன் புத்திரனிடம் {இக்ஷ்வாகுவிடம் பின்வருமாறு} சொன்னான்:(7) "பரமோதாரா {பெருந்தன்மைமிக்கவனே}, {நான்} பிரீதியடைந்தேன். நீ கர்த்தாவாக {[ராஜவம்சங்களை] உண்டாக்குபவனாக} இருக்கிறாய். இதில் சந்தேகமில்லை. மேலும் தண்டத்தால் {குற்றங்களை ஒடுக்கும் தண்டனை முறையால்} பிரஜைகளை ரக்ஷிப்பாயாக {மக்களைக் காப்பாயாக}. மேலும், காரணமில்லாமல் தண்டம் வேண்டாம் {தண்டனையை விதிக்காதே}.(8) அபராதம் {குற்றம்} இழைத்த மானவர்கள் {மனிதர்கள்} மீது எந்த தண்டம் {தண்டனை} விதிக்கப்படுகிறதோ, விதிப்படி வழங்கப்பட்ட அந்த தண்டம் உண்மையில் பார்த்திபனை {அரசனை} சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.(9) மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, புத்திரகா {அன்பு மகனே}, அதனால் தண்டத்தில் யத்னத்துடன் {தண்டனை விதிப்பதில் முயற்சியுடையவனாக} இருப்பாயாக. {இவ்வாறு} செயல்படும் உனக்கு உண்மையில் உலகத்தில் பரம தர்மம் உண்டாகும் {உன்னால் அறம் ஈட்டப்படும்}" {என்றான் மனு}[3].(10)
[3] "தண்டத்தால் பிரஜைகளை ரக்ஷிப்பாயாக, காரணமின்றி தண்டிக்காதே" என்ற இந்த உபதேசம் மனுஸ்மிருதியில் விரிவாகக் காணப்படும் தண்டநீதிக் கருத்துகளுடன் நெருங்கிய ஒப்புமை கொண்டது - நீதியுடன் வழங்கப்படும் தண்டனை அரசனை சுவர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் என்ற கருத்தும் அங்கும் வருகிறது.

மனு, அந்த புத்திரனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} சமாதியுடன் {மன ஒருமைப்பாட்டுடன்} இவ்வாறு பலவாறாக உபதேசித்துவிட்டு, மகிழ்ச்சியடைந்தவனாக சநாதனமும் {என்றும் நிலைத்திருப்பதும்}, திரிதிவமுமான {சுவர்க்கமுமான} பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(11) அவன் திரிதிவத்திற்குச் சென்ற பிறகு, அளவற்ற பிரபையுடைய {மகிமைமிக்க} இக்ஷ்வாகு, "புத்திரர்களை எவ்வாறு ஜனிக்க {பிறக்கச்} செய்வேன்?" என்ற சிந்தனையில் {கவலையில்} ஆழ்ந்தவன் ஆனான்.(12) தர்மாத்மாவான மனுவின் மகன் {இக்ஷ்வாகு} பலவகைப்பட்ட அந்தந்தக் கர்மங்களாலும் {சடங்குகளாலும்} தேவர்களின் மகன்களுக்கு இணையான நூறு மகன்களை ஜனிக்கச் {பிறக்கச்} செய்தான்.(13) தாதா {ஐயா / குழந்தாய்}, ரகுநந்தனா, அவர்கள் அனைவரிலும் கடைசியாகப் பிறந்தவன், மூடனாகவும் வித்தை கற்காதவனாகவும் {கல்வி அறிவு பெறாதவனாகவும்} இருந்தான். மூத்தவர்களை {தன் தமையன்மாரை} அவன் பணிவிடை செய்து போற்றவில்லை {மதித்து நடக்கவில்லை}.(14) மேலும் பிதாவானவன் {இக்ஷ்வாகு மன்னன்}, "இவனுடைய சரீரத்தில் அவசியம் தண்டம் விழுதல் நிகழும் {இவனது உடலுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்}" {என்று கருதி} அற்ப மேதஸ் உடைய {சிற்றறிவு கொண்ட} அவனுடைய பெயரை தண்டன் என்று சூட்டினான்.(15) இராகவா, அரிந்தமா {பகைவரை அடக்குபவனே}, அந்த புத்திரனுக்குத் {தண்டனுக்குத்} தகுந்த வேறொரு கோரமான தேசத்தைக் காணாதவனாக {இக்ஷ்வாகு}, விந்தியத்திற்கும் சைவலத்திற்கும் மத்தியில் {விந்திய மலைக்கும் சைவல மலைக்கும் இடையில்} இருந்த ராஜ்ஜியத்தை அவனுக்கு வழங்கினான்[4].(16)
[4] விந்திய மலைத்தொடருக்கும் சைவல மலைக்கும் இடைப்பட்ட இப்பகுதி, பிற்காலத்தில் தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்ட பகுதியாகும். இராமன் வனவாசம் மேற்கொண்ட அந்த வனத்தின் தோற்றுவாய் இங்கே விவரிக்கப்படுகிறது.

இராமா, அந்த தண்டன், அங்கே ரம்மியமான பர்வதச் சாரலில் ராஜாவானான். மேலும் ஒப்பற்றதும், மேலான மற்றொன்று இல்லாததுமான ஒரு புரத்தையும் {நகரத்தையும்} அமைத்தான்.(17) பிரபோ, மேலும் அந்த புரத்திற்கு {நகரத்திற்கு} மதுமந்தம் என்று பெயரிட்டான். நல்விரதங்களையுடைய உசனஸையோ {சுக்கிராசாரியரையோ}, புரோகிதராக வரித்தான்.(18) இவ்வாறு புரோகிதருடன் {சுக்கிராசாரியருடன்} கூடிய அந்த ராஜா {தண்டன்}, விருஷா {இந்திரன்} தேவராஜத்தை {தேவலோக ராஜ்ஜியத்தை ஆட்சி செய்வதைப்} போல, மிகவும் மகிழ்ச்சியடைந்த மனிதர்கள் நிறைந்ததாக அந்த ராஜ்ஜியத்தைச் செய்தான்.(19) பிறகு, அப்போது, பெரும் மஹானும் மஹாத்மாவும் மனுஜேந்திரபுத்திரனுமாகிய அந்த ராஜா {தண்டன்}, திவியில் உசனஸுடன் {விண்ணுலகில் சுக்கிரனுடன்} கூடிய சக்ரன் {இந்திரன்} போல, அந்த உசனஸுடன் {சுக்கிராசாரியருடன்} சேர்ந்து ராஜ்ஜியத்தை ஆண்டான்[5]" {என்றார் அகஸ்தியர்}.(20)
[5] "ஷக்ரோ திவீவோஷநஸா ஸமேத꞉" என்ற இந்த அடியில், இந்திரனுடன் பொதுவாகக் குறிப்பிடப்படுவது தேவகுரு பிருஹஸ்பதியே (உசனஸ் அசுரர்களின் குருவாவார்). சில பதிப்புகளில் இங்கு "ப்³ருஹஸ்பதிநா" என்ற பாடமும் காணப்படுகிறது. தர்மாலயப் பதிப்பிலும், ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பிலும் இந்த 20ம் சுலோகத்தின் செய்தி இல்லை. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "பெருமைக்குரிய மன்னரின் மைந்தனான அவன், தேவலோகத்தில் பிருஹஸ்பதியின் ஆலோசனைக்கிணங்க அரசு செலுத்தும் இந்திரனைப் போல், சுக்ராசாரியாரின் ஆலோசனையைக் கேட்டு, நல்லாட்சி புரிந்து வந்தான்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்புகளில் "பிருஹஸ்பதி" என்று இருக்கிறது. விவேக்தேவ்ராய் பதிப்பில், பிருஹஸ்பதியோ, சுக்கிரரோ குறிப்பிடப்படாமல், "தேவலோக ராஜ்ஜியத்தைப் போல" என்று இறுதி வாக்கியம் அமைக்கப்பட்டிருக்கிறது.


உத்தர ராமாயணம் சர்க்கம் – 079ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

தொடர்ந்து படிக்க: பொருளடக்கம் · நூல்கள்: அச்சு நூல்கள் · கிண்டில் நூல்கள்

Labels

அகஸ்தியர் அக்னி அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் கல்மாஷபாதன் காசியபர் காஞ்சனர் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குசன் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கைடபன் கோமுகன் கௌ கௌசல்யை கௌதமர் க்ஷுபன் சங்கன் சத்ருக்னன் சம்பூகன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாபாலி ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மதயந்தி மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாந்தாதா மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மித்ரஸஹன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லவணன் லவன் லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாமதேவர் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஸௌதாஸன் ஹனுமான் ஹேதி