Tuesday, 13 October 2026

தலைகீழ் தபம் | சர்க்கம் – 075 (19)

Penance upside down | Sarga-075 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாரதரின் உரையைக் கேட்ட இராமன், புஷ்பக விமானத்தில் திசைகள்தோறும் ஆராய்ந்து சென்று, தென்திசையில் தலைகீழாகத் தவமிருந்த தவசியைக் கண்டு விசாரித்தான்.

தலைகீழ் தபம்

அப்போது நாரதருடைய அந்த அம்ருதமயமான வாக்கியத்தைக் கேட்டவனோ {ராமனோ}, ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைந்தான். மேலும் லக்ஷ்மணனிடம் {பின்வரும்} இதைக் கூறினான்:(1) "சௌம்யா {அன்புக்குரியவனே}, செல்வாயாக. நல்விரதரான துவிஜசிரேஷ்டரை {நல்விரதங்களைக் கடைப்பிடிக்கும் இருபிறப்பாளர்களில் சிறந்தவரை} ஆசுவாசப்படுத்துவாயாக. மேலும் அந்த பாலனின் சரீரத்தைத் தைலத்ரோணியில் {எண்ணெய்த் தொட்டியில்} வைக்கச் செய்வாயாக.(2) சௌம்யா, மிகச் சிறந்த கந்தங்களாலும் {நறுமணப் பொருள்களாலும்}, சுகந்தமான தைலங்களாலும் {நல்ல நறுமணமுள்ள எண்ணெய்களாலும்} அந்த பாலன் {சிறுவனின் உடல்} சிதைவடையாதவாறு ஏற்பாடு செய்யப்படட்டும்.(3) சிஷ்டகர்மனான {இன்னும் செய்ய வேண்டிய செயல்கள் மீதமுள்ள}[1] பாலனின் சரீரம் பாதுகாக்கப்பட்ட நிலையில், அதற்கு எந்த விபத்தோ {கேடோ}, சிதைவோ ஏற்படாதவாறு செய்வாயாக" {என்றான் ராமன்}.(4)

[1] சிஷ்டகர்மன் என்பதற்கு, "நற்செயல்களைச் செய்தவன்" என்ற பொருளும், "இன்னும் செய்ய வேண்டிய கர்மங்கள் மீதமுள்ளவன்" என்ற பொருளும் வெவ்வேறு உரைகளில் காணக்கிடைக்கின்றன. "இன்னும் செய்ய வேண்டிய செயல்கள் மீதமுள்ள பாலன்" என்ற பொருளே இங்கு நெருக்கமானதாகத் தெரிகிறது.

பெரும்புகழுடைய காகுத்ஸ்தன் {ககுத்ஸ்த குல ராமன்}, சுபலக்ஷணங்களைக் கொண்ட லக்ஷ்மணனுக்கு இவ்வாறு கட்டளையிட்டுவிட்டு, புஷ்பகத்தை {நோக்கி}, "வருவாயாக" என்று மனத்தால் நினைத்தான்.(5) ஹேமபூஷிதமான {தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட} அந்தப் புஷ்பகம், இங்கிதத்தை {மனக்குறிப்பை} உணர்ந்து, ஒரு முஹூர்த்தத்தில் ராகவனின் {ரகு குல ராமனின்} சமீபத்தில் வந்து சேர்ந்தது.(6) அது {புஷ்பக விமானம்} பணிந்தவாறு, "நராதிபா {மனிதர்களின் தலைவா}, மஹாபாஹுவே, உனக்கு வசப்பட்ட கிங்கரனாக {பணியாளனாக} இதோ நான் வந்து நிற்கிறேன்" என்று கூறியது.(7) அந்த நராதிபன் {மனிதர்களின் தலைவனான ராமன்} புஷ்பகத்தின் இனிமையான பேச்சைக் கேட்டு, அந்த மஹரிஷிகளை வணங்கிவிட்டு, விமானத்தில் ஏறினான்.(8)

தனுசையும் {வில்லையும்}, தூணிகளையும் {அம்பறாத்தூணிகளையும்}, அழகிய ஒளிவீசும் கட்கத்தையும் {வாளையும்} எடுத்துக் கொண்டு, வீரர்களான சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்}, பரதன் ஆகிய இருவரையும் நகரத்தில் விட்டுவிட்டு,(9) ஸ்ரீமான் {சிறப்புடையவனான ராமன்}, மேற்குத் திசைக்குச் சென்றான். மேலும், ஆங்காங்கே தேடியவாறு ஹிமவந்தனால் {இமயத்தால்} சூழப்பட்ட வடக்குத் திசையை அடைந்தான்.(10) அந்த நராதிபன், அங்கும் சிறிதளவுகூடத் தீச்செயலைக் காணாமல், பிறகு கிழக்குத் திசை முழுவதையும் பார்த்தான்.(11) அப்போது புஷ்பகத்தில் இருந்த மஹாபாஹுவான நராதிபன் {ராமன்}, பரிசுத்த சமாசாரம் {மிகத்தூய்மையான ஒழுக்கநெறிகள்} கொண்டதும், கண்ணாடியின் மேற்பரப்பைப் போல நிர்மலமானதுமான {கிழக்குத் திசையைப்} பார்த்தான்.(12) பிறகு ராஜரிஷிநந்தனன் {ராஜரிஷியான தசரதனுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனான ராமன்} தெற்குத் திசைக்குச் சென்றான். சைவலத்தின்[2] வடக்குப் பக்கத்தில் மிகப் பெரிய சரஸை {ஏரியைக்} கண்டான்.(13) ஸ்ரீமான் ராகவன், அந்த சரஸில் முகம் கீழ்நோக்கி {தலைகீழாகத்} தொங்கியவாறு மிகக் கடுமையான தபத்தைச் செய்து கொண்டிருந்த ஒரு தபஸ்வியைக் கண்டான்[3].(14)

[2] சைவலம் என்பது பாசி என்ற பொதுப்பொருளையும் தரக்கூடிய சொல்லாகும். ஆனால் இங்கே ஓர் இடத்தின், அல்லது ஒரு மலைப்பகுதியின் பெயராகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தர்மாலயப் பதிப்பில், "ஒரு மலையினது வடபாகத்தில் மிக்க பொலிவுற்று விளங்கும் ஒரு பொய்கையைக் கண்டார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஆங்கு விந்தமலைக்குத் தெற்கிலுள்ள சைவலமென்னும் சைலத்தின் உத்தரபாகத்தில் பொலிவுற்று விளங்கும் பொய்கையொன்றைப் பார்த்து அதனருகே எழுந்தருளினார்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அங்கே, (விந்தியமலைக்கு அருகேயிருந்த) சைவல மலையின் வடக்கில் மிகப் பெரிய ஒரு நீர்நிலையைக் கண்டார்" என்றிருக்கிறது. ஆங்கிலச் செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், "சைவலம்" என்பதன் அடிக்குறிப்பில், "விந்திய மலையில் உள்ள ஒரு சிகரம்" என்றிருக்கிறது.

[3] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 933ம் பாடல் பின்வருமாறு:

குடதிசையும் வடதிசையும் குணதிசையும்
    குறிக்கொண்டு நாடிப் பின்பு
திடம் இசையும் காகுத்தன் தென்திசைமேல்
    மாதவனைத் தேடிச் செல்வான்
புடைபரந்த புண்டரிகப் பூ அணைமேல்
    பேடையொடும் அன்னம் வைகும்
தடம்மருங்கு கால்மேலாய்த் தலைகீழாய்த்
    தவம் செய்வோன் தன்னைக் கண்டான்.

பொருள்: மேற்கும் வடக்கும் கிழக்கும் ஆகிய திசைகளில் கருத்தோடு தேடிப்பார்த்துப் பின் மனோதிடம் பொருந்திய இராமன் தென்திசையில் பெரியதவம் செய்பவனைத் தேடிச் செல்கின்றவனாய், பக்கங்களில் விரிந்து பரந்த தாமரைப் பூவாகிய அணையின்மேல் பெண் அன்னத்தோடு ஆண் அன்னம் தங்கியுள்ள தடாகத்தின் பக்கத்தில் கால் மேலாகவும் தலைகீழாகவும் நின்று தவம் செய்பவனைக் கண்டான்.

அப்போது அந்த ராகவன், உத்தமமான தபத்தைச் செய்து கொண்டிருந்த அவனை அணுகி {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான், "நல்விரதனே, நீ தன்யனாக {பேறுபெற்றவனாக} இருக்கிறாய்.(15) தபத்தால் முதிர்ந்தவனே, உறுதியான ஆற்றல் கொண்டவனே, நீ எந்த யோனியில் {பிறவிவகையில்} நிலைபெற்றிருக்கிறாய்? கௌதூஹலத்தால் {ஆவலால்} உன்னைக் கேட்கிறேன். நான்தான் தாசரதியான {தசரதரின் மகனான} ராமன்.(16) தாபஸா {தபம் செய்பவனே}, நீ விரும்பிய அர்த்தம் {நோக்கம்} என்ன? ஸ்வர்க்கத்தை அடைவதா? அல்லது வேறேதேனும் வரத்தை நாடுவதா? எந்த அர்த்தத்திற்காக {நோக்கத்திற்காக} நீ செய்வதற்கரிய தபத்தைச் செய்கிறாயோ, எதைச் சார்ந்து {எந்த நோக்கத்தை முன்னிட்டு} தபம் மேற்கொள்ளப்பட்டதோ, அதைக் கேட்டறிய விரும்புகிறேன்.(17) நீ பிராமணனா? உனக்கு பத்ரம் {மங்கலம்} உண்டாகட்டும். அல்லது வெல்வதற்கரிய க்ஷத்திரியனா? மூன்றாவது வர்ணத்தைச் சேர்ந்த வைசியனா? அல்லது சூத்திரனா? சத்தியவாக்குடையவனாக {உண்மையைப் பேசுபவனாக} இருப்பாயாக" {என்று கேட்டான் ராமன்}.(18)

நராதிபனால் {ராமனால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், அவன் தலைகீழாகத் தொங்கிய நிலையிலேயே தாசரதியான அந்த நிருபபுங்கவனிடம் {தசரதனின் மகனும், அரசர்களில் முதன்மையானவனுமான ராமனிடம்}, தனது ஜாதியையும்[4], எந்தக் காரணத்திற்காகத் தபமுயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையும் கூறினான்.(19)

[4] முந்தைய சுலோகத்தில் இராமன் நான்கு வர்ணங்களில் எதைச் சேர்ந்தவன் என்று கேட்டிருக்கிறான். இச்சுலோகத்தில் வரும் ‘ஜாதி’ என்ற சொல், அந்த வர்ணத்தையே குறிக்கிறது. இன்றைய வழக்கிலுள்ள சாதி உட்பிரிவைக் குறிப்பதாக இங்கே பொருள் கொள்ள வேண்டியதில்லை.

உத்தர ராமாயணம் சர்க்கம் – 075ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி