Wednesday, 29 July 2026

கோமதியும் கங்கையும் | சர்க்கம் – 046 (34)

Gomati and Ganga | Sarga-046 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையைத் தேரிலேற்றிக் கொண்டு வனத்திற்குப் புறப்பட்ட லக்ஷ்மணன்; அபசகுனங்களைக் கண்ட சீதை; கோமதி ஆற்றங்கரையில் தங்கி, மறுநாள் கங்கையை அடைந்தது...

கங்கைக்கரையில் சீதையும் லக்ஷ்மணனும்

பிறகு, ரஜனி {இரவு} விடிந்தபோது, லக்ஷ்மணன் தீனமான {கவலையடைந்த} உள்ளத்துடனும், முற்றிலும் வாடிய முகத்துடனும் சுமந்திரனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "சாரதே {தேரோட்டியே}, உத்தம ரதத்தில் துரகங்களை {சிறந்த தேரில் குதிரைகளை} சீக்கிரம் பூட்டுவீராக; ராஜபவனத்திலிருந்து சீதையின் நன்கு விரிக்கப்பட்ட ஆசனத்தையும் {தேரில்} அமைப்பீராக.(2) புண்ணிய கர்மங்களைச் செய்பவர்களான மஹரிஷிகளின் ஆசிரமத்திற்கு, ராஜவசனத்தின்படியே, சீதை என்னால் அழைத்துச் செல்லப்பட வேண்டியவள் ஆகிறாள். சீக்கிரம் ரதம் கொண்டுவரப்படட்டும்" {என்றான் லக்ஷ்மணன்}.(3)

சுமந்திரனோ, "அப்படியே {ஆகட்டும்}" என்று கூறி, பரம வாஜிகள் {சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதும், சுகமான படுக்கையினால் நன்கு விரிக்கப்பட்டதும் மிக அழகிய பிரகாசத்தைக் கொண்டதுமான ரதத்தைக்(4) கொண்டுவந்து, மித்ரர்களின் {நண்பர்களின்} மதிப்பை வளர்ப்பவனான சௌமித்ரியிடம், "பிரபோ, இந்த ரதம் வந்துவிட்டது. எந்தக் காரியமோ, {அது} செய்யப்படட்டும்" என்று சொன்னான்.(5)

சுமந்திரனால் இவ்வாறு கூறப்பட்ட நரரிஷபனான லக்ஷ்மணன், ராஜவேஷ்மத்தில் {அரண்மனையில்} பிரவேசித்து, சீதையை அடைந்து {பின்வருமாறு} பேசினான்:(6) "பிரபுவான இந்த நிருபதியிடம் {ராஜா ராமரிடம் உன்னால்} வரம் யாசிக்கப்பட்டதன்றோ? மேலும் நிருபராலும் {அரசராலும்} பிரதிஜ்ஞை செய்து, ஆசிரமத்தை நோக்கி {அழைத்துச் செல்ல} ஆணையிடப்பட்டிருக்கிறது.(7) தேவி, வைதேஹி, நம் பார்த்திபரின் சாசனத்தால்  {பூமியை ஆளும் ராமரின் கட்டளையால்}, கங்காதீரத்தில் உள்ள சுபமான ரிஷிகளின் ஆசிரமங்களுக்கு என்னால் சீக்கிரம் சென்று, முனிவர்களால் சேவிக்கப்படும் அரண்யத்தில் {காட்டில்} நீ கொண்டு சேர்க்கப்படப் போகிறாய்" {என்றான் லக்ஷ்மணன்}.(8)

இவ்வாறு மஹாத்மாவான லக்ஷ்மணனால் கூறப்பட்ட வைதேஹியோ, ஒப்பிலாத பெரும் மகிழ்ச்சியை அடைந்தாள்; {உடனே வனத்திற்குச்} செல்வதையும் விரும்பினாள்.(9) வைதேஹி, மதிப்புமிக்க வஸ்திரங்களையும் {ஆடைகளையும்}, மேலும் விதவிதமான ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு புறப்படத் தொடங்கினாள்.(10) "நான் இந்த ஆபரணங்களையும், மதிப்புமிக்க வஸ்திரங்களையும் {ஆடைகளையும்}, மேலும் விதவிதமான தனங்களையும் {செல்வங்களையும்} முனிபத்னிகளுக்கு {முனிவர்களின் மனைவியருக்குக்} கொடுப்பேன்" {என்று லக்ஷ்மணனிடம் சொன்னாள்}[1].(11)

[1] சீதை லக்ஷ்மணனிடம்தான் இதைக் கூறுகிறாள் என்பது அடுத்த சுலோகத்தில் தெரிகிறது.

சௌமித்ரியோ, "அப்படியே {ஆகட்டும்}" என்று கூறி, மைதிலியை ரதத்தில் ஏற்றி, ராமனுடைய ஆணையை நினைவுகூர்ந்தபடி, சீக்கிர துரகங்களுடன் {வேகமாகச் செல்லும் குதிரைகளுடன்} புறப்பட்டான்.(12) மேலும் அப்போது சீதை, லக்ஷ்மிவர்தனனான {செல்வத்தை வளர்ப்பவனான} லக்ஷ்மணனிடம் இதைக் கூறினாள், "இரகுநந்தனரே, அசுபங்கள் {தீய சகுனங்கள்} பலவற்றையே {நான்} காண்கிறேன்.(13) சௌமித்ரே, இன்று என் நயனம் {கண்} துடிக்கிறது[2]. மேலும், உடல்நடுக்கமும் உண்டாகிறது. ஹிருதயமுங்கூட அஸ்வஸ்தம் {நலமில்லாதது} போல உணர்கிறேன்.(14) பிருதுலோசனரே {அகன்ற கண்களையுடையவரே}, எனக்கு மிதமிஞ்சிய பதற்றத்துடன் சேர்ந்து, பெரும் அதைரியமும் {தைரியமின்மையும்} உண்டாகிறது. மேலும் இந்தப் பிருத்வியைச் சூன்யமாகவே {இந்த பூமியை வெறுமையானதாகவே நான்} காண்கிறேன்.(15) பிராத்ருவத்சலரே {சகோதரர்களிடம் அன்பு கொண்டவரே}, உமது பிராதாவான அவருக்கு ஸ்வஸ்தியாகட்டும் {உமது அண்ணனான ராமருக்கு நன்மை உண்டாகட்டும்}. மேலும், வீரரே, பாகுபாடின்றி என்னுடைய மாமியார்கள் அனைவருக்குங்கூட {நலம் உண்டாகட்டும்}" {என்றாள் சீதை}.(16) 

[2] சுந்தர காண்டம், 27ம் சர்க்கம், 49, 50ம் சுலோகங்களில், சீதையின் இடது கண், இடது கை, இடது தொடை ஆகியவை துடிப்பதைக் காண்பதாக ராக்ஷசிகளிடம் திரிஜடை சொல்கிறாள். அதாவது சீதையின் இடது பக்க உறுப்புகள் துடிப்பது சீதைக்கான நற்சகுனமாக திரிஜடையால் அனுமானிக்கப்படுகிறது. இங்கே தீய சகுனமாக இருப்பதால் துடித்தது வலது கண் என்றும் அனுமானிக்கலாம். வலது கண் என்று நேரடியாகவே சில பதிப்புகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

இவ்வாறு கைகளைக் குவித்த சீதை, புரத்திலும் {நகரிலும்}, மேலும் ஜனபதத்திலும் {நாட்டுப்புறங்களிலும்} உள்ள பிராணிகளுக்குங்கூட குசலத்தை தேவதைகளிடம் வேண்டினாள்.(17) பிறகு லக்ஷ்மணன், {சீதையுடைய வார்த்தைகளின்} பொருளைக் கேட்டு, சிரசால் {தலையால்} மைதிலியை வணங்கி, மகிழ்ச்சியடைந்தவனாக, "சிவம் {மங்கலம் உண்டாகட்டும்}" என்று கூறினான்; {ஆனால் உள்ளே} முற்றிலும் வாடிய இதயத்துடன் {இருந்தான்}.(18)  

பிறகு சௌமித்ரி கோமதி தீரத்திலுள்ள {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன் கோமதி ஆற்றங்கரையில் உள்ள} ஆசிரமத்தில் வாசத்தை அடைந்து {இரவு தங்கி}, பிரபாதத்தில் {அதிகாலையில்} மீண்டும் எழுந்து சூதனிடம் {சுமந்திரனிடம் பின்வருமாறு} கூறினான்:(19) "இன்று சீக்கிரம் ரதத்தைப் பூட்டுவீராக. பர்வதத்தில் திரையம்பகன் {முக்கண்ணனான சிவன்} எப்படியோ, {அப்படி} பாகீரதி ஜலத்தை சிரஸில் {கங்கை நீரைத் தலையில்} தரிக்கப் போகிறேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(20)

பிறகு அந்த சூதன் {சுமந்திரன்}, மனோவேகமுள்ள நான்கு அஷ்வங்களையும் கயிற்றினால் ரதத்தில் பூட்டி, கைகூப்பியவனாக வைதேஹியிடம், "ஏறுவாயாக" என்று கூறினான்.(21) அந்த சீதையோ, சௌமித்ரியுடன் கூடியவளாக, மதிமிக்க சூதனின் {சுமந்திரனின்} வசனத்திற்கேற்ப உத்தம ரதத்தில் ஏறினாள்.(22) அரை நாள் {அரைப்பகல்} சென்ற பிறகு, விசாலாக்ஷி {அகன்ற கண்களை உடையவளான சீதை}, பாகீரதியின் {பகீரதனின் மகளாகி வந்தவளின்} பெரும் நீர்நிலையும், பாபநாசினியுமான கங்கையை அடைந்தாள்[3].(23)

[3] தர்மாலயப் பதிப்பில், "காலைப்பொழுதில் யாத்திரை செய்து ஸகலபாபங்களையும் போக்கவல்லதாகி கங்கைக்கு வந்து சேர்ந்தாள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "சீக்கிரமே சீதை ஸௌமித்ரி சுமந்திரர் ஆகிய மூவரும் கங்காநதிபோய்ச் சேர்ந்தனர்கள். அங்கு அவர்கள் போய்ச் சேருமளவில் நடுப்பகலாகியது" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "லட்சுமணனுடனும், அறிவாளியான சுமந்திரருடனும் பாவங்களைப் போக்கும் கங்கைக் கரையை சீதை அடைந்தாள். நண்பகல் வேளையில், வெள்ளம் பெருகும் கங்கைக் கரையை அடைந்ததும்" என்றிருக்கிறது. கங்கை பகீரதனின் மகளாகிய கதை மஹாபாரதம், வனபர்வம், பகுதி 107 முதல் 109 வரை சொல்லப்பட்டுள்ளது.

இலக்ஷ்மணன் தீனமாக {வருந்திப்} பார்த்து, மஹாஸ்வனத்துடன் {பேரொலியுடன்} உரக்க அழுதான்[4].(24) பெருங்கவலை கொண்டவளும், தர்மஜ்ஞையுமான {தர்மத்தை நன்கறிந்தவளுமான} சீதையோ, துயரடைந்த லக்ஷ்மணனைக் கண்டு,  {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள், "உம்மால் ஏன் இப்படி அழப்படுகிறது? {நீர் ஏன் இப்படி அழுகிறீர்?}(25) இலக்ஷ்மணரே, என்னுடைய நீண்ட நாள் விருப்பமான ஜாஹ்னவீதீரத்தை {கங்கைக்கரையை}[5] அடைந்து, {இந்த} மகிழ்ச்சியான காலத்தில் எதற்காக என்னை வேதனையடையச் செய்கிறீர்?(26) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, நீர் எப்போதும் ராமரின் அருகில் இருக்கிறீர். ஒருவேளை அவரால் {ராமரால்} இரண்டு ராத்திரிகள் பிரிக்கப்பட்டதால் சோகத்தை அடைந்தீரோ?(27) இலக்ஷ்மணரே, எனக்கும் ராமர் ஜீவிதத்தைக் காட்டிலும் பிரியமானவர். நான் இப்படி சோகிக்கவில்லையே. நீர் இப்படி பாலிசனாகாதீர் {அறியா சிறுவனைப் போலாகாதீர்}.(28) என்னை கங்கையைக் கடக்கச் செய்வீராக. மேலும் {என்னை} தபஸ்விகளையும் காணச் செய்வீராக. பிறகு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் {நான்} முனிவர்களுக்குக் கொடுப்பேன்.(29) பிறகு, மஹரிஷிகளின் மதிப்புக்கு இணங்க வணக்கத்தைச் செலுத்தி, மேலும் அங்கே ஏக நிசியை {ஓரிரவைக்} கழித்துவிட்டு, மீண்டும் அந்த புரிக்கு {அயோத்திக்கு நாம் திரும்பிச்} செல்வோம்.(30) பத்மபத்ராக்ஷரும் {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவரும்}, சிங்கத்தைப் போன்ற மார்பையும், மெலிந்த வயிற்றையும் கொண்டவரும், மகிழ்விப்பவர்களில் சிறந்தவருமான ராமரைக் காண என்னுடைய மனமே கூட {என்னைத்} துரிதப்படுத்துகிறது" {என்றாள் சீதை}.(31)

[4] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 741ம் பாடல் பின்வருமாறு:

கங்கையைச் சென்று காண்டலும் இளையோன் 
  கண்கள் நீர் அரும்பிடக் காந்திப்
பொங்கிய துயரம் புறப்படா வண்ணம் 
  அடக்கி உள்நின்று பொரும
இங்கு நீ இங்ஙன் இடர் உறுவானேன் 
  இலக்குவ இயம்புதி
என்று மங்கை ஈது உரைப்ப மறுமொழி கொடாது 
  வாய்விட்டுக் கதறிடுங்காலை

பொருள்: கங்கையாற்றைப் போய்க்கண்ட அளவில் இலக்குவன் கண்களில் நீர் அரும்பிடவும், உள்ளத்தில் எரிந்து பொங்கிய துயரம் புறப்படாதபடி அகத்தே வருந்தாநிற்க அது கண்ட சீதை, "இலக்குவ! நீ இங்கு இவ்வாறு துன்புறுவானேன்? சொல்லு" என்று இதனைச் சொல்ல, இலக்குவன் அதற்கு மறுமொழி கொடுக்காமல் வாய்விட்டுக் கதறி அழுதிடும்பொழுது.

[5] ஜஹ்னு முனிவர் தம் தவத்திற்கு இடையூறாக வந்த கங்கையை முழுவதுமாக குடித்துவிட்டு, பின்னர் தன் காது வழியாக மீண்டும் வெளியிட்டார். இதனால் கங்கை அவருக்கு மகளாகக் கருதப்பட்டு 'ஜாஹ்னவி' என்ற பெயரைப் பெற்றாள். இந்தக் கதை பாலகாண்டம், 43ம் சர்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பகைவீரர்களைக் கொல்பவனான லக்ஷ்மணன், அவளுடைய அந்த வசனத்தைக் கேட்டு, சுபமான நயனங்களை {மங்கலமான தன்னிரு கண்களை} நன்றாகத் துடைத்துக் கொண்டு, நாவிகர்களை {படகோட்டிகளை} அழைத்தான்.(32) "இந்தப் படகுங்கூட ஆயத்தமாக இருக்கிறது" என்று கைகூப்பியவர்களாக தாசர்கள் {பணியாட்கள் / படகோட்டிகள்} கூறினார்கள்.(33) கங்கையைக் கடக்க விரும்பியவனான லக்ஷ்மணன் சுபமான நாவத்தில் {படகில்} ஏறினான். சமாஹிதனான {ஒருமுகப்பட்ட மனத்தையுடைய} லக்ஷ்மணன் அவளை {சீதையை} கங்கையைக் கடக்கச் செய்தான்.(34)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 046ல் உள்ள சுலோகங்கள்: 34

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி