Farewell | Sarga-040 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களும், ரிக்ஷர்களும், ராக்ஷசர்களும் தத்தமது வசிப்பிடங்களுக்குச் செல்ல விடைகொடுத்து அனுப்பிய ராமன்...
அவ்வாறு[1] ரிக்ஷங்கள் {கரடிகள்}, வானரர்கள் {குரங்குகள்}, ராக்ஷசர்கள் ஆகிய அவர்கள் {அயோத்தியில்} வசித்துக் கொண்டிருக்கையில், மஹாதேஜஸ்வியான ராகவனோ {ராமனோ}, சுக்ரீவனிடம் இதைக் கூறினான்:(1) "சௌம்யா {அன்பானவனே}, ஸுராஸுரர்களால் {தேவ, அசுரர்களால்} வெல்லப்படமுடியாத கிஷ்கிந்தைக்குச் செல்வாயாக. {உன்} அமைச்சர்களுடன் சேர்ந்து, முட்கள் {பகைவர்கள்} ஒழிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை ஆள்வாயாக.(2) மஹாபாஹோ, நீ பரம பிரீதியுடன் கூடியவனாக, அங்கதனையும்,[2] ஹனுமானையும், மஹாபலவானான நளனையும் பார்ப்பாயாக {கவனித்துக் கொள்வாயாக}.(3) வீரனும், {தாரையின் தந்தையும், உன்} மாமனாருமான சுஷேணனையும், பலவான்களில் சிறந்தவனான தாரனையும், அப்படியே வெல்வதற்கரியவனான குமுதனையும், அப்படியே மஹாபலவானான நீலனையும்,(4) வீரனான சதவலியையும், அப்படியே மைந்தனையும், அப்படியே துவிவிதனையும், கஜனையும், கவாக்ஷனையும், கவயனையும், மஹாபலவானான சரபனையும், அப்படியே கந்தமாதனனையும் நீ பிரீதியுடன் கூடியவனாகப் பார்ப்பாயாக {கவனித்துக் கொள்வாயாக}.(5) மேலும் பெரும் விக்ராந்தனான ரிஷபனையும், மஹாபலவானான ஜாம்பவந்தனையும், மேலும் எனக்காக {தங்கள்} ஜீவிதத்தைக் கைவிட்ட {கைவிடத் துணிந்த} இந்தப் பெரும் மஹாத்மாக்களையும்,(6) நீ பிரீதியுடன் கூடியவனாகப் பார்ப்பாயாக {கவனித்துக் கொள்வாயாக}. மேலும் இவர்களுக்குப் பிரியமில்லாததைச் செய்யாதிருப்பாயாக" {என்றான் ராமன்}.(7)
[1] செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இந்த சர்க்கம் முழுவதும் இல்லை.
[2] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், அனுமப் படலம், 688ம் பாடல் பின்வருவதுவெங்கதிரோன் மைந்தனை அவ் விளங்குபுகழ்க்காகுத்தன் விரும்பி நோக்கிஅங்கதன் நின் அடைக்கலம் என்று அடல்வாலிஅந்தியத்தில் அறைந்த வார்த்தைதங்கிய என் சித்தத்தைத் தான் விட்டுப்போகாது தடந்தோள்வீரஇங்கு இவனைக் குறிக்கொள் என இனிது உரைத்துப்பின்னும் இவை இயம்பும் வீரன்.பொருள்: அந்தப் பெரும் புகழையுடைய ராமன், வெப்பமுடைய சூரியனுக்கு மைந்தனாகிய சுக்ரீவனை விரும்பிப் பார்த்து, "பெரிய தோளுடைய வீரனே, அங்கதன் நின் அடைக்கலம் என்று வலிமைமிக்க வாலி இறுதிக் காலத்தில் சொன்ன வார்த்தை என் சிந்தையை விட்டுப் போகாமல் தங்கியிருக்கிறது. எனவே, இங்குள்ள இவனைக் கவனத்தில் கொள் என்று இனிதாகச் சொல்லி மேலும் வீரனாகிய ராமன் இவற்றைச் சொல்லுவான்.
இவ்வாறு சுக்ரீவனிடம் கூறிவிட்டு, மேலும் {அவனை} மீண்டும் மீண்டும் தழுவிக் கொண்ட ராமனோ, அதன்பிறகு விபீஷணனிடம் மதுரமான சொற்களால் {பின்வருமாறு} கூறினான்:(8) "தர்மஜ்ஞனாக {தர்மத்தை அறிந்தவனாக} என் மதியில் {எண்ணத்தில் இருக்கும்} நீ, தர்மத்துடன் லங்கையை ஆள்வாயாக. {உன்} புரத்திற்கும் {நகரத்திற்கும்}, ராக்ஷசர்களுக்கும், மேலும் சொந்த பிராதாவுக்கும் {சகோதரனான குபேரனுக்கும்} சம்மதமானவனாகவே இருக்கிறாய்.(9) மேலும், ராஜனே, மேலும் நீ எவ்விதத்திலும் புத்தியை அதர்மத்தில் செலுத்திடாதே. ஏனெனில், புத்திமான்களான ராஜாக்களே மேதினியை {பூமியை} நிலையாக அனுபவிக்கிறார்கள்.(10) மேலும், ராஜனே, சுக்ரீவன் சஹிதனான நான், நித்யம் உன்னால் பரம பிரீதியுடன் நினைவுகூரத்தக்கவன். ஜுவரம் {கவலை எனும் பிணி} நீங்கியவனாக நீ {லங்கைக்குச்} செல்வாயாக.(11)
இராமனின் பேச்சைக் கேட்டு, ரிக்ஷர்களும் {கரடிகளும்}, வானரர்களும், ராக்ஷசர்களும், "ஸாது, ஸாது {நன்று, நல்லது}" என்று காகுத்ஸ்தனை மீண்டும் மீண்டும் {பின்வருமாறு} புகழ்ந்தனர்:(12) "மஹாபாஹோ, ராமரே, உமது புத்தியும், அப்படியே அற்புத வீரியமும், மேலும் பரம மதுரமான {மிக இனிய} குணமும் நித்யம் ஸ்வயம்புவை {பிரம்மனைப்} போல இருக்கின்றன" {என்றனர்}.(13)
அந்த வானரர்களும், ராக்ஷசர்களும் இவ்வாறு {ராமனைப் புகழ்ந்து} பேசிக் கொண்டிருக்கையில், ஹனூமான் பணிவுடையவன் ஆகி, ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(14) "இராஜரே, உம்மிடத்தில் என்னுடைய பரம ஸ்னேகம் நித்யமாக நிலைத்திருக்கட்டும். மேலும், வீரரே, {உம்மிடத்தில் என்} பக்தியும் நியதமாக {மாறாததாக} இருக்கட்டும்; {என்} பாவம் {உணர்வு} வேறெங்கும் செல்லாதிருக்கட்டும்.(15) வீரரே, மஹீதலத்தில் {பூமியில்} எதுவரை ராமகதை உலவுமோ, அதுவரை என் சரீரத்தில் என் பிராணன்கள் வசித்திருக்கும். இதில் சந்தேகமில்லை.(16) மேலும், ரகுநந்தனரே, நரரிஷபரே {மனிதர்களில் காளையே}, உமது திவ்யமான இந்தக் கதையும், சரிதமும் எதுவோ, அதை எனக்கு அப்சரஸ்கள் என்ற பெயரால் அறியப்பட்டவர்கள் கேட்கச் செய்யட்டும்.(17) உமது நடத்தையெனும் அம்ருதமான அதைக் கேட்ட பிறகு, வீரரே, பிரபுவே, அநிலன் {காற்றானவன்} மேகங்களின் வரிசையை {விரட்டுவதைப்} போல அந்த ஏக்கத்தை நான் போக்கிக் கொள்வேன்" {என்றான் ஹனுமான்}.(18)
அதன்பிறகு, மேலான ஆசனத்திலிருந்து எழுந்த ராமனோ, இவ்வாறு பேசிக் கொண்டிருந்த ஹனுமந்தனை சினேகத்துடன் தழுவிக் கொண்டு இந்த வாக்கியத்தையே கூறினான்:(19) "கபிசிரேஷ்டா, இவ்வாறே இது நிகழும். இதில் சந்தேகமில்லை. மேலும், இவ்வுலகில் எதுவரை என்னுடைய இந்தக் கதை இருக்குமோ, அதுவரை உன் கீர்த்தியும், அப்படியே {உன்} சரீரத்திலும் அசவங்கள் {உயிர்க்காற்றுகள்}[3] நிலைத்திருக்கும்.(20) உலகங்கள் எதுவரை நிலைத்திருக்குமோ, அதுவரை என் கதையும் நிலைத்திருக்கும்.(21) மேலும், உலகத்தில் எனக்கு {நீ செய்த} ஒவ்வொரு தனித்தனி உபகாரத்திற்கும் {உதவிக்கும் என்} பிராணன்களை உனக்குத் தருவேன். கபியே {குரங்கானவனே}, ஆபத்துகளில் நரன் பிரதி உபகாரங்களின் பாத்திரத்தை {கைம்மாறுகள் செய்யும் தகுதியை} அடைகிறான்[4]" {என்றான் ராமன்}.(22)
[3] மனித உடலில் உயிர் என்பது ஒரே காற்றாகச் செயல்படுவதில்லை. அது ஐந்து முதன்மைப் பிரிவுகளாகவும் (பஞ்ச பிராணன்கள்), ஐந்து துணைப் பிரிவுகளாகவும் (உப பிராணன்கள்) உடல் முழுவதும் பிரிந்து இயங்குகிறது. 1. பிராணன் (உள்வாங்கும் காற்று). 2. அபானன் (கீழ்நோக்கிச் செல்லும் காற்று) 3. வியானன் (உடல் முழுவதும் பரவியிருக்கும் காற்று). 4. உதானன் (மேல்நோக்கிச் செல்லும் காற்று) 5. ஸமானன் (செரிமானத்தை நடத்தும் காற்று). இந்த ஐந்து வகையான பிராணக் காற்றுகளும் உடலில் இருக்கும் வரைதான் ஒருவன் உயிருடன் இருக்கிறான் என்று பொருள்.
[4] அதாவது, நான் உனக்குத் திரும்ப உதவி செய்ய வேண்டும் என்றால், நீ ஆபத்தில் சிக்க வேண்டும். ஆனால் உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என நான் நினைப்பதால், உன் கடனை என்னால் அடைக்கவே முடியாது, உனக்கு நான் என்றும் கடன்பட்டவனே என்பது இங்கே ராமன் சொல்லவரும் கருத்தாகும்.
பிறகு, அந்த ராகவனோ, சந்திரனைப் போன்ற ஒளியும், வைடூரியத்தை நடுவிலும் கொண்ட ஹாரத்தை {மாலையைத்} தன் கண்டத்திலிருந்து கழற்றினான். மேலும் அதை ஹனூமதனின் கண்டத்தில் கட்டினான் {கழுத்தில் அணிவித்தான்}.(23) சந்திரனால் உச்சி சூடப்பட்ட ஹேமசைலேந்திரத்தை போல {பொன்மயமான மேரு மலையைப் போலக்} கபி {ஹனுமான்} மார்பில் கட்டப்பட்ட அந்தப் பெரும் ஹாரத்தால் பிரகாசித்தான்.(24)
பிறகு, மஹாபலவான்களான அந்த வானரர்கள், ராகவனிடம் இதைக் கேட்டு, {ஒருவர் பின் ஒருவராக} எழுந்து, எழுந்து அவனது பாதங்கள் இரண்டையும் சிரசால் வணங்கி, {அங்கிருந்து} புறப்பட்டுச் சென்றனர்.(25) மேலும் அந்தச் சுக்ரீவனும் ராமனால் இடைவெளியின்றி மார்போடு அணைக்கப்பட்டான். மேலும், தர்மாத்மாவான விபீஷணனும் {அவ்வாறே அணைக்கப்பட்டான்}. அவர்கள் அனைவரும் கண்ணீரால் தழுதழுத்தவர்கள் ஆகினர்.(26) மேலும் ராகவனைப் பிரியும்போது, அவர்கள் அனைவரும், துக்கத்தால் கண்ணீர் நிறைந்த நேத்திரங்களை {கண்களைக்} கொண்டவர்களாக, கண்ணீரால் தழுதழுத்த குரலுடன் கூடியவர்களாக, சிந்தை இழந்து, முற்றிலும் மயங்கியவர்கள் போலானார்கள்.(27)
மஹாத்மாவான அந்த ராகவனால் இவ்வாறு அருளப்பட்டவர்களான அவர்கள் அனைவரும், தேஹத்தை {உடலைக்} கைவிடும் தேஹியை {உடல்கொண்ட உயிரைப்} போல {பெரும் துயருடன்} தத்தமது கிருஹங்களுக்குச் சென்றனர்.(28) பிறகு, ரகுவம்ச வர்தனனான ராமனை வணங்கி, பிரிவில் உண்டாகும் கண்ணீரால் பூர்ணமாக நிரப்பப்பட்ட கண்களைக் கொண்டவர்களாக, அந்த ராக்ஷசர்களும், ரிக்ஷர்களும், வானரர்களும் தத்தமது சொந்த வசிப்பிடங்களை நோக்கி உண்மையில் திரும்பிச் சென்றனர்[5].(29)
[5] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாநரராக்ஷசர்களுக்கு ஸ்ரீராமசந்திரன் விடைகொடுத்தனுப்பியது இவ்விடத்திலேதான். முன்பு யுத்தகாண்டத்திறுதியில் விடைகொடுத்தனுப்பியதாகக் கூறியது காண்டத்தின் கதையைச் சுருக்கமாய் முடிப்பதற்காக வென்றறிக" என்றிருக்கிறது. யுத்தகாண்டம், 128ம் சர்க்கம், 88 - 90ம் சுலோகங்களில், வானரர்கள் ராமனை வணங்கி, விடைபெற்றுக் கொண்டு கிஷ்கிந்தையை அடைந்ததும், சுக்ரீவன் ராமாபிஷேகத்தைக் கண்டு, ராமனால் பூஜிக்கப்பட்டவனாக கிஷ்கிந்தைக்குள் பிரவேசித்ததும், 91ம் சுலோகத்தில் விபீஷணனும், குலதனத்துடன் லங்கைக்குத் திரும்பிச் சென்றதும் சொல்லப்பட்டிருக்கின்றன.
உத்தர ராமாயணம் சர்க்கம் – 040ல் உள்ள சுலோகங்கள்: 29
| Previous | | Sanskrit | | English | | Next |
