Tuesday, 21 July 2026

வானரர்களுக்கு வெகுமதி | சர்க்கம் – 039 (30)

Reward for the Vanaras | Sarga-039 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அங்கதனுக்கும், ஹனுமானுக்கும் சிறந்த ஆபரணங்களை அளித்து, மற்ற வானரர்களுக்கும் பரிசளித்த ராமன்...

ஹனுமானுக்கும் அங்கதனுக்கும் வெகுமதி அளிக்கும் ராமன்

மஹாத்மாக்களான அந்தப் பார்த்திபர்கள் {மன்னர்கள்}, பெரும் மகிழ்ச்சியுடன் கூடியவர்களாக ஆயிரக்கணக்கான கஜ வாஜிகளின் வெள்ளத்தால் வசுந்தரையை  {யானைகள், குதிரைகளின் கூட்டங்களால் பூமியை} நடுங்கச் செய்தபடி புறப்பட்டுச் சென்றனர்.(1) பரதனின் ஆணையால், அங்கே ராகவனுக்காக ஆயத்தமாக, உண்மையில் பெரும் மகிழ்ச்சியுடனும், பல {படை}, வாஹனங்களுடனும் கூடிய அனேக அக்ஷௌஹிணிகள் இருந்தன.(2) பலத்தின் {படையின்} செருக்குடன் கூடிய அந்த மஹீபாலர்களும் {மன்னர்களும் பின்வருமாறு} கூறினர், "யுத்தத்தில் {எங்கள்} முன் நிக்ழவதாக ராமராவண {யுத்தத்தை} நாங்கள் பார்க்கவில்லை.(3) பரதனால் நாங்கள் தாமதமாக அர்த்தமில்லாமல் அழைத்து வரப்பட்டிருக்கிறோம்[1]. {எங்களைப் போன்ற} பார்த்திபர்களால் ராக்ஷசர்கள் உண்மையில் சீக்கிரமே ஹதம் செய்யப்பட்டிருப்பார்கள் {கொல்லப்பட்டிருப்பார்கள்}. {இதில்} சந்தேகமில்லை.(4) இராமனுடைய, லக்ஷ்மணனுடைய பாஹுவீரியத்தால் {தோள்வலிமையால்} ரக்ஷிக்கப்பட்டவர்களாக, சமுத்திரத்தின் அக்கரையில் ஜுவரம் நீங்கியவர்களாக {கவலையற்றவர்களாக / பயம் நீங்கியவர்களாக} சுகமாக யுத்தம் புரிந்திருப்போம்" {என்றனர்}.(5)

[1] சென்ற சர்க்கத்தில் ராமன், "உங்களால்தான் ராவணனைக் கொன்றேன்" என்று சொல்கிறான். இங்கே மன்னர்கள் தாங்கள் போருக்குச் செல்லவில்லை என்கின்றனர். 

இராஜாக்கள் அங்கே இவையும், வேறு பலவுமான ஆயிரக்கணக்கான கதைகளைப் பேசிக் கொண்டே மகிழ்ச்சியுடன் தங்கள் ராஜ்ஜியங்களுக்குச் சென்றனர்.(6) தங்கள் ராஜ்ஜியங்கள் முக்கியமானவையாகவும், செழிப்பானவையாகவும், மகிழ்ச்சி நிறைந்தவையாகவும், மிகுந்த தன, தானியங்களால் பூர்ணமடைந்தவையாகவும் {நிறைவடைந்தவையாகவும்}, வசு {செல்வம்} நிறைந்தவையாகவும் {இருந்தன}.(7) பிறகு அந்த நிருபர்கள் {மன்னர்கள்}, தத்தமது புரங்களுக்கு {நகரங்களுக்குச்} சென்று ராமனுடைய பிரியத்தையும், விருப்பத்தையும் செய்யும்பொருட்டு விதவிதமான ரத்தினங்களையும், உபஹாரங்களையும் {காணிக்கைகளையும்} கொடுத்தனர்.(8) {அந்த மன்னர்கள்} அஷ்வங்களையும் {குதிரைகளையும்}, வாகனங்களையும், ரத்தினங்களையும், மதத்தால் சிறந்த ஹஸ்திகளையும் {யானைகளையும்}, முதன்மையான சந்தனங்களையும், திவ்யமான ஆபரணங்களையும்.(9) மணிகளையும், முத்துகளையும், பவளங்களையும், மற்றும் ரூபத்துடன் கூடிய தாசிகளையும் {பணிப்பெண்களையும்}, விதவிதமான ஆடுகளையும், விதவிதமான ரதங்களையும் கொடுத்தனுப்பினர்.(10)

மஹாபலசாலிகளான பரதனும், லக்ஷ்மணனும், கூடவே சத்ருக்னனும்[2] அந்த ரத்தினங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் தங்களுடைய {அயோத்தியா} புரீக்கே வந்து சேர்ந்தனர்.(11) புருஷரிஷபர்கள் {மனிதர்களில் காளைகளான அம்மூவரும்}, ரம்மியமான அயோத்தியாம் புரீக்கே வந்து, அந்த சித்திரமான ரத்தினங்களை ராமனிடம் கொடுத்தனர்.(12) மஹாத்மாவான ராமன், பிரீதியுடன் கூடியவனாக அவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு, கர்மங்களை நிறைவேற்றியவனான ராஜா சுக்ரீவனுக்குக் கொடுத்தான்.(13) இராகவன், விபீஷணனுக்கும், அப்படியே, எவர்களால் சூழப்பட்டு ஜயத்தை {வெற்றியை} அடைந்தானோ, {அத்தகைய} மற்ற ராக்ஷசர்களுக்கும், கபிகளுக்கும் {குரங்குகளுக்கும்} கூடக் கொடுத்தான்.(14) மஹாபலவான்களான அந்த சர்வ கபிராக்ஷசர்களும், ராமனால் கொடுக்கப்பட்ட ரத்தினங்களை {தங்கள்} சிரங்களாலும் {தலைகளாலும்}, தோள்களாலும் தரித்துக் கொண்டனர் {அணிந்து கொண்டனர்}.(15)

[2] முந்தைய 38ம் சர்க்கத்தில் விதேஹ, கேகய நாட்டு அரசர்களை வழி அனுப்பும் பொறுப்பு முறையே அவர்களின் மருமகன்களான லட்சுமணன், பரதனுக்குப் பிரித்தளிக்கப்பட்டதால், அங்கே சத்ருக்னன் பெயர் விடுபட்டிருந்தது. ஆனால், பல அக்ஷௌஹிணிப் படைகளைக் கொண்ட முன்னூறு ராஜாக்களையும் நாட்டின் எல்லை வரை வழி அனுப்பும் அந்தப் பெரும் பணியில், சத்ருக்னனும் தானாகவே இணைந்து செயலாற்றி, அந்த மன்னர்கள் கொடுத்தனுப்பிய ரத்தினங்களைப் பெற்றுக்கொண்டு அரண்மனைக்குத் திரும்புகிறான். இதன் மூலம், இச்சமயத்தில் சத்ருக்னன் மதுராவில் இல்லை; அயோத்தியிலேயே தமையன்மார்களுடன் இருந்தான் என்பது உறுதியாகிறது. 38ம் சர்க்கத்தில் 2ம் அடிக்குறிப்பு எழுப்பும் ஐயம் இங்கே தீர்கிறது. 

மஹாரதனும், வீரியவானுமான இக்ஷ்வாகுக்களின் நிருபதி {ராமன்}, ஹனூமந்தனையும், மஹாபாஹுவான அங்கதனையும் தன் அங்கத்தில் {மடியில் / தன்னிரு தொடைகளின் மேலும்} ஏற்றினான்.(16) கமலபத்ராக்ஷனான {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட} ராமன், சுக்ரீவனிடம் இதைக் கூறினான், "இந்த அங்கதன் உன்னுடைய நற்புத்திரன். அனிலாத்மஜனுங்கூட {வாயு மைந்தனான ஹனுமானும் கூட, உனக்கு} நல்ல மந்திரி.(17) ஹரீஷ்வரா {குரங்குகளின் தலைவா}, சுக்ரீவா, மந்திரிப்பதில் {ஆலோசனைகள் வழங்குவதில்} பொருத்தமானவர்களாக, என்னுடைய ஹிதத்திலுங்கூட ஈடுபாடு கொண்டவர்களாக {இருக்கும் இவர்கள்}, உண்மையில் உன் பொருட்டே விதவிதமான பூஜைகளை {மரியாதைகளைப்} பெறத் தகுதியானவர்கள்"(18) என்று கூறிய பெரும்புகழுடையவனான அந்த ராமன், {தன்} அங்கத்திலிருந்த {உடலிலிருந்த} மிக உயர்ந்த மதிப்புடைய பூஷணங்களை {ஆபரணங்களைக்} கழற்றி, அப்போது அங்கதனுக்கும், ஹனூமதனுக்கும் அணிவித்தான்[3][4].(19)

[3] தர்மாலயப் பதிப்பில் இந்த சுலோகத்திற்குப் பிறகு நேரடியாக 26ம் சுலோகத்திற்குச் சென்று தொடர்வதாக அமைந்திருக்கிறது. இடையில் உள்ள 20 முதல் 25ம் சுலோகங்கள் வரையுள்ள செய்தி அப்பதிப்பில் இல்லை.

[4] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் அனுமப்படலம் 681ம் பாடல் பின்வருமாறு

அங்கு அதன்றன் அளவு அறியா அணி
அங்கதம் திகழ் மொய்ம்பன் அருமறை
அங்கதன் இவ் அகிலாண்ட நாயகன்
அங்கதன் தனக்கு ஈந்தான் அருளொடும்

பொருள்: அவ்விடத்தில் அதனுடைய விலை மதிப்பு இவ்வளவு என யாரும் அறியாத பெருமதிப்புடைய அங்கதம் என்னும் அணிகலன் விளங்குகின்ற தோள்களையுடையவனும், அரிய வேதங்களின் மெய்ப்பொருளாய் அவற்றில் கரந்துறைபவனும், இந்த அகில அண்டங்களுக்கும் நாயகனும் ஆகிய ராமன், அங்கதன் என்ற வானர வீரனுக்குத் தன் அங்கதத்தை அருளோடும் கொடுத்தான்.

இராகவன் {ராமன்}, மஹாவீரியர்களாகவும், யூதபரிஷபர்களாகவும் {படைத்தலைவர்களில் காளைகளாகவும் இருந்த} நீலன், நளன், கேசரி, குமுதன், கந்தமாதனன் ஆகியோரை அழைத்து,(20) சுஷேணன், பனசன், வீரனான மைந்தன், துவிவிதன், ஜாம்பவந்தன், கவாக்ஷன், வினதன், தூம்ரன் ஆகியோரையும் கூடவே {அழைத்து},(21) வலீமுகன், பிரஜங்கன், மஹாபலவானான சன்னாதன், தரீமுகன், ததிமுகன், இந்திரஜானு ஆகிய யூதபர்களையும் {படைத்தலைவர்களையும் அழைத்து},(22) நேத்திரங்களால் பருகுபவன் போல {கண்களால் அன்புடன் அவர்களை விழுங்கிவிடுபவன் போல}, மென்மையான, மதுரமான வாக்கினால் {ராமன் அந்த வானரர்களிடம்}, "என் நண்பர்களும், அப்படியே {என்} சரீரமும், சகோதரர்களும் நீங்களே.(23) கானனௌகசர்களே {காட்டை இருப்பிடமாகக் கொண்ட வானரர்களே}, உங்களால் நானும் விஸனத்திலிருந்து {துன்பக் கடலிலிருந்து} கரையேற்றப்பட்டிருக்கிறேன். நண்பர்களில் சிறந்தவர்களான உங்களைக் கொண்ட ராஜா சுக்ரீவனும் தன்யனே {கொடுத்து வைத்தவனே ஆவான்}" {என்றான் ராமன்}.(24) இவ்வாறு கூறி, நரரிஷபன் {மனிதர்களில் காளையான ராமன்}, அவர் அவர்களுக்குத் தகுந்த பூஷணங்களையும், மிக உயர்ந்த மதிப்புடைய வஜ்ரங்களையும் {வைரங்களையும்} கொடுத்து, {அவர்களை அன்புடன்} தழுவிக் கொண்டான்.(25)

மதுபிங்கலர்களான அவர்கள் {தேன் போன்ற பொன் நிறமுடைய வானரர்கள்}, சுகந்தமான மதுவையும் {தேனையும்} பருகிக் கொண்டு, மிகத் தூய்மையாக சமைக்கப்பட்ட மாமிசங்களையும், மூலங்களையும் {கிழங்குகளையும்}, பழங்களையும் {உண்டனர்}.(26) இவ்வாறு அவர்கள் வசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாசத்துக்கும் மேல் கடந்தது. அப்போது, ராம பக்தியால் அவர்கள் அனைவரும் அதை ஒரு முஹூர்த்தம் போல நினைத்தனர்.(27)

இராமனுங்கூட காமரூபிகளான {விரும்பிய வடிவத்தை ஏற்கவல்ல} அந்த வானரர்களுடனும், மஹாவீரியர்களான ராக்ஷசர்களுடனும், மஹாபலவான்களான ரிக்ஷர்களுடனும் {கரடிகளுடனும்} மகிழ்ந்திருந்தான்.(28) இவ்வாறு பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களான அந்த வானரர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும், முழுமையாக இரண்டாவது மாசமும் குளிர்ச்சியானதாக[5], சுகமாகக் கடந்து சென்றது.(29) இரம்மியமான இக்ஷ்வாகு நகரத்தில் {அயோத்தியில்}, பரம பிரீதியை அடைந்தவர்களான அவர்களுக்கு, ராமனின் பிரீதியுடன் கூடிய அன்பான உபசரிப்புகளால் காலம் சுகமாகக் கடந்து சென்றது.(30)

[5] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிசிர என்பது மாசி, பங்குனி ஆகிய மாதங்களைக் கொண்ட பனிக்காலமாகும்" என்றிருக்கிறது.

உத்தர ராமாயணம் சர்க்கம் – 039ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் தாரன் தாரை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி