Thursday, 19 November 2026

விருத்திர வதம் | சர்க்கம் – 085 (22)

The Slaying of Vritra | Sarga-085 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்ணுவின் துணையுடன் வஜ்ராயுதத்தால் விருத்திரனைக் கொன்ற இந்திரன். பிரம்மஹத்தியிலிருந்து விடுபட அசுவமேதம் செய்யுமாறு இந்திரனிடம் கூறிய விஷ்ணு.

085-விருத்திரனைக் கொல்லப் போகும் இந்திரன்-Indra-about-to-slay-Vritra-ChatGPT

இலக்ஷ்மணனின் அந்த வாக்கியத்தைக் கேட்டுவிட்டு, சத்ருநிபர்ஹணன் {சத்ருக்களை அழிப்பவனான ராமன்}, "நல்விரதங்களை உடையவனே, விருத்திரன் கொல்லப்பட்டதை மிச்சமின்றிக் கூறுவாயாக" என்று கூறினான்.(1)

இராகவனால் {ரகு குல ராமனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், சுமித்ரானந்தவர்தனனும் {சுமித்திரையின் ஆனந்தத்தைப் பெருக்குபவனும்}, நல்விரதங்களை உடையவனுமான லக்ஷ்மணன், அந்த திவ்யமான கதையை {பின்வருமாறு} மீண்டும் தொடர்ந்து கூறினான்:(2) "சஹஸ்ராக்ஷனின் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனின்} சொற்களையும், சர்வ திவௌகசர்களுடையவற்றையும் {தேவர்கள் அனைவரின் சொற்களையும்} கேட்டுவிட்டு, விஷ்ணு, இந்திரனை முன்னிட்ட சர்வ தேவர்களிடமும் இதைக் கூறினான்:(3) "பூர்வத்திலேயே {முன்பே} மஹாத்மாவான விருத்திரனுடன் உண்மையில் சௌஹிருதத்தால் {நட்பால்} நான் பிணைக்கப்பட்டிருக்கிறேன். ஆகவே, உங்களுக்குப் பிரியமானதே {விருப்பமானதே} என்றாலும் அந்த மஹாஸுரனை {பேரசுரனான விருத்திரனை} நான் கொல்லமாட்டேன்.(4) மேலும் உங்கள் உத்தம சுகமும் {தேவர்களின் மேலான நன்மையும்} அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டியதே. எனவே, எந்த உபாயத்தால் விருத்திரன் கொல்லப்படுவானோ, அதை {நான் உங்களுக்கு} எடுத்துரைப்பேன்.(5) ஸுரசத்தமர்களே {சிறந்த தேவர்களே}, உண்மையில் என்னை மூன்றாக்குவேன் {நான் என்னை மூன்று கூறுகளாகப் பிரித்துக்கொள்வேன்}. அதனால் {அந்தக் கூறுகளின் துணையால்} சஹஸ்ராக்ஷன் {இந்திரன்} விருத்திரனைக் கொல்வான். {இதில்} சந்தேகமில்லை.(6) ஓர் அம்சம் வாசவனை {வசுக்களின் அதிபதியான இந்திரனை} அடையட்டும். இரண்டாவதோ {இரண்டாவது அம்சமோ} வஜ்ரத்தையே அடையட்டும். மூன்றாவது {அம்சம்} பூதலத்தை {பூமியை} அடையட்டும். அப்போது சக்ரன் {வல்லமைமிக்க இந்திரன்} விருத்திரனைக் கொல்வான்" {என்றான் விஷ்ணு}.(7)

அப்போது, தேவேசன் {தேவர்களின் தலைவனான விஷ்ணு} அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில், தேவர்கள் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினர், "தைத்தியஹனே {தைத்தியர்களை அழிப்பவனே}, நீ எப்படிச் சொல்கிறாயோ, அப்படியே இது {நிகழும்}. {இதில்} சந்தேகம் இல்லை.(8) பரமோதாரா {பெருந்தன்மை மிக்கவனே}, உனக்கு பத்ரம் {மங்கலம்} உண்டாகட்டும். விருத்திராசுரனை வதைக்க விரும்புகிறவர்களாக {நாங்கள்} புறப்படுவோம். உன் சொந்த தேஜஸ்ஸால் {ஆற்றலால்} வாசவனை அடைவாயாக" {என்றனர் தேவர்கள்}.(9)

பிறகு, சஹஸ்ராக்ஷனை முன்னிட்டுக் கொண்ட சர்வ மஹாத்மாக்களும் {தேவர்கள் அனைவரும்}, மஹாஸுரனான விருத்திரன் எங்கிருந்தானோ, அந்த அரண்யத்தை அடைந்தனர்.(10) அவர்கள் தேஜஸ்ஸால் நிறைந்தவனும், மூவுலகங்களையும் பருகிவிடுபவனைப் போலவும், அம்பரத்தை {ஆகாயத்தைச்} சுட்டெரிப்பது போல {தபம் செய்து} எரிந்து கொண்டிருந்தவனுமான அசுரோத்தமனை {விருத்திரனைப்} பார்த்தனர்.(11) மேலும், அசுரசிரேஷ்டனை {அசுரர்களில் சிறந்தவனான விருத்திரனைப்} பார்த்தவுடனேயே, "இவனை எவ்வாறு வதைப்போம்? எவ்வாறு தோல்வி ஏற்படாமல் இருக்கும்?" {என்று} தேவர்கள் அச்சமடைந்தனர்.(12) அங்கே அவர்கள் {இவ்வாறு} சிந்தித்துக் கொண்டிருக்கையில், புரந்தரனான {பகைவரின் கோட்டைகளை அழிப்பவனான} சஹஸ்ராக்ஷன் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன்}, இரு கைகளாலும் வஜ்ரத்தை நன்கு பற்றிக் கொண்டு, விருத்திரனின் தலையில் வீசினான்.(13) கோரமான காலாக்னியை {பிரளய காலத்து நெருப்பைப்} போல, பெருஞ்சுடர்களுடன் உண்மையில் தகித்துக் கொண்டிருந்த விருத்திரனின் சிரசு விழுந்தபோது ஜகத் {உலகம்} அச்சத்தை அடைந்தது.(14) பெரும் புகழுடைய விபுதாதிபன் {அறிவாற்றல்மிக்க தேவர்களின் அதிபதியான இந்திரன்}, அந்த விருத்திரனுடைய நம்புதற்கரிய வதத்தை {நம்ப முடியாத கொலையைச்} சிந்தித்துக்கொண்டே, விரைவாக உலகத்தின் அந்தத்திற்கு {உலகத்தின் எல்லைக்கே ஓடிச்} சென்றான்[1].(15) விரைவாகச் சென்று கொண்டிருந்த அந்த இந்திரனை பிரம்மஹத்தி {பிராமணனைக் கொன்ற பாபம்} பின்தொடர்ந்தது. மேலும் அவனுடைய காத்திரங்களில் விழுந்தது {இந்திரனின் உடலுறுப்புகளில் அந்தப் பாபம் பற்றிக் கொண்டது}. அந்த இந்திரனை துக்கம் ஆட்கொண்டது[2].(16)

[1] மஹாபாரதத்தில் விருத்திரவதம் வெவ்வேறு விதமாக விவரிக்கப்படுகிறது. வனபர்வம் பகுதி 100ல், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கத் ததீசி முனிவர் தமது உயிரைத் துறக்க, அவரது எலும்புகளைக் கொண்டு துவஷ்டிரி வஜ்ராயுதத்தை உருவாக்குகிறான். பகுதி 101ல், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும்போர் நிகழ்கிறது. விஷ்ணு, தேவர்கள், முனிவர்கள் ஆகியோரின் சக்தியைப் பெற்ற இந்திரன் விருத்திரனை வஜ்ராயுதத்தால் கொல்கிறான். உத்யோகபர்வம் பகுதிகள் 9–10ல், விருத்திரன் இந்திரனை விழுங்குவதும், பின்னர் இருவருக்கும் சமாதானம் ஏற்படுவதும், இறுதியில் விஷ்ணுவின் சக்தி புகுந்த கடல்நுரையால் விருத்திரன் கொல்லப்படுவதும் கூறப்படுகின்றன. சாந்திபர்வம் பகுதிகள் 281–282ல், சிவனின் சக்தியால் விருத்திரன் நோயுற்ற நிலையில் இந்திரன் வஜ்ராயுதத்தால் அவனைக் கொல்வதாகக் கூறப்படுகிறது. சாந்திபர்வம் பகுதி 343லும் ததீசியின் எலும்புகளால் வஜ்ராயுதம் உருவாக்கப்பட்ட செய்தி இடம்பெறுகிறது.

ஆனால், வால்மீகி ராமாயணத்தின் இச்சர்க்கத்தில், தவம் செய்துகொண்டிருந்த விருத்திரன் எதிர்த்துப் போரிட்டதாகக் கூறப்படவில்லை. தேவர்கள் அவனைக் கொல்லும் வழியைச் சிந்தித்துக்கொண்டிருக்கையிலேயே இந்திரன் வஜ்ராயுதத்தால் அவனது தலையை வீழ்த்துகிறான் (சுலோகங்கள் 11–14). ததீசியின் எலும்புகளால் வஜ்ராயுதம் உருவான செய்தியும் இங்கே இல்லை. மாறாக, விஷ்ணு தன் சக்தியை இந்திரன், வஜ்ராயுதம், பூமி ஆகிய மூன்றிலும் செலுத்துவதாகக் கூறுகிறான் (சுலோகங்கள் 6–7). விருத்திரவதத்திற்குப் பிறகு இந்திரன் அச்சத்துடன் சென்றதாக வனபர்வத்தில் கூறப்படுவதற்கும், இங்கே அவனது நம்புதற்கரிய வதத்தைச் சிந்தித்துக்கொண்டே இந்திரன் உலகத்தின் எல்லைக்குச் சென்றதாகக் கூறப்படுவதற்கும் (சுலோகம் 15) ஓர் ஒற்றுமை உள்ளது. இவ்வாறு விருத்திரவதம் நிகழ்ந்த விதத்தில் இரு இதிகாசங்களுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.

[2] மஹாபாரதம் உத்யோகபர்வம் பகுதி 9ல், துவஷ்டிரி {விஸ்வகர்மா}, இந்திரனால் கொல்லப்பட்ட தன் மகன் திரிசிரனுக்குப் பழிவாங்குவதற்காக விருத்திரனை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு துவஷ்டிரியால் உருவாக்கப்பட்ட விருத்திரனைக் கொன்றதால் இந்திரனைப் பிரம்மஹத்தி பாபம் பீடித்ததாக இங்கே கூறப்படுகிறது.

பகைவர்கள் கொல்லப்பெற்றவர்களும், இந்திரனை இழந்தவர்களுமான தேவர்கள், அக்னியை முன்னிட்டவர்களாக, திரிபுவனேசனான {மூவுலகங்களுக்கும் தலைவனான விஷ்ணுவை} மீண்டும் மீண்டும் பூஜித்தனர்.(17) "பரமேசானனே {மேலான தலைவனே, விஷ்ணுவே}, ஜகத்தின் கதியும் {புகலிடமும்}, பூர்வஜனும் {முதலில் தோன்றியவனும்}, பிதாவும் நீயே. சர்வபூதங்களையும் ரக்ஷிப்பதற்காக விஷ்ணுத்வத்தை {எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணு என்னும் நிலையை} அடைந்திருக்கிறாய்.(18) ஸுரசார்தூலா {தேவர்களில் புலியே}, இந்த விருத்திரனும் உன்னால் கொல்லப்பட்டான். மேலும், பிரம்மஹத்தி வாசவனை வாட்டுகிறது. அதிலிருந்து மோக்ஷத்தை {பிரம்மஹத்தியிலிருந்து விடுதலையை இந்திரனுக்குத்} தெளிவாக எடுத்துரைப்பாயாக" {என்று தேவர்கள் கேட்டனர்}.(19)

அந்த தேவர்களின் அந்த வசனத்தைக் கேட்டுவிட்டு, விஷ்ணு {பின்வருமாறு} கூறினான், "சக்ரன் யஜ்ஞம் செய்து என்னையே வழிபடட்டும். வஜ்ரியை {பிரம்மஹத்தி பாபத்திலிருந்து} தூய்மைப்படுத்துவேன்.(20) பாகசாசனன் {பாகன் என்னும் அசுரனை அடக்கிய இந்திரன்} புண்ணியமான ஹயமேதத்தால் {அஷ்வமேத வேள்வியால்} என்னை வழிபட்டு, மீண்டும் தேவர்களின் அகுதோபயமான இந்திரத்வத்தை {எத்திசையிலும் அச்சமற்ற இந்திர பதவியை} அடைவான்" {என்றான் விஷ்ணு}[3].(21)

[3] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், அசுவமேதயாகப் படலம், 8-ஆம் பாடல் பின்வருமாறு:

சத்தியம் புலன்கள் வென்ற தபோதனன் ததீசி அத்தி
ஆம் குலிசத்தாலே அடல் விருத்திரனைக் கொல்லத்
தொத்திய பாவம் தன்னால் துளங்கிய சுரேசன் பண்டு
சுத்தன் ஆனது தான் பண்ணும் துரகமகத்தால் என்றான்.

பொருள்: வாய்மையையும், ஐம்புலன்களையும் வென்ற தவச்செல்வரான ததீசி முனிவரின் எலும்பினால் செய்யப்பட்ட வஜ்ராயுதத்தாலே வலிமைமிக்க விருத்திரனைக் கொன்றதனால், தன்னைப் பற்றிக்கொண்ட பிரம்மஹத்திப் பாபத்தினால் கலங்கிய தேவர்களின் தலைவனான இந்திரன் முற்காலத்தில் தூய்மையடைந்தது, அவன் செய்த அசுவமேத யாகத்தாலேயே என்றான்.

இச்சர்க்கத்தில் இலக்குவன் இராமனுக்கு இவ்வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது; ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில் இராஜசூய யாகத்தைத் தடுக்கும் தருணத்தில் பரதன் இராமனிடம் அசுவமேத யாகத்தின் பெருமையை எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. மேலும், வால்மீகி மூலத்தில் வஜ்ராயுதம் விஷ்ணுவின் தேஜஸால் பலம்பெற்றதாகக் கூறப்பட, ஒட்டக்கூத்தர் ததீசி முனிவரின் எலும்பினால் ஆன வஜ்ராயுதம் என்ற புராண மரபையும் இணைத்துப் பாடியுள்ளார்.

தேவேசனான விஷ்ணு, தேவர்களுக்கு அமுதத்துக்கு ஒப்பான அந்த வாணியை {வாக்கியத்தை} இவ்வாறு கூறிவிட்டு, {தேவர்களால்} துதிக்கப்பட்டவனாகத் திரிவிஷ்டபத்தை {சுவர்க்கலோகத்தை} அடைந்தான்" {என்றான் லக்ஷ்மணன்}.(22)


உத்தர ராமாயணம் சர்க்கம் – 085ல் உள்ள சுலோகங்கள்: 22

தொடர்ந்து படிக்க: பொருளடக்கம் · நூல்கள்: அச்சு நூல்கள் · கிண்டில் நூல்கள்

Labels

அகஸ்தியர் அக்னி அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் கல்மாஷபாதன் காசியபர் காஞ்சனர் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குசன் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கைடபன் கோமுகன் கௌ கௌசல்யை கௌதமர் க்ஷுபன் சங்கன் சத்ருக்னன் சம்பூகன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாபாலி ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மதயந்தி மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாந்தாதா மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மித்ரஸஹன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லவணன் லவன் லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாமதேவர் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஸௌதாஸன் ஹனுமான் ஹேதி