Tuesday, 17 November 2026

விருத்திரனின் தபம் | சர்க்கம் – 084 (18)

Vritra's Penance | Sarga-084 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அசுவமேத யாகத்தின் சிறப்பை விளக்கிய லட்சுமணன்; விருத்திரனின் கடுந்தபத்தால் அஞ்சி விஷ்ணுவிடம் உதவி கோரிய இந்திரன்.
084-விஷ்ணுவிடம் வேண்டும் இந்திரன்-Indra-prays-to-Vishnu-ChatGPT

இராமனும், மஹாத்மாவான பரதனும் அவ்வாறு {தர்மத்திற்கேற்பப்} பேசிய பிறகு, லக்ஷ்மணன் ரகுநந்தனனிடம் {ரகு குலத்தை ஆனந்தமடையச் செய்யும் ராமனிடம் பின்வரும்} சுபமான வாக்கியத்தைச் சொன்னான்:(1) "இரகுநந்தனரே, சர்வ பாபங்களையும் தூய்மைப்படுத்துவதும், எதிர்த்து வெல்வதற்கரியதும், தூய்மைப்படுத்துவதும், மஹாயஜ்ஞமுமான {பெரும் வேள்வியுமான} அஷ்வமேதம் உமக்கு விருப்பமானதாகட்டும்[1].(2)

[1] முந்தைய சர்க்கத்தில் ராமன் ராஜசூய யஜ்ஞத்தைச் செய்ய விரும்பியபோது, அதனால் பிற மன்னர்களுடன் போர் ஏற்பட்டு, ஏராளமான உயிர்கள் அழியக்கூடும் என்று பரதன் எடுத்துரைத்தான். இங்கு லக்ஷ்மணன் அதற்கு மாற்றாக அஷ்வமேத யஜ்ஞத்தைப் பரிந்துரைக்கிறான். இராஜசூயம், அஷ்வமேதம் ஆகிய இரண்டுமே மன்னர்களால் செய்யப்படும் உயரிய பெருவேள்விகளாகும். எனினும், அவற்றுக்கிடையே நோக்கத்திலும் சடங்குமுறையிலும் வேறுபாடுகள் உள்ளன.

அரசியல் நோக்கம்: இராஜசூயம் என்பது ஒரு மன்னன் பிற மன்னர்களின் மேலாதிக்கத்தைப் பெற்று, தன்னைச் சக்கரவர்த்தியாக நிலைநிறுத்திக்கொள்ளும் வேள்வியாகும். அஷ்வமேதத்தில் யாகக் குதிரை பல நாடுகளுக்கும் அனுப்பப்படும். அதன் பயணத்தை ஏற்றுக்கொள்ளும் மன்னர்கள் யாகம் செய்யும் அரசனின் மேலாதிக்கத்தை அங்கீகரிப்பார்கள். குதிரையைத் தடுப்பவர்களுடன் போர் ஏற்படக்கூடும். எனவே, இரு வேள்விகளுமே அரசியல் மேலாதிக்கத்துடன் தொடர்புடையவை.

யாகத்தின் நோக்கமும் பலனும்: இராஜசூயம் அரசனின் பேரரசு அதிகாரத்தையும் அரசாட்சிச் சிறப்பையும் வலியுறுத்துகிறது. அஷ்வமேதமும் அரசனின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதுடன், பாபங்களைப் போக்கித் தூய்மைப்படுத்தும் வேள்வியாகவும் போற்றப்படுகிறது. இச்சர்க்கத்தில் லக்ஷ்மணன் அஷ்வமேதத்தின் பாபநிவாரணச் சிறப்பையே முதன்மையாக எடுத்துரைக்கிறான். அடுத்த சுலோகத்தில், பிரம்மஹத்திப் பாபத்திற்கு ஆளான இந்திரன் அஷ்வமேதத்தால் தூய்மையடைந்த வரலாற்றை இதற்குச் சான்றாகக் கூறுகிறான்.


பெரும் மஹாத்மாவான வாசவனை {வசுக்களின் அதிபதியான இந்திரனைப்} பற்றிய முற்கால நிகழ்வொன்று கேள்விப்படப்படுகிறது. பிரம்மஹத்திப் பாபத்தால் சூழப்பட்ட சக்ரன் {வல்லமைமிக்க இந்திரன்}, ஹயமேதத்தால் {அஷ்வமேத வேள்வியால்} தூய்மைப்படுத்தப்பட்டான் {என்று சொல்லப்படுகிறது}.(3) மஹாபாஹோ {பெருந்தோள்களையுடையவரே}, முற்காலத்தில் தேவாசுர சமாகமத்தில் {தேவர்களும் அசுரர்களும் ஒன்றுகூடிய போரில்}, உலகத்தாரால் மதிக்கப்பட்டவனும், விருத்திரன் என்ற பெயர் கொண்டவனுமான மிகப்பெரும் தைத்தியன் {அசுரன்} ஒருவன் இருந்தான் என்று கேள்விப்படுகிறோம்.(4) நூறு யோஜனை விஸ்தீரணமும் {அகலமும்}, அதைவிட மும்மடங்கு {முன்னூறு யோஜனை} உயரமும் கொண்டவனாக {விருத்திரன்} இருந்தான். அன்பினாலும், சினேகத்தினாலும் மூவுலகங்களையும் அனைத்துப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தான் {அன்புடன் கவனித்து வந்தான்}.(5) தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, கிருதஜ்ஞனும் {செய்நன்றியறிந்தவனும்}, புத்தியால் நன்கு நிலைபெற்றவனும் {ஆன விருத்திரன்}, நன்கு சமாஹிதனாக {மனத்தை ஒருமுகப்படுத்தியவனாக}, செழிப்பான பிருத்வியை தர்மத்தால் {அறநெறியின்படி} ஆட்சி செய்தான்.(6)

இப்படி அவன் {விருத்திரன்} ஆட்சி செய்து கொண்டிருக்கையில், மஹீ {பூமியானவள்}, சர்வ காமங்களையும் கறந்து அளித்தாள் {விரும்பிய அனைத்தையும் பொழிந்தாள்}. மேலும் மூலங்களும் {கிழங்குகளும்}, பழங்களும் ரசமுள்ளவையாகவும் {சாறு நிறைந்தவையாகவும்}, ஏராளமாகவும் {விளைந்தன}.(7) மஹாத்மாவின் பிருத்வி {விருத்திரனுடைய பூமி}, உழப்படாமலேயே விளைச்சலைத் தருவதாகவும், நன்கு வளம்பெற்றதாகவும் இருந்தது. அவன் செழிப்பானதும், அற்புத தரிசனம் {வியத்தகு தோற்றம்} அளிப்பதுமான அத்தகைய ராஜ்ஜியத்தை அனுபவித்து வந்தான்.(8) அவனுக்கு {விருத்திரனுக்கு}, "{நான்} ஒப்பற்ற தபத்தைச் செய்ய வேண்டும். ஏனெனில், தபமே பரம {மேலான} நன்மையாகும். இதர சுகங்கள் சம்மோகமே {அறியாமைக்குரிய மயக்கத்தை அளிப்பவையே}" என்ற எண்ணம் தோன்றியது.(9) அவன் தன் ஜ்யேஷ்ட புத்திரனை {மூத்த மகனை}, பௌரர்களிடையே {நகரவாசிகளிடையே} மதுரேஷ்வரனாக {மதுராவின் அதிபதியாக} நியமித்துவிட்டு, சர்வதேவதைகளையும் {தேவர்கள் அனைவரையும்} வெப்பத்தால் வருத்தியபடி, உக்கிரமான தபத்தை மேற்கொண்டான்[2].(10)


[2] உத்தர காண்டம் 70ஆம் சர்க்கத்தில், சத்ருக்னன் மதுபுரியில் குடியேற்றத்தை ஏற்படுத்தி, மதுரா நகரத்தை வளர்த்தமை விவரிக்கப்படுகிறது. ஆனால், இச்சுலோகத்தில் லக்ஷ்மணன் குறிப்பிடும் விருத்திரனின் காலம் அதற்கும் முற்பட்டதாகும். எனவே, இங்கு வரும் ‘மதுரேஷ்வரம்’ என்ற சொல்லை ‘மதுராவின் அதிபதி’ என்று பொருள் கொள்வதில் காலவரிசை சார்ந்த ஐயம் எழுகிறது. இச்சொல்லை விருத்திரனின் மூத்த மகனுடைய தனிப்பெயராகவும் கொள்ளலாம். மன்மதநாததத்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் அவ்வாறே பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இச்சுலோகம் மட்டும் கொண்டு இரு விளக்கங்களில் எது சரியானது என்பதைத் தீர்மானிக்க இயலாது.


ஆனால், விருத்திரன் தபத்தை இயற்றிக் கொண்டிருக்கையில், வாசவன் {இந்திரன்} பெரும் துன்பமுற்றவனைப் போல விஷ்ணுவை அணுகிச் சென்று, உண்மையில் இந்த வாக்கியத்தைச் சொன்னான்[3]:(11) "மஹாபாஹோ {பெருந்தோள்களையுடையவனே}, தபம் இயற்றிக் கொண்டிருக்கும் விருத்திரனால் உலகங்கள் {மூவுலகங்களும்} வெல்லப்பட்டன. அந்த தர்மாத்மா உண்மையில் பலம்வாய்ந்தவன். அவனை அடக்கியாள என்னால் இயலாது.(12) அசுரேஷ்வரா {அசுரர்களின் ஈஷ்வரனான விஷ்ணுவே}[4], இவன் {விருத்திரன்} மேலும் தபத்தை மேற்கொண்டால், உலகங்கள் எதுவரை {எவ்வளவு காலம்} நிலைத்திருக்குமோ, அதுவரையும் {அவ்வுலகங்கள்} அவனுடைய வசத்திற்கு உட்பட்டனவாக இருக்கும்.(13) ஸுரேஷ்வரா {தேவர்களின் தலைவனான விஷ்ணுவே}, மஹாபலம்வாய்ந்தவனும், பெருந்தன்மைமிக்கவனுமான இத்தகையவனை {விருத்திரனை} நீ கண்டுகொள்ளாமல் இருக்கிறாய். நீ குரோதமடைந்தால் விருத்திரன் ஒரு க்ஷணமும் நிலைத்திருக்க மாட்டான்.(14)


[3] ஒட்டக்கூத்தர் இயற்றிய உத்தர ராமாயணத்தில் (அசுவமேதயாகப் படலம்), வால்மீகி மூலத்தின் 83-ஆவது சர்க்கக் கருத்துகள் 3 முதல் 7 வரையிலான பாடல்களில் அமைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து வரும் 8-ஆம் பாடலில், வால்மீகி மூலத்தில் 84, 85, 86 ஆகிய மூன்று சர்க்கங்களாக விரித்துரைக்கப்படும் விருத்திராசுர வத வரலாற்றை ஒட்டக்கூத்தர் நான்கே அடிகளில் சுருக்கமாகப் பாடியுள்ளார். குறிப்பாக, இச்சர்க்கத்தில் (7.84.11–18) இடம்பெறும் இந்திரன் திருமாலிடம் சென்று விருத்திரனைக் கொல்லும்படி முறையிடும் பகுதியை ஒட்டக்கூத்தர் விடுத்துவிட்டு, ததீசி முனிவரின் எலும்பாலான வஜ்ராயுதத்தால் இந்திரன் விருத்திரனைக் கொன்றதையும், அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் அசுவமேத யாகத்தால் (துரகமகத்தால்) நீங்கியதையும் மட்டுமே 8-ஆம் பாடலில் ("சத்தியம் புலன்கள் வென்ற...") பரதன் கூற்றாக அமைத்து, உடனடியாக 9-ஆம் பாடலில் இள மன்னன் வரலாற்றுக்குச் சென்றுவிடுகிறார்.

[4] தர்மாலயப் பதிப்பில், "இந்த அசுர மன்னன் இன்னமும் தவத்தை புரிந்து வருகிறான் என்கிறபக்ஷத்தில் உலகங்கள் எவ்வளவோ அவ்வளவும் இவனது ஆதீனத்திற்குள்பட்டனவாய் ஏற்பட்டுவிடும்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியார் பதிப்பில், "அவ்வசுரராஜன் இன்னும் இங்ஙனமே விடாது வம்புரிவானாயின், எல்லா வுலகங்களு மவனுக்கே யதீனமாகிவிடுமே" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அவன் இம்மாதிரி தவம் செய்து கொண்டே இருப்பானேயாகில், மூன்று உலகங்களும் நிலைபெற்றிருக்கும் காலம் வரை, எல்லா தேவதைகளும் அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டியிருக்கும்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "புகழ்மிக்க ஐயனே, அவனுடைய தவ வலிமை இன்னும் வளருமானால், படைப்பு நிலைத்திருக்கும் காலம் வரையிலும் நாம் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "தேவர்களின் தலைவனே, அவன் இத்தவங்களைத் தொடர்ந்தால், உலகங்கள் நிலைத்திருக்கும் காலம் வரையிலும் நாம் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்போம்" என்றிருக்கிறது. விவேக் தேவ்ராயின் ஆங்கில விமர்சனப் பதிப்பில், "தேவர்களின் தலைவனே! அவன் இந்தக் கடுந்தவங்களை மேற்கொள்ளும் காலமெல்லாம், இவ்வுலகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவான்; மேலும் அவை அவனுடைய கட்டுப்பாட்டிற்குள்ளேயே நிலைத்திருக்கும்" என்றிருக்கிறது.

இச்சுலோகத்தில் வரும் ‘அசுரேஷ்வர’ என்பதற்கு ‘அசுரர்களின் ஈஷ்வரனே’ என்பது நேரடிப் பொருள். இந்திரன் விஷ்ணுவை இவ்வாறு அழைப்பது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றுகிறது. அடுத்த 14ஆம் சுலோகத்தில் அவனே விஷ்ணுவை ‘ஸுரேஷ்வர’ {தேவர்களின் ஈஷ்வரனே} என்றும் அழைக்கிறான். 15ஆம் சுலோகத்தில் விருத்திரன் விஷ்ணுவுடன் கொண்டிருந்த அன்புறவினால் உலகங்களின் அதிபத்தியத்தைப் பெற்றதாகவும் கூறுகிறான். இவற்றைக் கருத்தில் கொண்டால், விஷ்ணு தேவர்களுக்கு மட்டுமன்றி அசுரர்களுக்கும் ஈஷ்வரனாக விளங்குகிறான் என்ற பொருளில் இவ்விளிப்பைப் புரிந்துகொள்ளலாம். எனினும், சில சமஸ்கிருதப் பதிப்புகளில் இவ்விடத்தில் ‘அசுரேஷ்வர’ என்பதற்குப் பதிலாக ‘ஸுரேஷ்வர’ என்ற பாடம் காணப்படுகிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி, விவேக் தேவ்ராய் ஆகிய இருவரும் ‘தேவர்களின் தலைவனே’ என்று மொழிபெயர்த்திருப்பது இப்பாடத்துடன் பொருந்துகிறது. ஆயினும், மொழிபெயர்ப்பை மட்டும் கொண்டு அவர்கள் பயன்படுத்திய மூலப்பாடத்தை உறுதிசெய்ய முடியாது. எனவே, இவ்விரு பாடங்களில் எது மூலப்பாடம் என்பதைச் சுவடிச்சான்றுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.


விஷ்ணுவே, இவன் {விருத்திரன்} எப்போது உன்னுடன் பிரீதிசம்யோகத்தை {அன்புறவை} அடைந்தானோ, அப்போதிலிருந்தே உலகங்களின் நாதத்வத்தை {தலைமைத்துவத்தை} அடைந்துவிட்டான்.(15) அத்தகைய நீ நன்கு சமாஹிதனாக {ஒருமுகப்பட்ட மனத்துடன்} உலகங்களுக்கு அருள் செய்வாயாக. உன்னால் செய்யப்படும் {அத்தகைய} செயலால் நிச்சயம் ஜகத் முழுவதும் அமைதியையும் துன்பமற்ற நிலையையும் அடையும்.(16) விஷ்ணுவே, இந்த திவௌகஸர்கள் {விண்ணுலகவாசிகள்} அனைவரும் உண்மையில் உன்னையே எதிர்நோக்கியிருக்கிறார்கள். மஹத்தான விருத்திரவதத்தால் {விருத்திரனைக் கொல்லும் பெருஞ்செயலால்} அவர்களுக்கு உதவி செய்வாயாக.(17) இந்த மஹாத்மாக்களுக்கு {தேவர்களுக்கு} உன்னால் உண்மையில் நித்யமும் உதவி செய்யப்பட்டிருக்கிறது. இது மற்றவர்களால் சமாளிக்க முடியாதது. கதியற்றவர்களின் கதியாக {புகலிடமாக} நீயே இருக்கிறாய்" {என்றான் இந்திரன்}[5].(18)


[5] மஹாபாரதத்தில் வனபர்வம் 100, 101ஆம் பகுதிகளிலும், உத்யோகபர்வம் 9, 10ஆம் பகுதிகளிலும், சாந்திபர்வம் 279 முதல் 282ஆம் பகுதி வரையிலும், அஸ்வமேதபர்வம் 11ஆம் பகுதியிலும் விருத்திரன் கதை வெவ்வேறு வகைகளில் விவரிக்கப்பட்டுள்ளது. வனபர்வத்தில் ததீசி முனிவரின் எலும்புகளால் உருவாக்கப்பட்ட வஜ்ராயுதத்தால் இந்திரன் விருத்திரனைக் கொல்கிறான். உத்யோகபர்வத்தில் விஷ்ணுவின் உதவியுடன், கடல்நுரையைப் பயன்படுத்தி இந்திரன் அவனைக் கொல்கிறான். சாந்திபர்வத்தில் சிவனின் சக்தியால் விருத்திரன் பலவீனமடைய, விஷ்ணு இந்திரனின் வஜ்ராயுதத்தில் புகுந்து உதவுகிறான். அஸ்வமேதபர்வத்திலும் இந்திரனே விருத்திரனை அழிக்கிறான். ஆனால், வால்மீகி ராமாயணத்தின் இச்சுலோகங்களில் (7.84.11–18), விருத்திரனை அடக்க இயலாத இந்திரன், விஷ்ணுவிடம் நேரடியாக முறையிட்டு, விருத்திரவதத்தின் மூலம் தேவர்களுக்கு உதவுமாறு வேண்டுகிறான். மேலும், சாந்திபர்வத்தில் விருத்திரன் தவவலிமையும் ஆன்மஞானமும் கொண்டவனாகச் சித்தரிக்கப்படுவது, இங்கு அவன் ‘தர்மாத்மா’ என்றும் விஷ்ணுவுடன் பிரீதிசம்யோகம் {அன்புறவு} கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுவதுடன் ஒத்துப்போகிறது.


உத்தர ராமாயணம் சர்க்கம் – 084ல் உள்ள சுலோகங்கள்: 18

தொடர்ந்து படிக்க: பொருளடக்கம் · நூல்கள்: அச்சு நூல்கள் · கிண்டில் நூல்கள்

Labels

அகஸ்தியர் அக்னி அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் கல்மாஷபாதன் காசியபர் காஞ்சனர் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குசன் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கைடபன் கோமுகன் கௌ கௌசல்யை கௌதமர் க்ஷுபன் சங்கன் சத்ருக்னன் சம்பூகன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாபாலி ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மதயந்தி மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாந்தாதா மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மித்ரஸஹன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லவணன் லவன் லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாமதேவர் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஸௌதாஸன் ஹனுமான் ஹேதி