Araja | Sarga-080 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்கிரரின் ஆசிரமத்தில் அவரது மகள் அரஜையைக் கண்ட தண்டன். அவளது எச்சரிக்கையை மீறி அவளை பலாத்காரம் செய்துவிட்டு மதுமந்த நகருக்குத் திரும்பியது.
மஹரிஷியான கும்பசம்பவர் {குடத்தில் தோன்றிய அகஸ்தியர்} ராமனுக்கு இதனை எடுத்துரைத்துவிட்டு, இந்தக் கதையிலேயே மற்றொரு வாக்கியத்தை {உரைக்கத்} தொடங்கினார்:(1) "பிறகு, காகுத்ஸ்தா {ககுத்ஸ்தனின் வழித்தோன்றலே, ராமா}, தாந்தாத்மாவான {தன்னை அடக்கியவனான} அந்த தண்டன், அங்கே பல வருஷகணாயுதம் {பல பத்தாயிரம் வருஷத் தொகுதிகள்} கண்டகம் களையப்பட்ட {தொல்லைகள் ஒழிக்கப்பட்ட} ராஜ்ஜியத்தை நடத்தினான்.(2) பிறகு, ஏதோவொரு காலத்தில், ராஜா {தண்டன்} மனத்திற்கு இனிமையான சைத்ர மாஸத்தில் {சித்திரை மாதத்தில்}, ரமணீயமான பார்க்கவ ஆசிரமத்தை {பிருகு வம்சத்துச் சுக்கிராசாரியரின் மிக அழகிய ஆசிரமத்தை} நோக்கிச் சென்றான்.(3) அந்த தண்டன், அங்கே வனதேசத்தில் {காட்டுப்பகுதியில்} திரிந்து கொண்டிருந்தவளும், புவியில் ரூபத்தால் ஒப்பற்றவளும், மிகச் சிறந்தவளுமான பார்க்கவ கன்னிகையை {பிருகு வம்சத்து மகளைக்} கண்டான்[1].(4)
[1] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 57ம் பாடல் பின்வருமாறு:தண்டன் என்போன், மனுகுலத்தே தான் தருமம் தயா ஒன்று இல்லாதமிண்டன், அவன்தன் புரோகிதனாம் வெள்ளி தவம் செய் வனம் நண்ணி,வண்டு படும் பூம்பொழில் இடத்து வளர் சீர் அந்த முனி மகளைக்கண்டு, காம பரவசனாய்க் கலங்கு நெஞ்சன் கருதுவான்.பொருள்: தண்டன் என்பவன் மனுவின் குலத்தில் பிறந்தவனாயினும், தர்மமோ தயையோ சிறிதும் இல்லாத முரடன். அவன், தன் புரோகிதரான சுக்கிரன் தவம் செய்யும் வனத்தை அடைந்தான். அங்கே வண்டுகள் மொய்க்கும் மலர்ச்சோலையில், சிறப்பு மிக்க அந்த முனிவரின் மகளைக் கண்டான். காமவசப்பட்டு, கலங்கிய நெஞ்சத்துடன் பின்வருமாறு எண்ணலானான்.
அந்த துர்மதிமிக்கவனான {தண்டன்}, அவளைக் கண்டு, அனங்கனின் சரங்களால் பீடிக்கப்பட்டவனாக {மன்மதனின் காமக்கணைகளால் துன்புறுத்தப்பட்டவனாக}, மிகவும் அச்சமுற்றவளும் நடுக்கமடைந்தவளுமான அந்தக் கன்னிகையை நெருங்கிச் சென்று {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(5) 'அழகிய இடையுடையவளே, சுபே {மங்கலமானவளே}, நீ எங்கிருந்து வந்தவள் {எந்தக் குலத்தைச் சேர்ந்தவள்}? அல்லது யாருடைய மகளாக இருக்கிறாய்? சுபானனே {அழகிய முகமுடையவளே}, நான் அனங்கனால் {மன்மதனால்} பீடிக்கப்பட்டவனாக உன்னை நாடி வருகிறேன்' {என்றான் தண்டன்}.(6)
மோகத்தால் மதிமயங்கிய அந்தக் காமி {காமவசப்பட்ட தண்டன்} இவ்வாறு பேசியபோது, பார்க்கவியோ {பிருகு வம்சத்துப் புதல்வியோ} நயமாக அந்த நிருபனிடம் {மன்னனிடம்} இந்தச் சொற்களைப் பதிலாகச் சொன்னாள்:(7) 'இராஜேந்திரரே {மன்னர்களின் தலைவரே}, அக்லிஷ்ட கர்மரும் {சிரமமின்றிச் செயல்களை நிறைவேற்றக்கூடியவரும்}, தேவருமான பார்க்கவருடைய {பிருகு வம்சத்துச் சுக்கிராசாரியரின்} மூத்த மகளாகவும், ஆசிரமவாசினியாகவும், அரஜை என்ற பெயருடையவளாகவும் {என்னை} அறிந்துகொள்வீராக[2].(8) இராஜரே, என்னை பலவந்தமாகத் தீண்டாதீர். ஏனெனில் நான் பிதாவின் வசப்பட்ட {தந்தையின் கட்டுப்பாட்டிலுள்ள} கன்னிகை. இராஜேந்திரரே, என் பிதா {உமது} குருவாவார். நீரும் அந்த மஹாத்மாவின் சிஷ்யர். மஹாதபஸ்வியான அவர் குரோதமடைந்தால், உமக்கு மிகப்பெரிய விசனத்தை {பெருந்துன்பத்தை} அளித்துவிடக்கூடும்.(9)
[2] இச்சுலோகத்தில் அரஜை தன்னைப் பிருகு வம்சத்துச் சுக்கிராசாரியரின் மூத்த மகள் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். ஆனால், மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் (76ம் பகுதி முதல் 94ம் பகுதி வரை – சம்பவ பர்வம்), சுக்கிராசாரியர், அவரது மகள் தேவயானி, கசன், யயாதி, சர்மிஷ்டை, யது, பூரு ஆகியோரைக் குறித்த நிகழ்வுகள் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மஹாபாரதத்தில் தேவயானியே சுக்கிராசாரியரின் மகளாகக் குறிப்பிடப்படுகிறாள்; இந்த அரஜை மூத்த மகள் என்றோ, சுக்கிராசாரியருக்கு அரஜை என்றொரு மகள் இருந்தாள் என்றோ மஹாபாரதத்தின் இப்பகுதிகளில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, வால்மீகி ராமாயணத்தின் இப்பகுதியில் சுக்கிராசாரியரின் மகளாக அரஜை குறிப்பிடப்பட்டாலும், தேவயானியைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. இவ்வாறு, சுக்கிராசாரியரின் மகள்களைப் பற்றிய செய்திகள் இவ்விரு இதிகாசங்களிலும் வெவ்வேறாக இடம்பெறுகின்றன. இவர்களின் அன்னை யார்? அல்லது, அன்னைமார் யாவர்? அல்லது, தாயின் தொடர்பின்றிச் சுக்கிராசாரியரின் வீரியத்தால் மட்டுமே இவர்கள் ஜனித்தவர்களா? என்ற கேள்விகளுக்கு இங்கே பதில் கிட்டவில்லை.
அல்லது, நரசிரேஷ்டரே {மனிதர்களிற் சிறந்தவரே}, என்னைக் கொண்டு வேறு ஏதேனும் காரியம் {உமக்கு இருந்தால்}, தர்மதிருஷ்டமான சத்பதத்தில் {தர்ம சாஸ்திரங்களில் காணப்படும் நல்வழியில்}, பேரொளிமிக்கவரான என் பிதாவிடம் {என்னை} வேண்டிக் கொள்வீராக {சுக்கிராசாரியரிடம் சென்று முறைப்படி மணம்பேசி என்னைப் பெற்றுக் கொள்வீராக}.(10) அவ்வாறின்றி நடந்தால் {தர்ம வழியை விட்டுப் பிறழ்ந்தால்} கோரமான விளைவுகளுடன் கூடிய பலனே உமக்கு உண்டாகும். ஏனெனில், என்னுடைய இந்தப் பிதா {என் தந்தை சுக்கிராசாரியர்} குரோதத்தால் மூவுலகங்களையும்கூடச் சுட்டெரித்துவிடக்கூடும்.(11) குறையற்ற அங்கங்களை உடையவரே, மேலும், யாசிக்கப்பட்டால் {முறைப்படி பெண் கேட்டு வேண்டப்பட்டால்} என் பிதா என்னை உமக்குக் கொடுப்பார்' {என்றாள் சுக்கிராசாரியரின் மூத்த மகள் அரஜை}.(12)
இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அரஜையிடம், காமவசப்பட்டவனும், மதத்தால் {காமவெறியால் / அதிகாரச் செருக்கால்} பித்துப் பிடித்தவனுமான தண்டன், சிரசில் அஞ்சலி செய்து கொண்டு {தலைக்கு மேல் கைகளைக் குவித்து}, {பின்வரும்} பதிலைச் சொன்னான்:(13) 'அழகிய இடையுடையவளே, அருள்புரிவாயாக. காலத்தை வீணடிப்பது உனக்குத் தகாது. அழகிய முகமுடையவளே, உன்னாலேயே என்னுடைய பிராணன்கள் உண்மையில் பிளந்து போகின்றன.(14) பீரு {அச்சமுடையவளே}, உன்னை அடைவதால் எனக்கு வதமோ, கொடிய சாபமோ உண்டானாலும் சரி. பக்தனும் {உன்னிடம் பற்று கொண்டவனும்}, பஜமானனும் {உன்னையே விரும்பி நிற்பவனும்}, மிகவும் கலக்கமுற்றவனுமான {காமதாபத்தால் தவிப்பவனுமான} என்னை ஏற்றுக் கொள்வாயாக' {என்றான் தண்டன்}.(15)
பலவான் {தண்டன்} இவ்வாறு கூறிவிட்டு, எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த அந்தக் கன்னிகையை {அரஜையை} இரு கைகளாலும் பலவந்தமாகப் பற்றிக் கொண்டு, தன் விருப்பம்போல் மைதுனத்தில் {புணர்ச்சியில்} ஈடுபடத் தொடங்கினான்.(16) தண்டன், மஹாகோரமானதும், மிகப் பயங்கரமானதுமான இந்த அர்த்தத்தை {காரியத்தைச்} செய்துவிட்டு, மிகச் சிறந்த மதுமந்த நகரத்திற்கு விரைவாகச் சென்றான்[3].(17) அந்த அரஜையும்கூட ஆசிரமத்திற்கு அருகிலேயே கண்ணீர்விட்டபடி மிகவும் அச்சமடைந்தவளாக, தேவனுக்கு ஒப்பான தன் பிதாவை {சுக்கிராசாரியரை} எதிர்பார்த்துக் காத்திருந்தாள்" {என்றார் அகஸ்தியர்}.(18)
[3] முந்தைய 16ஆம் சுலோகத்தில் வரும் "மைதுனாய உபசக்ரமே" என்பதில், "உபசக்ரமே" என்பது "தொடங்கினான்" அல்லது "முற்பட்டான்" என்று பொருள்படும் வினைமுற்று. இது மைதுனச் செயலைத் தொடங்கியதைக் குறிக்கிறதேயன்றி, அச்செயல் நிறைவடைந்ததைத் தனியாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், 17ஆம் சுலோகத்தில் வரும் "ஏதமர்த்தம் ... க்ருத்வா" என்பதில், "க்ருத்வா" என்பது "செய்துவிட்டு" என்று பொருள்படும் பூர்வகால வினையெச்சம். இது ஒரு செயலைச் செய்த பிறகு மற்றொரு செயல் நிகழ்வதைக் குறிக்கிறது. இங்குள்ள "ஏதமர்த்தம்" {இந்தக் காரியத்தை} என்பது முந்தைய சுலோகத்தில் குறிப்பிடப்பட்ட மைதுனச் செயலையே சுட்டுகிறது. எனவே, தண்டன் அரஜையின் எதிர்ப்பையும் மீறி அவளைப் பலவந்தமாகப் புணர்ந்துவிட்டு மதுமந்த நகரத்திற்குச் சென்றான் என்பது இரு சுலோகங்களையும் இணைத்துப் பார்க்கும்போது தெளிவாகிறது.
உத்தர ராமாயணம் சர்க்கம் – 080ல் உள்ள சுலோகங்கள்: 18
| Previous | | Sanskrit | | English | | Next |
