Pururavas | Sarga-089 | Uththara Ramayana in Tamil
கிம்புருஷ உற்பத்தியைக் கேட்ட லக்ஷ்மணன், பரதன் ஆகிய இருவரும், அப்போது ஜனேஷ்வரனிடம் {மக்களின் தலைவனான ராமனிடம்}, "ஆச்சரியம் {வியப்பிற்குரியது}" என்று கூறினர்.(1) பிறகு, பெரும்புகழ்படைத்தவனும், தர்மாத்மாவுமான ராமன், {கர்தமப்} பிரஜாபதியின் மகனுடைய {இளனுடைய} இந்தக் கதையை உண்மையில் மீண்டும் {பின்வருமாறு} கூறினான்:(2) "இரிஷிசத்தமன் {ரிஷிகளில் சிறந்தவனான புதன்}, அந்தக் கின்னரிகள் அனைவரும் சிதறி ஓடியதைக் கண்டு, புன்னகைப்பவனைப் போல ரூபசம்பன்னையான {அழகு நிறைந்தவளான} அந்த ஸ்திரீயிடம் {இளையிடம் பின்வருமாறு} சொன்னான்:(3) "மிக அழகிய முகத்தை உடையவளே, நான் சோமரின் {சந்திரரின்} பேரன்பிற்குரிய மகன். சிறந்த இடையை உடையவளே, பக்தியுடன் {அன்புடன்} கூடிய கனிவான பார்வையுடன் என்னை ஏற்றுக் கொள்வாயாக" {என்றான் புதன்}.(4)
தன் சொந்த ஜனங்கள் {தன்னுடன் வந்து பெண்களாக மாறிய பரிவாரங்கள்} இல்லாத சூனியமான இடத்தில், அவனுடைய அந்த வசனத்தைக் கேட்ட இளை, பேரழகான தோற்றமுடைய மஹாக்ரஹத்திடம் {பெருங்கிரகமான புதனிடம் பின்வரும்} மறுமொழியைச் சொன்னாள்:(5) "சௌமியரே, காமசரியான {விருப்பம்போல் சஞ்சரிப்பவளான} நான் உம் வசப்பட்டவளாக இருக்கிறேன். சோமசுதரே {சந்திரரின் மகனே}, என்னை ஆள்வீராக. எவ்வாறு இச்சிக்கிறீரோ அவ்வாறு செய்வீராக" {என்றாள் இளை}.(6)
அவளுடைய அற்புதத் தன்மை கொண்ட அதை {அந்த வசனத்தைக்} கேட்டு, மகிழ்ச்சியடைந்தவனும், காமியுமான அந்தச் சந்திரசுதன் {விருப்பம் கொண்டவனும், சந்திரனின் மகனுமான அந்த புதன்}, உண்மையில் அவளுடன் கூடி மகிழ்ந்தான்.(7) அழகிய முகத்தையுடையவளான அந்த இளையைப் பெரிதும் மகிழ்வித்துக் கொண்டிருந்தவனும், காமம் {விருப்பம்} கொண்டவனுமான அந்த புதனுக்கு, மாதவ {வைகாசி} மாசம்[1] ஒரு க்ஷணம் போல் கழிந்தது.(8)
[1] தர்மாலயப் பதிப்பில், "தேஜோமயமாய் விளங்கும்முகமுடைய அந்த இளை என்பவளை அநுபவித்துக்கொண்டிருக்கும் அதிக பாரியாதீனனான அந்த புதனுக்கு வைகாசி மாதமானது ஒருநொடிப்பொழுதாய் கழிந்துபோயிற்று" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "இளையோடு கூடிக் களித்திருக்கையில் ஸௌமியனுக்கு அந்த வஸந்தகாலமாகிய ஒரு மாதம் ஒரு நொடிப்பொழுதாகக் கழிந்து போயிற்று" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "கவின்மிகு முகமுடைய இளையுடன், காமக்களியாட்டங்களில் மூழ்கித் திளைத்ததில், புதனுக்கு வைகாசி மாதம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதாக ஓடிப் போயிற்று" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "மது மாதம்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சித்திரை மாதம் என்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பிலும் "மது மாதம்" என்று கொடுக்கப்பட்டு, அருகிலேயே அடைப்புக்குறிக்குள் "பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களை உள்ளடக்கிய காலம்" என்றிருக்கிறது. அப்படியென்றால் இது மாசி மாதத்தைக் குறிக்கிறது. செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், "மாதவ மாதம்" என்று கொடுத்துவிட்டு, அடிக்குறிப்பில், "மாக மாதம்" என்று சொல்லப்பட்டுள்ளது. மாகமாதம் என்பது தை–மாசி மாதங்களுடன் தொடர்புடையது. எனவே, மாகம், மது, மாதவ ஆகிய மாதப் பெயர்களிலும், அவற்றுக்குரிய காலப்பகுதிகளை விளக்குவதிலும் பதிப்புகளுக்கிடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பிறகு, ஒரு மாசம் சம்பூர்ணமானபோதோ {இளன் பெண்ணாக இருக்க வேண்டிய மாத காலம் முழுமையடைந்ததும்}, பூர்ணமான இந்துவை {முழு நிலவைப்} போன்ற முகத்தையுடையவனும், ஸ்ரீமானுமான பிரஜாபதிசுதனும் {கர்தமப் பிரஜாபதியின் மகனான இளன் மீண்டும் ஆண் உருவம் பெற்றவனாக} சயனத்தில் {படுக்கையில்} விழித்தெழுந்தான்.(9) அந்த ராஜா {இளன்}, அங்கே நீர்த்தடாகத்தில் கைகளை மேலே உயர்த்தியவனாகவும், எந்த ஆதரவையும் பற்றிக் கொள்ளாதவனாகவும் தபம் செய்து கொண்டிருந்த சோமஜனை {சந்திரனின் புதல்வனான புதனைக்} கண்டான். அவனிடம் {பின்வருமாறு} பேசினான்:(10) "பகவானே {தபச்சிறப்பில் பெருமைக்குரியவரே}, என்னைப் பின்பற்றுபவர்களுடன் கூடியவனாகக் கடப்பதற்கரிய {இந்தப்} பர்வதத்திற்குள் பிரவேசித்தேன். ஆனால் அந்த சைனியத்தை நான் காணவில்லை. என்னுடையவர்களான அவர்கள் எங்கேதான் போனார்கள்?" {என்று கேட்டான் இளன்}.(11)
நினைவு மறந்தவனான {பெண்ணாக இருந்த காலத்து நினைவுகளை மறந்தவனான} அந்த ராஜரிஷியின் {அரசமுனியான இளனின்} அந்தப் பேச்சைக் கேட்டு, {புதன்} சாந்தப்படுத்துபவனாக, மேலான வாக்கினால் சுபமான {பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(12) "பெரும் கல்மழையால் உன்னுடைய பணியாள்கள் வீழ்த்தப்பட்டனர் {கொல்லப்பட்டனர்}. நீயும் வாதவர்ஷ {காற்று, மழை ஆகியவற்றின் மீது கொண்ட} பயத்தால் பீடிக்கப்பட்டவனாக ஆசிரம தேசத்தில் {பகுதியில்} உறங்கிவிட்டாய்.(13) வீரா, ஆசுவாசமடைவாயாக. உனக்கு பத்ரம் {மங்கலம்} உண்டாகட்டும். பயமற்றவனாகவும், {மனக்கலக்கம் என்ற} பிணி நீங்கியவனாகவும் பழங்களையும் மூலங்களையும் {கிழங்குகளையும்} உண்பவனாகவும் இங்கே சுகமாக வசித்திருப்பாயாக" {என்றான் புதன்}[2].(14)
[2] ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவ்வண்ணம் புதன் உண்மையை யொளித்து வேறு விதமாகக்கூறியது சிவ பெருமானது சாபத்தை வெளியிடலாகா தென்பதற்காக வென்றறிக" என்றிருக்கிறது.
மஹாமதியுள்ளவனான அந்த ராஜா {இளன்}, அந்த {புதனுடைய} வாக்கியத்தால் ஆசுவாசமடைந்த பிறகு, பணியாள்களின் அழிவினால் பெருந்தீனமடைந்தவனாக {பெரும் துயரமுற்றவனாகப் பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(15) "பிராமணரே, நான் என்னுடைய சொந்த ராஜ்ஜியத்தைக் கைவிடுவேன். பணியாள்களைப் பிரிந்தவனான என்னால் ஒரு க்ஷணமும் வாழ முடியாது. எனக்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும்.(16) பிராமணரே, தர்மபரனும் {அறத்தில் நிலைபெற்றவனும்}, பெரும்புகழ்படைத்தவனும், சசபிந்து என்று புகழ்பெற்றவனுமான என்னுடைய மூத்த மகனானவன் என்னுடைய ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்வான்.(17) மஹாதேஜஸ்வியே, சுகத்தோடு கூடிய என் பணியாள்களையும் தாரங்களையும் {மனைவியரையும்} கைவிட்டுவிட்டு, சிறிதளவும் அசுபமான சொல்லை {தங்களுடைய அறிவுரைக்கு எதிராக} மறுமொழியாகச் சொல்ல என்னால் உண்மையில் முடியாது[3]" {என்றான் இளன்}.(18)
[3] தர்மாலயப் பதிப்பில், "ஹே மஹாதேஜோவானே! ஹிதமே புரியும் ஜனங்களையும் மனைவிகளையும் ஒழிக்கவும் திருவொள்ளத்திற்கிசையாத விண்ணப்பத்தை எதையும் விண்ணப்பம் செய்வதற்கும் நான் முடியாதிருக்கின்றேன்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "ஆயினும், இதுகாறும் மேலான சுகத்துடனே வாழ்ந்த எனது பரிஜனங்களுடைய பெண்சாதிகளைப் பாராதிருக்க எனக்கு மனந்தாளாமையால், இவ்விடத்திலேயே வசிக்குமாறு அடியேனுக்கு நியமிக்கலாகாது; நகரஞ்செல்ல உடனே எனக்கு அனுமதி கொடுக்க வேண்டுகிறேன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "பேரொளிவீசும் முனிவரே! நாட்டில் என்னுடைய மனைவி-மக்கள்-வேலைக்காரர்கள் சுகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுப் பிரிந்து நான் இங்கேயே தங்கிவிட முடியாது. நான், தங்கள் சொல்லை மீறிச் செல்லாதபடிக்கு, எனக்கு உகந்த ஆணையை அருள வேண்டும்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "பிராமணரே, என்னுடைய பணியாள்களையும் நாட்டின் மனைவியரையும் கைவிட்டுவிட்டு என்னால் இங்கே காத்திருக்க இயலாது. ஆகையால், பேரொளி மிக்கவரே, இங்கே தங்கியிருக்குமாறு இத்தகைய விரும்பத்தகாத கட்டளையை எனக்கு இடாதீர்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "இல்லை, என்னுடைய மனைவியரையும் என் நல்ல பணியாள்களையும் என்னால் கைவிட முடியாது; ஒளிபொருந்திய தவச்செல்வரே, என்னைக் கடிந்து கொள்ளாதீர்" என்றிருக்கிறது. விவேக் தேவ்ராயின் செம்பதிப்பில், "என் பணியாள்களும், மனைவியரும் போன நிலையில், நான் துயருற்றிருக்கிறேன்; மேலும் என்னாலும் இங்கே தங்கியிருக்க முடியாது. பேரொளிமிக்கவரே! உம்முடைய வார்த்தைகளும் ஏற்புடையதாக இல்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அங்கே தங்குவது {ஏற்புடையதல்ல}" என்றிருக்கிறது. மேற்கண்ட பதிப்புகளில் "ப்ருத்யதாரான்" என்பதற்குப் ‘பணியாள்களையும் மனைவியரையும்’ என்றும், ‘பணியாள்களின் மனைவியரை’ என்றும் வெவ்வேறு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், "ப்ரதிவக்தும்" என்பதற்கு ‘மறுமொழி கூறுதல்’, ‘எதிர்த்துப் பேசுதல்’ ஆகிய பொருள்கள் கொள்ளப்பட்டுள்ளன. முந்தைய சுலோகங்களில் புதன் ஆசிரமத்தில் தங்கியிருக்குமாறு கூறியதையும், இளன் அங்கிருந்து செல்வதற்கு அனுமதி கோரியதையும் கருத்தில் கொண்டால், தன்னுடைய பணியாள்களையும் மனைவியரையும் கைவிட்டு ஆசிரமத்தில் தங்க முடியாத இளன், புதனுடைய அறிவுரைக்கு எதிராக அசுபமான {விரும்பத்தகாத} மறுமொழியைக் கூறவும் தயங்குவதாகப் பொருள்கொள்ளலாம். இருப்பினும், "அஷுபம் வச꞉" என்பது எத்தகைய அசுபமான சொல்லைக் குறிக்கிறது என்பதும், "ப்ரதிவக்தும்" என்பதன் மூலம் யாருக்கு மறுமொழி கூறப்படுகிறது என்பதும் மூலத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே, இது கதைச்சூழலையும் பிற பதிப்புகளின் விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சாத்தியமான பொருள்கோள் மட்டுமேயாகும்.
பிறகு, ராஜேந்திரன் {மன்னர்களின் தலைவனான இளன்} அவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில், புதன் சாந்த்வபூர்வமாக {ஆறுதல் மொழிகளுடன் கூடியதாக}, பரம அற்புதமான {வார்த்தையைக்} கூறினான்: "இங்கே வசிப்பது உனக்கு விருப்பமாகட்டும்.(19) மஹாபலவானே, கார்தமேயா {கர்தமப் பிரஜாபதியின் புதல்வனே}, உன்னால் சந்தாபம் கொள்ளப்படக் கூடாது {நீ வருந்த வேண்டாம்}; இங்கே ஓராண்டு வசித்தவனான உனக்கு ஹிதத்தை {நன்மையைச்} செய்விப்பேன்" {என்றான் புதன்}.(20)
அக்லிஷ்ட கர்மனான {சிரமமின்றிச் செயலாற்றுபவனான} அந்த புதனுடைய அந்த வசனத்தைக் கேட்டு, பிரம்மவாதியால் {பிரம்மஞானியான புதனால்} எது சொல்லப்பட்டதோ, {அதன்படி அங்கே} வசிப்பதற்கு புத்தியை விதித்தான் {தீர்மானித்தான் இளன்}.(21) பிறகு அவன், ஒரு மாசம் ஸ்திரீயாகி {பெண்ணாகி} சுபையாக {மங்கலமானவளாக}, {புதனை} இடைவிடாமல் மகிழ்வித்துக் கொண்டிருந்தான். ஒரு மாசம் புருஷபாவத்துடன் {ஆண் தன்மையுடன்} தர்மத்தில் புத்தியைச் செலுத்தினான்.(22) பிறகு, ஒன்பதாவது மாசத்தில், அழகிய இடையுடையவளான அந்த இளை, சோமசுதனின் {சந்திரனின் புதல்வனான புதனின்} மூலம் பேராற்றலுடையவனான புரூரவஸ்[4] என்ற மகனைப் பெற்றெடுத்தாள்.(23) அழகிய இடையுடையவளான இளையோ, புதனுக்குச் சமமான வர்ணமும் {ஒத்த நிறமும்} பொலிவும் உடையவனும், மஹாபலம் வாய்ந்தவனுமான புத்திரனை {புரூரவஸை}, {அவன்} பிறந்த மாத்திரத்திலேயே பிதாவின் {தந்தையான புதனின்} கையில் வைத்தாள் {ஒப்படைத்தாள்}.(24)
[4] சந்திரனின் புதல்வனான புதனுக்கும் இளைக்கும் பிறந்த புரூரவஸ் (புரூரவன்), பின்னாளில் பிரதிஷ்டானபுரத்தை {இன்றைய பிரயாக்ராஜை / முந்தைய அலகாபாத்தைத்} தலைநகராகக் கொண்டு ஆண்ட புகழ்பெற்ற சந்திர வம்சத்தின் (ஐல வம்சத்தின்) முதல் பேரரசனாவான் என்பதையும், இவனே ஊர்வசியின் கணவனாகவும், ஆயுசு, நகுஷன், யயாதி ஆகியோரின் மூதாதையாகவும் விளங்கியவன் என்பதையும் அறியலாம். ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "யோஜன கந்தியினிடம் வியாஸபகவான் அவதரித்ததுபோல் இந்தப் புரூரவனும் நிஷேகமானவுடனே பிதாவுக்குச் சமவயதான புத்திரனாகப் பிறந்தானென அறிக" என்றிருக்கிறது. இங்கே சொல்லப்படும் யோஜன கந்தி சத்தியவதி ஆவாள்.
ஆத்மவானான {தன்னடக்கமுடையவனான} அந்த புதனோ, ஓராண்டுக் கால இடைவெளி முழுவதும்[5] புருஷீபூதனான {ஆண் உருவம் பெற்றவனான இளனை}, தர்மத்தோடு கூடிய கதைகளால் {அறநெறி சார்ந்த கதைகளால்} உண்மையில் மகிழ்வித்தான்" {என்றான் ராமன்}.(25)
[5] மூலத்தில் "ஸம்வத்ஸராந்தரம்" என்றிருக்கிறது. இதற்கு "ஓராண்டுக் கால இடைவெளி", "மற்றோராண்டு" ஆகிய பொருள்களைக் கொள்ளலாம். இச்சர்க்கத்தின் 20ஆம் சுலோகத்தில் புதன், இளன் ஓராண்டு வசித்த பிறகு அவனுக்கு நன்மையைச் செய்விப்பதாகக் கூறியிருப்பதாலும், 22ஆம் சுலோகத்தில் இளன் மாறிமாறி ஒரு மாசம் பெண்ணாகவும், ஒரு மாசம் ஆணாகவும் இருந்ததாகக் கூறப்பட்டிருப்பதாலும், இங்கே "ஓராண்டுக் கால இடைவெளி முழுவதும்" என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஓராண்டுக் காலத்தில் இளன் ஆண் உருவத்தில் இருந்த மாதங்களில் புதன் அவனைத் தர்மம் சார்ந்த கதைகளால் மகிழ்வித்ததாகப் பொருள்கொள்ளலாம்.
