Sunday, 22 November 2026

இளை ஆன இளன் | சர்க்கம் – 087 (29)

Ila's transformation into a woman | Sarga-087 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அரசன் இளன் வேட்டையாடச் சென்றபோது சிவபார்வதியின் விளையாட்டால் பெண்ணுருவம் அடைகிறான். உமையின் அருளால் மாதம் ஆணாகவும் மாதம் பெண்ணாகவும் வாழும் வரம் பெறுகிறான்.

087-இளை ஆன இளன்-Ilas-Transformation-Into-A-Woman-ChatGPT

வாக்கியவிசாரதனும் {பேச்சில் வல்லவனும்}, மஹாதேஜஸ்வியுமான ராகவன் {ரகு குல ராமன்}, லக்ஷ்மணனால் கூறப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டுப் புன்னகைத்தவனாக {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(1) "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, லக்ஷ்மணா, நீ எவ்வாறு கூறுகிறாயோ, ஒன்றும் விடாமல் {அந்த} விருத்திரனின் வதமும், வாஜிமேதத்தின் {அஷ்வமேத வேள்வியின்} பலனும் எதுவோ அதுவும் அவ்வாறே இருக்கிறது.(2) சௌமியா {இனியவனே}, பண்டைய காலத்தில் கர்தமப் பிரஜாபதியின் புத்திரனும், பாஹ்லீஷ்வரனும் {பாஹ்லிக நாட்டின் தலைவனும்}[1], ஸ்ரீமானும் {செல்வச் சிறப்புடையவனும்}, மஹாசயனுமான {உயர்ந்த உள்ளம் உடையவனுமான} இளன் என்னும் பெயருடையவன் இருந்தான் என்று கேள்விப்படுகிறோம்[2].(3) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, பெரும் தார்மீகனான {தர்ம சிந்தனையுடையவனான} அந்த ராஜா, பிருத்வி முழுவதையும் தன் வசப்படுத்தி, தன் புத்திரர்களைப் போல {மக்களைப் பாதுகாத்தவனாக} ராஜ்ஜியத்தையும் பரிபாலனம் செய்தான்.(4)

[1] இச்சுலோகத்தில் வரும் ‘பாஹ்லீஷ்வரர்’ என்பது ‘பாஹ்லி’ {பாஹ்லிக} தேசத்தின் அரசர் என்பதைக் குறிக்கிறது. சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இதிகாச புராணங்களிலும் ‘பாஹ்லிகம்’ {அல்லது பாஹ்லீகம், பால்ஹிகம், வாஹ்லிகம்} ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றுள் பாஹ்லிகம் என்பது பண்டைய பாரதத்தின் வடமேற்கு எல்லைப் பகுதிக்கு அப்பால் அமைந்திருந்த புகழ்பெற்ற நாடாகும். இது இன்றைய புவியியல் வரைபடத்தில் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பால்க்’ (Balkh — பண்டைய பாக்திரியா / Bactria) மற்றும் ஆமூ தரியா (Amu Darya / Oxus) நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளாகப் பொதுவாக அடையாளம் காணப்படுகிறது. எனினும், பண்டைய நூல்களில் இதே போன்ற பெயர்கள் பஞ்சாப் மற்றும் பலூசிஸ்தான் பகுதிகளிலுள்ள நாடுகள், மக்கள் குழுக்கள் ஆகியவற்றுடனும் தொடர்புபடுத்தப்படுவதால், இப்பெயர்களின் துல்லியமான புவியியல் அடையாளம் மற்றும் எல்லைகள் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

[2] பொதுவாகப் புராணங்களில் (பாகவதம், விஷ்ணு புராணம்) இளன் வைவஸ்வத மனுவின் மைந்தனாகவே கூறப்படுகிறான். ஆனால் வால்மீகி ராமாயணத்தின் இந்த சர்க்கத்தில், அரசன் இளன் கர்தமப் பிரஜாபதியின் மைந்தனாகவும் (கார்தமி; சுலோகங்கள் 3, 14, 19, 29), பாஹ்லிக நாட்டின் மன்னனாகவும் (சுலோகங்கள் 3, 7) குறிப்பிடப்படுகிறான். மஹாபாரதத்தின் அநுசாஸன பர்வத்திலும் (பகுதி 147) இளை வைவஸ்வத மனுவின் வழிவந்தவளாகவே குறிப்பிடப்படுகிறாள்; மனுவுக்கு இளை என்ற மகளும் சுத்யும்னன் என்ற மகனும் பிறப்பார்கள் என்றும், இளைக்கு புதன் கணவனாகி, அவனிடமிருந்து புரூரவன் பிறப்பான் என்றும் அங்கே சொல்லப்படுகிறது. இவ்வாறு வால்மீகி ராமாயணத்திற்கும் புராணங்கள் மற்றும் மஹாபாரதத்திற்கும் இடையே இளனின் குலமரபில் காணப்படும் இவ்வேறுபாடு குறிப்பிடத்தக்கதாகும்.

பரமோதாரர்களான ஸுரர்களாலும் {பெருந்தன்மைமிக்க தேவர்களாலும்}, மஹாதனர்களான தைத்தியர்களாலும் {செல்வமிக்க அசுரர்களாலும்}, நாகர்கள், ராக்ஷசர்கள், கந்தர்வர்களாலும், பெரும் மஹாத்மாக்களான யக்ஷர்களாலும்,(5) சௌம்யா, ரகுநந்தனா, பயார்த்தர்களான {அச்சத்தால் பிடிக்கப்பட்டவர்களான} அவர்களால் {தேவ, அசுர, நாக, ராக்ஷச, கந்தர்வ, யக்ஷர்களால்} நித்யம் பூஜிக்கப்பட்டு வந்தான். மேலும், ரோஷங்கொண்ட மஹாத்மாவுக்கு {இளனுக்கு} மூவுலகங்களும் பயந்து நடுங்கின.(6)

தர்மத்திலும் வீரியத்திலும் உறுதியாக நிலைபெற்றவனும், புத்தியினாலும் பரமோதாரனும் {பெருந்தன்மைமிக்கவனும்}, பெரும்புகழ் படைத்தவனும், பாஹ்லிகேசனுமான அந்த ராஜா {இளன்} அத்தகையவனாகவே இருந்தான்.(7) பெருந்தோள்களையுடையவனும் {மஹாபாஹுவும்}, பணியாட்களோடும், பலத்தோடும் {படையோடும்}, வாகனங்களோடும் கூடியவனுமான அவன் {இளன்}, மனோரமமான சைத்ர மாசத்தில் {மனத்திற்கு இனிமையான சித்திரை மாதத்தில்}, அழகிய வனத்தில் வேட்டையாடத் தொடங்கினான்.(8) மேலும், நிருபன் {அரசனான இளன்} அரண்யத்தில் நூறாயிரக்கணக்கான {லக்ஷக்கணக்கான} மிருகங்களை வேட்டையாடினான்; அவ்வாறு கொன்ற பிறகும் மஹாத்மாவான அந்த ராஜனுக்கு {இளனுக்கு} திருப்தி ஏற்படவில்லை.(9) மஹாத்மா {இளன்}, நானாவித பதினாயிரம் மிருகங்களை {பத்தாயிரம் விலங்குகளை} வேட்டையாடிக் கொண்டே, எங்கே மஹாசேனன் {ஸ்கந்தன்} பிறந்தானோ, அந்த தேசத்தை {இடத்தை} அடைந்தான்.(10)

வெல்வதற்கரியவனும், தேவேசனுமான ஹரன் {சிவன்}, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடனும் கூடியவனாக, அந்த தேசத்தில் {ஸ்கந்தன் பிறந்த இடத்தில்} சைலராஜன் சுதையை {மலையரசன் இமவானின் புதல்வியான பார்வதியை} மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.(11) கோபதித்வஜனான {காளைக் கொடியுடையவனான} உமேசன் {உமையின் தலைவனான சிவன்}, தேவிக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பியவனாக, அந்தப் பர்வத நிர்ஜரத்தில் {அந்த மலையின் அருவியருகே} தன்னை ஸ்திரீ ரூபமாக்கிக் கொண்டு தங்கியிருந்தான் {அங்கேயே நிலைகொண்டிருந்தான்}.(12) அப்போது அந்த வனதேசத்தில் {காட்டுப் பகுதியில்} புருஷர்களாகப் பேசப்படுபவையான எந்த சத்துவங்களும் {ஆண் உயிரினங்களும்}, புருஷ நாமங்களை {ஆண் பெயர்களைக்} கொண்ட எந்த விருக்ஷங்களும் {மரங்களும் இருந்தனவோ}, அவையனைத்தும் ஸ்திரீஜனங்களாக {பெண்களாக} மாறின[3].(13)

[3] இச்சுலோகங்களின்படி (12-13), சிவனே தன்னைப் பெண்ணுருவாக்கிக் கொண்டு உமையுடன் மகிழ்ந்திருந்தான்; அவ்வனத்தில் இருந்த ஆண் உயிரினங்களும், ஆண் பெயர்கொண்ட மரங்களும் அனைத்தும் பெண்களாக மாறின. பாகவதம் முதலிய புராண மரபின்படி, சிவனும் பார்வதியும் தனிமையில் மகிழ்ந்திருந்தபோது முனிவர்கள் தற்செயலாக அங்கு வந்ததால் தேவி நாணமடைந்தாள். தேவியை மகிழ்விப்பதற்காக, "இனி இந்த வனத்திற்குள் நுழையும் எந்த ஆண் உயிரும் பெண்ணாக மாறிவிடும்" எனச் சிவன் வரம் (சாபம்) அளித்திருந்தான். இதை அறியாமல் வேட்டையாட வந்த இளன் இதில் சிக்கிக்கொண்டான்.

மேலும் எது சிறிதளவேனும் {அங்கே இருந்ததோ}, அஃது அனைத்தும் நாரீசஞ்ஞமாக {பெண் என்ற பெயருடையதாக} உண்மையில் ஆயிற்று. இதற்கிடையில், கர்தமாத்மஜனான அந்த ராஜா இளன் {கர்தமரின் மகனான அந்த இளன்}, ஆயிரக்கணக்கான மிருகங்களைக் கொன்றுகொண்டே அந்த தேசத்தை நெருங்கினான்.(14) இரகுநந்தனா {ரகு குலத்தவரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான லக்ஷ்மணா}, அவன் {இளன்}, கொடிய மிருகங்கள், மான்கள், பறவைகளுடன் கூடிய சர்வமும் ஸ்திரீயாக்கப்பட்டதையும், பின்தொடர்ந்து வந்தவர்களோடு தானும் ஸ்திரீயாக்கப்பட்டதையும் {பெண்ணாக்கப்பட்டதையும்} கண்டு,(15) அத்தகைய நிலையை அடைந்த தன்னைக் கண்டு, அவனுக்கு மஹத்தான துக்கம் உண்டாயிற்று; மேலும், அஃது உமாபதியின் கர்மம் {சிவனின் செயல்} என்பதை அறிந்து {இளன்} அச்சத்தையும் அடைந்தான்.(16) பிறகு, பணியாட்களோடும் பலத்தோடும் {படைகளோடும்}, வாகனங்களோடும் கூடிய ராஜா {இளன்}, மஹாத்மாவும், சிதிகண்டனும் {நீலகண்டனும்}, கபர்தினுமான {சடைமுடியோனுமான} தேவனை {சிவனை} சரணம் {புகலிடமாக} அடைந்தான்.(17)

பிறகு, வரதனான மஹேஷ்வரன் {வரம் அருள்பவனான சிவன்}, தேவி சகிதனாகப் புன்முறுவல் பூத்து, வரதனான அவனே தானாகப் பிரஜாபதிஸுதனிடம் {கர்தம பிரஜாபதியின் மகனான இளனிடம் இந்த} வாக்கியத்தைச் சொன்னான்:(18) "மஹாபலவோனே, ராஜரிஷியே, கார்தமேயனே {கர்தமப் பிரஜாபதியின் மைந்தனே}, சௌமியா, நல்விரதங்களை உடையவனே, எழு; எழுவாயாக. புருஷத்வத்தைத் தவிர்த்த வரத்தை வரித்துக் கொள்வாயாக {ஆண்மைத் தன்மையைத் தவிர வேறெந்த வரத்தை நீ வேண்டிப் பெற்றுக் கொள்வாயாக}" {என்றான் சிவன்}.(19)

பிறகு, மஹாத்மாவால் {சிவனால்} மறுக்கப்பட்டவனும், துக்கத்தால் பீடிக்கப்பட்டவனும், ஸ்திரீபூதனுமான {பெண்ணாக மாறியவனுமான} அந்த ராஜா {இளன்}, ஸுரோத்தமனிடமிருந்து {தேவர்களில் சிறந்தவனான சிவனிடமிருந்து} வேறெந்த வரத்தையும் ஏற்றுக் கொண்டானில்லை.(20) பிறகு, நிருபன் {அரசன் இளன்}, மஹத்தான சோகத்துடனும், முழுமையான அந்தராத்மாவுடனும் {முழு உள்ளத்துடனும்}, சைலராஜசுதையான {மலையரசன் இமவானின் புதல்வியான} உமா தேவியை உண்மையில் பணிந்து வணங்கி,(21) "வரங்களின் ஈஷ்வரியே {தலைவியே}, உலகங்களுக்கும் {ஈஷ்வரியாக} இருக்கிறாய். வரதே {வரமளிப்பவளே}, பாமினியே {அழகியே}, அமோகதர்சன தேவி {வீண்போகாத தரிசனத்தை உடைய தேவியே}, சௌம்யமான கண்களால் {உன் கடைக்கண்களால் என்னைப்} பார்த்தருள்வாயாக" {என்றான் இளன்}.(22)

உருத்திரனுக்கு உகந்தவளான தேவி {உமை}, ஹர சந்நிதியில் {சிவனின் முன்னிலையில்} அந்த ராஜரிஷியின் ஹிருதயத்தில் பதிந்திருந்த விருப்பத்தை நன்கறிந்து, சுபமான வாக்கியத்தை மறுமொழியாக {பின்வருமாறு} சொன்னாள்:(23) "தேவர் {சிவன்} பாதியளவிற்கு வரமளிப்பவர்; {எஞ்சிய} பாதி வரத்தை நான் உண்மையில் உனக்கு {அளிப்பேன்}. ஸ்திரீ-புருஷ தன்மைகளில் நீ எவ்வளவு விரும்புகிறாயோ, {அவ்வளவிலான} பாதியை நீ ஏற்றுக் கொள்வாயாக" {என்றாள் உமை}.(24)

பிறகு, மிக அற்புதமானதும், ஒப்பற்றதுமான தேவியின் அந்த வரத்தைக் கேட்டு, ராஜா {இளன்} பெரும் மகிழ்ச்சியடைந்த மனத்துடன், {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(25) "புவியில் {உலகில்} ரூபத்தால் {அழகினால்} ஒப்பற்றவளே, தேவி, என் மீது அருள்பாலிக்கிறாயெனில், ஒரு மாஸம் ஸ்திரீத்வத்தை {பெண் தன்மையை} அடைந்திருந்து, மீண்டும் {மறு} மாஸம் புருஷனாவேனாக {ஆண் ஆவேனாக}" {என்றான் இளன்}.(26)

மிக அழகிய முகத்தையுடைய தேவி {உமை}, அவனுடைய விருப்பத்தை நன்கு அறிந்து, {பின்வரும்} சுபமான வாக்கியத்தை மறுமொழியாகக் கூறினாள், "அவ்வாறே ஆகும்.(27) இராஜனே, நீ புருஷபூதனாக ஸ்திரீபாவத்தை {ஆணாகப் பெண்தன்மையை} நினைவுகூரமாட்டாய். மேலும், அடுத்த மாஸம் ஸ்திரீபூதனாகப் பௌருஷத்தையும் {பெண்ணாக ஆண்தன்மையையும்} நினைவுகூரமாட்டாய்" {என்றாள் உமை}.(28)

இவ்வாறு, கார்தமியான {கர்தமப் பிரஜாபதியின் மைந்தனான} அந்த ராஜா {இளன்}, ஒரு மாஸம் புருஷனாக இருந்து, பிறகு {அடுத்த} ஒரு மாஸம் திரிலோக சுந்தரியான நாரியாக {மூவுலகிலும் பேரழகியான பெண்ணாக} இளை ஆனான்[4]" {என்றான் ராமன்}.(29)

[4] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், அசுவமேதயாகப் படலம், 9-ஆம் பாடல் பின்வருமாறு:

கொற்றவன் பாலிசூலி கோமகன் கொம்பனாளாய்
மற்றவன் தேவி சொன்ன வாக்கினான் மைந்தனாய்
பொற்றொடியாய்த் திங்கள் புதனுக்குப் புரூரவாவைப்
பெற்றபின் சாபநீங்கப் பெற்றதிப் பரிமேதத்தால். (9)

பொருள்: {மேலும் பரதன் இராமனை நோக்கி,} "கொற்றவனான பாலிசூலியால் {வெற்றியுடையவனும், ஆலமரத்தடியில் சூலம் தாங்கியவனுமான சிவனால்} கோமகன் {அரசன் இளன்} கொம்பனையாளாக {பெண்ணாக} மாறி, மற்றவன் தேவி {சிவனின் மனைவியான உமை} சொன்ன வாக்கினால் மைந்தனாக {ஆணாக} மாறி, பொற்றொடியாக {பொன் வளையல் அணிந்த பெண்ணாக இருந்தபோது} திங்களின் மகனான புதனுக்குப் புரூரவனைப் பெற்றபின், இந்தப் பரிமேதத்தால் {அசுவமேத யாகத்தால்} சாபம் நீங்கப் பெற்றான்" என்று கூறினான்.

உத்தர ராமாயணத்தில் 87 முதல் 90 வரையிலான நான்கு சர்க்கங்களில் விரித்துரைக்கப்படும் இள மன்னன் வரலாற்றை, ஒட்டக்கூத்தர் அசுவமேத யாகத்தின் பெருமையை விளக்கும் முகமாக ஒரே பாடலில் சுருக்கமாகப் பாடியுள்ளார். அரசன் இளன் பெண்ணானதும், தேவியின் வாக்கால் ஆணாக மாறியதும், பெண்ணாக இருந்தபோது புதனுக்குப் புரூரவனைப் பெற்றதும், இறுதியில் அசுவமேத யாகத்தால் சாபம் நீங்கியதும் இப்பாடலில் சுருங்கக் கூறப்படுகின்றன. "பாலிசூலி" என்ற சொல்லுக்கு நூலில் விளக்கம் இல்லை. "பாலி" என்பதற்கு "ஆலமரம்" என்ற பொருளும், "சூலி" என்பதற்குச் "சூலம் ஏந்திய சிவன்" என்ற பொருளும் இருப்பதால், இங்கு ஆலமரத்தடியில் சூலம் ஏந்திய சிவன் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.


உத்தர ராமாயணம் சர்க்கம் – 087ல் உள்ள சுலோகங்கள்: 29

தொடர்ந்து படிக்க: பொருளடக்கம் · நூல்கள்: அச்சு நூல்கள் · கிண்டில் நூல்கள்

Labels

அகஸ்தியர் அக்னி அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் கல்மாஷபாதன் காசியபர் காஞ்சனர் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குசன் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கைடபன் கோமுகன் கௌ கௌசல்யை கௌதமர் க்ஷுபன் சங்கன் சத்ருக்னன் சம்பூகன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாபாலி ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மதயந்தி மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாந்தாதா மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மித்ரஸஹன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லவணன் லவன் லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாமதேவர் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஸௌதாஸன் ஹனுமான் ஹேதி