Jayanta | Sarga-028 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தும், ஜயந்தனும் செய்த போர்; ஜயந்தனை சாகரத்திற்குள் மறைத்த புலோமன்; இந்திரனுக்கும், ராவணனுக்கும் இடையில் நடந்த போர்...
சுமாலி, வசுவால் பஸ்மமாக்கப்பட்டு {வசுவான சாவித்ரனால் சாம்பலாக்கப்பட்டுக்} கொல்லப்பட்டதைக் கண்டும், மேலும் தன் சைனியம் ஸுரர்களால் {தேவர்களால்} துன்புறுத்தப்பட்டுத் தப்பி ஓடுவதை கவனித்தும்,(1) பலவானும், ராவணனின் மகனுமான அந்த மேகநாதன் {இந்திரஜித்}, அப்போது குரோதமடைந்ததான். பிறகு, சர்வ ராக்ஷசர்களையும் திரும்பச் செய்து, உறுதியாக {அங்கே} நிலைத்து நின்றான்.(2) அந்த மஹாரதன் {இந்திரஜித்}, அக்னி வர்ணம் கொண்டதும், விரும்பிய இடத்திற்குச் செல்லக்கூடியதுமான நல்ல ரதத்தைக் கொண்டு, வனங்களில் ஜுவலிக்கும் அக்னியைப் போல, அந்த சேனையை {தேவர்களின் படையை} நோக்கிப் பாய்ந்தான்.(3) பிறகு, விதவிதமான ஆயுதங்களைத் தரித்தவனாகப் பிரவேசித்த அவனைக் கண்டதும், தேவதங்கள் {தேவர்கள்} திசைகள் அனைத்திலும் சிதறி ஓடினர்.(4)
அப்போது, யுத்தத்தில் விருப்பம் கொண்டவனான அவனது {இந்திரஜித்தின்} முன்னிலையில் எவனும் நிற்கவில்லை. பிறகு, தாக்கப்பட்டும், அச்சமடைந்தும் இருந்த சர்வ ஸுரர்களையும் நோக்கி சக்ரன் {இந்திரன், தேவர்களிடம் பின்வருமாறு} கூறினான்:(5) "ஸுரர்களே {தேவர்களே}, ரணத்தில் அச்சம் கூடாது; {ஓடிப்} போகக்கூடாது. திரும்பி வருவீராக. அபராஜிதனும், என் புத்திரனுமான இவன் {தோல்வியடையாதவனான என் மகன் ஜயந்தன்} யுத்தம் செய்யச் செல்கிறான்" {என்றான் இந்திரன்}.(6)
அதன்பின், சக்ரனின் மகனும், ஜயந்தனென்று பிரசித்தி பெற்றவனுமான அந்த தேவன், அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ரதத்தில் போர்க்களத்தில் முன்னேறினான்.(7) பிறகு, அந்தத் திரிதசர்கள் {தேவர்கள்} அனைவரும் சசியின் மகனை {ஜயந்தனைச்} சூழ்ந்து கொண்டு, யுத்தத்தில் ராவணனின் மகனை {இந்திரஜித்தை} எதிர்கொண்டு தாக்கினர்.(8) மஹேந்திரனின் புத்திரனுக்கும் {ஜயந்தனுக்கும்}, மேலும் ராக்ஷசேந்திரனின் மகனுக்கும் {இந்திரஜித்துக்கும்} இடையே, அந்த தேவ, ராக்ஷசர்களுக்குத் தகுந்த யுத்தம் உண்டானது.(9)
பிறகு, ராக்ஷசாத்மஜன் {ராக்ஷசன் ராவணனின் மகனான இந்திரஜித்}, மாதலியின் புத்திரனும், சாரதியுமான {ஜயந்தனின் தேரோட்டியுமான} கோமுகன்[1] மீது கனக பூஷணங்களுடனே கூடிய சரங்களை {பொன்னாலேயே அலங்கரிக்கப்பட்ட கணைகளை} ஏவினான்.(10) சசியின் மகனான ஜயந்தனும் கூட அவ்வாறே {செய்தான். அதாவது, இந்திரஜித்தின் தேரோட்டி மீது கணைகளை ஏவினான்}. மேலும் குரோதமடைந்த ராவணியும் {ராவணனின் மகனான இந்திரஜித்தும்}, அவனுடைய தேரோட்டியையும் {கோமுகனையும்}, அவனையும் {ஜயந்தனையும்} சுற்றிலும் எதிர்த்துத் துளைத்தான்.(11) பலசாலியான அந்த ராவணி, குரோதத்தில் நிறைந்து, கண்களை அகல விரித்தவாறே, சக்ரனின் தனயனை {இந்திரனின் மகனான ஜயந்தனை} சரவர்ஷத்தாலேயே நனைத்தான் {கணைமாரியிலேயே மூழ்கடித்தான்}.(12)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மாதலி, இந்திரனின் சாரதியாவான். அதேபோல, மாதலியின் மகன் {இந்திரனின் சாரதி மாதலியின் மகனான கோமுகன்} ஜயந்தனின் சாரதியாவான்" என்றிருக்கிறது. இருப்பினும் கோமுகனின் பெயர் நேரடியாகச் சுட்டப்படவில்லை.
பிறகு, பெருங்குரோதமடைந்த ராவணி, கூர்முனைகளைக் கொண்ட நானாவித ஆயுதங்களையும் ஸுர சைனியத்தின் {தேவர்களின் படை} மீது ஆயிரக்கணக்கில் பொழிந்தான்.(13) சதக்னி, முஸலம் {உலக்கை}, பிராசம் {ஈட்டி}, கதை {கதாயுதம்}, கட்கம் {வாள்}, பரசுகள் {கோடரிகள் ஆகியவற்றையும்}, மஹா கிரி சிருங்கங்களையும் {பெரும் மலைச்சிகரங்களையும்} ராவணி பொழிந்தான்.(14) பிறகு, சத்ரு சைனியங்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த அந்த ராவண புத்திரனால் {இந்திரஜித்தால்} உலகங்கள் பெரிதும் கலக்கமடைந்தன; மேலும் இருள் தோன்றி சூழ்ந்துகொண்டது.(15) பிறகு, நாலாபுறமும் சரங்களால் பீடிக்கப்பட்ட அந்த தைவத பலமும் {தேவர்களின் படையினரும்}, அந்த சசியின் மகனும் {ஜயந்தனும்} பலவகையிலும் நிலைகுலைந்து போனார்கள்.(16) இராக்ஷசனா? அல்லது தேவதனா? {என} அன்யோன்யம் அறிந்து கொள்ளாமல், மேலும் கலக்கமடைந்து அங்குமிங்கும் என நாலாபுறமும் {படை சிதறி} ஓடியது.(17) அந்த தேவர்கள், தேவர்களையே கொன்றனர்; அவ்வாறே ராக்ஷசர்கள், ராக்ஷசர்களையே {கொன்றனர்}. இருளில் மூடப்பட்டுக் கலக்கமடைந்த மற்றவர்களும் அவ்வாறே சிதறி ஓடினர்.(18)
இதற்கிடையில், வீரனும், வீரியவானும், புலோமன் என்ற பெயருடையவனுமான அந்த தைத்தியேந்திரனால், சசியின் புத்திரன் {ஜயந்தன்} கைப்பற்றப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டான்.(19) அப்போது, அந்தப் புலோமன், தன் தௌஹித்ரனை {மகள் வயிற்றுப் பேரனான ஜயந்தனைக்} கைப்பற்றிக் கொண்டு, சாகரத்திலேயே பிரவேசித்தான். எவனால் அந்த சசியோ {ஜயந்தனின் அன்னையான சசிதேவி பெறப்பட்டாளோ}, அவனே அவனுக்கு ஆர்யகனாவான் {அந்தப் புலோமனே ஜயந்தனுக்கு தாய்வழி தாத்தாவாக இருப்பான்}, அல்லவா?(20) பிறகு, ஜயந்தனின் மறைவை {அவன் காணாமல் போனதை} அறிந்து கொண்டபோது, சர்வ தேவதங்களுமே {தேவர்களுமே} மகிழ்ச்சியிழந்தனர்; பிறகு, துயருற்று நாலாபுறமும் சிதறி ஓடினர்[2].(21) பிறகு, பெருங்குரோதமடைந்த ராவணியோ, தன் பலங்களால் {படைகளால்} சூழப்பட்டவனாக அந்த தேவர்களை நோக்கிப் பாய்ந்தான்; மேலும் மஹாஸ்வனத்தை வெளிப்படுத்தினான் {பேரொலியை எழுப்பினான்}.(22)
[2] ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில் ஜயந்தனை புலோமன் கொண்டு போகவில்லை, சாரதியான கோமுகனே போர்க்களத்தை விட்டுக் கொண்டு செல்கிறான்.இயங்கிய வடவைத் தீயின்எரிகணை நிறத்தில் தைப்பமயங்கினன் சயந்தன் பாகன்மகன் வலி தப்பிலாமைமுயங்கி ஆங்கு அவனைக் கொண்டுமுனைக்களம் கடந்து போகபயங்கிளர் வானோ ரெல்லாம்பாறின் பரந்தார் எங்கும்.- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 532ம் பாடல், திக்கு விசயப் படலம்பொருள்: எழுந்து திரியும் வடவாமுகாக்கினி போல் எரியும் அம்புகள் தன் மார்பில் தைத்ததால் ஜயந்தன் அறிவு மயங்கினான். பாகன் மகன் {இந்திரனின் தேரோட்டியான மாதலியின் மகன் கோமுகன்}, ஜயந்தனின் வலிமை தப்பாத வண்ணம், அவ்விடத்தில் இருந்து அவனைத் தழுவி எடுத்துக் கொண்டு போர்க்களத்தைக் கடந்து போனான். அச்சம் மிக்க தேவர்கள் எல்லாம் எவ்விடத்தும் பரவினராக ஓடினார்கள்.
புத்திரனின் மறைவையும் {காணாமல் போனதையும்}, தைவதங்கள் சிதறி ஓடுவதையும் பார்த்துவிட்டு, தேவேசன் மாதலியிடம் {இந்திரன் தன் தேரோட்டியான மாதலியிடம், "ரதம் {என்னிடம்} கொண்டு வரப்படட்டும்" என்று கூறினான்.(23) திவ்யமேயானதும், பயங்கரமிக்கதும், பெரும் வேகத்தைக் கொண்டதும், ஆயத்தமாகவே இருந்ததுமான அந்த மஹாரதம், {பெருந்தேர்} மாதலியால் செலுத்தப்பட்டு {இந்திரனின் முன்னால்} வந்து நின்றது.(24) பிறகு, மின்னல்களுடன் கூடியவையும், மஹாபலம் பொருந்தியவையும், வாயுவால் அலைக்கழிக்கப்படுபவையும், பெரும் இடி முழக்கத்தைக் கொண்டவையுமான மேகங்கள், அந்த ரதத்தின் முன்னால் முழங்கின.(25) திரிதசேஷ்வரன் {இந்திரன்} புறப்பட்டபோது, திரண்டு வந்த கந்தர்வர்களும், நானாவித வாத்தியங்களை இசைத்தனர்; மேலும், அப்சரஸ் சங்கத்தினர் நடனமாடினர்.(26) உருத்திரர்களாலும், வசுக்களாலும், ஆதித்யர்களாலும், சாத்யர்களாலும், மேலும் மருத்கணங்களாலும், நானாவிதமான ஆயுதங்களை ஏந்தியவர்களாலும் சூழப்பட்டவனாக திரிதசாதிபன் {இந்திரன்} புறப்பட்டுச் சென்றான்.(27) சக்ரன் புறப்படும்போதே, பவனன் {வாயுதேவன் / காற்றானவன்} கொடூரமாக வீசினான்; மேலும், பாஸ்கரன் {சூரியன்} ஒளியிழந்தவனானான். மேலும், மஹா உல்கங்கள் {எரிகற்கள், பூமியில்} விழுந்தன.(28)
இதற்கிடையில், பிரதாபவானும், சூரனுமான தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, விஷ்வகர்மனால் நிர்மிதம் செய்யப்பட்ட திவ்யமான ரதத்தில் ஏறினான்.(29) பேருடல் படைத்தவையும், ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்துபவையுமான பன்னகங்களால் சூழப்பட்ட {அந்தத் தேர்}, போர்க்களத்தில், அவற்றின் பெருமூச்சினுடைய வாயுவால் {அந்தப் பாம்புகளின் பெருமூச்சில் வந்த காற்றால்} எரியூட்டப்பட்டதைப் போலிருந்தது.(30) தைத்தியர்களாலும், நிசாசரர்களாலும் அந்த ரதம் சூழப்பட்டிருந்தது. சமரை நோக்கிய முகம் கொண்ட தைத்தியன் {ராவணன்}[3], மஹேந்திரனை எதிர்த்து முன்னேறிச் சென்றான்.(31) அந்தப் புத்திரனை {இந்திரஜித்தைத்} தடுத்தே நிறுத்திவிட்டுத் தானே நிலைபெற்று நின்றான். அந்த ராவணியும் யுத்தகளத்தில் இருந்து விலகி {ஓரிடத்தில்} அமர்ந்தான்.(32) பின்னர், போர்க்களத்தில் மேகங்கள் {மழையைப்} பொழிவதைப் போலவே சஸ்திரங்களை {ஆயுதங்களைப்} பொழிந்து கொண்டு, ஸுரர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் இடையில் கோரமான யுத்தம் தொடங்கியது.(33)
[3] இங்கே ராவணன் தைத்தியன் என்று சொல்லப்படுகிறான். அசுரர்களில், தைத்தியர்கள், திதிக்கும் கசியபருக்கும் பிறந்தவர்கள்; தானவர்கள், தனுவுக்கும் கசியபருக்கும் பிறந்தவர்கள். எனினும், ராக்ஷசர்களோ, புலஸ்தியர் வழி வந்தவர்கள்.
துஷ்டாத்மாவும், நானாவித ஆயுதங்களை ஏந்தியவனுமான கும்பகர்ணனோ, அப்போது யுத்தத்தில் யாருடன் போரிடுகிறான் என்பது அறியப்படவில்லை {அவ்வாறு, அனைவரையும் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தான்}[4].(34) கோபத்துடன் கூடிய அவன் {கும்பகர்ணன்}, தன் பற்களாலும், இரு புஜங்களாலும், இரு கால்களாலும், சக்தி, தோமரம், சாயகங்களாலும் என எதனைக் கொண்டாவது ஸுரர்களையே {தேவர்களையே} தாக்கினான்.(35) பிறகு, மஹாகோரர்களான ருத்திரர்களை நேருக்கு நேர் சந்தித்த நிசாசரன் {இரவுலாவியான கும்பகர்ணன்} போர்க்களத்தில் மேலும் உக்கிரமாகப் போரிட்டான். அவர்களின் சஸ்திரங்களாலும் இடைவெளியின்றி {தானும்} பிளக்கப்பட்டான்.(36) சஸ்திரங்களால் உடல் மறைக்கப்பட்டவனான கும்பகர்ணன், குருதியைச் சிந்திக் கொண்டு, மின்னலுடனும், இடியின் பேரொலியுடனும் தாரைத் தாரையாகப் பொழியும் மேகத்தைப் போலக் காட்சியளித்தான்.(37)
[4] மன்மதநாததத்தரின் ஆங்கிலப் பதிப்பில், "துஷ்டாத்மாவும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்து வந்தவனுமான கும்பகர்ணன், யாரிடம் தான் போரிடுகிறோம் என்பதை அறிந்தானில்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அவன் அது வரை உறங்கிக் கொண்டிருந்ததால் தான் யாரிடம் போரிடுகிறோம் என்பதை அறிந்தானில்லை. அவன் ஆறு மாத காலம் உறங்குபவன்" என்றிருக்கிறது.
பிறகு, போர்க்களத்தில் மருத்கணங்களுடன் யுத்தம் செய்த அந்த ராக்ஷச சைனியம் முழுவதும், கூர்மையான, நானாவித ஆயுதங்களால் நாலாபுறமும் விரட்டப்பட்டது.(38) இரணத்தில் சிலர் கொல்லப்பட்டனர்; {உடலுறுப்புகள்} துண்டிக்கப்பட்டவர்கள் மஹீதலத்தில் {தரையில்} விழுந்து துடித்தனர். வேறு சிலரோ, தங்கள் வாகனங்களில் சிக்கியபடி அப்படியே நின்றனர்.(39) இரணத்தில் ரதங்கள், நாகங்கள் {யானைகள்}, கழுதைகள், ஒட்டகங்கள், பன்னகங்கள், துரகங்கள் {குதிரைகள்}, முதலைகள், வராஹங்கள் {பன்றிகள்}, அதேபோல, பிசாசு முகங்களைக் கொண்டவை {விலங்குகள்},(40) ஆகியவற்றை இரு கைகளாலும் இறுகத் தழுவியபடி சிலர் அசைவற்று நிமிர்ந்து நின்றனர். மேலும், தேவர்களின் சஸ்திரங்களால் {ஆயுதங்களால்} பிளக்கப்பட்ட நிசாசரர்கள் {இரவுலாவிகள்} மடிந்தனர்.(41) மஹீதலத்தில் கொல்லப்பட்டவர்களும், மதம் பிடித்தவர்களுமான ராக்ஷசர்களின் அந்தப் போர்க்களக் கலக்க நிலை, சித்திர கர்மம் போல் {ஓவிய வேலைப்பாடு போல்} காட்சியளித்தது.(42) சோணிதத்தை {ரத்தத்தை} நீராகப் பெருக்குவதும், கங்கங்கள், கிருத்ரங்களால் {கங்கப் பறவைகளாலும், கழுகுகளாலும்} சூழப்பட்டதும், சஸ்திரங்களையே {ஆயுதங்களையே} முதலைகளாகக் கொண்டதுமான ஒரு நதி போர்க்களத்தின் முகப்பில் தோன்றியது.(43)
இதற்கிடையில், குரோதமடைந்தவனும், பிரதாபவானுமான தசக்ரீவன், தைவதங்களால் {தேவர்களால்} அந்த பலம் முழுவதும் {தன்னுடைய ராக்ஷசப் படை முழுவதும்} வீழ்த்தப்பட்டதை உற்று நோக்கினான்.(44) அவன் {ராவணன்}, அதை நோக்கி {தேவர்களின் படையை நோக்கிப்} பெருகி வளர்ந்த சைனிய சாகரத்திற்குள் வேகமாகப் புகுந்து, போர்க்களத்தில் திரிதசர்களை {முப்பத்து முக்கோடி தேவர்களைக்} கொன்றபடியே, சக்ரனையே {இந்திரனையே} நோக்கி முன்னேறினான்.(45) எதன் நாணொலி கோஷத்தால், பத்துத் திசைகளும் அதிருமோ, அந்த மஹத்தான சாபத்தை {வில்லை} வளைத்து, {நாணொலியின்} மஹாஸ்வனத்தை எழுப்பியபடியே சக்ரன் வந்தான் {இந்திரன், ராவணனை எதிர்த்துப் போர்க்களத்திற்குள் வந்தான்}.(46) அந்த மஹத்தான சாபத்தை {பெரும் வில்லை} நன்றாக இழுத்த இந்திரன், ராவணனின் தலை மீது, பாவகனையும், ஆதித்யனையும் {அக்னியையும், சூரியனையும்} போல் ஒளிமிக்க சரங்களைப் பொழிந்தான்.(47) அதேபோல், {அஞ்சாமல்} களத்தில் நின்றவனும், பெருந்தோள்களைக் கொண்டவனுமான தசக்ரீவன், தன் கார்முகத்தில் {வில்லில்} இருந்து ஏவப்பட்ட சரவர்ஷத்தால் {கணைமாரியால்} சக்ரனை {இந்திரனை} மறைத்தான்.(48) பிறகு, அவ்விருவரும் நாலாபுறமும் பாண வர்ஷங்களால் {கணைமழைகளால்} போரிட்டுக் கொண்டிருந்தபோது, எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. அனைத்தும் இருளால் சூழப்பட்டிருந்தது.(49)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 028ல் உள்ள சுலோகங்கள்: 49
| Previous | | Sanskrit | | English | | Next |
