The birth of Ravana | Sarga-009 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுமாலியின் மகளான கைகசிக்கு தசக்ரீவன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகியோர் பிறந்தது; கோகர்ணத்தில் அவர்கள் தபம் செய்தது...
சிறிது காலத்திற்குப் பிறகு சுமாலி என்ற நாமத்தைக் கொண்ட {பெயருடைய} ராக்ஷசன், ரசாதலத்திலிருந்து வந்து சர்வ மர்த்யலோகத்திலும் {மனிதர்களின் உலகம் முழுவதும்} அலைந்து திரிந்தான்.(1) அவன் நீல மேகத்தைப் போலத் தோற்றமளித்தான், தப்த காஞ்சனத்தாலான {புடம்போட்ட பொன்னாலான} குண்டலங்களை அணிந்திருந்தான். பத்மம் இல்லாத ஸ்ரீயை {தாமரை இல்லாத லக்ஷ்மியைப்} போன்ற தன் கன்னிகையை {மகளை} உடன் அழைத்து வந்தான்.(2)



