Saturday, 13 December 2025

மாலி வதம் | சர்க்கம் – 007 (55)

Mali killed | Sarga-007 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களுக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்; மாலி கொல்லப்பட்டது...

Rakshasa Mali attacking Garuda with his mace

நாராயண கிரியில் ராக்ஷச மேகங்கள் கர்ஜித்தன. மேகங்கள் அத்ரியில் வர்ஷிப்பதை {மலையில் மழை பொழிவதைப்} போல {அந்த ராக்ஷசக்கூட்டம் விஷ்ணுவின் மீது} சரங்களை வர்ஷித்தன {கணைகளைப் பொழிந்தன}.(1) சியாம {கரிய} நிறத்தவனான அந்த விஷ்ணு, கரிய நிறத்தவரான ராக்ஷசோத்தமர்களால் சூழப்பட்டு, மழைமேகங்களால் சூழப்பட்ட அஞ்சன கிரியை {மைக்குவியலைப்} போல விளங்கினான்.(2)

நெல்வயலில் வெட்டுக்கிளிகளைப் போலவும், பர்வதத்தில் கொசுக்களைப் போலவும், அம்ருதக் குடத்தில் {தேன்குடத்தில்} ஈக்களைப் போலவும், அர்ணவத்தில் {கடலில்} மகரங்களைப் போலவும்,(3) அப்போது ராக்ஷசர்களின் தனுசுகளில் இருந்து ஏவப்பட்டவையும், வஜ்ரத்தையும், அநிலனையும் {இடியையும், காற்றையும்} போன்றவையும், மனோவேகம் கொண்டவையுமான சரங்கள், பிரளய கால உலகங்களை {உலகத்தினர்} போல அந்த ஹரிக்குள் நுழைந்தன.(4) சியந்தனங்களில் {தேர்களில்} சென்றவர்கள் சியந்தனங்களுடனும், கஜங்களின் {யானைகளின்} முதுகில் சென்றவர்கள் கஜங்களுடனும், அஷ்வங்களில் {குதிரைகளில்} ஏறிச் சென்றவர்கள் அஷ்வங்களுடனும், எஞ்சிய காலாட்படையினரும் அம்பரத்தில் {வானத்தில்} இருந்தனர்[1].(5) கிரி {மலை} போன்ற ராக்ஷசேந்திரர்கள், சரங்கள், சக்திகள் {வேல்கள்}, வாள்கள், தோமரங்கள் ஆகியவற்றால், பிராணாயாமம்[2] செய்யும் துவிஜர்களை {இருபிறப்பாளர்களைப்} போல, ஹரியை மூச்சுவிட முடியாதபடி செய்தனர்.(6) பெருங்கடலில் மீன்களைப் போல நிசாசரர்களால் {இரவுலாவிகளால்} தாக்கப்பட்ட அந்த வெல்வதற்கரியவன் {விஷ்ணு}, தன் சாரங்கத்தை {சாரங்கம் எனும் தன் வில்லை} வளைத்து, ராக்ஷசர்கள் மீது கணைகளை ஏவினான்.(7) பூர்ணமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், வஜ்ரம்போன்றவையும், மனோவேகம் கொண்டவையுமான சரங்களை எய்த விஷ்ணு, தன் கூர்மையான கணைகளால் அவர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வெட்டினான்.(8)

[1] இந்த சர்க்கத்தின் 49ம் சுலோகம் ராக்ஷசர்கள் வானத்தில் இருந்து போரிட்டதை மீண்டும் சொல்கிறது.

[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, இறுதியில் அதை நிறுத்தும் ஒரு பயிற்சியாகும். இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் இந்தியாவின் யோகியர், இதில் அற்புதமான ஆற்றல்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர்" என்றிருக்கிறது. விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "யோகம் எட்டு அங்கங்களைக் கொண்டதாகும். அவை, இயமம் (கட்டுப்பாடு), நியமம் (சடங்குகள்), ஆசனம் (உடற்பயிற்சி நிலைகள்), பிராணயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு), பிரத்யஹாரம் (புலன்களில் இருந்து விலகுதல்), தாரணை (ஒருமுகப்படுத்துதல்), தியானம் மற்றும் சமாதி (விடுதலை) என்பனவாகும்" என்றிருக்கிறது.

அந்தப் புருஷோத்தமன், மழையுடன் கூடிய வாயுவை {காற்றைப்} போல அவர்களை சரவர்ஷத்தால் {கணைமழையால்} விரட்டிவிட்டு, பாஞ்சஜன்யம்[3] என்ற மஹாசங்கத்தை {பெரும் சங்கை} எடுத்து முழக்கினான்.(9) சங்குகளின் ராஜாவான அந்த அம்புஜத்தை {நீரில் பிறந்த சங்கை}, ஹரி சர்வ பிராணனுடன் {முழு மூச்சுடன்}  ஊதிய போது, மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்யும் பயங்கரமான ஒலி எழுந்தது.(10) ஆரண்யத்தில் குஞ்சரங்கள் மிருகராஜனின் {காட்டில் யானைகள் சிங்கத்தின்} ஒலியைக் கேட்டது போல, சங்குராஜாவின் {பாஞ்சஜன்யத்தின்} பேரொலி ராக்ஷசர்களை அச்சுறுத்தியது.(11) அந்த சங்கொலியால் அஷ்வங்கள் {குதிரைகள்} நிற்க முடியாதனவாகவும், குஞ்சரங்கள் {யானைகள்} மதம் இழந்தனவாகவும், சியந்தனங்களில் இருந்த வீரர்கள் பலமிழந்தவர்களாகவும் ஆகினர்.(12)

[3] கிருஷ்ணன், தன் குருவான சாந்தீபினியின் மகனை மீட்கும் முயற்சியில் பஞ்சனன் என்ற அசுரனைக் கொன்றதன் மூலம் பாஞ்சஜன்யம் என்ற சங்கு அவனுக்குக் கிடைத்ததாக ஹரிவம்சம், விஷ்ணு பர்வம், 33ம் அத்தியாயம், 17ம் சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. "அசுரன் பஞ்சனன், சங்கின் வடிவில் வந்து சாந்தீபனியின் மகனை விழுங்கியதாக பாகவதத்தில் குறிப்பிடப்படுகிறது. இயல்பில் சங்காக இருந்த அந்த அசுரனே இறந்த பின்னர் பாஞ்சஜன்யம் என்று கொண்டாடப்பட்ட சங்கானான்" என்ற அடிக்குறிப்பும் அங்கே இருக்கிறது. எனில், பஞ்சனன் பாஞ்சஜன்யம் என்ற சங்காக மாறியது துவாபர யுகத்தில் என்றாகிறது. இங்கே சொல்லப்படுவதோ, துவாபர யுகத்தில் நேர்ந்த கிருஷ்ணாவதாரத்திற்கும், ஏன் திரேதா யுகத்தில் நேர்ந்த ராமாவதாரத்திற்கும் முன்பே, விஷ்ணுவுக்கும் ராக்ஷசர்களுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்த விவரிப்பாகும். பெரும் யுக வேறுபாடே தென்படுகிறது. ஒன்று விஷ்ணுவின் பாஞ்சஜன்யமும், கிருஷ்ணனின் பாஞ்சஜன்யமும் வெவ்வேறானவையாக இருக்க வேண்டும். அல்லது, உத்தர ராமாயணத்தில் இது போன்ற சில பகுதிகளோ, முழு உத்தர ராமாயணமோ கிருஷ்ணாவதாரத்திற்குப் பின்னர் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு முன் வந்த சர்க்கங்களிலும் கூட ஆங்காங்கே ஜனார்த்தனன், புருஷோத்தமன் உள்ளிட்ட கிருஷ்ணனின் பெயர்கள் விஷ்ணுவுக்குச் சூட்டப்படுவதிலும் இதை உணரலாம். இந்தப் பெயர்கள் மஹாபாரத யுத்தத்திற்குப் பிறகு, அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மர், யுதிஷ்டிரனுக்குச் சொன்ன சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் பெயர்களாக பட்டியலிடப்படுகின்றன. விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லப்படும் மஹாபாரதம், அநுசாஸன பர்வம், 149ம் பகுதியில் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதியின் இறுதியில் 135 சுலோகத்தில், "தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது" என்று பீஷ்மர் சொல்கிறார். அவர் கிருஷ்ணனையே விஷ்ணுவாகக் உணர்ந்தவர்.

சாரங்கம் என்ற சாபத்தில் {வில்லில்} இருந்து ஏவப்பட்டவையும், வஜ்ரத்திற்குத் துல்லியமானவையும், நல்ல புங்கங்களைக் கொண்டவையுமான சரங்கள், ராக்ஷசர்களைத் துளைத்துச் சென்று க்ஷிதிக்குள் {பூமிக்குள்} புகுந்தன.(13) போரில் நாராயணனின் கரங்களில் இருந்து பாய்ந்த சரங்களால் தாக்கப்பட்ட ராக்ஷசர்கள், வஜ்ரத்தால் சைலங்களை {இடியால் தாக்கப்பட்ட மலைகளைப்} போல பூமியில் விழுந்தனர்.(14) அசலங்களில் {மலைகளில்} சுவர்ணத் தாரைகளைப் போல, விஷ்ணுவின் சக்கரத்தால் புண்ணான அவர்களின் உடல்களில் இருந்து உதிரத் தாரைகள் பெருகின.(15) சங்குராஜாவின் {பாஞ்சஜன்யத்தின்} ஒலியும், சாரங்க சாபத்தின் {வில்லின்} ஒலியும் கேட்கப்பட்டன. வைஷ்ணவ {விஷ்ணுவின் அட்டஹாச} ஒலி ராக்ஷசர்களின் ஒலியை விழுங்கியது {அடக்கியது}.(16) அவர்களின் சிரங்கள் {தலைகள்}, கைகள், துவஜங்கள்,  தனுசுகள், ரதங்களின் பதாகைகள், தூணிகள் ஆகியவற்றை ஹரி தன் சரங்களால் வெட்டி வீழ்த்தினான்.(17) சூரியனின் கரங்களை {கதிர்களைப்} போலவும், சாகரத்தின் கோர அலைகளைப் போலவும், பர்வதத்தின் நாகங்களை {பாம்புகளைப்} போலவும், மேகங்களில் இருந்து வரும் தாரைகளைப் போலவும்,(18) நாராயணனின் சாரங்கத்தில் இருந்து ஏவப்பட்ட சரங்கள், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வேகமாகப் பாய்ந்து சென்றன.(19)

சரபத்தால்[4] சிம்ஹங்கள் {சிங்கங்கள்} எப்படியோ, சிம்ஹத்தால் துவிரதங்கள் {யானைகள்} எப்படியோ, துவிரதத்தால் {யானையால்} புலிகள் எப்படியோ, புலியால் சிறுத்தைகள் எப்படியோ,(20) சிறுத்தையால் நாய்கள் எப்படியோ, நாயால் பூனைகள் எப்படியோ, பூனையால் சர்ப்பங்கள் {பாம்புகள்} எப்படியோ, சர்ப்பத்தால் எலிகள் எப்படியோ,(21) அப்படியே அந்த ராக்ஷசர்கள் அனைவரும் விஷ்ணு பிரபுவான {சர்வ வல்லமையுள்ள தலைவனான} விஷ்ணுவால் வீழ்த்தப்பட்டனர். அப்படி வீழ்த்தப்பட்டவர்களில் பலர் மஹீதலத்தில் கிடந்தனர்.(22) மதுசூதனன் {மது என்ற அசுரனைக் கொன்றவனான விஷ்ணு}, ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களைக் கொன்றான். மேகத்தை நீரால் {நிரப்பும்} ஸுரராட்டை {தேவர்களின் ராஜாவான இந்திரனைப்} போல அவன் சங்கை {வெற்றி முழக்கத்தால்} நிரப்பினான்.(23) நாராயணனின் சரங்களுக்கு அஞ்சியும், சங்கொலிக்கு நடுங்கியும் வீழ்த்தப்பட்ட அந்த ராக்ஷச பலம் {படை} லங்கையை நோக்கி ஓடியது.(24) 

[4] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சரபம் என்பது புராணகால விலங்காகும். இதைக் குறித்த கருத்துகள் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன. எட்டுக் கால்களைக் கொண்டதும், மலைகளில் வாழ்வதுமான சரபம், சிங்கத்தைக் கொல்லக்கூடியதாகும். இது மாமிசம் உண்டு வாழும் விலங்காகும்" என்றிருக்கிறது.

நாராயணனின் சரங்களால் தாக்கப்பட்ட ராக்ஷசபலம் பங்கமடைந்தபோது {ராக்ஷசப்படை தோற்றோடியபோது}, ரணத்தில் சுமாலி தன் சரவர்ஷத்தால் {கணைமழையால்} ஹரியைத் தடுத்து நிறுத்தினான்.(25) பாஸ்கரனை {சூரியனை} மூடுபனி போல, அவன் அவனை மறைத்தபோது, வலிமைமிக்க ராக்ஷசர்கள் மீண்டும் தைரியத்தை அடைந்தனர்.(26) பலத்தில் செருக்கடைந்த ராக்ஷசன் {சுமாலி}, ரோஷத்துடன் அவனை {விஷ்ணுவைத்} தாக்கிவிட்டு, ராக்ஷசர்களை உயிர்ப்பிப்பது போன்ற மஹாநாதத்தை {பேரொலியை} எழுப்பினான்.(27) ஒரு துவீபம் {யானை} தன் துதிக்கையை {அசைப்பதைப்} போல, அவன் ஆபரணங்களுடன் கூடிய தன் கரத்தை உயர்த்தி அசைத்தான். மின்னலுடன் கூடிய மேகத்தைப் போல, அந்த ராக்ஷசன் மகிழ்ச்சி முழக்கம் செய்தான்.(28) முழக்கமிடும் சுமாலியின் ரதஸ்தனுடைய {தேர்ப்பாகனுடைய} குண்டலங்களுடன் ஜுவலிக்கும் சிரத்தை அவன் {தலையை விஷ்ணு} வெட்டினான். அந்த ராக்ஷசனின் அஷ்வங்கள் {குதிரைகள்} கலக்கமடைந்தன.(29) இந்திரியங்களெனும் அஷ்வங்கள் {புலன்களெனும் குதிரைகள்} கலக்கமடைந்தால் பொறுமையிழக்கும் நரர்களை {மனிதர்களைப்} போல, ராக்ஷசேஷ்வரனான சுமாலி, கலக்கமடைந்த அஷ்வங்களால் நிலைகெட்டுத் திரிந்தான்.(30)

அஷ்வங்களால் சுமாலியின் ரதம், விஷ்ணுவின் ரதத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட போது, அவன் மஹாபாஹுவான விஷ்ணுவைப் போர்க்களத்தில் கண்டான்.(31) அப்போது, அங்கே மாலி சரங்களையும், தனுசையும் எடுத்துக் கொண்டு முன்னேறி வந்தான். மாலியின் தனுசில் இருந்து ஏவப்பட்ட பாணங்கள், சிறந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை கிரௌஞ்சத்தில் பத்ரரதங்களை {கிரௌஞ்ச மலையில் பறவைகளைப்} போல ஹரியை அடைந்து மறைந்தன.(32) மாலி ஏவிய ஆயிரக்கணக்கான சரங்களால் தாக்கப்பட்ட விஷ்ணு, துன்பங்களில் இந்திரியங்களை வென்ற ஒருவனைப் போல ரணத்தில் {போர்க்களத்தில்} அசைந்தானில்லை.(33) 

பூதபாவனனான {உயிரினங்கள் அனைத்தையும் படைப்பவனான} பகவான், மௌர்வீ ஸ்வனத்தை {மாலி எழுப்பிய நாணொலியைக்} கேட்டான். அந்த அரிநிசூதனன் {பகைவரை முற்றாக அழிப்பவனான விஷ்ணு}, மாலியின் மீது பாண ஓகங்களை {கணை வெள்ளத்தை} ஏவினான்.(34) வஜ்ரம், மின்னல் ஆகியவற்றின் பிரபையுடன் கூடிய சரங்கள் அந்த மாலியின் தேகத்தை அடைந்தன. ஸுதாரஸம் {அமுதம்} பருகும் நாகங்களை {பாம்புகளைப்} போல, அவை அவனது உதிரத்தைப் பருகின.(35) சங்கு சக்கர கதாதாரி {விஷ்ணு}, மாலியை முகம்திரும்ப {புறமுதுகிடச்} செய்தான். மாலியின் மௌலி {மகுடம்}, துவஜம் {கொடிமரம்}, சாபம் {வில்}, வாஜிகள் {குதிரைகள்} ஆகியவற்றை வெட்டி வீழ்த்தினான்.(36) இரதமிழந்து, கதையை {கதாயுதத்தை} எடுத்துக் கொண்ட நக்தஞ்சரோத்தமன் {இரவுலாவிகளில் சிறந்த} மாலி, கிரியின் உச்சியில் இருந்து கேசரியை {மலையுச்சியில் இருந்து குதிக்கும் சிங்கத்தைப்} போலக் கைகளில் கதையுடன் {ரதத்தில் இருந்து} கீழே குதித்தான்.(37) 

அந்தகன் ஈசானனை {யமன் சிவனைத் தாக்கியதைப்} போலத்[5] தன் கதையால் கருடனைத் தாக்கினான். இந்திரன் வஜ்ரத்தால் அசலத்தை {இடியைக் கொண்டு மலையைத் தாக்குவது} எப்படியோ, அப்படியே அவனது நெற்றியில் தாக்கினான்.(38) மாலியின் கதையால் கடுமையாகத் தாக்கப்பட்ட கருடன், வேதனையில் துன்புற்று {விஷ்ணு} தேவனை முகம்திரும்பச் செய்து ரணத்திலிருந்து விலகினான்.(39) கருடனுடன் கூடிய தேவன், மாலியால் முகம் திரும்பச் செய்யப்பட்டதைக் கண்ட ராக்ஷசர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது மஹாசப்தம் எழுந்தது.(40) இராக்ஷசர்கள் எழுப்பும் பேரொலியை ஹரிஹயானுஜன் {இந்திரனின் தம்பியான விஷ்ணு} கேட்டான்.(41) 

[5] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மார்க்கண்டேயனைக் காப்பதற்காக ஸ்வேத வனத்தில் ருத்திரனுக்கும் யமனுக்கும் இடையில் ஒரு போர் நடைபெற்றது. அந்தப் போரில் யமன் ருத்திரனைத் தாக்கினான். இது புராணங்களில் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.

Lord Vishnu fights against Rakshasa Mali

பக்ஷிகளின் தலைவன் {கருடன்} மீதிருந்த பகவான் ஹரி, அவ்வொலியைக் கேட்டுக் கோபமடைந்தான். பிராங்முகத்துடனேயே {திரும்பிய நிலையிலேயே} அவனைக் கொல்லும் நோக்கில் மாலியின் மீது சக்கரத்தை ஏவினான்.(42) ஒளிரும் சூரிய மண்டலம் போல் தன்னொளியால் ஒளிர்வதும், காலசக்கரத்திற்கு ஒப்பானதுமான அந்தச் சக்கரம் மாலியின் சிரத்தை வீழ்த்தியது[6].(43) பூர்வத்தில் ராகுவின் சிரம் எப்படியோ, அப்படியே சக்கரத்தால் வெட்டப்பட்ட ராக்ஷசேந்திரனின் அந்த சிரம், உதிரம் பெருக்கியபடியே பயங்கரமாக விழுந்தது.(44) அப்போது பெரிதும் மகிழ்ச்சியடைந்த ஸுரர்கள் {தேவர்கள்}, தங்கள் சர்வ பிராணனையும் {மூச்சையும்} திரட்டி, "சாது {நல்லது}, தேவா" என்று சொல்லி சிம்ஹநாதம் செய்தனர்.(45)

[6] மார்பின் நின்று உதிர ஆறு மண்டிட
மயங்கி ஒல்லையின் உணர்ந்து தன்
தேரின் நின்றும் இழியக் குதித்து
வெகுள்சிங்கம் ஆமென முழங்கி வெம்
காரினின்று இடி விழுந்தெனச் சுரர்
கலங்கிடக் கலுழன் நெற்றிமேல்
மூரி நின்றதொரு தண்டு கொண்டு அதிர
மோதினான் அசுபம் மோதினான்.(161)

நெற்றிமேல் அடிபடத் தளர்ந்து நிலை
நின்ற வீரன் நிலைகண்டு மால்
வெற்றி நேமியை விடுப்ப மற்றது 
விளங்கும் ஆறு இருவர் அன்றியும்
மற்றுமோர் இரவி உண்டு எனக் கதுவ 
மாலிதன் சிரம் அடிக்கழுத்து
அற்றுவிழ அது கண்டு வானவர்கள் 
ஆடினர் நிருதர் வாடினர்.(162)

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 161, 162ம் பாடல்கள், இலங்கை அழித்த படலம்

பொருள்: {விஷ்ணுவின் சரங்களால் தாக்கப்பட்ட} மார்பிலிருந்து ரத்த ஆறு பெருக, மயக்கமுற்ற பிறகு, விரைவில் உணர்ச்சி பெற்றுத் தன் தேரில் இருந்து கீழே குதித்து, வெகுண்டெழும் சிங்கம் போல முழக்கமிட்டு, மேகத்திலிருந்து இடி விழுந்ததென தேவர்கள் கலங்கிட, கலுழன் {கருடன்} நெற்றியில் வலிமைமிக்க தண்டாயுதத்தைக் கொண்டு அதிர்ச்சியுறுமாறு மோதினான் {மாலி}.(161) நெற்றிமேல் அடிபடத் தளர்ந்து நின்ற வீரனின் {கருடனின்} நிலை கண்ட மால் {விஷ்ணு}, வெற்றியைத் தரும் தன் நேமியை {சக்கராயுதத்தை} ஏவ, உலகத்தில் ஒளிவீசி விளங்கும் பன்னிரு ஆதித்தியரும் அல்லாமல் மற்றொரு சூரியன் உண்டு எனும்படி ஒளிவீசிச் சென்று பற்றுகையில் மாலியின் தலை அடிக்கழுத்தோடு அற்றுத் தரையில் விழுந்தது. அதைக் கண்டு தேவர்கள் மகிழ்ச்சியில் ஆடினர். அரக்கர்கள் மனம் வாடினர்.(162)

சுமாலியும், மால்யவானும் மாலி கொல்லப்பட்டதைக் கண்டனர். சோகத்தில் மூழ்கிய அவ்விருவரும், தங்கள் பலத்துடன் {படையுடன்} லங்கையை நோக்கி ஓடினர்.(46) கருடனும் துன்பத்தில் இருந்து விடுபட்டவனாக முன்பு இருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று, கோபத்துடன் கூடியவனாகத் தன் சிறகுகளில் எழுந்த வாதத்தால் {பெருங்காற்றால்} ராக்ஷசர்களை விரட்டினான்.(47) அவர்களது முகங்கள் கமலம் போல் சக்கரத்தால் வெட்டப்பட்டிருந்தன. அவர்களது மார்பு கதையினால் {கதாயுதத்தால்} சூர்ணமாக்கப்பட்டிருந்தன. அவர்களின் கழுத்துகள் லாங்கலத்தால் {கொழுமுனையால்} வெட்டப்பட்டிருந்தன. அவர்களின் தலைகள் முசலங்களால் {உலக்கைகளால்} பிளக்கப்பட்டிருந்தன.(48) சிலர் வாளால் வெட்டப்பட்டனர், வேறு சிலர் சரங்களால் பீடிக்கப்பட்டனர். இராக்ஷசர்கள் விரைவாக அம்பரத்தில் இருந்து சாகரத்தின் நீரில் விழுந்தனர்.(49)

நாராயணன், மின்னல்களுடன் கூடிய மேகங்கள் அசனிகளை {இடிகளை} ஏவுவதைப் போல, தன் தனுசில் இருந்து ஏவப்பட்டவையும், அசனிக்கு {இடிக்கு} ஒப்பானவையுமான கூர்மையான பாணங்களால், கலைந்த கேசங்களுடன் கூடிய நக்தஞ்சரர்களை {இரவுலாவிகளைத்} தாக்கினான்.(50) தங்கள் குடைகள் முறிந்து, அஸ்திரங்கள் {ஆயுதங்கள்} நழுவி விழுந்த அவர்கள், சரங்களால் பிளக்கப்பட்டு அடக்கமான வேஷத்தைத் தரித்தனர். அவர்களது குடல்கள் வெளிப்பட்டன. அவர்களின் கண்கள் பயத்தால் உருண்டன. அந்த பலம் {படை} கலக்கமடைந்தது.(51) சிங்கத்தால் துன்புறும் குஞ்சரங்களை {யானைகளைப்} போல, புராண கால சிங்கத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு[7] சமமாக ஓலமிட்டபடியே நிசாசரர்கள் தங்கள் குஞ்சரங்களுடன் {இரவுலாவிகளான ராக்ஷசர்கள் தங்கள் யானைகளுடன்} ஓடிச்சென்றனர்.(52) 

[7] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்னொரு காலத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணு, அசுர அரசனான ஹிரண்யகசிபுவின் அகந்தையை அடக்கி அவனை வதம் செய்தான். அதன் மூலம், தந்தையின் வடிவில் இருந்த கொடிய பகைவனிடமிருந்து தன் பக்தனான பிரகலாதனை அவன் விடுவித்தான்" என்றிருக்கிறது.

ஹரியின் பாணஜாலங்களால் தடுக்கப்பட்டபோது, பதிலுக்கு பாணஜாலங்களைப் பொழிந்த நக்தஞ்சர காலமேகம் {இரவுலாவிகளாலான கரிய மேகம் போன்ற அந்த ராக்ஷசப் படை}, வாயுவால் சிதறடிக்கப்பட்ட காலமேகத்தைப் போல ஓடிச் சென்றது.(53) சக்கரத்தால் வெட்டப்பட்ட சிரங்களுடனும் {தலைகளுடனும்}, கதையால் {கதாயுதத்தால்} தாக்கப்பட்டு சூர்ணமான அங்கங்களுடனும், வாளால் இரண்டாக வெட்டப்பட்ட உடல்களுடனும் கூடிய அந்த ராக்ஷசேந்திரர்கள், பிளவுண்ட சைலங்களை {மலைகளைப்} போலக் கீழே விழுந்தனர்.(54) {கழுத்தில்} மணிஹாரங்களும், {காதில்} குண்டலங்களும் தொங்க நீலமேகங்களுக்கு {கரிய மேகங்களுக்கு} ஒப்பான நிசாசரர்கள் ஓயாமால் தாக்கப்பட்டுக் கீழே விழுவது, நீல பர்வதங்கள் {கரிய மலைகளை} கீழே விழுவதைப் போலத் தெரிந்தது.(55)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 007ல் உள்ள சுலோகங்கள்: 55

Previous | Sanskrit | English | Next