Tuesday, 16 December 2025

பாதாள லோகம் | சர்க்கம் – 008 (29)

The nether world | Sarga-008 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மால்யவான் செய்த போரும், அவனது தோல்வியும்; சுமாலியும், ராக்ஷசர்கள் பிறரும் பாதாள லோகத்திற்குள் பின்வாங்கிச் சென்றது...

Rakshasas enter Patala and Kubera enters Lanka in his pushupaka vimana

பலம் {படை} வதைக்கப்படும்போது, பத்மநாபன் அவர்களைப் பின்தொடர்ந்தான். வேலத்தை அடைந்த ஆர்ணவத்தை {கரையை அடைந்த கடலைப்} போல மால்யவான் திரும்பிவந்தான்.(1) நிசாசரனின் மௌலி {கிரீடம்} கோபத்தில் அசைந்தது; அவனது நயனங்கள் {கண்கள்} சிவந்தன. அவன் புருஷோத்தமனான பத்மநாபனிடம் இந்த வசனத்தைக் கூறினான்:(2) "நாராயணா, புராதன க்ஷாத்ரதர்மத்தை {தொன்மையான க்ஷத்திரிய அறத்தை} நீ அறிந்தாயில்லை. யுத்தம் செய்ய மனமில்லாமல் பீதியுடன் ஓடும் எங்களை நீ கொல்கிறாய்.(3) ஓர் அசுரனைத் தவிர வேறு எவனும், பராங்முக வதம் என்ற {பாரா முகத்தினராய் ஓடிச் செல்பவர்களைக் கொல்லும்} பாபத்தைச் செய்தால், அந்தக் கொலையாளி, புண்ணிய கர்மங்களைச் செய்வோர் அடையும் ஸ்வர்க்கத்திற்குச் செல்லமாட்டான்.(4) சங்கு சக்கர கதாதரா, உனக்கு யுத்தத்தில் சிரத்தையுண்டானால், இதோ நான் நிற்கிறேன். உன் பலத்தை என்னிடம் காட்டுவாயாக" {என்றான் மாலியவான்}.(5)

மால்யவந்தம் என்ற அசலத்தை {மலையைப்} போல மால்யவந்தன் {மால்யவான்} நிற்பதைக் கண்டு, பலவானான தேவராஜானுஜன் {இந்திரனின் தம்பியான விஷ்ணு}, அந்த ராக்ஷசேந்திரனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(6) "உங்களிடம் கொண்ட பயம், பீதியிலிருந்து தேவர்களுக்கு நான் அபயம் அளித்தேன். இராக்ஷசர்களின் அழிவை {அவர்களுக்கு வரமாக} தத்தம் செய்தேன். அதுவே இப்போது பாலிக்கப்படுகிறது {கடைப்பிடிக்கப்படுகிறது}.(7) நான் சதா என் பிராணன்களைக் கொண்டு தேவர்களின் பிரிய காரியத்தை செய்து வருகிறேன். எனவே, நீ ரசாதலத்தில் இருந்தாலும் உன்னைக் கொல்வேன்" {என்றான் விஷ்ணு}[1].(8)

[1] தடந்தோள் நிருதன் கூறிடத்
தாமோதரன் மொழிவான்
உடைந்து ஓடி உமக்கு அஞ்சி
ஒளித்து உம்பர்கள் எனைமுன்பு
அடைந்தோர்களுக்கு அமர்அஞ்சி
அழிந்து ஓடினும் உமைநான்
தொடர்ந்து கொல முன்னே வரம்
கொடுத்தேன் எனச் சொன்னான்.

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 172ம் பாடல்கள், இலங்கை அழித்த படலம்

பொருள்: பெரும் தோள்களைக் கொண்ட ராக்ஷசன் {மால்யவான்} இவ்வாறு கூறிட தாமோதரன் {விஷ்ணு} மொழிந்தான், "உங்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்த தேவர்கள் என்னிடம் வந்தபோது நான் அவர்களிடம், "போருக்கு அஞ்சி தோற்று ஓடினாலும் உங்களைத் தொடர்ந்து வந்து கொல்ல" முன்னமே வரம் கொடுத்தேன்" எனச் சொன்னான்.

தாமரை போன்று சிவந்த கண்களுடன் தேவதேவன் பேசிக் கொண்டிருந்தபோது, குரோதமடைந்த ராக்ஷசேந்திரன், தன் கைக்கு இடையில் இருந்த சக்தியால் {வேல் ஆயுதத்தால்} அவனைத் துளைத்தான்.(9) மால்யவானின் கையிலிருந்து விடுபட்ட சக்தி மணியோசை எழுப்பிக் கொண்டே சென்று மேகத்தில் மின்னலைப்போல ஹரியின் மார்பில் பிரகாசித்தது.(10) சக்தி தரித்தவனிடம் {வேலாயுதம் தரித்த முருகனிடம்} பிரியம் கொண்டவன், அந்த சக்தியைப் பிடுங்கி எடுத்தான். தாமரைக் கண்களைக் கொண்ட அவன், அதை மால்யவந்தன் மீது வீசினான்.(11) ஸ்கந்தனால் {முருகனால்} ஏவப்பட்டதைப் போல, கோவிந்தனின் கையில் இருந்து வெளிப்பட்ட அந்த சக்தி, அஞ்ஜன அசலத்தின் மீது மாஹேந்திரியைப் போல {அஞ்சன மலையின் மீது மஹேந்திரனின் வஜ்ரத்தைப் போல} அந்த ராக்ஷசனைத் தாக்கியது.(12) 

ஹாரங்களால் ஒளிரும் அந்த ராக்ஷசேந்திரனின் விஸ்தீர்ணமான மார்பில், கிரிகூடத்தில் அசனியைப் போல அது விழுந்தது {மலைச்சிகரத்தில் இடியைப் போல அந்த சக்தி ஆயுதம் விழுந்தது}.(13) அஃது {கவசத்தைப் பிளந்து} உடலைத் துளைத்ததும் அவன் பரந்த இருளில் மூழ்கினான் {மயக்கமடைந்தான்}. ஆசுவாசமடைந்த பிறகு மால்யவான், மீண்டும் ஒரு கிரியைப் போல அசையாமல் நின்றான்.(14) பிறகு அவன் ஏராளமான முட்களைக் கொண்டதும், கரிய இரும்பாலானதுமான ஒரு சூலத்தை எடுத்து அந்த தேவனின் {விஷ்ணுவின்} நடுமார்பில் திடமாகத் தாக்கினான்.(15) பிறகு ரணரக்தனான அந்த நிசாசரன் {போரிடும் விருப்பம் கொண்டவனும், இரவுலாவியுமான மால்யவான்}, வாசவானுஜனை {இந்திரனின் தம்பியான விஷ்ணுவை} முஷ்டியால் தாக்கிவிட்டு ஒரு தனு மாத்திர {வில்லளவு} தூரம் நகர்ந்து சென்றான்.(16)

அப்போது அம்பரத்தில் {வானத்தில்}, "சாது, சாது {நன்று, நல்லது}" என்ற மஹாசப்தம் எழுந்தது. அந்த ராக்ஷசன் விஷ்ணுவைத் தாக்கிய பின் கருடனையும் தாக்கினான்.(17) வைனதேயன் {வினதையின் மகனான கருடன்} குரோதமடைந்து, ராக்ஷசனை நோக்கித் தன் சிறகுகளின் காற்றை வீசியபோது, பலவானான வாயு உலர்ந்த இலைக்குவியலைப் போல அவனை அடித்துச் சென்றான்.(18) துவிஜேந்திரனின் பக்ஷவாதத்தால் தன் பூர்வஜன் {பறவைகளின் மன்னனுடைய சிறகுகள் உண்டாக்கிய காற்றால் தன் அண்ணன் மால்யவான்} விரட்டப்பட்டதைக் கண்ட சுமாலி, தன் பலத்துடன் {படையுடன்} சேர்ந்து லங்கையை நோக்கிச் சென்றான்.(19) பக்ஷவாதபலத்தால் அடித்துச் செல்லப்பட்ட ராக்ஷசன் மால்யவான், அவமானத்தால் சூழப்பட்டவனாகத் தன் பலத்துடன் {படையுடன்} சேர்ந்து லங்கைக்குச் சென்றான்.(20)

கமலக்கண்ணா {தாமரை போன்ற கண்களைக் கொண்ட ராமா}, இவ்வாறே அந்த ராக்ஷசன், அந்த ஹரியால் வீழ்த்தப்பட்டான். சிறந்த நாயகர்கள் பலர் போரில் தாக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டனர்.(21) விஷ்ணுவிடம் கொண்ட பயத்தால் எதிர்த்துப் போரிடாமல் இருந்த அவர்கள், தங்கள் பத்தினிகளுடன் சேர்ந்து லங்கையை விட்டு வெளியேறி பாதாளத்தை அடைந்தனர்.(22) இரகுக்களில் சிறந்தவனே {ராமா}, சாலகடங்கடா {சாலகடங்கடை} வம்சத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்களுமான அவர்கள் {ராக்ஷசர்கள்}, ராக்ஷசன் சுமாலியை அண்டி வசித்திருந்தனர்[2].(23)  

[2] விவேக்தேவ்ராய் பதிப்பில், "மால்யவான் கொல்லப்பட்டு விட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை" என்றிருக்கிறது. அதாவது, மால்யவான் இருக்கும்போது ராக்ஷசர்கள் ஏன் சுமாலியை அண்டி வசித்திருந்தனர் என்பதற்கு எந்தக் குறிப்பும் இல்லை. இராவணனின் தாய்வழி தாத்தனான மால்யவான், "சீதையை ராமனிடம் கொடுத்துவிடு" என்று ராவணனுடன் உரையாடுவது யுத்த காண்டம் 35ம் சர்க்கத்தில் சொல்லப்படுகிறது. 

நீ கொன்ற {ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகிய} ராக்ஷசர்கள் பௌலஸ்தியர் என்ற பெயரைக் கொண்டவர்கள். சுமாலி, மால்யவான், மாலி ஆகியோர் அவர்களைக் காட்டிலும் மேன்மையானவர்கள். மஹாபாக்கியவானே {ராமா}, அவர்கள் அனைவரும் ராவணனைக் காட்டிலும் பலம் நிறைந்தவர்கள்.(24) ஸுராரிகளும் {தேவர்களின் பகைவரும்}, தேவகண்டகர்களுமான {தேவர்களுக்கு முட்களைப் போன்றவர்களுமான} அந்த ராக்ஷசர்களை சங்கு, சக்கர, கதை தரித்த நாராயண தேவனைத் தவிர  வேறு எவராலும் கொல்ல முடியாது.(25) நீயே நாராயண தேவன்; நான்கு கைகளைக் கொண்டவன்; சனாதனன்; வெல்லப்பட முடியாத பிரபு; ராக்ஷசர்களைக் கொல்ல உண்டானவன்.(26) பிரஜைகளை {மக்களைப்} படைப்பவன்; தர்மநெறிகளுக்கு நஷ்டம் ஏற்படும்போது, சரணாகதி அடைந்தவர்களிடம் கருணை கொண்டு காக்கவும், தஸ்யுக்களை {திருடர்களை} வதம் செய்யவும் உண்டாகிறாய் {அவதரிக்கிறாய்}.(27)

நராதிபா {மனிதர்களின் தலைவா}, ராக்ஷசர்களின் உற்பத்தி குறித்த சகலத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இரகுக்களில் சிறந்தவனே, ராவணன், அவனது மகன் {இந்திரஜித்} ஆகியோரின் ஜன்மபிரபாவத்தை {பிறப்பு குறித்தும், அவர்களின் ஆற்றல் குறித்தும்} இனி கேட்பாயாக.(28) விஷ்ணு மீது கொண்ட பயத்தால் பீடிக்கப்பட்ட சுமாலி நீண்ட காலம் ரசாதலத்தில் வசித்திருந்தான். அப்போது, பலவானான தனேஷ்வரன் {குபேரன்}, புத்திரப் பௌத்திரர்களுடன் லங்கையை அடைந்து வசித்திருந்தான்[3].(29)

[3] இது 3வது சர்க்கத்தில் சொல்லப்பட்ட நிகழ்வாகும். 


உத்தர ராமாயணம் சர்க்கம் – 008ல் உள்ள சுலோகங்கள்: 29

Previous | Sanskrit | English | Next