Saturday, 29 November 2025

நாராயணன் | சர்க்கம் – 006 (69)

Narayana | Sarga-006 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேவர்களுக்கு ஆலோசனை வழங்கிய சிவன்; விஷ்ணுவின் உதவியை நாடிய தேவர்கள்; தேவலோகத்தை அபகரித்த ராக்ஷசர்கள்; தேவர்களுக்கு உதவ வந்த நாராயணன்...

Vishnu on Garuda with all his weapons

அவர்கள் {ராக்ஷசர்கள்}, தேவர்களையும், தபோதனர்களான ரிஷிகளையும் துன்புறுத்தினர். பயமடைந்த அவர்கள், தேவதேவனான மஹேஷ்வரனிடம் {சிவனிடம்} சரணம் அடைந்தனர் {தஞ்சம் புகுந்தனர்}.(1)

ஜகத்தின் சிருஷ்டிக்கும், அந்தத்திற்கும் கர்த்தாவும், பிறப்பற்றவனும், வெளிப்படாத ரூபம் கொண்டவனும், சர்வலோகங்களுக்கும் ஆதாரமாக இருப்பவனும், வணங்கத்தக்க பரம குருவும்,(2) காமாரியும் {மன்மதனின் பகைவனும்}, திரிபுராரியும் {திரிபுரங்களின் பகைவனும்}, திரிலோசனனுமான அவனை {முக்கண்ணனுமான சிவனைச்} சந்தித்த தேவர்கள், தங்கள் கைகளைக் கூப்பியவாறு, பயத்தால் தழுதழுத்த குரலில் {பின்வருமாறு} மொழிந்தனர்:(3) "பகவானே, சுகேசனின் புத்திரர்கள் பிதாமஹரிடம் {பிரம்மரிடம்} இருந்து பெற்ற வரங்களால் செருக்கில் வளர்ந்திருக்கின்றனர். பிரஜாதியக்ஷரே {மக்களின் தலைவரே}, ரிபுக்களை {பகைவரை} அடக்குவதற்காக அவர்களால் சர்வ பிரஜைகளும் {மக்கள் அனைவரும்} துன்புறுத்தப்படுகின்றனர்.(4) 

சரண்யர்களின் சரண்யங்களாக {அடைக்கலம் நாடி வருவோருக்கு அடைக்கலம் தரும் இடமாகத்} திகழ்ந்த எங்கள் ஆசிரமங்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் தேவர்களை ஸ்வர்க்கத்தில் இருந்து விரட்டிவிட்டு, தாங்களே தேவர்களைப் போல ஸ்வர்க்கத்தில் விளையாடுகின்றனர்.(5) "நானே விஷ்ணு, நானே ருத்ரன், நானே பிரம்மா, நானே தேவராஜன், நானே யமன், நானே வருணன், நானே சந்திரன், நானே ரவி {சூரியன்}",(6) என்று சொல்லும் ராக்ஷசர்களான மால்யவானும், சுமாலியும், மாலியும், சமரில் செருக்கடைந்தவர்களாக அவர்களுக்கு முன்னால் வருபவர்களும் {எங்களுக்கு} இடையூறு செய்கின்றனர். எனவே, பயம் அடைந்தவர்களான எங்களுக்கு அபயம் அளிப்பீராக.(7) அசிவமான[1] வபுவை ஏற்று {மங்கலமற்ற பயங்கர வடிவை ஏற்று}, தேவகண்டகர்களான {தேவர்களுக்கு முள்ளாகத் திகழும்} அவர்களைக் கொல்வீராக.(8) அவர்களும், அவர்களுக்கு முன்னால் வருபவர்களும் சமரில் செருக்கடைந்தவர்களாக இருக்கின்றனர்" {என்றனர்}.

[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதற்கான ஒரு காரணம் இருக்கிறது. சிவம் என்றால் மங்கலமானது என்று பொருள். மங்கலமற்றதற்குப் பயன்படுத்தும் சொல் அசிவமாகும்" என்றிருக்கிறது.

இவ்வாறு சர்வ ஸுரர்களாலும் {தேவர்களாலும்} கூறப்பட்டதும், நீலலோஹிதனான கபர்த்தி {செம்பட்டை சடையைக் கொண்டவனான சிவன்}, சுகேசனிடம் கொண்ட அபிமானத்தால் தேவகணங்களிடம் {பின்வருமாறு} கூறினான்:(9) "நான் அவர்களைக் கொல்ல மாட்டேன். ஸுரர்களே {தேவர்களே}, அவர்கள் என்னால் வதைக்கப்படத்தகாதவர்கள்[2]. எவன் அவர்களைக் கொல்வான் என்பதற்கான மந்திரத்தை {ஆலோசனையை} நான் உங்களுக்குக் கொடுப்பேன்.(10) மஹரிஷிகளே, இந்த உத்யோகத்தை முன்வைத்து {சுகேசனின் மகன்களைக் கொல்வதற்கான இந்த முயற்சியை முன்வைத்து}, விஷ்ணுவிடம் நீங்கள் சரணம் அடைவீராக {அடைக்கலம் புகுவீராக}. அந்தப் பிரபு, அவர்களைக் கொல்வான்" {என்றான் சிவன்}.(11)

[2] மூலத்தில் "அஹம் தான்ன ஹநிஷ்யாமி மயாவத்⁴யா ஹி தே ஸுரா꞉" என்றிருக்கிறது. தமிழில், தர்மாலயப் பதிப்பில், "நான் அவர்களை வதைக்கமாட்டேன். ஏனென்றால் அந்த அஸுரர்கள் என்னால் கொல்லத்தகாதவர்கள்" என்றும், ஸ்ரீனிவாசராகவாசாரியர் பதிப்பில், "தேவர்களே, அவ்வரக்கர்களை வதைப்பது என்னாலாகின்ற காரியமன்று" என்றும், கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில்,"(என்னால் காப்பாற்றப்பட்ட சுகேசனின் புதல்வர்களாதலால்,) அவர்களை நான் கொல்லமாட்டேன்" என்றும், ஸுரர் என்றோ அஸுரர் என்றோ ஏதும் குறிப்பிடப்படாமலும் இருக்கிறது, ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "தேவர்களே, நான் அவர்களைக் கொல்ல மாட்டேன்; அவர்கள் என்னால் கொல்லத்தகாதவர்கள்" என்றும், விவேக்தேவ்ராய் பதிப்பில், "நான் அவர்களைக் கொல்ல மாட்டேன். அந்த அஸுரர்கள் என்னால் கொல்லத்தகாதவர்கள்" என்றும், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "இல்லை. நான் இந்த ராக்ஷசர்களை அழிக்கமாட்டேன்; அவர்கள் என்னால் கொல்லத்தகாதவர்கள்" என்றும், கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "இவ்வாறு சொல்லப்படும் அந்த ராக்ஷசர்கள் என் கைகளால் மரணமடைவதிலிருந்து விலக்கு பெற்றவர்கள் என்பதால் நான் அவர்களைக் கொல்ல மாட்டேன்" என்றும் இருக்கிறது. மூலத்தையும் இந்த மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, இந்த வாக்கியம் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. 

பிறகு அவர்கள் ஜயசப்தத்துடன் {வெற்றி முழக்கத்துடன்} மஹேஷ்வரனை வணங்கிவிட்டு, நிசாசரர்களிடம் கொண்ட பயத்தால் அடைந்த வேதனையுடன் விஷ்ணுவின் சமீபத்தை அடைந்தனர்.(12) சங்கு, சக்கரம் ஏந்திய அந்த தேவனை {விஷ்ணுவைப்} பெரும் மதிப்புடன் வணங்கிவிட்டு, குழப்பத்துடன் கூடிய அவர்கள், சுகேச தனயர்கள் குறித்து {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினார்கள்:(13) "தேவா, திரேதாக்னிக்கு ஒப்பான சுகேச தனயர்கள் மூவரும், தாங்கள் பெற்ற வரதானத்தால் செருக்கடைந்து, எங்கள் வசிப்பிடங்களை அபகரித்துக் கொண்டனர்.(14) திரிகூட சிகரத்தில் உள்ள லங்கை என்ற பெயரைக் கொண்ட புரீயின் துர்கத்தில் {கோட்டையில்} இருக்கும் அந்த க்ஷணதாசரர்கள் {ராக்ஷசர்கள்}, எங்கள் அனைவரையும் துன்புறுத்துகின்றனர்.(15) மதுசூதனா, எங்களுக்கு நலம் பயக்க நீ அவர்களைக் கொல்வாயாக. ஸுரேஷ்வரா {தேவர்களின் தலைவா}, நாங்கள் உன் சரணம் அடைந்தோம் {உன்னிடம் அடைக்கலம் புகுந்தோம்}. எங்களுக்குரிய கதியை அளிப்பாயாக.(16) உன் சக்கரத்தைக் கொண்டு, அவர்களின் முகங்களெனும் கமலங்களை {முகத்தாமரைகளை} யமனுக்கு அர்ப்பணிப்பாயாக. பயங்களில் எங்களுக்கு அபயத்தை அளிக்கக்கூடியவன் {ஆபத்துகளில் எங்களின் பயத்தை அகற்றக் கூடியவன்} உன்னைத் தவிர வேறு எவனுமில்லை.(17) துஷ்டர்களான அந்த ராக்ஷசர்கள் சமரில் பெரும் செருக்குற்றிருக்கின்றனர். தேவா, மூடுபனியை விலக்கும் பாஸ்கரனை {சூரியனைப்} போல, நீ எங்கள் பயத்தைத் தகர்ப்பாயாக[3]" {என்றனர்}.(18)

[3] நஞ்சினும் கொடிய வெஞ்சின அரக்கர்
நாள்தொறும் கோறலால் ஐய
எஞ்சினேம் செக்கில் எள்பிழைத்தற்போல்
இங்குவந்தேங்களே பிழைத்தோம்
அஞ்சனமேனிக் கஞ்ச நாள்மலர்க்கண்
அமல மற்றொரு கதி இல்லேம்
அஞ்சினேம் வந்துன் அடியினை அடைந்தேம்
ஆழியாய் அபயம் நின் அபயம்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 135ம் பாடல், தோத்திரப் படலம்

பொருள்: நஞ்சினும் கொடிய வெஞ்சினம் கொண்ட ராக்ஷசர்கள் நாள்தோறும் கொல்வதால், செக்கில் இட்டு ஆட்டும்போது சில எள் அரைபடாமல் தப்பினாற்போல எஞ்சினோம். இங்கு வந்துள்ள நாங்கள் மட்டுமே உயிர் பிழைத்தோம். மை போன்ற மேனியையும், தாமரை மலர் போன்ற கண்களையும் கொண்ட தூயவனே, நீயன்றி எங்களுக்கு வேறு கதி இல்லை. அச்சத்துடன்கூடிய நாங்கள் வந்து உன் அடிகளை அடைந்தோம். சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவனே, உன்னைத் தஞ்சமடைந்த எங்கள் பயத்தைப் போக்குவாயாக.

Vishnu and Devas

தைவதங்கள் {தேவர்கள்} இவ்வாறு சொன்னதும், அரிக்களுக்கு {பகைவருக்கு} பயத்தைக் கொடுக்கும் தேவதேவனான ஜனார்த்தனன், தேவர்களுக்கு அபயமளித்து {பின்வருமாறு} சொன்னான்:(19) "ஈசானனிடம் {சிவனிடம்} பெற்ற வரத்தால், செருக்கடைந்த ராக்ஷசன் சுகேசனை நான் அறிவேன். அவனுக்குப் பிறந்தவர்களில் மால்யவானை மூத்தவனாகக் கொண்டவர் எவரோ, அவர்களையும் நான் அறிவேன்.(20) மரியாதை கடந்த அந்த ராக்ஷசாதமர்களிடம் {இழிந்த ராக்ஷசர்களிடம்} கோபமடைந்திருக்கும் நான் அவர்களைக் கொல்லப் போகிறேன். ஜுவரமின்றி {கவலையில்லாமல்} இருப்பீராக" {என்றான் விஷ்ணு}.(21)

விஷ்ணுவான {எல்லாம்வல்லவனான} பிரபு விஷ்ணு இவ்வாறு சொன்னதும், சர்வ ஸுரர்களும் மகிழ்ச்சியடைந்து, ஜனார்த்தனனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(22)

நிசாசரன் மால்யவான், விபுதானர்களின் {தேவர்களின்} இந்த உத்யோகத்தைக் கேள்விப்பட்டுத் தன் பிராதாக்கள் {தன்னுடன் பிறந்தோர்} இருவரிடமும் வீரமாக {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(23) "அமரர்களும், ரிஷிகளும் சேர்ந்து சங்கரனை {சிவனைச்} சந்தித்திருக்கின்றனர். நாம் வதம் செய்யப்படும் விருப்பத்துடன் கூடிய அவர்கள் இந்த வசனத்தைச் சொல்லியிருக்கின்றனர்:(24) "தேவா, சுகேச தனயர்கள் {சுகேசனின் மகன்களான மால்யவான், சுமாலி, மாலி ஆகியோர்} வரதானத்தைப் பெற்ற பலவான்களாவர். ஆணவமும், கோர ரூபமும் கொண்டவர்களான அவர்கள் பதாபதங்களிலும் {ஒவ்வொரு அடியிலும்} எங்களைத் துன்புறுத்துகின்றனர்.(25) பிரஜாபதியே {மக்கள் தலைவரே}, நாங்கள் ராக்ஷசர்களால் வெல்லப்படுகிறோம். துராத்மாக்களான அவர்கள் மீது கொண்டுள்ள பயத்தின் காரணமாக எங்களால் அவரவர் இடங்களில் வசிக்க முடியவில்லை.(26) எனவே, திரிலோசனா {முக்கண்ணனே}, எங்கள் ஹித அர்த்தத்திற்காக {நலனுக்காக} அவர்களைக் கொல்வாயாக. எரித்து அழிப்பவர்களில் சிறந்தவனே, உன் ஹுங்காரத்தால் {ஹும் என்ற உறுமலால்} அந்த ராக்ஷசர்களை அழிப்பாயாக" {என்றனர்}.(27)

திரிதசர்கள் {தேவர்கள்} இவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்தகசூதனன் {அந்தகனை அழித்த சிவன், அவர்களின் வேண்டுதலை ஏற்க இயலாமையால்}, தன் சிரம், கரங்களை {தலையையும், கைகளையும்} அசைத்துவிட்டு, இந்த வசனத்தைக் கூறினான்:(28) "தேவர்களே, சுகேச தனயர்கள் ரணத்தில் என்னால் கொல்லத்தக்கவர்களல்லர். எவன் அவர்களைக் கொல்வான் என்பதற்கான மந்திரத்தை {ஆலோசனையை} நான் உங்களுக்குக் கொடுப்பேன்.(29) சக்கர, கதாபாணியும், பீதாம்பரம் உடுத்தியவனும், ஜனார்த்தனனும், ஹரியுமான ஸ்ரீமான் நாராயணனின் சரணத்தை நீங்கள் அடைவீராக" {என்றான் சிவன்}.(30)

ஹரனிடமிருந்து இந்த மந்திரத்தை {ஆலோசனையைப்} பெற்ற அவர்கள், அந்த காமாரியை {மன்மதனை அழித்த சிவனை} வணங்கிவிட்டு, நாராயணனின் ஆலயத்திற்குச் சென்று, அவனிடம் அனைத்தையும் கூறினர்.(31)  அந்த நாராயணன், இந்திரனை முன்னிட்டுச் சென்ற தேவர்களிடம், "ஸுராரிகளான {தேவர்களின் பகைவர்களான} அவர்களை நான் அழிப்பேன். ஸுரர்களே, நீங்கள் ஜுவரமற்று {கவலையற்று} இருப்பீராக" {என்றான்}.(32)

இராக்ஷசரிஷபர்களே {ராக்ஷசர்களில் காளைகளே}, பயத்தால் பீடிக்கப்பட்ட தேவர்களிடம், நம்மைக் கொல்வதாக அந்த ஹரி பிரதிஜ்ஞை செய்திருக்கிறான். இங்கே எது க்ஷமம் {எதைச் செய்வது தகுந்தது / பொருத்தமானது} என்று சிந்திப்பீராக.(33) ஹிரண்யகசிபுவுக்கும், ஸுரர்களின் பிற பகைவருக்கும் இவன் மிருத்யுவானவன் {யமனாக இருந்தவன்}. நமுசி, காலநேமி, வீரசத்தமனான சம்ஹ்ராதன்,(34) பெரும் மாயாவியான ராதேயன், தார்மிகனான லோகபாலன், யமலார்ஜுனர்கள், ஹார்திக்யன், சும்பன், நிசும்பன்,(35) மஹாபலவானான சத்வவந்தன், இன்னும் பிற அசுரர்களும், தானவர்களும் என இவர்கள் அனைவரும் சமரில் வீழ்த்தப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம்.(36) இவர்கள் யாவரும் நூறு வேள்விகளைச் செய்தவர்கள்; யாவரும் மாயையை உணர்ந்தவர்கள்; யாவரும் சர்வ அஸ்திர குசலர்கள்; யாவரும் சத்ருபயங்கரர்கள்.(37) நாராயணனால் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இவர்கள் கொல்லப்பட்டனர். இதை அறிந்து கொண்ட நீங்கள் அனைவரும், இனி எது செய்யத்தகுந்ததோ அதைச் செய்வீராக" {என்றான் மால்யவான்}.(38)

அப்போது, மால்யவதனின் சொற்களைக் கேட்டவர்களான சுமாலியும், மாலியும், வாசவனிடம் பகாம்சர்கள் இருவரைப்[4] போல {இந்திரனிடம், சூரியனின் மகன்கள் இருவரைப் போலத்} தங்களுடன் பிறந்தவர்களில் மூத்தவனிடம் {மால்யவானிடம் பின்வருமாறு} சொன்னார்கள்:(39) "கற்பனவற்றைக் கற்றோம். இஷ்டப்பட்டனவற்றை அடைந்தோம். ஐஷ்வர்யமும் நம்மால் பரிபாலிக்கப்படுகிறது. அழியாத ஆயுளும் அடையப்பட்டிருக்கிறது. தர்மத்தின்படி நல்லவற்றைச் செய்திருக்கிறோம்.(40) கலங்கடிக்கப்பட முடியாத தேவ சாகரத்தை சஸ்திரங்களைக் கொண்டு மூழ்கடித்து, ஒப்பற்ற எதிரிகளை வென்றிருக்கிறோம். எனவே மிருத்யுவிடம் {மரணத்திடம் நமக்கு} பயம் இல்லை.(41) நாராயணன், ருத்ரன், சக்ரன் {இந்திரன்}, யமன் ஆகியோர் அனைவரும் எப்போதும் நம் முன் நிற்கவும் அஞ்சுவர்.(42) இராக்ஷசேஷ்வரரே, விஷ்ணு தேவனுக்கு {நம்மை எதிர்க்க} எந்தக் காரணமும் இல்லை. தேவர்களின் தோஷத்தால் {தவறால்} விஷ்ணுவின் மனம் திரிக்கப்பட்டுள்ளது.(43) எனவே, இப்போதே அணிதிரண்டு, சர்வ சைனியங்களாலும் சூழப்பட்டவர்களாகச் சென்று, எந்த தேவர்களிடம் தவறு தெரிகிறதோ, அவர்களைக் கொல்வோம்" {என்றனர் சுமாலியும், மாலியும்}.(44)

[4] விவேக்தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே பயன்படுத்தப்பட்ட சொற்கள், சூரியனின் மகன்கள் இருவர் என்று மொழிபெயரும். அசுவினிகளே சூரியனின் மகன்களாவர்" என்றிருக்கிறது. மனு, யமன், சனி ஆகியோரும் சூரியனின் மகன்களே. ஆனாலும் இந்திரனை அண்டி நிற்பவர்கள் என்பதால் இங்கே குறிப்பிடப்படுவது அசுவினி தேவர்களாகவே இருக்க வேண்டும். இங்கே பகன் என்பது சூரியனின் மற்றொரு பெயராகும்.

இவ்வாறு சர்வ பலவான்களும் ஒன்றாக ஆலோசனை செய்து, சைனியங்களை ஒன்று திரட்டினர். சர்வ நைர்ருதபுங்கவர்களும் இந்த உத்யோகத்தை அறிவித்தனர். ஜம்பன், விருத்திரன், பலன் ஆகியோரைப் போல அவர்கள் கோபத்துடன் யுத்தத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(45) இவ்வாறே, ராமா, சர்வ உத்யோகங்களையும் ஆலோசனை செய்து, மஹாகாயர்களும் {பேருடல் படைத்தவர்களும்}, மஹாபலவான்களுமான அவர்கள் அனைவரும் யுத்தத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(46)

அவர்கள் சியந்தனங்கள் {தேர்கள்}, வாரணங்கள் {யானைகள்}, கிரிகள் போலத் தெரிந்த ஹயங்கள் {மலைகளைப் போன்ற குதிரைகள்}, கழுதைகள், மாடுகள், ரதங்கள், ஒட்டகங்கள், சிம்சுமாரங்கள், புஜகங்கள் {பாம்புகள்},(47) மகரங்கள், ஆமைகள், மீன்கள், கருடனுக்கு ஒப்பான பறவைகள், சிங்கங்கள், புலிகள், பன்றிகள், மான்கள், சமரங்கள் ஆகியவற்றில் ஏறி(48) பலத்தில் செருக்குக் கொண்ட சர்வ ராக்ஷசர்களும் லங்கையைவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். அந்த தைவதசத்ருக்கள் {தேவ பகைவர்கள்}, போரிடுவதற்காக தேவலோகத்தை நோக்கிச் சென்றனர்.(49) இலங்கையும், லங்கையின் இடங்களும் தலைகீழாக மாறுவதைக் கண்ட பூதங்கள், எல்லாவகையிலும் பயமடைந்து மனச் சோர்வடைவதாகத் தெரிந்தது.(50) அவர்கள் உத்தமமான ரதங்களில் ஏறி நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சென்றனர்.(51) இராக்ஷசர்கள் பிரயத்னத்துடன் தேவலோகத்திற்கு விரைவாகப் புறப்பட்டுச் சென்றனர். இராக்ஷசர்கள் செல்லும் மார்க்கத்திலேயே தைவதங்களும் {லங்கையில் குடிகொண்டிருந்த தேவதைகளும்} பின்தொடர்ந்து சென்றனர்.(52) பூமியும், அந்தரிக்ஷமும் {வானமும்} காலனின் ஆணைக்கிணங்க பயத்தை விளைவித்தன. இராக்ஷசேந்திரர்களின் அழிவைக் குறிக்கும் உத்பாதங்கள் தோன்றின.(53) மேகங்கள், அஸ்திகளையும் {எலும்புகளையும்}, உஷ்ணமான சோணிதத்தையும் {ரத்தத்தையும்} பொழிந்தன. சமுத்திரம் வேலத்தை மீறி {கரையைக் கடந்து} பொங்கியது. பூதரங்கள் {மலைகள்} குலுங்கின.(54) பயங்கரமான நரிகள், அங்கே கோர தரிசனம் தந்து, அட்டஹாசம் செய்தபடியே, இடியின் ஒலிபோல் ஸ்வனமெழுப்பின {ஊளையிட்டன}.(55) பிறகு பூதங்கள் கிரமப்படி {உயிரினங்கள் வரிசைப்படி} கீழே விழுவதைப் போலத் தெரிந்தது. கழுகுகள், தங்கள் வாய்களில் இருந்து தீப்பிழம்புகளைக் கக்கியபடியே சுற்றின.(56) அவை ராக்ஷசர்களுக்கு மேலே நெருப்பு வளையம் போலச் சுற்றி வந்தன. புறாக்களும், சிவந்த பாதங்களைக் கொண்ட சாரிகைகளும் {மைனாக்களும்} வட்டமிட்டன. காகங்கள் கரைந்தன; அங்கே இருந்த பூனைகளும் குறுக்கிட்டன.(57) பலத்தில் செருக்குற்றிருந்த ராக்ஷசர்கள் இந்த உத்பாதங்களைப் புறக்கணித்துவிட்டுத் தொடர்ந்து சென்றனர். மிருத்யுவின் பாசத்தால் {யமனின் பாசக்கயிற்றால்} கட்டப்பட்ட அவர்கள் ஒருபோதும் திரும்பிச் சென்றார்களில்லை.(58)

மஹாபலவான்களான மால்யவானும், சுமாலியும், மாலியும் வேள்வியில் பாவகனை {அக்னியைப்} போல ஒளிர்ந்தபடியே முன்னால் சென்றனர்.(59) அந்த நிசாசரர்கள் அனைவரும், தேவதைகள் தாதாவை {தேவர்கள் பிரம்மனை} எப்படியோ, அப்படியே மால்யவந்தம் என்ற அசலத்தை {மலையைப்} போன்ற மால்யவந்தனையே அண்டியிருந்தனர்.(60) இராக்ஷசேந்திரனின் அந்த பலம் {படை}, பெரும் மேகத்தைப் போல நாதம் செய்தது. மாலியின் வசத்தை அடைந்து நின்ற அது {அந்தப் படை}, ஜயத்தில் கொண்ட விருப்பத்துடன் தேவலோகத்தை அடைந்தது.(61)

Vishnu on Garuda with all his weapons

இராக்ஷசர்களின் இந்த உத்யோகத்தை அறிந்த நாராயணப் பிரபு, தேவதூதர்களிடமிருந்து இதைக் கேட்ட பின், தன் மனத்தை யுத்தத்தில் திருப்பினான்.(62) அம்புகள் நிறைந்த தூணிகளைத் தரித்துக் கொண்டு, வைனதேயன் {வினதையின் மகனான கருடன்} மேல் ஏறிக் கொண்டு, சஹஸ்ரார்க்கனை {ஆயிரம் சூரியன்களைப் போலப்} பிரகாசிக்கும் திவ்ய கவசத்தை அணிந்து கொண்டான்.(63) அந்த கமலேக்ஷணன் {தாமரைக் கண்ணன்}, சரங்கள் சம்பூர்ணமான தூணிகளையும், வார்ப்பட்டையையும், கட்கத்தையும் {வாளையும்} இடுப்பில் கட்டிக் கொண்டு, சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், கட்கம் போன்ற சிறந்த ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டான்.(64) பிறகு, சுபர்ணனும் {அழகிய இறகுகளைக் கொண்டவனும்}, கிரியை {மலையைப்} போன்றவனுமான வைனதேயன் {கருடன்} மேல் ஏறிய அந்தப் பிரபு, ராக்ஷசர்களை அழிப்பதற்காக விரைந்து சென்றான்.(65)

பீதாம்பரம் {மஞ்சள் பட்டாடை} உடுத்தியவனும், கரிய நிறத்தவனும், சுபர்ணனின் {கருடனின்} பின்புறத்தில் அமர்ந்திருந்தவனுமான ஹரி, காஞ்சனத்தாலான கிரியின் சிருங்கத்தில் மின்னலுடன் கூடிய மேகத்தைப் போலத் தெரிந்தான்.(66) சித்தர்கள், தேவரிஷிகள், மஹா உரகர்கள் {பெரும்பாம்புகள்}, கந்தர்வர்கள், யக்ஷர்கள் ஆகியோரால் போற்றிப் பாடப்பட்ட அவன் {நாராயணன்}, சக்கரம், அஸி {வாள்}, சாரங்கம் {என்ற பெயரைக் கொண்ட விஷ்ணுவின் வில்} ஆகியவற்றுடனும், ஆயுதங்களுடனும், கையில் சங்குடனும் அந்த அஸுர சைனியம் இருக்குமிடத்தை அணுகினான்.(67) சுபர்ணனின் சிறகுகள் உண்டாக்கிய காற்றால் பதாகைகள் சுற்றிச் சுழன்றன; சஸ்திரங்கள் {ஆயுதங்கள்} சிதறடிக்கப்பட்டன. அசலேந்திரமான நீலத்தை {நீலமலையைப்} போல, ராக்ஷச ராஜனின் சைனியம் நடுங்கியது.(68) பிறகு, மாதவனைச் சூழ்ந்து கொண்ட நிசாசரர்கள், சோணிதமும், மாமிசமும் படிந்தவையும், யுகாந்த விவஸ்வானுக்கு {அக்னிக்கு} துல்லியமானவையுமான சரங்களாலும், ஆயிரக்கணக்கான சிறந்த ஆயுதங்களாலும் {விஷ்ணுவைத்} தாக்கினர்.(69)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 006ல் உள்ள சுலோகங்கள்: 69

Previous | Sanskrit | English | Next