Wednesday, 11 March 2026

இராக்ஷசர்கள் திருமணம் | சர்க்கம் – 012 (32)

The marriages of the Rakshasas | Sarga-012 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சூர்ப்பணகைக்குத் திருமணம் செய்து வைத்த ராவணன்; மந்தோதரியை மணம் புரிந்தது; தம்பிகளுக்கும் தகுந்த மனைவிகளைத் திருமணம் செய்து வைத்தது; இந்திரஜித் பிறப்பு...

Ravana and Mandodari Blessing Kumbhakarna and Vibheeshana  at their wedding ceremony GeminiAI

பிராதாக்கள் சஹிதனான ராக்ஷசேந்திரன் அபிஷேகம் செய்து கொண்ட பிறகு {உடன்பிறந்தோருடன் கூடியவனும், ராக்ஷசர்களின் தலைவனுமான ராவணன் லங்கையின் மன்னனாக முடிசூட்டிக் கொண்ட பிறகு}, தன் தங்கையை {சூர்ப்பணகையை} ஒரு ராக்ஷசனுக்கு {திருமணம் செய்து} கொடுப்பது குறித்துச் சிந்தித்தான்.(1) அவன், காலகேயனும் {காலகேயனின் புதல்வனும்}, வித்யுஜ்ஜிஹ்வன் என்று அழைக்கப்படுபவனுமான தானவேந்திரனுக்கு, சூர்ப்பணகை என்று அழைக்கப்படும் தன் தங்கையைக் கொடுத்தான்[1].(2)

[1] தடையில்லா வலி இல்லை அரம்பையர்க்கு
தம்முலைகள் தம்மைத் தாங்க
இடையில்லை எம்மைப் போல் இமைப்பு அளவில்
எவ்வுலகும் முட்டிமீளும்
நடையில்லை எனப்பழிக்கும் நங்கை மடச் 
சூர்ப்பணகை நலத்தைக்கண்டு
விடலொல்லேன் என விரும்பும் வித்துருசிங்
கேசனுக்கு விதியின் ஈந்தான்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 239ம் பாடல், இராவணன் பிறப்பு படலம்

பொருள்: அப்சரஸ்களுக்கு யாராலும் தடுக்க இயலாத வலிமை கிடையாது. தங்கள் முலைகளைத் தாங்கிக் கொள்வதற்குரிய இடையும் கிடையாது; என்னைப் போல் இமைப்பொழுதில் எவ்வுலகையும் சென்று சேர்ந்து திரும்புவதற்குரிய விரைவான நடையுமில்லை என்று சொல்லி அவர்களைப் பழிக்கும் நங்கையாகிய வலிமைமிக்க சூர்ப்பணகையின் அழகைக் கண்டு, இவளை விடல் ஒல்லேன் என்று காதலித்த வித்துருசிங்கு என்பவனுக்கு விதிப்படி மணம் செய்து கொடுத்தான் {லங்கை வேந்தன் ராவணன்}.

அவளை அந்த ராக்ஷசனுக்குக் கொடுத்த பிறகு, அவன் வேட்டையாட {வனத்திற்குச்} சென்றிருந்தான். அங்கே, ராமா, மயன் என்றழைக்கப்படும் திதியின் சுதனை {மகனைக்} கண்டான்.(3) நிசாசரன் தசக்ரீவன், அவனை {மயனை} ஒரு கன்னிகையுடன் கண்டான். "மனுஷ்யர்களோ, மிருகங்களோ இல்லாத வனத்தில் தனியாக இருக்கும் நீர் யார்? மான்விழியாளான இவளுடன் இங்கே ஏன் வசிக்கிறீர்?" என்று அவனிடம் கேட்டான்.(4)

இராமா, இவ்வாறு கேட்ட நிசாசரனிடம் மயன் {பின்வருமாறு} கூறினான், "என்னுடைய விருத்தம் அனைத்தையும் {வரலாறு முழுமையும்} நான் உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(5) தாதா {ஐயா}, ஹேமை என்றழைக்கப்படும் அப்சரஸைக் குறித்து நீ எப்போதாவது கேட்டிருக்கலாம். சதக்ரதுவுக்கு பௌலோமியை {நூறு வேள்விகளைச் செய்த இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட இந்திராணியைப்} போல, அவளை {ஹேமையை} எனக்கு தைவதங்கள் {தேவர்கள்} கொடுத்தனர்.(6) தாதா, நான் அவளுடன் ஐந்நூறு வருஷங்கள் பற்றுள்ளவனாக இருந்தேன். அவள் தைவதங்களின் காரியமாகச் சென்று பதிமூன்று வருஷங்கள் ஆகின.(7) பிறகு, பதினான்காம் வருஷத்தில் அவளுக்காக ஹேமமயமான புரம் {பொன்மயமான நகரம்} ஒன்றை, வஜ்ர வைடூரியங்களால் அலங்கரித்து மாயையால் நிர்மிதம் செய்தேன்.(8) அவள் இல்லாமல் மகிழ்ச்சியற்றவனாக பெருந்துக்கத்துடன் அங்கே வசித்துவந்தேன்.(9) அந்த புரத்தில் {நகரத்தில்} இருந்து துஹிதையை {என் மகளை} அழைத்துக் கொண்டு வனத்தை அடைந்தேன். இராஜாவே, இவள், அவள் வயிற்றில் பிறந்த என் ஆத்மஜை {மகள்} ஆவாள்.(10) இவளுக்கு ஒரு பர்தாவை {கணவனைத்} தேடி அடைய வந்திருக்கிறேன். மானத்தில் விருப்பமுள்ள எவருக்கும் கன்னிகையின் பிதாவாக இருப்பது துக்கமே.(11) ஒரு கன்னிகையால், {தாய் தந்தையரின்} இரண்டு குலங்களும் நித்யம் சந்தேகத்தில் நிறுத்தப்படுகின்றன. என் பார்யை மூலம் எனக்கு இரண்டு புத்திரர்கள் பிறந்தனர்.(12) மூத்தவன் மாயாவி, அவனுக்கு அடுத்தவன் துந்துபி[2]. நீ கேட்ட அனைத்தையும் விரிவாகச் சொல்லிவிட்டேன்.(13) தாதா {ஐயா}, இனி நீ யார் என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும்" {என்றான் மயன்}.

[2] கிஷ்கிந்தா காண்டம் 9 முதல் 11ம் சர்க்கம் வரை வாலிக்கும் இந்த மாயாவி, துந்துபிகளுக்கும் இடையில் நடந்த மோதல் விளக்கப்படுகிறது. இருவரும் வாலியால் கொல்லப்படுகின்றனர். 

இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்த ராக்ஷசன் பணிவுடன் {பின்வருமாறு} கூறினான்:(14) "நான் தசக்ரீவன் என்றழைக்கப்படும் பௌலஸ்திய தனயனாவேன் {புலஸ்தியரின் மகனான விஷ்ரவசின் மகனாவேன்}. விஷ்வரஸ் முனிவர் பிரம்மாவின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்" {என்றான் ராவணன்}.(15)

இராமா, இவ்வாறு ராக்ஷசேந்திரனால் சொல்லப்பட்டதும், அவன் மஹரிஷியின் தனயன் {மகன்} என்பதை அறிந்து கொண்ட தானவன் {மயன்}, பெரும் மகிழ்ச்சியடைந்தான். அவன் தன் மகளை அவனுக்குக் கொடுக்க அப்போது முடிவு செய்தான்.(16) பிறகு மயன் அவளது கையைத் தன் கையால் பற்றினான். அந்த தைத்தியேந்திரன் {மயன்} புன்சிரிப்புடன் ராக்ஷசேந்திரனிடம் இதைச் சொன்னான்:(17) "இராஜனே, இவள் அப்சரஸ் ஹேமையிடம் பிறந்த என் ஆத்மஜை {மகள்} ஆவள். மந்தோதரி என்றழைக்கப்படும் இந்தக் கன்னிகையை உன் பத்தினியாக ஏற்றுக் கொள்வாயாக" {என்றான் மயன்}.(18)

இராமா, தசக்ரீவன், "அப்படியே ஆகட்டும்" என்று பதிலளித்தான். அப்போதே அவன் {மயன்} அக்னியை எரியச் செய்து அங்கேயே அவளது கைகளைப் பிடித்துக் கொடுத்தான்.(19) இராமா, தபோதனர் அவனுக்கு {விஷ்ரவஸ் தசக்ரீவனுக்குக்} கொடுத்த சாபத்தை மயன் அறிந்திருந்தாலும், அவன் பைதாமஹ {பிரம்மனின்} குலத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவளை அவனுக்குக் கொடுத்தான்[3].(20) மேலும் அவன் பரமாத்புதமானதும், அமோகமானதுமான ஒரு சக்தியை {பேரற்புதம் வாய்ந்ததும், வீண்போகாததுமான ஒரு வேல் ஆயுதத்தை} அவனுக்குக் கொடுத்தான். கடும் தபத்தால் அடையப்பட்ட அதைக் கொண்டுதான் அவன் {ராவணன்} லக்ஷ்மணனைத் துன்புறச் செய்தான்[4].(21)

[3] கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், அடைப்புக் குறிகளுக்குள், "இவன் குரூர இயல்புடையவன் என்பது மயனுக்குத் தெரியும். அவனாகக் கொடுக்காவிட்டால், கொடுமைக்காரனான தசக்ரீவன், வேறு எவரும் இல்லாத காட்டில் ஓர் அழகிய இளம்பெண்ணைப் பார்த்துவிட்டு, அவளை அடையாமல் விடமாட்டான் - என்று, சில விரிவுரையாளர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்" என்றிருக்கிறது.

[4] யுத்த காண்டம் 100ம் சர்க்கத்தில் ராவணன் இந்த வேலாயுதத்தை லக்ஷ்மணன் மீது பிரயோகித்து அவனை வீழ்த்துகிறான் 

இலங்கையின் ஈஷ்வரனான அந்தப் பிரபு {ராவணன்}, இவ்வாறே ஒரு தாரத்தை {மனைவியை} அடைந்து, தன் நகருக்குச் சென்று, தன் பிராதாக்கள் இருவருக்கும் தகுந்த பாரியைகளை மணமுடித்தான்.(22) வஜ்ரஜ்வாலை என்ற பெயரைக் கொண்டவள், வைரோசனனின் தௌஹித்ரி {விரோசனனின் மகனான பலியின் மகள்வழி பேத்தி} ஆவாள். இராவணன், அவளைக் கும்பகர்ணனின் பாரியையாக்கினான்.(23) மஹாத்மாவான கந்தர்வராஜன் சைலூஷனின் மகளும், சரமை என்ற பெயர் கொண்டவளுமான தர்மஜ்ஞையை {தர்மம் அறிந்த சரமாவை} விபீஷணன் பாரியையாக அடைந்தான்[5].(24) உண்மையில் அவள் மானச சரஸின் தீரத்தில் {மானசரோவரின் / மானச தடாகத்தின் கரையில்} பிறந்தவள். அந்த மானச சரஸ், மழைக்காலத்தில் கரைபுரண்டது.(25) அப்போது அவளது மாதா, தன் கன்னிகையின் {மகளின்} மீது கொண்ட சினேகத்தால், "ஸரோ மா {தடாகமே, பெருக்கெடுக்காதே}" என்று கூச்சலிட்டாள். எனவே அவள் சரமை என்றழைக்கப்பட்டாள்.(26)

[5] மன்னுவயிரோசனன்தன் மகள் மகளாம் 
வச்சிரசுவாலை என்னும்
கன்னிதன்னை அணிவீரக் கழல்கும்ப
கன்னன் கைப்பிடித்த பின்பு
தன் எதிரில் கந்திருவத் தலைவன் 
கைதூடணன் தான் தந்த வேற்கண்
மின் இடையாள் சரபைதனை விளங்குபுகழ் 
வீடணன்தான் விதியின் வேட்டான்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 248ம் பாடல், இராவணன் பிறப்பு படலம்

பொருள்: நிலைபெற்ற வயிரோசனன் {பலி} தன் மகளுக்கு மகளாகிய வச்சிரசுவாலை என்னும் கன்னியை வீரக்கழல் அணிந்த கும்பகன்னன் கைப்பிடித்து மணந்தபின்பு, தனக்கு நிகர் இல்லாத கந்திருவத் தலைவன் ஆகிய கைதூடணன் பெற்றவளும், வேல் போன்ற கண்ணையும், மின்னலைப் போன்ற இடையையும் உடையவளுமாகிய சரபைதனை விளங்கும் புகழுடைய வீடணன் விதிப்படி மணந்து கொண்டான்.

இவ்வாறே அந்த ராக்ஷசர்கள் தாரங்களை ஏற்படுத்திக் கொண்டு அங்கே மகிழ்ந்திருந்தனர். நந்தனத்தில் கந்தர்வர்களைப் போலவே அவர்கள் தங்கள் தங்கள் பாரியைகளை அணுகினர்.(27) பிறகு மந்தோதரி மேகநாதன் என்ற புத்திரனைப் பெற்றாள். அவனே உங்களால் இந்திரஜித் என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(28) இராவணன் மகனான அவன், முன்பு பிறந்த மாத்திரத்திலேயே மேகங்களுக்கு ஒப்பான நாதத்துடன் உரத்த முழக்கத்துடன் அழுதான்.(29) இராகவா, அவனது நாதத்தால் லங்கையே திகைப்படைந்தது. அவனுடைய பிதாவே மேகநாதன் என்ற பெயரை அவனுக்குச் சூட்டினான்.(30) இராமா, அவன் ராவணனின் சுபமான அந்தப்புரத்தில் வளர்ந்தான். அழகிய ஸ்திரீகளால் பாதுகாக்கப்பட்ட அவன் {இந்திரஜித்}, காஷ்டைகளால் மறைக்கப்பட்ட அனலனைப் போலிருந்தான் {விறகால் மறைக்கப்பட்ட அக்னியைப் போல இருந்தான்}.(31) அந்த ராவணாத்மஜன் {இந்திரஜித்}, தன் மாதாவுக்கும், பிதாவுக்கும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்.(32)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 012ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next