Saturday, 7 March 2026

வரப்ராப்தம் | சர்க்கம் – 010 (49)

Boons attained | Sarga-010 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தபம் செய்து வரங்களை அடைந்த தசக்ரீவனும் அவனது தம்பிமாரும்...

Ravana performing Tapas ChatGPT

அப்போது ராமன், {அகஸ்திய} முனிவரிடம், "அந்தப் பிராதாக்கள் {உடன்பிறந்தோரான தசக்ரீவன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர்} வனத்தில் எப்படி இருந்தனர்? பிராமணரே,  அந்த மஹாபலவான்கள் எவ்வகை தபங்களைச் செய்தனர்?" என்று கேட்டான்.(1)

அப்போது அகஸ்தியர், மனத்தில் மகிழ்ச்சியடைந்தவராக ராமனிடம் {பின்வருமாறு} கூறினார், "அந்த பிராதாக்கள் {உடன்பிறந்தோரான ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர்} அவரவர் தர்மவிதிகளை, அதனதனுக்குரிய வகையில் மேற்கொண்டனர்.(2) அன்றிலிருந்து கும்பகர்ணன் நித்யம் தர்மத்தின் பாதையில் நிலைத்திருந்தான். கோடை காலத்தில் அவன் பஞ்சாக்னிகள்[1] சூழ நின்றிருந்தான்.(3) மழைக்காலங்களில் நீரில் நனைந்தபடியே வீராசனத்தில்[2] அமர்ந்திருந்தான். குளிர்காலத்தில் நித்யம் ஜலத்தின் மத்தியில் தஞ்சம் அடைந்தான் {நீரின் நடுவில் நின்று தபம் செய்தான்}.(4) இவ்வாறே அவனுக்குப் பத்தாயிரம் வருஷங்கள் கடந்து சென்றன. தர்மத்தின் பாதையில் இருந்து பிறழாமல் நன்னெறியில் அவன் உறுதியாக நிலைத்திருந்தான்.(5)

[1] கொண்டங்கி - கந்தாடை - ஸ்ரீநிவாஸராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பஞ்சாக்னி = ஐந்து அக்கினி; சுற்றி நாற்புறமும் தீ வளர்த்தி மேலே சூரியனெரிய, இவற்றினிடை தவம் புரிதல்" என்றிருக்கிறது.

[2] ஸ்ரீநிவாஸராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வீராஸநம் = வலது காலை இடது தொடையின் மீது போட்டுக் கொண்டு உட்காருதல்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுவாசத்தை ஒழுங்கமைப்பதற்குச் சாதகமான பல்வேறு பழக்கவழக்கங்களை இந்து யோகியர் கடைப்பிடித்தனர்" என்றிருக்கிறது. விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதன் பொருள் வீரனின் தோற்ற அமைவு என்பதாகும். இது தபம் செய்வோர் அமரும் ஓர் இருக்கை நிலையாகும்" என்றிருக்கிறது.

தர்மாத்மாவும், நித்யம் தர்மத்தை ஒழுகுபவனும், தூய்மையில் அர்ப்பணிப்புள்ளவனுமான விபீஷணன், ஐந்தாயிரம் வருஷங்கள் ஏக பாதத்தில் {ஒற்றைக்காலில்} நின்றிருந்தான்.(6) அவனது நியமங்கள் {சடங்குகள் / விரதங்கள்} நிறைவடைந்ததும் அப்சரகணங்கள் நடனமாடினர்; புஷ்பவர்ஷம் {மலர்மாரி} பொழிந்தது; தேவர்கள் நடுங்கினர்.(7) அவன் ஐயாயிரம் வருஷங்கள் சூரியனைப் பின்தொடர்ந்தான் {சூரியனை தியானித்தான்}. அவன் சிரத்தையும் {தலையையும்}, கைகளையும் உயர்த்திக் கொண்டு, மனத்தை உள்முகமாகச் செலுத்தியபடியே நின்றிருந்தான்.(8) ஸ்வர்க்கத்தில் இருப்பவன் நந்தவனத்தில் எப்படியோ, அப்படியே நியமங்களில் பிறழாதவனான விபீஷணனுக்குப் பத்தாயிரம் வருஷங்கள் கடந்தன.(9)

தசானனன் {பத்து முகங்களைக் கொண்டவனான ராவணன்}, பத்தாயிரம் வருஷங்கள் ஆஹாரமின்றி இருந்தான். ஆயிரம் வருஷங்கள் பூர்ணமடைந்ததும், தனது ஒரு சிரத்தை {தலையை} நெருப்பில் செலுத்தினான்.(10) இவ்வாறு ஒன்பதாயிரம் வருஷங்கள் கடந்தன. அவனது சிரங்களில் {தலைகளில்} ஒன்பது ஹுதாசனத்தை {நெருப்பை} அடைந்தன.(11) பிறகு, பத்தாயிரம் வருஷங்கள் கடந்ததும், பத்தாம் சிரத்தை {தலையை} வெட்ட விரும்பிய தசக்ரீவனிடம் பிதாமஹன் வந்தான் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனிடம் பிரம்மன் வந்தான்}.(12) தேவர்கள் சூழ வந்த பிதாமஹன், பெரும் மகிழ்ச்சியடைந்தான். "தசக்ரீவா, உன்னிடம் நான் பிரீதியடைந்தேன்" என்று அவன் கூறினான்.(13) "தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, நீ விரும்பும் வரத்தை சீக்கிரம் கேட்பாயாக. உன் பரிசிரமங்கள் {உன் முயற்சிகள் / நீ பட்டபாடுகள்} வீணாகாமல் இருக்க, இதோ உன் விருப்பத்தை நான் நிறைவேற்றப் போகிறேன்" {என்றான் பிரம்மன்}. (14)

அப்போது அந்தராத்மாவில் பெரும் மகிழ்ச்சியடைந்த தசக்ரீவன், அந்த தேவனை சிரசால் வணங்கி {பிரம்மனுக்குத் தலைவணங்கி} மகிழ்ச்சியில் திணரும் குரலுடன் {பின்வருமாறு} சொன்னான்:(15) "பகவானே, பிராணிகளுக்கு {உயிரினங்களுக்கு} மரணத்தைத் தவிர நித்ய பயம் வேறில்லை. மிருத்யுவுக்கு சமமான சத்ரு {யமனுக்கு நிகரான பகைவன்} வேறில்லை. நான் அமரத்வத்தை {இறவாமையை வரமாக} வேண்டுகிறேன்" {என்றான் ராவணன்}.(16)

இவ்வாறு சொல்லப்பட்டதும், பிரம்மன் தசக்ரீவனிடம் {பின்வருமாறு} சொன்னான், "சர்வ அமரத்வம் {எப்போதும் மரணமில்லாத நிலை} கிடையாது. என்னிடம் வேறு வரத்தை நீ வேண்டுவாயாக" {என்றான் பிரம்மன்}.(17)

இராமா, லோக கர்த்தனான பிரம்மன் இவ்வாறு சொன்னதும், தசக்ரீவன் தன் முன்னே கைகளைக் கூப்பிக் கொண்டு, இந்தச் சொற்களைச் சொன்னான்:(18) "பிரஜாதியக்ஷரே {மக்களின் தலைவரே}, தேவதைகளில் சிறந்தவரே, சுபர்ண, நாக, யக்ஷர்களாலும், தைத்திய, தானவ, ராக்ஷசர்களாலும் நான் வதைக்கப்பட முடியாதவனாக வேண்டும்.(19) அமரர்களால் பூஜிக்கப்படுபவரே, வேறு பிராணிகளை {வேறு உயிரினங்களைக்} குறித்த சிந்தனை {கவலை} ஏதும் எனக்கில்லை. மானுஷர்களைப் போன்ற பிராணிகளை திருணபூதங்களாகவே {புல்லைப் போன்றவையாகவே} நான் கருதுகிறேன்" {என்றான் ராவணன்}.(20)

தர்மாத்மாவே, ராக்ஷசன் தசக்ரீவன் இவ்வாறு சொன்னதும், தேவர்களுடன் கூடிய தேவனான பிதாமஹன் {பிரம்மன் பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(21) "இராக்ஷசபுங்கவா, உன் சொற்கள் நிறைவேறும்" {என்றான் பிரம்மன்}. இராமா, தசக்ரீவனிடம் இவ்வாறு சொன்ன பிதாமஹன்,(22) "பிரீதியுடன் கூடிய நான் சுபமான {மங்கலமான} மற்றொரு வரத்தையும் தருகிறேன், கேட்பாயாக. குற்றமற்றவனே, பூர்வத்தில் நீ நெருப்பில் எரித்த தலைகள்,(23) இராக்ஷசா, மீண்டும் உன்னிடம் அப்படியே நிலைக்கும். சௌம்யா, அடைதற்கரிய மற்றொரு வரத்தையும் இதோ நான் உனக்குத் தருகிறேன்.(24) உன் ரூபமும் {வடிவமும்}, உன் மனம் விரும்பும் எதுவும், ராக்ஷசர்களில் சிறந்தவனே, அப்படியே என் வரத்தால் உனக்கு வாய்க்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை" {என்றான் பிரம்மன்}.(25) இராக்ஷசன் தசக்ரீவனிடம் பிதாமஹன் இவ்வாறு சொன்னதும், அக்னியில் எரிந்த அவனது சிரங்கள் {தலைகள்} மீண்டும் எழுந்து பொருந்தின.(26)

இராமா, தசக்ரீவனிடம் பிதாமஹன் இவ்வாறு சொன்ன பிறகு, லோகபிதாமஹனான அவன் விபீஷணனிடம் {பின்வரும்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(27) "விபீஷணா, என் வத்ஸா {அன்பு மகனே}, நீ தர்மத்திற்கு இணக்கமான புத்தி கொண்டவனாக இருக்கிறாய். உன்னிடம் நிறைவடைந்தேன். தர்மாத்மாக்களில் சிறந்தவனே, ஒரு வரத்தை வேண்டுவாயாக" {என்று விபீஷணனிடம் கேட்டான் பிரம்மன்}.(28)

கதிர்களால் ஒளிரும் சந்திரனைப் போல, நித்யம் சர்வ குணங்களாலும் சூழப்பட்ட தர்மாத்மாவான விபீஷணன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(29) "பகவானே, லோக குருவான நீரே என்னிடம் நிறைவடைந்திருக்கிறீர். நான் கிருதக்ருத்யனானேன் {செய்ய வேண்டியவற்றைச் செய்தவனானேன்}. எனக்கு வரம் தர நீர் விரும்பினால், நான் சொல்வதைக் கேட்பீராக.(30) பரம ஆபத்துகளிலும் என் மதி தர்மத்திலேயே நிலைத்திருக்க வேண்டும். பகவானே, கற்பிக்கப்படாமலேயே பிரம்மாஸ்த்திரம் எனக்குத் தோன்ற வேண்டும் {நன்றாக விளங்க வேண்டும்}.(31) என்னில் எந்தெந்த புத்தி உண்டாகிறதோ, எந்தெந்த ஆசிரமங்களை[3] நான் நோற்கிறேனோ, அதனதனுக்குரிய தர்மத்தையே தர்மிஷ்டனான நான் கடைப்பிடித்திருக்க வேண்டும்.(32) இதையே எனக்குக் கிடைத்த பரம வரமாக நான் கருதுகிறேன். தர்மத்தில் அர்ப்பணிப்புள்ளவர்களுக்கு இவ்வுலகத்தில் துர்லபமாவது ஏதுமில்லை {அரிதென்பது ஏதுமில்லை}" {என்றான் விபீஷணன்}.(33)

[3] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம் என்பன வாழ்வின் நான்கு ஆசிரமங்களாகும்" என்றிருக்கிறது.

மீண்டும் பிரீதியடைந்த பிரஜாபதி {பிரம்மன்}, விபீஷணனை நோக்கி {பின்வருமாறு} சொன்னான், "வத்ஸா {அன்புக்குரிய குழந்தாய்}, நீ தர்மிஷ்டனாக நிலைத்தது எப்படியோ, அப்படியே இதுவும் உனக்கு வாய்க்கும்.(34) அமித்ரநாசனா {பகைவரை அழிப்பவனே}, நீ ராக்ஷச யோனியில் {அரக்கர் மடியில்} பிறந்தவனாக இருந்தாலும், உன் புத்தியில் அதர்மம் தோன்றாததால், உனக்கு அமரத்வத்தை {இறவாமையை} நான் தருகிறேன்[4][5]" {என்றான் பிரம்மன்}.(35)

[4] 16ம் சுலோகத்தில் ராவணன் அமரத்வத்தை வேண்டும் போது, 17ம் சுலோகத்தில் இல்லை என்று மறுத்த பிரம்மன், இங்கே விபீஷணன் கேட்காமலேயே அதைக் கொடுக்கிறான்.

[5] நல்லாய் அறத்தைக் கைவிட்டு
நடுங்கும் இடும்பை வரினும் நான்
பொல்லாதன செய்யாதொழிக
போரில் பிரமாதிகள் என்னை
வெல்லாதொழிக இவ்வரங்கள்
வெண்டுமென்ன விரிஞ்சன் அவை
எல்லாம் பெறுதி நீ என்றும்
இறவாது இருத்தி என உரைத்தான்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 213ம் பாடல், இராவணன் பிறப்பு படலம் 

பொருள்: நல்லோனே, நான் நடுங்குவதற்குக் காரணமான துன்பம் வரினும் தர்மத்தைக் கைவிட்டுப் பொல்லாதனவாகிய பாபங்களைச் செய்யாமல் இருப்பேனாக. போரில் உன்னை முதலாகக் கொண்ட எவரும் என்னை வெல்லாதிருப்பாராக. இவ்வரங்களே வேண்டும் என்று விபீஷணன் சொல்ல, பிரம்மன், "நீ அவை எல்லாம் பெறுவாயாக. மேலும் என்றைக்கும் இறவாமலும் இருப்பாயாக" என்று சொன்னான்.

இதைச் சொல்லிவிட்டு, கும்பகர்ணனுக்கு வரம் தர அவனை அணுகியபோது, சர்வ ஸுரர்களும் {தேவர்கள் அனைவரும்} கைகளைக் கூப்பிக் கொண்டு பிரஜாபதியிடம் {பிரம்மனிடம் பின்வருமாறு} கூறினர்:(36) "கும்பகர்ணனுக்கு இவ்வளவு பெரிய வரத்தை நீர் கொடுக்கக்கூடாது[6]. இந்த துர்மதியான், உலகங்களை எவ்வாறு அச்சுறுத்தினான் என்பது உமக்குத் தெரியும்.(37) {இந்திரனின் நந்தவனமான} நந்தனத்தில் சப்த {ஏழு} அப்சரஸ்களையும், மஹேந்திரனை அனுசரிப்போர் பத்து பேரையும், அங்கே இருந்த பிரம்ம ரிஷிகளையும், மானுஷர்களையும் இவன் பக்ஷித்துவிட்டான் {விழுங்கிவிட்டான்}.(38) வரம் ஏதும் அடையும் முன்பே இந்த ராக்ஷசன் இவ்வாறு செய்தான். வரத்தை அடைந்துவிட்டால் புவனங்கள் மூன்றையும் இவன் பக்ஷித்துவிடுவான் {மூன்று உலகங்களையும் இவன் விழுங்கிவிடுவான்}.(39) அளவிடற்கரிய ஒளிமிக்கவரே, வரம்போன்ற தோற்றத்தில் இவனுக்கு மோஹத்தை {மயக்கத்தைக்} கொடுப்பீராக. உலகங்களுக்கும் நன்மை பிறக்கும், இவனுக்கும் அஃது உடன்பாடாகும்" {என்றனர் தேவர்கள்}.(40)

[6] 35ம் ஸ்லோகத்தில் விபீஷணனுக்கு அமரத்வத்தை வரமாக அருளியதைப் போல கும்பகர்ணனுக்கும் வரமளித்து விடக்கூடாது என்று இங்கே தேவர்கள் வேண்டுவதாகத் தெரிகிறது.

ஸுரர்கள் {தேவர்கள்} இவ்வாறு கூறியதும், பத்மசம்பவனான {தாமரையில் உதித்தவனான} பிரம்மன் சிந்திக்கத் தொடங்கினான். சரஸ்வதி தேவியைக் குறித்துச் சிந்தித்ததும் பக்கத்தில் அவள் வந்தாள்.(41) கூப்பிய கைகளுடன் அருகில் நின்ற சரஸ்வதி இந்த வாக்கியத்தைச் சொன்னாள், "இதோ நான் வந்திருக்கிறேன். தேவரே, நான் செய்ய வேண்டிய காரியமென்ன?" {என்று கேட்டாள்}.(42)

அவள் வந்தபோது, பிரஜாபதி, சரஸ்வதியிடம் இந்த வாக்கியத்தைக் கூறினான், "வாணி[7], தேவர்களின் விருப்பத்திற்கிணங்க அந்த ராக்ஷசேந்திரனின் வாக்காவாயாக {ராக்ஷசர்களின் தலைவனான அந்தக் கும்பகர்ணனின் குரலில் / வாக்கில் நீ இருப்பாயாக" என்றான் பிரம்மன்}.(43)

[7] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வாணி என்றால் "சொல்" என்று பொருள். இது சரஸ்வதியைச் சுட்டும் மற்றொரு பெயராகும்" என்றிருக்கிறது.

"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு அவள் {கும்பகர்ணனின் நாக்கில்} நுழைந்ததும், பிரஜாபதி அவனிடம் {பிரம்மன் கும்பகர்ணனிடம் பின்வருமாறு} கூறினான், "கும்பகர்ணா, மஹாபாஹோ {வலிமைமிக்கத் தோள்களைக் கொண்டவனே}, கருத்தில் இருக்கும் வரத்தைக் கேட்பாயாக" {என்றான் பிரம்மன்}.(44)

அந்த வாக்கியத்தைக் கேட்ட கும்பகர்ணன் {பின்வரும்} வசனத்தில் பதிலளித்தான், "தேவதேவா, நான் அனேக வருஷங்கள் {பல ஆண்டுகள்} உறங்க விரும்புகிறேன்" {என்று கேட்டான்}.(45)

"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, பிரம்மன் தேவர்களுடன் சேர்ந்து புறப்பட்டுச் சென்றான். சரஸ்வதி தேவியும் அந்த ராக்ஷசனை விட்டு வெளியேறினாள்.(46) தேவர்களுடன் சேர்ந்து பிரம்மன் நபஸ்தலத்தை {வானுலகை} அடைந்ததும், சரஸ்வதியால் விடுவிக்கப்பட்டவன் {கும்பகர்ணன்} சுயநினைவை அடைந்தான்.(47) துஷ்டாத்மாவான கும்பகர்ணன், பெருந்துக்கத்துடன் சிந்தித்தான், "இன்று என் வதனத்தில் இருந்து இத்தகைய வாக்கியம் வெளிப்பட்டது எப்படி?(48) அப்போது இங்கே வந்திருந்த தேவர்களால் நான் மோஹமடைந்தேனென நினைக்கிறேன்" {என்று நினைத்தான் கும்பகர்ணன்}. இவ்வாறாக வரங்களைப் பெற்ற சர்வ பிராதாக்களும் {சகோதரர்கள் அனைவரும்} தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்தனர். அவர்கள் சிலேஷ்மாதகவனம் {தங்கள் தந்தை விஷ்ரவஸின் ஆசிரமம் இருந்த நறுவிலி மரங்கள் நிறைந்த காட்டில்} சென்று சுகமாக வசித்தனர்.(49)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 010ல் உள்ள சுலோகங்கள்: 49

Previous | Sanskrit | English | Next