Kubera | Sarga-003 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விஷ்ரவஸுக்குப் பிறந்த வைஷ்ரவணன்; தவம் செய்து வரம்பெற்று தனாதிபதியானது; லங்கை வாசம்...
புலஸ்தியரின் புத்திரரும், முனிபுங்கவருமான {முனிவர்களில் முதன்மையானவருமான} விஷ்ரவஸ், குறுகிய காலத்திலேயே தமது பிதாவைப் போல தபத்தில் ஈடுபட்டார்.(1) அவர் {விஷ்ரவஸ்}, சத்தியவாஞ்சி {உண்மை பேசுவதில் விருப்பமுள்ளவர்}; சீல வாஞ்சி {நல்லொழுக்கம் பேணுவதில் விருப்பமுள்ளவர்}; சாந்தர் {அமைதியானவர்}; அத்தியயனத்தில் {வேதம் ஓதுவதில்} ஈடுபாடுடையவர்; சர்வபோகங்களிலும் பற்றற்றவர்; நித்ய தர்மபராயணர் {எப்போதும் தர்மத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்}.(2)
அவரது இந்த விருத்தத்தை {நடத்தையை} அறிந்த மஹாமுனிவர் பரத்வாஜர், தேவவர்ணினி {தெய்வீக நிறம் கொண்டவள் / தேவவன்னி} என்ற தன் மகளை விஷ்ரவஸுக்குப் பாரியையாக {மனைவியாகக்} கொடுத்தார்.(3) அப்போது, தர்மத்திற்கிணங்க பரத்வாஜரின் மகளைப் பெற்றுக் கொண்டவர் {விஷ்ரவஸ்}, பிரஜைகளின் நலனை புத்தியில் கொண்டு, முனைப்புடன் சிந்தித்தார்.(4) முனிபுங்கவரான {முனிவர்களில் முதன்மையான} விஷ்ரவஸ், பரம மகிழ்ச்சியில் நிறைந்தார். அவர் வீரியம் நிறைந்த பரம அற்புதமான மகனை {குபேரனைப்} பெற்றெடுத்தார்.(5)
அவர் {விஷ்ரவஸ்}, தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, சர்வ பிரஹ்ம {பிராமண} குணங்களுடனும் கூடியவனுமான ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அவன் பிறந்தபோது, அவனது பிதாமஹர் {புலஸ்தியர்} பெரும் மகிழ்ச்சியடைந்தார்.(6) நலம் தரும் புத்தியுடன் கூடிய இவன், தனத்தின் யக்ஷனாக {செல்வத்தின் தலைவனாக} மாறுவான் என்பதைக் கண்டு, பிரீதியடைந்தவர் {விஷ்ரவஸ்}, தேவர்களுடனும், ரிஷிகளுடனும் சேர்ந்து தம் நாமத்தை {பெயரை} அவனுக்கு வழங்கினார்.(7) "விஷ்ரவஸின் மகன் விஷ்ரவஸைப் போலவே இருப்பதால், இவன் வைஷ்ரவணன் என்ற நாமத்தில் {பெயரில்} அழைக்கப்படுவான்" {என்று அவர்கள் [விஷ்ரவஸுடன் கூடிய தேவர்களும், ரிஷிகளும்] சொன்னார்கள்}[1].(8)
[1] தேவ வன்னி அச் செய்தவ முனிவன் ஆங்கு உரைத்தஏவல் செய்து அவண் இனிது இருந்து ஒழுகிட அந்தப்பாவை தன் வயிற் றோன்றினன் பல்லுலகு உள்ளோர்யாவரும் மனம் மகிழ்ந்திட எழில் மணிப் புதல்வன்.(42)விரிஞ்சனே முதல் ஆகிய வேதியர் உவகைபுரிந்த நெஞ்சினர் புரந்தர னாதியர் புகுந்துதெரிந்து நோக்கி வைச்சிரவணன் எனப் பெயர் செப்பித்திரிந்து போயினர் திசைதொறும் சேயினை வாழ்த்தி.(43)- ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டம் 42, 43ம் பாடல்கள், புலத்தியப்படலம்பொருள்: {தெய்வப் பெண் போன்றிருந்ததால்} தேவவன்னி {எனும் பெயர்பெற்ற அப்பெண், தன்னை மணந்து} தவம் செய்யும் முனிவன் {விஷ்ரவஸ்} அங்கு சொன்ன பணிகளைச் செய்து, அந்த இடத்தில் இனிதாக நடந்து கொள்ள, அந்தப் பெண்ணின் வயிற்றில் பல உலகத்தோரும் மனம் மகிழ்ந்திட மணி போன்ற அழுகுமிக்க ஒரு புதல்வன் தோன்றினான்.(42) விரிஞ்சன் {பிரம்மன்} முதலிய வேதியர்களும் {பிராமணர்களும்}, புரந்தரன் {இந்திரன்} முதலியோரும் {முதலிய தேவர்களும்} மகிழ்ச்சி நிறைந்த நெஞ்சத்துடன் அங்கு வந்து பார்த்து, வைஷ்ரவணன் {வைச்சிரவணன்} எனப் பெயர் சொல்லி குழந்தையை வாழ்த்திவிட்டுத் தத்தமது திசைகளுக்குத் திரும்பிச் சென்றனர்.(43)
பிறகு வைஷ்ரவணன் அங்கே தபோவனத்திற்குச் சென்றான். அனலனை {வேள்வி நெருப்பைப்} போன்ற மஹாதேஜஸ்ஸுடன் வளர்ந்தான்.(9) புத்தியை நன்கறிந்தவனான அந்த மஹாத்மா ஆஷ்ரமபதத்தில் இருந்தபோது, "நான் பரம தர்மத்தைக் கடைப்பிடிப்பேன். தர்மமே பரமகதி {இறுதி இலக்கு}" என்ற உறுதியுடன் இருந்தான்.(10) ஆயிரம் வருஷங்கள் மஹாவனத்தில் தபம் செய்தபிறகு, நியமத்துடன் இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, மஹத்தான தபங்களைச் செய்தான்.(11) ஆயிரம் வருஷங்கள் பூர்ணமடைந்ததும், அவன் {பின்வரும்} இந்த விதியைக் கடைப்பிடித்தான். ஜலத்தையும் {நீரையும்}, பிறகு மாருதத்தையும் ஆஹாரமாக {காற்றையும் உணவாகக்} கொண்டான். பிறகு ஆஹாரமேதுமின்றி இருந்தான்.(12) இவ்வாறே ஆயிரம் வருஷங்களும் ஏக {ஒரு} வருஷம் போலக் கடந்து சென்றன. பிறகு இந்திரனுடனும், ஸுரகணங்களுடனும் {தேவர்களின் கூட்டத்துடனும்} கூடிய மஹாதேஜஸ்வி {பிரம்மன்} பிரீதியடைந்தான்.(13)
பிரம்மன், அவனது ஆசிரமபதத்திற்குச் சென்று, இந்த வாக்கியத்தைக் கூறினான், "வத்ஸா {குழந்தாய்}, நல்விரதம் கொண்டவனே, உன் கர்மங்களில் {செயல்களில்} நான் பெரும் நிறைவடைந்தேன். மஹாமதி கொண்டவனே, உனக்கு பத்ரம் {மங்கலமாக இருப்பாயாக}. வரத்திற்குத் தகுந்தவனான நீ ஒரு வரத்தைக் கேட்பாயாக" {என்றான் பிரம்மன்}.(14) அப்போது வைஷ்ரவணன், அங்கே வந்திருந்த பிதாமஹனிடம் {பெரும்பாட்டன் பிரம்மனிடம்}, "பகவானே, நான் லோகபாலனாகவும், செல்வத்தை ரக்ஷணம் செய்பவனாகவும் விரும்புகிறேன்" என்றான்.(15)
உள்ளம் நிறைவடைந்த பிரம்மன், ஸுரகணங்களுடன் சேர்ந்து, வைஷ்ரவணனிடம் பெரும் மகிழ்ச்சியடைந்தவனைப் போல, "அப்படியே" என்று கூறியபிறகு,(16) "நான்காம் லோகபாலனை நான் சிருஷ்டிக்கப் போகிறேன்.(17) யமன், இந்திரன், வருணன் ஆகியோரின் பதத்தையே {பதவியையே} நீ விரும்புகிறாய். எனவே, தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, இப்போதே சென்று நிதீசன் ஆவாயாக {செல்வத்தின் தலைவனாவாயாக}. சக்ரன் {இந்திரன்}, வருணன், யமன் ஆகியோருடன் நான்காமவனாக {நான்காம் லோகபாலனாக} இருப்பாயாக.(18) சூரியனைப் போலப் பிரகாசிப்பதும், புஷ்பகம் என்ற நாமத்தை {பெயரைக்} கொண்டதுமான இந்த விமானத்தை வாகனமாகப் பெற்றுக் கொண்டு, திரிதசர்களின் {சொர்க்கவாசிகளின்} நிலையை அடைவாயாக.(19) உனக்கு ஸ்வஸ்தி {நல்வாழ்த்துகள்}. நாங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தோமோ, அங்கேயே திரும்புகிறோம். தாதா {ஐயா}, உனக்கு இவ்விரண்டு வரங்களைக் கொடுத்து, நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டோம்" {என்றான் பிரம்மன்}.(20) இதைச் சொல்லிவிட்டு, திரிதசர்களுடன் சேர்ந்து பிரம்மன் தன் ஸ்தானத்திற்கு {இருப்பிடத்திற்குத்} திரும்பிச் சென்றான்.(21)
நபஸ்தலம் {வான்} வழியே பிரம்மன் முதலிய தேவர்கள் சென்ற பிறகு, அந்த பிரயதாத்மவான் {சுயக்கட்டுப்பாடு கொண்ட வைஷ்ரவணன்}, வனத்தில் தன் பிதாவிடம் கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வருமாறு} பேசினான், "பிரஜாபதியான அந்த தேவர் {பிரம்மர்} எனக்கு ஒரு வசிப்பிடத்தை விதிக்கவில்லை.(22) பகவானே, பிதாமஹரிடம் {பெரும்பாட்டன் பிரம்மனிடம்} இருந்து எனக்கு இஷ்டமான வரத்தைப் பெற்றுக் கொண்டேன். பிரபோ, பகவானே, எனக்கு நல்ல வசிப்பிடத்தை நீர் பார்ப்பீராக.(23) அஃது எந்தப் பிராணிக்கும் எவ்விதப் பீடையும் {துன்பமும்} நேராத இடமாகட்டும்" {என்று கேட்டான் வைஷ்ரவணன்}. இவ்வாறே முனிபுங்கவரான விஷ்ரவஸின் புத்திரன் {குபேரன்} உரைத்தான்.(24)
அவர் {விஷ்ரவஸ்}, "தர்மஜ்ஞர்களில் {தர்மத்தை அறிவர்களில்} சிறந்தவனே, கேட்பாயாக" என்று சொல்லிவிட்டு, "தக்ஷிணஸ்யோததியின் தீரத்தில் {கடலின் தென்கரையில்}, திரிகூடம் என்ற பெயரில் ஒரு பர்வதம் இருக்கிறது.(25) அதன் உச்சியில் மஹேந்திரனின் புரீயைப் போல விசாலமானதும், லங்கை என்ற பெயரைக் கொண்டதுமான ரம்மியமான புரீ {நகரம்} விஷ்வகர்மனால் நிர்மிதம் செய்யப்பட்டிருக்கிறது.(26) இந்திரனுக்கான அமராவதியைப் போல, அது ராக்ஷசர்கள் வசிப்பதற்காகப் பயன்பட்டது. உனக்கு பத்ரம் {மங்கலமாக இருப்பாயாக}. அந்த லங்கையில் எவ்வித இடையூறுமின்றி வசித்திருப்பாய். இதில் சந்தேகமில்லை.(27) ஹேமப் பிராகாரங்களாலும் {பொன் மதில்களாலும்}, பரிகங்களாலும் {இரும்புத் தடிகளாலும்}, யந்திரங்களாலும், சஸ்திரங்களாலும் சூழப்பட்டிருக்கும் அந்தப் புரீ {லங்கா நகரம்}, ருக்ம வைடூரியத் தோரணங்களுடன் ரமணீயமாக இருக்கிறது.(28) பூர்வத்தில் விஷ்ணுவிடம் கொண்ட பயத்தின் காரணமாக ராக்ஷசர்கள் அதை {லங்கையைக்} கைவிட்டனர். சர்வ ரக்ஷோகணங்களும் ரசாதலத்திற்குச் சென்றுவிட்டதால் அது சூனியமாக {லங்கை வெறுமையாக} இருக்கிறது.(29) இப்போது பிரபு எவரும் இல்லாமல் சூனியமாக இருக்கும் அந்த லங்கையில், புத்திரா, நீ சென்று சுகமாக வசிப்பாயாக.(30) அங்கே நீ வசிப்பதில் தோஷமேதும் இல்லை. எவரிடமிருந்தும் எந்தத் தடையும் நேராது" {என்றார் விஷ்ரவஸ்}. அந்த தர்மாத்மா {வைஷ்ரவணன்}, தர்மிஷ்டரான தன் பிதாவின் {தந்தை விஷ்ரவஸின்} இந்த வசனத்தைக் கேட்டான்.(31)
பர்வத உச்சியில் இருந்த லங்கையில் அதுமுதல் அவன் {குபேரன்} வசித்துவந்தான். விரைவில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் மிக்க ஆயிரக்கணக்கான நைர்ருதர்களும் {அங்கே} வந்தனர்.(32) அவனது ஆணையின் பேரில், குறைந்த காலத்திலேயே அது சம்பூர்ணம் அடைந்தது {லங்கை அந்த நைர்ருதர்களால் நிறைந்தது}.(33) நைர்ருதரிஷபனும், தர்மாத்மாவுமான அந்த விஷ்ரவாத்மஜன் {விஷ்ரவஸின் மகனான வைஷ்ரவணன்}, சமுத்திரத்தையே அகழியாகக் கொண்ட அந்த லங்கையில் பிரீதியுடன் வசித்து வந்தான்.(34) தர்மாத்மாவான அந்த தனேஷ்வரன் {செல்வத்தின் தலைவனான குபேரன்}, காலாகாலத்தில் {அவ்வப்போது} புஷ்பகத்தில் ஏறிச் சென்று தன் பிதாவையும், மாதாவையும் வினீதாத்மனாக {பணிவுடன் கூடியவனாக} வணங்கி வந்தான்.(35) தேவ, கந்தர்வ கணங்கள் அங்கே அவனை வணங்கினர். அப்சரஸ்கள் அவனது ஆலயத்தில் நடனமாடினர். அந்த கபஸ்தி {செல்வந்தன்}, கதிர்களால் பிரகாசிக்கும் சூரியனைப் போலத் தன் பிதாவின் {விஷ்ரவஸின்} சமீபத்தை அடைந்தான்.(36)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 003ல் உள்ள சுலோகங்கள்: 36
| Previous | | Sanskrit | | English | | Next |

