Wednesday, 26 November 2025

சுகேசன் | சர்க்கம் – 004 (32)

Sukesa | Sarga-004 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷச இனம்; ஹேதி, வித்யுத்கேசன் ஆகியோர் பிறந்தது குறித்த விளக்கம்; சந்தியையின் மகளான ஸாலகடங்கடையை அடைந்த வித்யுத்கேசன்; அவர்களின் வாரிசாகப் பிறந்த சுகேசன்...

Lord Shiva, Devi Parvati and Rakshasa Sukesha

அகஸ்தியரின் அந்த வாக்கியத்தைக் கேட்ட ராமன், லங்கையில் எப்படிப் பூர்வத்தில் ராக்ஷசர்கள் இருந்தனர் என்பதில் ஆச்சரியமடைந்தான்[1].(1)

[1] கோரக்பூர் கீதா பிரஸ் தமிழ்ப்பதிப்பில், அடைப்புக்குறிக்குள், "என்ற ஐயம் எழுந்தது. அரக்கர் குல முதல்வராக விச்ரவஸ் கருதப்படுகிறார். எனவே, அவருக்கு முன், இலங்கையில் அரக்கர்கள் இருந்தார்களா? - என்பதால் ஆச்சரியம்" என்றிருக்கிறது.

பிறகு அவன் சிரத்தை {தலையை} அசைத்தபடியே திரேதாக்னிக்கு {தக்ஷிணாக்னி, கார்ஹபத்தியம், ஆஹவனீயம் என்ற மூன்று அக்னிகளுக்கு} சமமான தோற்றத்துடன் கூடிய அந்த அகஸ்தியரை அடிக்கடிப் பார்த்துப் புன்னகைத்து {பின்வருமாறு} வினவினான்:(2) "பகவானே, பூர்வத்தில் லங்கையில் பிசிதாஷனர்கள் {மாமிசம் உண்பவர்கள்} இருந்திருந்தனர் என்ற அந்த பகவத் வாக்கியத்தைக் கேட்டு ஆச்சரியமடைகிறேன்.(3) இராக்ஷசர்கள் புலஸ்திய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டிருக்கிறேன். இப்போதோ வேறுவிதமாகவும் அவர்கள் தோன்றியதைக் குறித்து நீர் குறிப்பிடுகிறீர்.(4)

இராவணன், கும்பகர்ணன், பிரஹஸ்தன், விகடன் ஆகியோரைவிடவும், ராவணனின் புத்திரர்களைவிடவும் அவர்கள் பலம் நிறைந்தவர்களா?(5) அவர்களின் பூர்வகர்கள் {மூதாதையர்} யாவர்? பிராமணரே, அவர்களுடைய பெயரென்ன? அவர்களுடைய பலமென்ன? அவர்கள் செய்த அபராதம் {குற்றம்} என்ன? விஷ்ணுவால் அவர்கள் எப்படி விரட்டப்பட்டனர்?(6) பாவமற்றவரே, இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக. இருளைப் போக்கும் பானுவை {சூரியனைப்} போல {அறிந்து கொள்வதிலுள்ள} என்னுடைய இந்தக் குதூஹலத்தைப் போக்குவீராக" {என்று கேட்டான் ராமன்}.(7)

ஸம்ஸ்காரங்களால் {சொல், வாக்கியம், பொருள் ஆகியவற்றால்} அலங்கரிக்கப்பட்ட ராகவனின் சுபமான சொற்களைக் கேட்டு சற்றே ஆச்சரியமடைந்த அகஸ்தியர், ராகவனிடம் {பின்வருமாறு} கூறினார்:(8) "நீரில் பிறந்தவனான பிரஜாபதி {பிரம்மன்}, முதலில் கடல்நீரை சிருஷ்டித்தான். பத்மத்தில் {தாமரையில்} பிறந்தவன், அதை {கடல்நீரைப்} பாதுகாப்பதற்காக சத்வங்களை {உயிரினங்களைப்} படைத்தான்.(9) அந்த சத்வங்கள் {நீர்வாழ் உயிரினங்கள்}, பசி, தாகம், பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டு, "என்ன செய்வது?" என்று {தங்களுக்குள்} பேசிக் கொண்டு, பணிவுடன் சத்வகர்த்தாவை {உயிரினங்களைப் படைத்தவனான பிரம்மனை} அணுகின.(10) மானதனான பிரஜாபதி {அருளுள்ளம் கொண்ட பிரம்மன்}, அங்கே வந்த சத்வங்களிடம் {உயிரினங்களிடம்} சிரித்துக் கொண்டே, "யத்னத்துடன் ரக்ஷிப்பீராக {விடாமுயற்சியுடன் காப்பீராக}" என்ற சொற்களைக் கூறினான்.(11) பசி, தாகத்தால் பீடிக்கப்பட்ட அவர்களில் சிலர், "நாங்கள் ரக்ஷிப்போம் {பாதுகாப்போம்}" என்றும், வேறு சிலர், "நாங்கள் ஜக்ஷிப்போம் {பூசிப்போம்}" என்றும் சொன்னபோது, பூதக்ருத் {உயிரினங்களைப் படைத்த பிரம்மன்},(12) "உங்களில், "ரக்ஷிப்போம்" என்று சொன்னவர்கள் ராக்ஷசராவீராக. உங்களில், "ஜக்ஷிப்போம்" என்று சொன்னவர்கள் யக்ஷராவீராக" என்று சொன்னான்.(13)

அங்கே ஹேதி, பிரஹேதி என்ற பிராதாக்கள் {உடன்பிறந்தோர்} இருவரும் ராக்ஷசாதிபர்களானார்கள். அரிந்தமர்களை {பகைவரை} அடக்கும் மது, கைடபர்களைப் போலானார்கள்.(14) தார்மிகனான பிரஹேதி, தபோவனத்திற்குச் சென்றான். ஹேதி, தாரக்கிரியையின் அர்த்தத்திற்காக பரம யத்னம் {திருமணத்திற்காகப் பெரும் முயற்சி} செய்தான்.(15) அளவில்லா வலிமையுடனும், மஹாமதியுடனும் கூடிய அவன் {ஹேதி}, பயத்தை விளைவிப்பவளும், காலனின் பகினியுமான பயா {யமனின் சகோதரியுமான பயை / பயம்} என்ற பெயருடைய கன்னிகையை தானே அடைந்தான்.(16) இராக்ஷசபுங்கவனான ஹேதி, அவளிடம் {பயையிடம்} ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தான். புத்திரர்களைப் பெற்றவர்களில் சிறந்தவனான அவனுக்கு {ஹேதிக்கு}, வித்யுத்கேசன் {மின்னலைக் கேசமாகக் கொண்டவன்} என்ற புத்திரன் இருந்ததாகக் கூறப்படுகிறது.(17) ஹேதியின் புத்திரன் வித்யுத்கேசன், அர்க்கனுக்கு {சூரியனுக்கு} சமமான பிரபையைக் கொண்டவனாக இருந்தான். அந்த மஹாதேஜஸ்வி, நீரின் மத்தியில் ஒரு மேகம் போல் வளர்ந்து வந்தான்.(18) அந்த நிசாசரன் {இரவுலாவியான வித்யுத்கேசன்}, யௌவனத்தை {இளமைப் பருவத்தை} அடைந்ததும், அவனது பிதா {தந்தை ஹேதி} அவனுக்கு தாரக்கிரியை {திருமணத்தை} நடத்த முடிவு செய்தான்.(19)

இராக்ஷசபுங்கவனான ஹேதி, பிரபாவத்தால் சந்தியைக்குத் துல்லியமான சந்தியா தனயையை {சந்தியையின் மகளைத்} தன் புத்திரனுக்காகத் தேர்ந்தெடுத்தான்.(20) இராகவா {ராமா}, சந்தியாவும், 'அவளை மற்றவருக்கு அவசியம் தத்தம் செய்துதானே ஆக வேண்டும்' என்று சிந்தித்து வித்யுத்கேசனுக்கே அவளை தத்தம் செய்தாள்.(21) நிசாசரன் வித்யுத்கேசன், சந்தியாவின் தனயையை அடைந்து, பௌலோமியுடன் மகவானைப் போல {இந்திராணியுடன் இந்திரனைப் போல} அவளுடன் இன்புற்று வாழ்ந்து வந்தான்[2].(22) சிறிது காலம் கழித்து, ராமா, சாலகடங்கடா {சந்தியையின் மகளான ஸாலகடங்கடை} அர்ணவத்தில் {பெருங்கடலில்} மேகக்கூட்டத்தைப் போல, வித்யுத்கேசன் மூலம் கர்ப்பமடைந்து பிரகாசித்தாள்.(23) பிறகு அந்த ராக்ஷசி {சாலகடங்கடா}, மேககர்ப்பத்திற்கு {மின்னலுக்கு} சமமான பிரபையுடன் கூடிய கர்ப்பத்தை, அக்னியில் இருந்து கங்கையிடம் பிறந்த கர்ப்பத்தை {ஸ்கந்தனைப்} போல, மந்தரம் {மந்தர மலைக்குச்} சென்று பெற்றெடுத்தாள்.(24)

[2] நீடு வார்குழல் நேரிழையாளும் வண்டு
ஆடு தார்திகழ் அந்த அரக்கனும்
கூடும் ஆவியும் கூடிய அன்றிலும்
பேடும் என்னப் பிரியலர் ஆயினர்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 63ம் பாடல், அரக்கர் பிறப்புப் படலம்

பொருள்: மிக நீண்ட கூந்தலையும், பொருந்திய அணிகலன்களை அணிந்தவளும் {சாலகடங்கடையும்}, வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலை அணிந்த அந்த ராக்ஷசனும் {வித்துக்கேசியும்}, உடலும், உயிரும் போலவும் கூடி வாழ்கின்ற அன்றில் பறவையும், அதன் பேட்டையும் போலவும் ஒன்றிப் பிரியாமல் இன்புற்றிருந்தனர்.

Siva and Parvathi seeing Sukesha

அவள் {சாலகடங்கடா}, தன் கர்ப்பத்தை அங்கேயே {மந்தரமலையில்} விட்டுவிட்டு, வித்யுத்கேசனுடன் விரும்பிச் சென்றாள். அவள் தான் பெற்ற சுதனை {மகனை} முற்றிலும் மறந்து, பதியுடன் {கணவன் வித்யுத்கேசனுடன்} மகிழ்ந்திருந்தாள்.(25) கைவிடப்பட்ட அந்த கர்ப்பம், மேக சப்தத்தைப் போன்ற ஸ்வனம் எழுப்பியது. அவள் விட்டுச் சென்ற சிசு, சரத்கால அர்க்கனைப் போலப் பிரகாசித்தது. தானாகவே முஷ்டியை {கைவிரலை} வாயில் வைத்துக் கொண்டு மெல்ல அழுதது.(26)

சிவன், பார்வதி சகிதனாக, ரிஷபத்தின் {காளையின்} மீது அமர்ந்து, வாயுமார்க்கமாக சென்றபோது, அந்த சிசுவின் {குழந்தையின்} அழுகைஸ்வனத்தைக் கேட்டான்.(27) உமையுடன் கூடியவனும், திரிபுரசூதனனுமான பவன் {முப்புரமழித்தவனுமான சிவன்}, பார்வதிக்கு காருண்யம் தோன்றியதும், அழுது கொண்டிருக்கும் ராக்ஷசாத்மஜனை {ராக்ஷசன் வித்யுத்கேசனின் மகனைப்} பார்த்தான்.(28) அக்ஷரனான மஹாதேவன் {அழிவற்றவனும், தேவர்களில் உயர்ந்தவனுமான சிவன்}, அந்த ராக்ஷசாத்மஜனை, அவனது மாதாவுக்கு சம வயதுடையவனாகவும், அமரனாகவும் {மரணமில்லாதவனாகவும்} மாற்றினான்.(29) பார்வதிக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பி, ஆகாசத்தில் எழுந்துசெல்லவல்ல புரத்தையும் {நகரத்தையும்} கொடுத்தான். நிருபாத்மஜா {மன்னனின் மகனான ராமா}, உமையும் ராக்ஷசர்களுக்கு வரங்களை தத்தம் செய்தாள்.(30) "அவர்கள் {ராக்ஷசர்கள்}, உடனே கர்ப்பம் தரிப்பார்கள்; உடனே ஈன்றெடுப்பார்கள்; உடனே மாதாவுக்கு சமமான வயதை அடைவார்கள்" {என்ற வரங்களைக் கொடுத்தாள்}[3].(31)

[3] கோரக்பூர், கீதா பிரஸ் தமிழ்ப்பதிப்பின் அடைப்புக்குறிக்குள், "அரக்கிகளுக்குக் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆசை இருந்தது; ஆனால், குழந்தையைப் பேணிக் காப்பதில் அக்கறை இல்லை - என்பது இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது. தாய்மார்களின் கவனிப்பு இல்லாத சின்னஞ்சிறு சிசு கஷ்டப்படுமே? என்ற இரக்கத்தால்" இந்த வரத்தை உமை கொடுத்ததாக இருக்கிறது.

{வித்யுத்கேசனின் மகனான} சுகேசன், ஹரனின் துணையுடன், அந்தப்பிரபுவின் செல்வத்தையும், புரத்தையும் {நகரத்தையும்} வரதானமாக அடைந்து, மஹானும், மஹாமதியுடையவனுமான புரந்தரன் {இந்திரன்} எப்படியோ, அப்படியே எங்கும் செருக்குடன் திரிந்து கொண்டிருந்தான்.(32)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 004ல் உள்ள சுலோகங்கள்: 32

Previous | Sanskrit | English | Next