Thursday, 20 November 2025

புலஸ்தியரின் மகன் விஷ்ரவஸ் | சர்க்கம் – 002 (34)

Vishravas, Pulastya's son | Sarga-002 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அகஸ்தியர் ராக்ஷசவம்ச வரலாற்றைக் கூறத்தொடங்கி, புலஸ்தியரின் தவப்பெருமையையும், அவருக்கு விச்ரவஸ் என்ற மகன் பிறந்ததையும் கூறியது...

Pulastya and the daughter of Trinabindu

மஹாத்மாவான ராகவனின் அந்த வசனத்தைக் கேட்டு, மஹாதேஜஸ்வியான கும்பமுனி {அகஸ்தியர்} ராமனிடம் {பின்வருமாறு} சொன்னார்:(1) "இராமா, அவனது {இந்திரஜித்தின்} மஹத்தான தேஜோபலம் குறித்த கதையைக் கேட்பாயாக. சத்ருக்கள் பிறரைக் கொல்பவனான அவன் {இந்திரஜித்}, சத்ருக்களால் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான்.(2) இராகவா, அதற்கு முன், ராவணனின் குலம், ஜன்மம் {பிறப்பு}, அதேபோல அவன் பெற்ற வரங்கள் ஆகியவற்றை உனக்குக் கூறுகிறேன்.(3)

பூர்வத்தில், கிருதயுகத்தில், இராமா, பிரபுவான பிரஜாபதியின் சுதனாக {மகனாக}, சாக்ஷாத் பிதாமஹனையே {பிரம்மனையே} போன்றவரும், புலஸ்தியர் என்ற நாமத்தை {பெயரைக்} கொண்டவருமான ஒரு பிரம்மரிஷி இருந்தார்.(4) தர்மம், சீலம் ஆகியவற்றால் அமைந்த அவரது குணங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பிரஜாபதியின் புத்திரன் என்று சொல்வதே அவற்றை உணர்த்தப் போதுமானதாக இருந்தது.(5) பிரஜாபதிசுதனான அவர் தேவர்களின் மதிப்பிற்குரியவராக இருந்தார். அந்த மஹாமதிபடைத்தவர், தம்முடைய குணங்களாலும், சுபமான நடத்தையாலும் உலகத்தினர் அனைவராலும் விரும்பத்தக்கவராக இருந்தார்.(6)

அவர் தர்ம பிரசங்கத்திற்காக {தவம் புரிவதற்காக} மஹாகிரியான மேருவின் சாரலில் இருந்த முனிபுங்கவரான திருணபிந்துவின்[1] ஆசிரமத்திற்குச் சென்று அங்கேயே வசித்து வந்தார்.(7) தர்மாத்மாவான அவர் {புலஸ்தியர்}, அத்தியயனத்தில் ஈடுபட்டு {வேதங்களை ஓதி}, தவம் செய்து இந்திரியங்களை அடக்கினார். கன்னிகைகள் சிலர், அந்த ஆசிரமபதத்திற்குச் சென்று விக்னம் விளைவித்தனர் {இடையூறு செய்தனர்}.(8) தேவ, பன்னக கன்னிகைகளும், ராஜரிஷிகளின் தனயைகளும் {மகள்களும்}, அப்சரஸ்களும் வேடிக்கையாக விளையாடிக் கொண்டே அந்த தேசத்தை {அவர் இருந்த இடத்தை} நெருங்கினர்.(9) அந்தக் கானகம், சர்வ ருதுக்களிலும் {பருவ காலங்கள் அனைத்திலும்} அனுபவிக்கத் தகுந்ததாகவும், ரம்மியமானதாகவும் இருந்ததால் அந்தக் கன்னிகைகள் நித்தியம் அந்த தேசத்திற்கு {இடத்திற்குச்} சென்று விளையாடிக் கொண்டிருந்தனர்.(10) துவிஜரான {இருபிறப்பாளரான} புலஸ்தியர் வசித்த அந்த தேசம் ரமணீயமாக இருந்ததால், அவர்கள் ஆடியும், பாடியும், வாத்தியங்களை இசைத்தும், சிரித்தும், அந்த முனிவரின் குற்றமற்ற தவத்திற்கு விக்னம் விளைவித்துக் கொண்டிருந்தனர்.(11) 

[1] இவரது பெயர் சில பதிப்புகளில் திருணவிந்து எனவும், சிலவற்றில் திரணவிந்து என்றும் குறிப்பிடப்படுகிறது. 

அப்போது, மஹாதேஜஸ்வியான மஹாமுனிவர், "எவள் என்னால் தரிசிக்கப்படுகிறாளோ, அவள் கர்ப்பம் தரிப்பாளாக" என்று கோபத்துடன் கூறினார்[2].(12) மஹாத்மாவான அவரது வாக்கியத்தைக் கேட்ட அவர்கள் அனைவரும், பிரம்ம சாபத்தின் மீது கொண்ட பீதியால் அந்த தேசத்தை {இடத்தை} நெருங்காதிருந்தனர்.(13) இராஜரிஷியான திருணபிந்துவின் தனயை {மகள்}[3] அதைக் கேட்டாளில்லை.(14) 

[2] எரியும் நெஞ்சினன் என்னிடை இற்றைநாள் தொடங்கி
மருவிநீர் எனின் மங்கையீர் உங்களுக்கு அடாத
கருவுண்டாகெனச் சவிப்ப அக்கன்னியர் கலங்கி
வெருவி ஓடினர் திசைதொறும் வேறுவேறாகி

- ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டம் 32ம் பாடல், புலத்தியப்படலம்

பொருள்: எரியும் மனத்தைக் கொண்டவன் {புலத்தியன்}, "இன்று தொடங்கி நீங்கள் என்னிடத்திற்கு வருவீராயின், மங்கையீர், உங்களுக்குப் பொருந்தாத கர்ப்பம் உண்டாகும்" எனச் சபிக்கவே அந்தக் கன்னியர் மனங்கலங்கி அச்சமடைந்து திசைகள்தோறும் வேறு வேறாகி ஓடினர்.

[3] இவளது பெயர் மானினி என்று Puranic Encylopediaவில் (புரானிக் என்சைக்ளோபீடியோவில்) குறிப்பிடப்படுகிறது. https://www.wisdomlib.org/hinduism/compilation/puranic-encyclopaedia/d/doc242014.html பாகவதபுராணம், 3ம் ஸ்கந்தம், 24ம் அத்தியாயம், 22ம் சுலோகத்தின்படி, {பிரஜாபதி புலஹரின் மகனான} முனிவர் கர்த்தமருக்கும், {ஸ்வாயம்பூவ மனுவின் மகள்} தேவஹூதிக்கும் பிறந்து, புலஸ்தியருக்கு மனைவியானவள் ஹவிர்பூ ஆவாள். https://www.wisdomlib.org/hinduism/book/the-bhagavata-purana/d/doc1127073.html

அவள் ஆசிரமபதத்திற்குச் சென்று, அங்கே பயமின்றி சுற்றிக் கொண்டிருந்தாள். அங்கே நின்றவள், தன்னுடன் வந்த சகீக்கள் {தோழிகள்} யாரையும் கண்டாளில்லை.(15) அதே காலத்தில், பிராஜாபதியும் {பிரஜாபதியின் மகனும்}, மஹாதேஜஸ்வியுமான மஹாரிஷி {புலஸ்தியர்},  அத்தியயனத்தில் ஈடுபட்டபடியே {வேதமோதியபடியே} தபம் செய்து கொண்டிருந்தார்.(16) அந்த வேத சுருதியைக் கேட்டவள், அந்த தபோநிதியையும் {தபத்தையே செல்வமாகக் கொண்ட புலஸ்தியரையும்} கண்டாள். அவளது தேகம் வெண்மையாகி கர்ப்பத்திற்கான அடையாளங்கள் வெளிப்பட்டன.(17) தன்னில் உள்ள தோஷத்தை {குறையை / குற்றத்தைக்} கண்டதும் அவள் கலங்கினாள். 'இஃது என்ன?' என்பதை உணராதவள், தன் பிதாவின் ஆசிரமத்திற்குச் சென்று அங்கேயே இருந்தாள்.(18) 

அந்நிலையில் அவளைப் பார்த்த திருணபிந்து, "உனக்குத் தகாத இந்த வடிவத்தை ஏன் தரித்திருக்கிறாய்?" என்று அவளிடம் கூறினார்.(19) தீனமாக இருந்த அந்தக் கன்னிகை, தன் கைகளைக் கூப்பி, அந்த தபோதனரிடம் {பின்வருமாறு} கூறினாள், "ஏன் எனது ரூபம் இவ்வாறு மாறியது என்ற காரணத்தை நான் அறியமாட்டேன்.(20) பூர்வத்தில் {இதற்கு முன்}, பாவிதாத்மரான {தன்னைக் குறித்த தியானத்தில் இருப்பவரான} மஹரிஷி புலஸ்தியரின் திவ்ய ஆசிரமத்திற்கு என் சகீகளை {தோழிகளைத்} தேடித் தனியாகச் சென்றேன்.(21) அங்கே நான் தேடிச் சென்ற என் சகீகள் எவரையும் காணவில்லை. என் ரூபம் பெரிதும் மாறியதைக் கண்டு அச்சமடைந்து இங்கே வந்தேன்" {என்றாள் திருணபிந்துவின் மகள்}.(22) 

தபத்தால் பிரகாசிக்கும் ராஜரிஷியான அந்த திருணபிந்து, தியானத்தில் ஆழ்ந்து, அது {புலஸ்திய} ரிஷியுடைய கர்மத்தின் விளைவு என்பதைக் கண்டார்.(23) பாவிதாத்மரான {புலஸ்திய} மஹரிஷியுடைய சாபத்தின் விளைவு இஃது என்பதை உணர்ந்தவர், தன் தனயையை {மகளை} அழைத்துக் கொண்டு புலஸ்தியரிடம் சென்று {பின்வருமாறு} கூறினார்:(24) "பகவானே, என் தனயை {மகள்} நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்டவள். மஹரிஷியே, இவளை தானே வந்த பிக்ஷையாக நீர் ஏற்றுக் கொள்வீராக.(25) நீர் தபஸ்ஸில் ஈடுபடுகிறீர். சிரமத்துடன் இந்திரியங்களை அடக்கி வைத்திருக்கிறீர். இவள் நித்யம் உமக்குத் தொண்டாற்றுவதில் அர்ப்பணிப்புடன் இருப்பாள். இதில் சந்தேகமில்லை" {என்றார் திருணபிந்து}.(26)

அப்போது தார்மிகரான அந்த ராஜரிஷி சொன்ன அந்த வாக்கியத்தைக் கேட்ட அந்த துவிஜர் {புலஸ்தியர்}, அவளை ஏற்றுக் கொள்ளும் விருப்பத்துடன், "சரி" என்று சொன்னார்.(27) அவர் {திருணபிந்து} எது நியாயமோ, அதன்படி தத்தம் {கன்னிகாதானம்} செய்துவிட்டுத் தமது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார். அந்தக் கன்னிகை, தன் பதியைத் தன் குணங்களால் மகிழ்வித்து அங்கேயே வாழ்ந்து வந்தாள்.(28) முனிபுங்கவரும் அவளுடைய சீலத்தால் {நன்னடத்தையால்} பிரீதியடைந்தார். அப்போது, அந்த மஹாதேஜஸ்வி {புலஸ்தியர்} இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(29) "அழகிய இடையைக் கொண்டவளே, உன் குணங்களின் சம்பத்தில் {நற்பண்புகளெனும் செல்வத்தில்} நான் நிறைவடைந்தேன். எனவே, தேவி, எனக்குச் சமமான ஒரு புத்திரனை நான் உனக்குத் தருகிறேன்.(30) நம்மிருவரின் வம்சத்தையும் விளங்கச் செய்யும் அவன், பௌலஸ்தியன் என்று அழைக்கப்படுவான். நான் வேத அத்தியயனத்தில் ஈடுபட்டிருக்கும்போது நீ வந்து கேட்டிருக்கிறாய்.(31) எனவே, அவன் விஷ்ரவன்{ஸ்}[4] என்று அழைக்கப்படுவான். இதில் சந்தேகமில்லை" {என்றார் புலஸ்தியர்}. இவ்வாறு சொல்லப்பட்டதும் அந்த தேவி தன் அந்தராத்மாவில் பெரும் மகிழ்ச்சியடைந்தாள்.(32)

[4] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், ""விஷ்ருதம் (கேட்பது)" என்ற பொருளில் இருந்து பெறப்பட்ட பெயர் இஃது. அந்த மகனின் பெயர் விஷ்ரவன். பௌலஸ்தியன் என்றால் புலஸ்தியரின் மகன் என்பது பொருளாகும். எனவே, அவர் பௌலஸ்தியருமாவார்" என்றிருக்கிறது.  

சிறிது காலத்தில் அவள் விஷ்ரவஸ் என்ற சுதனை {மகனை} ஈன்றெடுத்தாள். அவர் {விஷ்ரவஸ்} தமது தர்ம ஒழுக்கத்தால் மூன்று உலகங்களிலும் புகழ் பெற்று விளங்கினார்.(33) சுருதிகளில் {வேதங்களில்} நன்கு தேர்ச்சி பெற்று, {அனைத்து உயிரினங்களிடமும்} சமமான பார்வை கொண்டு, விரத ஆசாரங்களில் ஈடுபட்ட விஷ்ரவஸ் முனிவர், தம் பிதாவைப் போலவே தபத்தில் ஈடுபட்டார்.(34)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 002ல் உள்ள சுலோகங்கள்: 34

Previous | Sanskrit | English | Next