Is Indrajit the greatest? | Sarga-001 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனைச் சந்தித்த பெரும் முனிவர்கள்; அவர்களது உரையாடல்; ராமன் கேட்ட கேள்விகள்...
இராமன் ராக்ஷசர்களை வதம் செய்து, ராஜ்ஜியத்தை அடைந்த பிறகு, ராகவனை வரவேற்பதற்காக சர்வ ரிஷிகளும் வந்தனர்.(1) பூர்வ {கிழக்குத்} திசையில் இருந்து கௌசிகர், யவக்ரீதர், கார்க்கியர், காலவர், மேதாதியின் புத்திரரான கண்வர் ஆகியோர் வந்தனர்.(2) தக்ஷிணாம் {தெற்குத்} திசையில் இருந்து ஸ்வஸ்தி, ஆத்ரேயர், அதேபோல, நமுசி, பிரமுசி ஆகியோர் அகஸ்தியருடன் வந்தனர்[1].(3) பஷ்சிமாம் {மேற்குத்} திசையில் இருந்து, நிருஷத்ரு, கவஷர், தௌம்யர், மஹாரிஷி ரௌத்ரேயர் ஆகியோர் தங்கள் சிஷ்யர்களுடன் சேர்ந்து வந்தனர்.(4) வசிஷ்டர்[2], கஷ்யபர், அதேபோல அத்ரி, விஷ்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர் உள்ளிட்ட சப்தரிஷிகள்{5} என உதீச்யாம் {வடக்குத்} திசையில் நித்யம் வசிக்கும் இந்த எழுவரும் அங்கே வந்தனர்.(5,6) ஹுதாசன சம பிரபை {நெருப்புக்கு இணையான காந்தி} உடையவர்களும், வேதவேதாங்கங்களை நன்கறிந்தவர்களும், நானாவித சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர்களுமான இந்த மஹாத்மாக்கள் ராகவனின் நிவேசனத்தை {இல்லத்தை} அடைந்தனர்.(7)
[1] இங்கே, அகஸ்தியருடன் அத்ரி, சுமுகர், விமுகர் ஆகியோரும் வந்தனர் என்பது அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் காணக்கிடைக்கிறது. இருப்பினும் மூலத்தில் அவர்களின் பெயர்கள் தென்படாததால் மேலே குறிப்பிடவில்லை.
[2] கோரக்பூர், கீதாபிரஸ் ஆங்கிலப்பதிப்பின் அடிக்குறிப்பில், "இக்ஷ்வாகு வம்சத்து மன்னர்களின் ஆசானும், குல குருவுமான வசிஷ்டர் ஏற்கனவே அயோத்தியில் இருந்தார். அதே சமயத்தில் அவர் சப்தரிஷி மண்டலத்திலும் மற்றொரு வடிவில் இருந்திருக்கிறார். இந்நிகழ்வில் அந்தப் பகுதியில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுபவர் பின்னவரே" என்றிருக்கிறது.
முனிசத்தமரும் {முனிவர்களில் முதன்மையானவரும்}, தர்மாத்மாவுமான அகஸ்தியர், வாயில்காப்போனிடம், "இரிஷிகளான நாங்கள் வந்திருப்பதை தாசரதியிடம் {ராமனிடம்} தெரிவிப்பாயாக" என்று சொன்னார்.(8) வாயில்காப்போன், அகஸ்தியருடைய சொற்களின் பேரில் உடனடியாக விரைந்து சென்று, மஹாத்மாவான ராகவனின் சமீபத்தை அடைந்தான்.(9) நயத்தையும், இங்கிதங்களையும் அறிந்தவனும், நன்னடத்தை கொண்டவனும், பொறுமையும், தைரியமும் கொண்டவனுமான அவன், பூர்ண சந்திரனுக்கு சமமான பிரபையுடன் கூடிய ராமனைக் கண்டான்.(10) இரிஷிகளுடன் சேர்ந்து அகஸ்தியர் வந்திருப்பதைக் கூறினான்.(11)
பாலசூரியனுக்கு சமமான பிரபையைக் கொண்ட முனிவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டபோது, அவர்களுக்கு எப்படி சுகமோ, அப்படியே பிரவேசிக்க அனுமதிக்கும்படி வாயில்காப்போனிடம் அவன் {ராமன்} மறுமொழி கூறினான்.(12) முனிவர்கள் வருவதைக் கண்ட ராமன், ஆசனத்திலிருந்து எழுந்து கைகளைக் கூப்பி வரவேற்று, பாத்யம், அர்க்கியம் முதலியவற்றையும், பசுவையும் கொடுத்துப் பணிந்து நின்றான்.(13) இராமன், அவர்களை வணங்கிவிட்டு, அவர்கள் அமர்வதற்கான ஆசனங்களைக் காட்டினான். அவை காஞ்சனச் சித்திரங்களுடன் கூடியவையாகவும், மஹத்தானவையாகவும், அழகானவையாகவும் இருந்தன.(14) குசப்புற்கள் பரப்பப்பட்டு, அதன்மேல் மான்தோல் போர்த்தப்பட்டிருந்த அந்த ஆசனங்களில் தத்தமது தகுதிகளுக்கு ஏற்ப ரிஷிபுங்கவர்கள் அமர்ந்தனர்.(15)
இராமன், அவர்களிடமும், அவர்களை முன்னிட்டு வந்த சிஷ்யர்களிடமும் குசலம் விசாரித்தபோது, வேதவித்களான மஹரிஷிகள், ராமனிடம் {பின்வரும்} சொற்களைக் கூறினர்:(16) "மஹாபாஹோ, ரகுநந்தனா, நாங்கள் அனைத்துவகையிலும் குசலமாக இருக்கிறோம். சத்ருக்களைக் கொன்று, அதிர்ஷ்டவசமாகக் குசலமாகத் திரும்பியிருக்கும் உன்னை நாங்கள் காண்கிறோம்.(17) இராஜனே, லோகராவணனான {உலகத்தைக் கதறச் செய்தவனான} ராவணன், அதிர்ஷ்டவசமாக உன்னால் கொல்லப்பட்டான். இராமா, புத்திரபௌத்ரர்களுடன் கூடிய ராவணன் உனக்கு பாரமாக இல்லை.(18) தனுசை ஏந்திய நீ, மூவுலகங்களிலும் விஜயமடைவாய். சந்தேகமில்லை. ராமா, அதிர்ஷ்டவசமாக ராக்ஷசேஷ்வரன் ராவணன் உன்னால் கொல்லப்பட்டான்.(19) தர்மாத்மாவே, விஜயமடைந்தவனான உன்னை சீதையுடனும், உனக்கு நலமான காரியங்களைச் செய்யும் பிராதாவான லக்ஷ்மணனுடனும் அதிர்ஷ்டவசமாக பார்க்கிறோம். (20)
நிருபா {மன்னா}, மாதாக்களுடனும், பிராதாக்களுடனும் {உன்னுடன் பிறந்தோரான பரதன், சத்ருக்னன் ஆகியோருடனும்} இன்று உன்னை நாங்கள் பார்க்கிறோம். அதிர்ஷ்டவசமாக, பிரஹஸ்தன், விகடன், விரூபாக்ஷன், மஹோதரன், வெல்வதற்கரிய அகம்பனன் உள்ளிட்ட நிசாசரர்கள் {இரவுலாவிகள்} கொல்லப்பட்டனர்.(21) எவனுடைய பெரும் பிரமாணத்திற்கு {பெரும் உடல் அளவுக்கு} நிகரான பிரமாணம் கொண்டவன் வேறு எவனும் இல்லையோ, அத்தகைய கும்பகர்ணன், அதிர்ஷ்டவசத்தால் ராமா உன்னால் சமரில் {போரில்} வீழ்த்தப்பட்டான்.(22) மஹாவீரியமிக்க நிசாசரர்களான திரிசிரஸ், அதிகாயன், தேவாந்தகன், நராந்தகன் ஆகியோர், அதிர்ஷ்டவசத்தால் ராமா உன்னால் கொல்லப்பட்டனர்.(23) பயங்கரத் தோற்றம் கொண்ட ராக்ஷசர்களும், கும்பகர்ணசுதர்களுமான {கும்பகர்ணனின் மகன்களுமான} கும்பன், நிகும்பன் ஆகியோர், அதிர்ஷ்டவசத்தால் ராமா உன்னால் கொல்லப்பட்டனர்.(24) காலாந்தக யமனுக்கு ஒப்பானவர்களான யுத்தோன்மத்தன், மத்தன், யஜ்ஞகோபன், பலவானான தூம்ராக்ஷன் என்ற பெயருடைய ராக்ஷசன்,(25) ஆகிய இவர்கள் அஸ்திர சஸ்திர பாரகர்களாக உலகில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதிஷ்டவசமாக அந்தகனுக்கு ஒப்பான உன் பாணங்களால் அவர்கள் கொல்லப்பட்டனர்.(26) தேவர்களாலும் வெல்ல முடியாத ராக்ஷசேந்திரனுடன் துவந்தயுத்தத்தில் {தனித்த போரில்} அதிர்ஷ்டவசமாக உனக்கு விஜயம் வாய்த்தது.(27)
அதிர்ஷ்டவசமாக துவந்த யுத்தத்தில் ராவணி {இந்திரஜித் லக்ஷ்மணனால்} கொல்லப்பட்டது, அந்த ராவணன் போரில் உன்னால் வீழ்த்தப்பட்டதற்குக் கிஞ்சித்தும் குறைந்ததல்ல.(28) மஹாபாஹோ, வீரா, காலனைப் போல் எதிர்த்து வந்த அந்த ஸுராரியிடமிருந்து {தேவர்களின் பகைவனான இந்திரஜித்தின் நாகபாச வலையில் இருந்து} அதிர்ஷ்டவசமாக விடுபட்ட உனக்கு விஜயம் வாய்த்தது.(29) இந்திரஜித்தின் வதத்தைக் கேள்விப்பட்டு நாங்கள் அனைவரும் உன்னை வாழ்த்தினோம். யுத்தத்தில் மஹாமாயனான அவன், சர்வ பூதங்களாலும் {அனைத்து உயிரினங்களாலும்} வதைக்கப்பட முடியாதவன் ஆவான்.(30) எனவே, இந்திரஜித் ஹதம் செய்யப்பட்டதைக் கேட்டு நாங்கள் ஆச்சரியமடைந்தோம்.(31) இவர்களும், காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} ஏராளமான ராக்ஷசர்களும், வீரா, ரகுக்களின் குலவர்த்தனா, அதிர்ஷ்டவசமாக உன்னால் ஹதம் செய்யப்பட்டனர்.(32) வீரா, சௌம்யா, காகுத்ஸ்தா, புண்ணியமானதும், மேன்மையானதுமான அபய தக்ஷிணையைக் கொடுத்து {பயமின்மையை தானமாகக் கொடுத்து} அதிர்ஷ்டவசமாக அமித்ரர்களை அழித்து, ஜயமடைந்தாய்" {என்றனர் முனிவர்கள்}.(33)
பாவிதாத்மர்களான {தெய்வீக நிலைபெற்றவர்களான} அந்த ரிஷிகளின் வசனத்தைக் கேட்டுப் பரம ஆச்சரியமடைந்த ராமன், கைகளைக் கூப்பியபடியே அவர்களிடம் {பின்வருமாறு} கூறினான்:(34) "பகவந்தர்களே {பகவான்களே}, கும்பகர்ணன், நிசாசரனான ராவணன் ஆகிய மஹாவீரியர்கள் இருவரையும் விஞ்சி ராவணியை {இந்திரஜித்தை} ஏன் புகழ்கிறீர்கள்?(35) மஹோதரன், பிரஹஸ்தன், ராக்ஷசன் விரூபாக்ஷன், மத்த, உன்மத்தர்கள், வெல்வதற்கரிய தேவாந்தக, நராந்தகர்கள் ஆகிய மஹாவீரர்களை விஞ்சி ராவணியை[3] ஏன் புகழ்கிறீர்கள்?(36)
[3] என்று முனிவர்தாம் கூற இராமன் கூறும் ஓரிண்டுகுன்றம் அனைய திரள் புயத்துக் கும்பகன்னன் முதலாயோர்வென்றி கூறாது ராவணிதன் வீரம் நீர் கூறியவாறு என்அன்று சிவன்பால் அவன் பெற்ற வரமும் வலியும் அவன் பிறப்பும்- ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டம் 25ம் பாடல், திருவோலக்கப்படலம்பொருள்: முனிவர்கள் இவ்வாறு சொன்னதும், ராமன் கூறுவான், "ஒப்பற்ற இரு குன்றுகளைப் போன்ற திரண்ட தோள்களைக் கொண்ட கும்பகர்ணன் முதலியோரின் வெற்றியைக் கூறாமல் ராவணியின் {இந்திரஜித்தின்} வீரத்தை மட்டும் நீர் சிறப்பித்துக் கூறியதற்கான காரணம் என்ன? இந்திரஜித் சிவனிடத்தில் பெற்ற வரமும், வலிமையும், அவன் பிறப்பும் {காரணமா?" என்று ராமன் கேட்டான்}
அதிகாயன், திரிசிரஸ், நிசாசரன் தூம்ராக்ஷன் ஆகிய மஹாவீரியர்களை விஞ்சி ராவணியை ஏன் புகழ்கிறீர்கள்?(37) அவனுடைய பிரபாவம் எத்தகையது? அவனுடைய பலமும், பராக்கிரமமும் என்ன? என்ன காரணத்தால் அவன் ராவணனை விட மேன்மையடைகிறான்?(38) அதை நான் கேட்கத்தகுந்தவன் என்றால், அதில் ரகசியம் ஏதும் இல்லையென்றால் நான் கேட்கவிரும்புகிறேன். நான் உங்களுக்கு ஆணையிடமாட்டேன்.(39) அவன் சக்ரனை {இந்திரனை} எப்படி வென்றான்? அவனுக்கு வரம் எப்படிக் கிடைத்தது? பிதாவான ராவணனைக் காட்டிலும், புத்திரன் பலவானானது எப்படி?(40) அவன் எப்படித் தன் பிதாவைவிட உயர்ந்தவனாவான்? அந்த ராக்ஷசன் {இந்திரஜித்} எப்படி பெரும்போரில் சக்ரனை {இந்திரனை} வென்றான்? அவன் எப்படி பல வரங்களைப் பெற்றான்? முனீந்திரர்களே, நான் கேட்கும் அனைத்தையும் குறித்து இப்போது எனக்குச் சொல்வீராக" {என்றான் ராமன்}.(41)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 001ல் உள்ள சுலோகங்கள்: 41
| Previous | | Sanskrit | | English | | Next |
